அண்ணா ஹஜாரே ஆரம்பித்து வைத்த லோக்பால் குடைச்சலே இன்னும் தீராத நிலை யில், கறுப்புப் பணத்துக்கு எதிராக பாபா ராம்தேவ் கிளப்பிய அமளிதுமளிகளால் ஆடிப்போய் இருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
அண்ணா ஹஜாரேவின் லட்சியம்தான் ராம்தேவுக்கும். ''ஊழலை ஒழிக்க வேண்டும். முக்கியமாக, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் கணக்கில் வராத செல்வங்களை எல்லாம், 'இந்திய தேசியச் சொத்தாக’ அறிவிக்க வேண் டும். அப்படி வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைப்பது 'தேசிய குற்றமாக... தேசத் துரோகமாக’ அறிவிக்கப்பட வேண்டும். ஊழல் செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண் டும். ஊழல் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் ஏற்படுத்த வேண்டும். 1,000 மற்றும் 500 நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்த வேண்டும். மேலும், மக்களால் நேரடியாகத் தேர்ந்து எடுக்கப்படும் பிரதமர் வேண்டும். பொதுச் சேவை வழங்க உத்தரவாதச் சட்டம் ஏற்படுத்த வேண்டும், நில அபகரிப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலுவான கோரிக்கைகளை ராம்தேவ் வலியுறுத்துவது, காங்கிரஸ் அரசாங்கத்தை மட்டுமல்ல... அனைத்து அரசியல்வாதிகளையும் கிலியில் ஆழ்த்தி உள்ளது.
ஊழலை ஒழிப்பதற்காக ஹஜாரே பட்டினிப் போராட்டம் இருந்தபோதே, அதில் கைகோத்தவர்தான் ராம்தேவ். ஆனால், 'லோக்பால் சட்ட மசோதா குழுவில் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகிய குடும்ப உறுப்பினர்கள் இடம்பெற்று இருப்பது, பல விளைவுகளை உண்டாக்கும். ஊழலின் ஊற்றுக் கண், உறவுகளுக்குக் காட்டப்படும் சலுகைகள்தான்’ என்று ஒரு திரியைக் கிள்ளிப் போட்டுவிட்டு இவர் அமைதியானார். ஹஜாரே போராட்டம் வெற்றிபெற்று, லோக்பால் சட்டம் தொடர்பான வேலைகள் நடக்க ஆரம்பித்தன. ஆனால், அதிலும் முட்டுக்கட்டை போடும் வேலைகளை காங்கிரஸ் அரசு செய்தது.
அண்ணா ஹஜாரே குழு வழங்கிய பரிந்துரைகளைக் காலில் போட்டு நசுக்கிவிட்டு, லோக்பால் சட்டத்தை பல் இல்லாத பாம்பாக மாற்றுவதற்காக கபில் சிபல், ப.சிதம்பரம் ஆகியோரின் குழு முயன்று வருகின்றது. இந்த சூழலில்தான் 'கறுப்புப் பணம், ஊழலுக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாத வரையில், சாகும்வரை பட்டினிப் போராட்டம் மேற்கொள்ளப் போகிறேன்’ என்று அனைத்து நாளிதழ்களின் தலைப்புச் செய்தியானார் ராம்தேவ். கபில் சிபலும், சுபோத் கன்த் சஹேவும் ராம்தேவிடம் சென்று போராட்டம் மேற்கொள்ள இருக்கும் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டார்கள். மறுத்துவிட்டார் பாபா. ராம்லீலா மைதானத்தில் போராட்டம் தொடங்கியது!
பாபா ராம்தேவ் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு கிடைத்துவிடுமோ என்கிற அச்சத்தில் பட்டினிப் போராட்டம் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், ராம்தேவுடன் 'டீல்’ ஒன்றில் இறங்கியது அரசு. அதாவது, ராம்தேவ் ஒன்றிரண்டு நாட்களுக்கு மட்டும் பட்டினிப் போராட்டம் நடத்தலாம் என்றும், அதற்கு ஒத்துழைத்தால் அவரின் கோரிக்கைகளை ஏற்று அவர் நினைக்கிறபடியான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் அரசுத் தரப்பு பேசியது. பாபாவும் இதற்கு ஒப்புக்கொண்டார். அரசுத் தரப்பு இந்த ஒப்புதலை எழுத்தில் கேட்டது. அதுவும் கொடுக்கப்பட்டது. ஆனால் அதில் பாபா ராம்தேவின் கையெழுத்து இல்லை. காரணம் கேட்டதற்கு, 'சுவாமிஜி ஆகிய நான் எதிலும் கையெழுத்து இடக்கூடாது’ என்று சொன்னார். 'பாபாவின் பெயரால்’ என்று குறிக்கப்பட்டு அவரின் சீடர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா கையெழுத்துப் போட்டார்.
ஜூன் 4-ம் தேதி பட்டினிப் போராட்டம் தொடங்கியது. அன்றைய இரவு, 'ராம்தேவ் எதிர்பார்க்கும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும்’ என்று கபில் சிபல் சொன்னார். இப்போது ராம்தேவ் ஒப்புதலை எழுத்தில் கேட்டார். கபில் சிபலும் கடிதம் அளித்தார். ஆனால், அந்தக் கடிதத்தில், 'சட்டம் அமைப்பது தொடர்பான குழு ஒன்று ஏற்படுத்தப்படும்’ என்று இருந்தது. உடனே கோபமான ராம்தேவ், தன் பட்டினிப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று அறிவித்தார். அடுத்து கபில் சிபல், 'ராம்தேவ் தந்த கடிதம் வெளியிடப்படும்’ என்று மிரட்டினார். சொன்னபடியே வெளியிட்டார்.
உடனே ராம்தேவ், 'தன் வாழ்நாளில் கபில் சிபலுடன் நான் ஒருபோதும் பேசியதே இல்லை’ என்று ஜகா வாங்கினார். அத்துடன் நில்லாமல், 'அரசு கறுப்புப் பணத்தை கோண்டு வர அவசரச் சட்டம் இயற்றாதவரை இந்த உண்ணாவிரதம் ஓயாது’ என்று கூட்டத்தினரை சூடாக்கினார். அதைத் தொடர்ந்து உண்ணாவிரத மேடையில் காங்கிரