Search This Blog

Tuesday, June 14, 2011

ஆம்னி பஸ் கொள்ளை..


கடந்த வாரம் வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே ஒரு தனியார் சொகுசுப் பேருந்து எரிந்த விபத்தில் 23 பேர் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பக் கதைகளும், சோகங்களும் ஓரிரு நாள்கள் பேசப்பட்டன. பத்திரிகைகள் எழுதின. ஊடகங்களில் பேட்டிகள் இடம்பெற்றன. அரசும் இவர்களது குடும்பங்களுக்குக் கருணைத்தொகை அறிவித்தது. அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை வந்து பார்த்துச் சென்று கொண்டிருந்தனர். எரிந்துபோய் எலும்புக்கூடாக நின்ற பேருந்து அகற்றப்பட்டது. நான்காவது நாளே அனைவராலும் இந்தச் சம்பவம் மறக்கப்பட்டுவிட்டது.

இது உலக வழக்கு என்றாலும், இந்தச் சம்பவத்திலிருந்து அரசும், அதிகாரிகளும், தனியார் போக்குவரத்து நிறுவனங்களும் பெற்ற படிப்பினை என்ன என்றால், ஒன்றுமே இல்லை என்பதைப் போலத்தான் பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் இந்த விபத்தில் மூன்று விஷயங்களை நினைவுகூர வேண்டியுள்ளது.


முதலாவதாக, இந்தப் பேருந்து ஓட்டுநர், ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, அந்த லாரி பேருந்து பக்கமாக நகர்ந்ததால், மோதலைத் தவிர்க்க முயன்றபோதுதான் இந்த விபத்து நேரிட்டது என்று கூறியுள்ளார்.  நாற்கரச் சாலைகளில் கனரக வாகனங்கள் சாலையின் இடது பக்கமாகச் செல்ல வேண்டும் என்று பல இடங்களில் அறிவிப்புப் பலகைகள் எழுதி வைக்கப்பட்டும்கூட, கனரக வாகன ஓட்டுநர்கள் அதைப் பொருள்படுத்துவதே இல்லை. இதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கை எடுப்பதோ அல்லது அத்தகைய ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பதோ இல்லை. நெடுஞ்சாலைக் காவலர்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.  மேலும், சாலையில் லாரி ஓட்டுநருக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் ஏற்படும் தகராறின் விளைவாக, லாரிகள் வேண்டுமென்றே வழி விடாமல் இருப்பதும், பேருந்து முந்திச் செல்லும்போது வேண்டுமென்றே பிரேக் போட்டு, பேருந்து ஒட்டுநருக்கு அதிர்ச்சிதரும் விளையாட்டை அரங்கேற்றுவதும் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு பயணிகள் பேருந்தின் ஓட்டுநரை தடுமாறச் செய்வதன் மூலம் குறைந்தது 50 பயணிகளின் உயிரோடு விளையாடுகிறோம் என்ற உணர்வு இந்த லாரி ஓட்டுநர்களிடம் இருப்பதே இல்லை. விபத்து நடந்தால் இந்த லாரிகள், நிற்காமல் பறந்துவிடும்.

பயணிகள் பேருந்து ஓட்டுநர்களின் மீதான கோபத்தை, பயணிகளின் உயிருக்கு உலைவைப்பதாய் மாற்றும் பொறுப்பற்ற ஓட்டுநர்கள் தண்டனைக்குரியவர்களா இல்லையா? பயணிகள் வாகனங்களின் முன்புறம் ஒரு சிறு விடியோ கருவி பொருத்துவதை (விமானங்களில் கருப்புப்பெட்டி போல) கட்டாயமாக்கி, விபத்துக்கான காரணத்தை அறிந்துகொள்வதும், நடவடிக்கை எடுப்பதும் இயலக்கூடியவைதானே? அதிலும் தகவல்தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இற்றைநாளில், அதற்கான செலவும் மிகக் குறைவுதான்.

