சட்டமன்றத் தேர்தல் சூறாவளியில் பல சிறிய கட்சிகள் காணாமல் போயிருக்கின்றன!
எங்களுக்கு யார் அதிகம் சீட்டு கொடுக்கிறார்களோ, அவர்களோடுதான் கூட்டு" என்று தேர்தலுக்கு முன்னர் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் சடுகுடு ஆடிக் கொண்டிருந்த நேரம். தி.மு.க., அ.தி.மு.க., இரண்டுமே கொ.மு.க.வை வளைத்துப் போடும் முயற்சியில் இறங்கியிருந்தன. ஆனால் ஜெயலலிதா இரண்டு இடங்களுக்கு மேல் கொடுக்க முடியாது என்று நெற்றியடியாகச் சொல்லிவிட்டார். கொ.மு.க. கேட்டது குறைந்தது பத்து இடங்கள். கிட்டத்தட்ட கொங்கு மண்டலத்தில் உள்ள 40 தொகுதிகளில் நாங்கள்தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்போம்" என்று அடித்துப் பேசினார்கள் கொ.மு.க.பிரமுகர்கள். நாங்கள் விரலசைத்தால் மொத்த கவுண்டர் சமுதாயமும் எங்கள் பின் அணிவகுக்கும்" என்றார்கள். அவர்களிடம் கெஞ்சி, ஏழு இடங்களைக் கொடுத்து தன் அணியில் இழுத்துக் கொண்டது தி.மு.க.
கொ.மு.க. தன் செல்வாக்கைக் குறித்துப் பெருமைப்பட்டுக் கொள்ள காரணம் உண்டு. 2009 பாராளுமன்றத் தேர்தலில் ஜாதி அமைப்பாக இருந்த அது பதினொரு தொகுதிகளில் போட்டியிட்டு, கிட்டத் தட்ட ஆறு லட்சம் வாக்குகளைப் பெற்றது. ஆனால் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதிரடியாக அமைந்து விட்டன. ஏழு இடங்களில் போட்டியிட்ட கொ.மு.க. ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாதது மட்டுமல்ல; தி.மு.க. அணியே கொங்கு மண்டலத்தில் சம்மட்டி அடி வாங்கி விட்டது. இனி கொ.மு.க. காணாமல் போய்விடும் என்கிறார்கள்.அப்படிச் சொல்வது சரியல்ல; பதவியில் அமர்வது மட்டும் எங்கள் நோக்கமல்ல; எங்கள் மக்களின் சமூக- பொருளாதார முன்னேற்றத்துக்குப் போராடத்தான் அமைப்பை உருவாக்கினோம். தோல்வி தற்காலிகமானது. மாற்றம் வேண்டும் என்பதற்காக மக்கள் எங்கள் அணியைப் புறக்கணித்து விட்டார்கள்" என்கிறார் கொ.மு.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன்.
கொ.மு.க. மட்டுமல்ல, 2011 சட்ட மன்றத் தேர்தல் சூறாவளியானது, தி.மு.க. அணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விட்டது. பத்து இடங்களில் போட்டியிட்ட சிறுத்தைகள் ஒரு இடத்திலும் வெற்றிபெற முடியவில்லை. தி.மு.க. மேல் இருந்த கடுமையான வெறுப்பு காரணமாகத்தான் நாங்கள் தோல்வியைச் சந்தித்தோம் என்றாலும், பா.ம.க. இருக்கும் அணியில் நாங்கள் இருந்திருக்கக் கூடாது. காரணம், வட மாவட்டங்களில் எங்களுக்கும், வன்னியர்களுக்கும் நீண்ட காலமாகப் பகை இருந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட மோதல்களில், பல கொலைகள், வழக்குகள். இந்த இரு சமூகங்களுக்கும் நல்லிணக்கம் ஏற்பட எங்கள் தலைவர்களிடையேயான தோழமை உதவும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது பாதகமாக மாறிவிட்டது" என்று மனம் திறந்து சொன்னார் ஒரு சிறுத்தை பிரமுகர்.
சிறுத்தைகளை அ.தி.மு.க. அணிக்கு தள்ளிக் கொண்டு போவதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கட்சியில் தொண்டர்களும் அதைத்தான் எதிர்பார்த்தார்கள். ஆனால், தேர்தல் செலவு உட்பட சில ஆதாயங்களுக்காக சிறுத்தைகள் தி.மு.க.வுடன் ஒட்டிக் கொண்டார்கள். 2011 விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு" என்று களம் அமைத்து முரசு கொட்டிப் பணியாற்றிய சிறுத்தைகள் இன்று காணாமல் போயிருக்கிறார்கள். கட்டைப் பஞ்சாயத்து, வன்முறை என்று சிறுத்தைகள் மீது நிறைய புகார்கள். இதுவும் அவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்ய வாய்ப்பாக அமைந்து விட்டது. எங்கள் அணியின் மோசமான தோல்விக்கு முக்கியக் காரணம் மக்கள் மாற்றத்தை விரும்பியதுதான்.
