மன்னர்கள் என்றாலே கோயில்கள்
கட்டுவது, கோட் டைகள் அமைப்பது, குளங்களை வெட்டுவது போன்ற பணிகளை
மட்டும்தான் செய்தார்களா? அறிவியல் பூர்வமான ஆய்வுப் பணிகளுக்கு ஒரு
மன்னர்கூட ஆதரவு அளிக்கவில்லையா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. ஒரு
கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றச் சென்றபோது ஒரு மாணவர் எழுந்து, 'இந்தியா
பழைமையான நம்பிக்கைகளில் ஊறிப்போன நாடு. அதற்கு அறிவியல்பூர்வமான சிந்த
னையே கிடையாது. வெள்ளைக்காரர்களின் வருகைதான் அறிவியல் சிந்தனையை
அறிமுகப்படுத்தியது. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று
கேட்டார். இது, பிரிட்டிஷ்காரர்கள் ஏற்படுத்திவைத்த தவறான எண்ணம். காலனிய
ஆட்சி நம் அறிவின் வளர்ச்சியை மேம்படுத்தியதை நான் மறுக்கவில்லை. ஆனால்,
நவீன அறிவியல் சிந்தனையை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்தது பிரிட்டிஷ்
என்பதுதான் தவறு. வானவியல், கணிதம், நிலவியல், மருத்துவம், எண்ணியல், உலோக
வியல், கப்பல் கட்டுமானம் எனப் பல துறைகளில் இந்தியர் சிறந்து விளங்கி
இருக்கின்றனர்.
இந்திய வானவியலுக்கு தனி வரலாறு இருக்கிறது. நாம்
அறிவியலின் வரலாற்றை இன்னமும் கூட முழுமையாக வாசித்து அறியவில்லை. எத்தனை
பேர் ஜந்தர் மந்தர் பார்த்து இருக்கிறீர்கள்? என்று மாணவர்களிடம் கேட்டேன்.
அந்தக் கூட்டத்தில் ஒரு மாணவர்கூட பார்த்ததில்லை என்றனர். டெல்லி,
ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கு எத் தனை பேர் சென்று இருக்கிறீர்கள் எனக்
கேட்டபோது, 15 பேருக்கும் அதிகமானோர் கையை உயர்த்தினர். ஆனால், அவர்களில்
எவரும் ஜந்தர் மந்தர் பற்றி அறிந்து இருக்கவில்லை. வெறும் தகவல் தரவுகளாக,
மனப்பாடப் பகுதியாக மட்டுமே வரலாற்றை நமது வகுப் பறைகள் மாற்றிவைத்து
இருக்கிறது. இது எங்கோ ஒரு கல்லூரியில் யாரோ சில மாணவர்களுக்கு மட்டுமே
நடந்த விஷயம் இல்லை. பெரும்பான்மை மாணவர்கள் இந்திய வரலாற்றின் முக்கிய
இடங்கள், கல்வெட்டுகள், அகழ்வாய்வு நடந்த இடங்கள் என எதையுமே பார்த்தது
இல்லை. வரலாறு என்பது சுயபெருமை பேசும் விஷயமாக மட்டுமே மக்கள்
நினைக்கின்றனர். சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும், மேம்படுத்தவும்
வரலாறு தேவை என்பதை இன்றைய சமூகம் இன்னும் உணரவே இல்லை.
ஜந்தர் மந்தர் என்பது ஜெய்ப்பூர், டில்லி, உஜ்ஜயினி,
வாரணாசி மற்றும் மதுரா ஆகிய இடங்களில் வானியல் நிகழ்வுகளை ஆய்வு
செய்வதற்காக கட்டமைக்கப்பட்ட வானவியற் கருவிகளின் தொகுப்பாகும். ஜெய்ப்பூர்
அரசரான இரண்டாம் ஜெய்சிங் மஹாராஜாவால் 1727 மற்றும் 1734 ஆம் ஆண்டுகளுக்கு
இடைப்பட்ட காலத்தில் இவை உருவாக்கப்பட்டன. இந்த ஐந்திலும் ஜெய்ப்பூரில்
உள்ள வான் ஆய்வுக்கூடமே மிகவும் பெரியது. ஜந்தர் என்றால் கருவி. மந்தர்
என்றால் கணிப்பு. ஜந்தர் மந்தர் என்றால் 'கணிப்புக் கருவி’ என்று
பொருள்படும்.
நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடுவது, வானில் தோன்றும்
கிரகணங்களை முன்னறிவிப்பது, விண்மீன்களின் இடத்தைத் தடமறிவது, கோள்களின்
சாய்மானங்களை அறிவது மற்றும் கோள்களின் கோணவேற்றங்களை அறிவது மற்றும்
கோள்களின் நகர்வு அட்டவணைகளைக் குறிப்பதற்காக மாபெரும் வடிவவியற்
கருவிகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட வானவியல் கூடமே ஜந்தர் மந்தர். இங்கு,
சாம்ராட் இயந்திரம் எனப்படும் ராட்ச சூரியக் கடிகாரம் உள்ளது. இது,
உலகிலேயே மிகப் பெரிய சூரியக் கடிகாரமாக 27 அடி உயரத்தில் நிற்கிறது.
இங்கே, சூரியனின் நிழல் ஒரு நொடிக்கு 1 மில்லி மீட்டர் அல்லது ஒரு
நிமிடத்துக்கு கையின் பரப்பளவு அளவு நகர்கிறது. முகலாய ஆட்சியின் இறுதிக்
காலத்தில் வானசாஸ்திர மற்றும் கிரகங்கள் குறித்த அறிவோடு பிரசித்தி
பெற்றிருந்த ஒரு ராஜவம்ச இளவரசரின் படைப்பாக்கம் என்று, ஜந்தர் மந்தர்
பெருமையோடு நினைவு கொள்ளப்படுகிறது. ஜெய்ப்பூரில் அமைந்துள்ள இந்த வானியல்
கூடமானது அழகான பளிங்குக்கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. இங்கு
அமைக்கப்பட்டு இருக்கும் 'ராம் யந்திரா’ என்னும் நுணுக்கம் வாய்ந்த கருவி
ஜெய்சிங் மஹாராஜாவின் வானசாஸ்திர அறிவுக்குச் சான்றாகத் திகழ்கிறது.
துருவா, தக்ஷிணா, நரிவல்யா, ரஷிவலயாஸ், சின்ன சாம்ராட்,
பெரிய சாம்ராட், வானோக்கு பீடம், தீஷா, சின்ன ராம் யந்த்ரா, பெரிய ராம்
யந்த்ரா, சின்ன கிரந்தி, பெரிய கிரந்தி, ராஜ் உன்னதம்ஸா, ஜெய் பிரகாஷ்
மற்றும் திகந்தா போன்ற பல்வேறு வானவியற் கருவிகள் இங்கு நிர்மாணிக்கப்பட்டு
இருக்கின்றன. இந்த வானோக்குக் கட்டடக் கருவிகள் பருவகால நேரங்கள், கிரகண
அறிவிப்புகள், சுற்று வீதிகளில் நகரும் விண்மீன்களைக் குறிப்பிடுதல்,
கோள்களின் சாய்வுக் கோணங்களை அளத்தல், சூரிய நகர்ச்சியைத் தொடர்ந்து
கணித்து நோக்குதல் போன்ற வானியல் தகவல்களைச் சேகரிக்கும் 14 வரைவியல்
சாதனங்கள் (Geometrical Devices) கொண்டவை.
இந்திய வானியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சியைப் பற்றிக்
கூறும் அறிவியல் அறிஞர் எஸ்.ஜெயபாரதன், ''இந்திய வானவியலின் வளர்ச்சி
தனிச்சிறப்பு கொண்டது. இந்தியர்கள் பாரம்பரிய அறிவின் துணைகொண்டு சூரிய,
சந்திர கிரகணங்களைக் கணித்திடவும். பூமியின் சுற்றளவைக் கண்டுபிடிக்கவும்,
ஈர்ப்பு விசையின் நியதியை பற்றிச் சிந்திக்கவும். பரிதி ஒரு விண்மீன்
என்றும் பரிதி மண்டலத்தின் அண்டக் கோள்களையும் அவற்றின் சுற்றுக்களையும்
கணிக்கவும் முடிந்திருக்கிறது'' என்று கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு
இருக்கிறார். மேலும் ஆரியபட்டாவின் வானவியல் அறிவைப் புகழ்ந்து
பேசும் இவர், ''கி.பி.500-ல் ஆரியபட்டா ஒரு கணித முறையை வெளியிட்டுள்ளார்.