இரண்டாவதாக, சொகுசுப் பேருந்து கவிழ்ந்தவுடன், டீசல் கசிவு ஏற்பட்டு பேருந்து எரிந்துள்ளது. பயணம் செய்தவர்களில் ஒருவர் மட்டுமே தப்பிக்கும்படியாக அத்தனை விரைவில் தீப்பிடித்தற்கான காரணம் டீசல் மட்டும்தானா? இல்லை, பேருந்தின் அடிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டுப் பெட்டியின் கார்பன் மோனோ ஆக்சைடு வாயுவால்தான் இவ்வளவு விரைவில் தீ பரவியதா? 


 மூன்றாவதாக, இப்போதைய தனியார் சொகுசுப் பேருந்துகள் அனைத்துமே "ஸ்லீப்பர் கோச்' என்கிற பெயரில், ரயிலில் எப்படி "பெர்த்'தில் படுத்து வருகிறோமோ, அதே போன்று படுக்கை வசதிகளுடன் செயல்படுகின்றன. ஆகவே, உடனே தப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு சாதாரண வீடு கட்டினாலே வரைபடம் கேட்கும் இந்நாளில், ஒரு பயணிகள் பேருந்து எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதற்கு ஒப்புதல்பெற வேண்டியது அவசியமல்லவா? பயணிகள் பேருந்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கிறதா? இருந்தால் இந்தப் பேருந்துக்கு அவை ஏன் அமல்படுத்தப்படவில்லை? இந்த விபத்துக்குப் பிறகும் "ஸ்லீப்பர் கோச்' சொகுசுப் பேருந்துகள் இயங்கிக் கொண்டுதானே இருக்கின்றன?  இவை ஒருபுறம் இருக்க, சொகுசுப் பேருந்துகளை கட்டுப்படுத்தும் திறனற்ற அமைப்பாக நமது போக்குவரத்து வட்டார அலுவலகங்கள் மாறிவருகின்றன என்பதுதான் வேதனைக்குரியது. தனியார் சொகுசுப் பேருந்துகளில் கட்டணம் குறித்த எந்தக் கட்டுப்பாடும், வரையறையும் இல்லை. பயணிகள் கூட்டத்தைப் பொறுத்து கட்டணத்தைக் கூட்டுகிறார்கள். கேட்பார் இல்லை.

ஒரே பதிவு எண்ணில் இரண்டும், இரண்டுக்கு மேலும் பேருந்துகள் இயங்குவதும், உரிமம் இல்லாமலேயே சொகுசுப் பேருந்துகள் இயங்குவதும் (குறிப்பாகப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இவை களத்தில் இறங்கிவிடுகின்றன) நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன என்பதைத்தான் அண்மையில் மதுரை ஆட்சியர் நடத்திய சோதனைகள் வெளிப்படுத்துகின்றன.  தமிழ்நாட்டில் 1.4.1993-ல் தனியார் ஆம்னி பஸ்கள் எண்ணிக்கை 245. கடந்த ஏப்ரல் மாதப் புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் தற்போது 686 ஆம்னி பஸ்கள் இருக்கின்றன. இன்னொரு கூடுதல் தகவல்: 2006 ஏப்ரலில் தமிழ்நாட்டில் மாநில உரிமம் பெற்ற ஆம்னி பஸ்கள் எண்ணிக்கை 310. ஆனால் 2007-ம் ஆண்டு 466 ஆக உயர்ந்து, தற்போது நிகழாண்டில் 515 வாகனங்களாக அதிகரித்துள்ளன.

 ஏன் இவ்வளவு சொகுசுப் பேருந்துகளை அனுமதித்தார்கள் என்பது நமது கேள்வி அல்ல. இவை அனைத்தும் கொள்ளை லாபத்தில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது, தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக்கூறி, அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் மக்கள் பணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறதே அதைத்தான் ஏன் என்று கேட்கத் தோன்றுகிறது.  ஆம்னி பஸ் கொள்ளையைக் கட்டுப்படுத்த வழியே இல்லையா? நமது அரசுப் போக்குவரத்துத் துறையை மீண்டும் திறமையாகவும், தரமாகவும், குறைந்த கட்டணத்திலும் செயல்பட வைத்து சாதாரண பொதுமக்களின் நலனைப் பேணும் எண்ணம் அரசுக்கு ஏற்படவே செய்யாதா?

நன்றி : தினமணி    

   

No comments:

Post a Comment