இனி, நீங்கள் எத்தனை நல்ல திட்டங்கள் போட்டுச் செயல்படுத்தினாலும் தமிழக மக்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மாற்றம்" என்று உளரீதியாக முடிவெடுத்து விட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். பிரசாரத்தின் போது, தி.மு.க. அரசு மீது மக்கள் கடுப்பில் இருந்ததற்கான அடையாளம் எதையும் நான் பார்க்கவில்லை" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்!
தமிழக அரசியலில் பா.ம.க. ஓரளவு வெற்றியடைந்ததன் விளைவாகத்தான் பல ஜாதி அமைப்புகள் தங்களைக் கட்சிகளாக மாற்றிக் கொண்டு தேர்தல் அரசியலில் களம் புகுந்தன என்று சொல்லலாம். ஆனால் காலப்போக்கில் மாறி, மாறி கூட்டணி அமைத்த பா.ம.க.வைக் கண்டு மக்கள் எரிச்சலடைந்து போய்விட்டார்கள். இந்தத் தேர்தலில் முப்பது இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., மூன்று இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. அந்தக் கட்சிப் பிரமுகர்கள் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. எங்களை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று நினைக்கவில்லை. சென்னையிலிருந்து குமரி வரை, ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. தோல்வியைப் பொருட்படுத்தாது எங்கள் பணியைத் தொடர்வோம்," என்கிறார் பா.ம.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்.
சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா விடம் பத்து இடங்கள் கேட்டு, அவர் ஒரு சீட்டுதான் தருவேன் என்று சொல்லி விடவே, முப்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் தமது நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தினார் கார்த்திக். இவர் ஒரு இடத்திலும் பிரசாரத்துக்குச் செல்லாதது வடிவேலுவையும் மிஞ்சும் காமெடித்தனம். எல்லோருக்கும் டெபாசிட் பறிபோயிற்று. விரைவில் நாடாளும் மக்கள் கட்சியும் நாதியற்றுப் போய்விடும்.
தேர்தலின் போது காளானாகத் தோன்றிய பெரும் தலைவர் மக்கள் கட்சியும் இப்போது தேட வேண்டிய நிலையில் இருக்கிறது. அவசர அவசியத் தேவையை முன்னிட்டே இந்தக் கட்சி உருவானது. ‘சமத்துவ கட்சி’ சரத்குமார் அனைத்து நாடார் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, அ.தி.மு.க.விடம் பேரம் பேசி, குறைந்தது ஐந்து இடங்களாவது வாங்க முயற்சி மேற்கொண்டார். கிட்டத்தட்ட ஒப்பந்தம் இறுதியாக்கப்பட்ட நிலையில் குறுக்கே புகுந்தார் ஒரு பத்திரிகை அதிபர். சரத்குமாருடன் சேர்ந்த நாடார் அமைப்புகளைப் பிரித்தெடுத்துக் கொண்டு போய் பெருந்தலைவர் மக்கள் கட்சி என்ற பெயரில் தி.மு.க. அணியோடு சேர்ந்து விட்டார். பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட அந்தக் கட்சி உதை வாங்கியது. இனி, இந்தக் கட்சி செயல்பட வாய்ப்பில்லை.
தி.மு.க. கூட்டணியில் ஒரே ஒரு இடத்தில் போட்டியிட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகம் என்ற ஜாதி கட்சியும் தோற்றுப் போயிருக்கிறது.
தி.மு.க. அணியில் போட்டியிட்ட ஜாதி கட்சிகள் தோல்வி கண்ட நிலையில் அ.தி.மு.க. அணியில் போட்டியிட்ட சமத்துவ மக்கள் கட்சி (ஜாதி அமைப்பு இல்லை என்று சரத்குமார் மறுக்கலாம்), புதிய தமிழகம், குடியரசுக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் இரட்டை இலையில் போட்டியிட்ட மூவேந்தர் முன்னணிக் கழகம் தோற்றது. மாற்றத்துக்கான அரசியல் என்ற கோஷத்தோடு வந்து பல ஜாதி அமைப்புகளோடு கூட்டணி சேர்ந்து 100க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்ட ‘எஸ்.ஆர்.எம்.’ பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியும் பலத்த அடி வாங்கியிருக்கிறது. நம்ம ஜாதிக்காரனே நமக்கு வோட்டுப் போடலியே!" என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் பச்சமுத்து.
உள்ளாட்சித் தேர்தல் வரை அந்தந்த கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது. கூட்டணியில், ஏதேனும் மாற்றம் ஏற்படுவதற்கு 2014 பாராளுமன்றத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும். இப்போது காணாமல் போன சிறு கட்சிகள் அப்போது வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்று மீண்டும் பிரகாசிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு!
நன்றி : தினமலர், தினமணி, தி ஹிந்து, விகடன், குமுதம், கல்கி, மற்றும் முனைவர் கூகிள்
No comments:
Post a Comment