அதில், பூமியின் சுயச் சுழற்சியை எடுத்தாண்டு சூரியனை மையமாக வைத்து
ஒப்புநோக்கி, மற்ற கோள்களின் சுற்று எண்ணிக்கையைக் குறிப்பிட்டுள்ளார்.
பூமியின் 15,82,23,7500 வேகச் சுற்றுக்கள், நிலவின் 57,75,3336 மெதுச்
சுற்றுக்களுக்குச் சமம் என்று ஆரியபட்டா சுட்டிக் காட்டினார். பிறகு,
அவற்றை வகுத்துப் பின்னமாக்கி ஓர் வானியியல் நிலை இலக்காக 27.396 என்று
துல்லியமாகக் கணித்தார். இது ஓர் அரிய சாதனை'' என்று குறிப்பிடுகிறார்.
அதுபோலவே இவரது கட்டுரையில் இன்னொரு முக்கியச்
செய்தியும் இடம் பெற்றுள்ளது. அது, ''யக்ஞவால்கியா என்ற ரிஷி, சூரியன்
பூமியைவிட மிகப் பெரிதென்று 2,000 வருடங்களுக்கு முன்பே கூறியிருக்கிறார்.
அவரே முதன்முதலில் பூமியில் இருந்து நிலவு பரிதி ஆகியவற்றின் ஒப்புத்
தூரங்களை அவற்றின் விட்டத்தைப் போல் 108 மடங்கு என்று கணக்கிட்டவர்.
இப்போது, அந்த இலக்கத்தை விஞ்ஞானிகள் 107.6 பரிதிக்கும் 110.6 நிலவுக்கும்
என்று துல்லியமாகக் கணக்கிட்டுள்ளனர்'' என்று, ஜெயபாரதன் கூறுகிறார்.
இந்திய வானியலாளர்களில் முதன்மையானவர் ஆரியபட்டா. அவரது
பிறப்பிடத்தைச் சரியாகத் தீர்மானிக்கும் வகையில் சான்றுகள் எதுவும்
கிடைக்கவில்லை. எனினும் இவர், குசுமபுர என்னும் இடத்துக்குச் சென்று அங்கே
உயர்கல்வி கற்றதாகவும், அங்கேயே வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இவருடைய
நூலுக்கு உரை எழுதிய பாஸ்கரா, குசுமபுரம் என்பது பாடலிபுத்திரம்தான்
என்கிறார். ஆரியபட்டா எழுதிய நூல்களில் ஆரியபட்டியம் என்பது
குறிப்பிடத்தக்கது. ஆர்யபட்டா, கேரளாவைச் சேர்ந்தவர், கல்வி கற்பதற்காக
நாளந்தா பல்கலைக் கழகத்துக்குச் சென்றவர் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது.
5-ம் நூற்றாண்டிலேயே இயற்கணிதத்தைச் சார்ந்து ஒரு நூலை
எழுதி இருக்கிறார் ஆரிய பட்டா. இவரது வானவியல் நூலில் பல்வேறு வானவியல்
ஆராய்ச்சிக்கான கருவிகளைப் பற்றி விவரித்து இருக்கிறார்.
அவற்றில், சங்கு யந்திரம், சாயா யந்திரம், தனுர் யந்திரம்/சக்ர யந்திரம்,
யஸ்தி யந்திரம், சத்ர யந்திரம் மற்றும் தண்ணீர் கடிகாரங்கள் போன்றவை
முக்கியமானவை. பை என்பது ஒரு விகிதமுறா எண் என்ற முடிவுக்கு வந்தவர்
ஆர்யபட்டா. ஆர்யபட்டாவின் வானியல் ஆய்வு முறையானது அவுதயகா முறை என
அழைக்கப்பட்டது. ஆர்யபட்டா மற்றும் அவரது சீடர்கள் பயன்படுத்திய வானவியல்
குறிப்புகள் மற்றும் அட்டவணையை மையமாக வைத்தே இந்தியாவில் நாட்காட்டிகள்
தயாரிக்கப்பட்டன. ஆர்யபட்டாவைச் சிறப்பிக்கும் வகையில் இந்தியாவின் முதல்
செயற்கைக்கோளுக்கு ஆர்ய பட்டா என்று பெயர் சூட்டப்பட்டது. சந்திரனில்
காணப்படும் ஒரு கிண்ணக் குழிக்கும் ஆர்யபட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இவரைப்போலவே, புகழ் பெற்றிருந்த வானவியல் அறிஞர் பாஸ்கரா. இவர் ஒரு கணித
மேதை. இவர் எழுதிய லீலாவதி என்ற நூல் கணிதத் துறையில் மிக முக்கியமானது.
கி.பி. 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய வானியலாளர்
பாஸ்கரா. முதன் முதலில் இடமதிப்பில் எண்களைக் குறிப்பிட்டது இவர்தான்.
பூஜ்யத்தைக் குறிக்க சிறிய வட்டம் வரைந்தவரும் இவர்தான். எண் முறையில் 10
இணை அடிப்படையாகக்கொண்ட எண்கள், சுழியத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை
கணிதத்துக்கு இவர் அளித்த கொடை, ஆரியபட்டாவின் கொள்கைகளை எளிமைப்படுத்தி
விளக்கும் உரையாக 'ஆர்யபட்டிய பாஷ்யா’ என்ற உரை நூலையும் இவர் எழுதி
இருக்கிறார். இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்தியா அனுப்பிய இரண்டாவது
செயற்கைக்கோளுக்கு 'பாஸ்கரா’ என்ற பெயர் சூட்டியது.
''நாம் இந்தியர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.
அவர்கள்தான் நமக்கு எண்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக்
கற்றுக்கொடுத்து இருக்கின்றனர். அந்த முறை இல்லாமல் போயிருந்தால் அறிவியல்
கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்காது' என்று அறிவியல் மேதை ஐன்ஸ்டீன்
பாராட்டி இருக்கிறார்.
இந்த வானவியல் சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றவர்தான்
மகாராஜா இரண்டாம் சவாய் ஜெய்சிங், இவர்தான் ஜெய்ப்பூர் நகரை வடிவமைத்தவர்.
முழுவதும் சிவப்பு நிற வண்ணம் பூசப்பட்ட ஜெய்ப்பூரை சிவப்பு நகரம் என்றே
அழைக்கின்றனர். பாலைவனத்துக்குள் இருந்த ஆம்பர் நகரில் இருந்து இடம் மாற
விரும்பிய ஜெய்சிங் தண்ணீர் வசதியுள்ள இடத்துக்கு தலைநகரை மாற்ற ஜெய்ப்பூரை
உருவாக்கினார். இன்று, ஜெய்ப்பூர் உள்ள இடம் ஒரு காலத்தில் மிகப் பெரிய
ஏரியாக இருந்தது. அந்த ஏரியை ஒட்டியும், கரைகளின் மறுமுனையிலும் புதிய நகரை
வடிவமைக்கும் பணியை ஜெய்சிங் தொடங்கினார்.
வானவியல் கணிதம், கட்டடக் கலை ஆகியவற்றில் ஆர்வம்
கொண்டிருந்த ஜெய்சிங், இந்த நகரை வடிவமைப்பதற்காக நிறையக் கட்டடக்கலை
நூல்களை பெர்ஷியனில் இருந்து மொழியாக்கம் செய்யவைத்தார். இதற்காக தனியே
மொழிபெயர்ப்புத் துறை அமைக்கப்பட்டது. ஜெய்சிங்கின் உதவியாளர் சாம்ராட்
ஜெகன்நாத் கிரேக்க வானவியல் நூல்களை மொழியாக்கம் செய்து இருக்கிறார். இதைத்
தொடர்ந்து, 40-க்கும் மேற்பட்ட அரிய கணிதம் மற்றும் கட்டடக் கலை சார்ந்த
நூல்கள் சமஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment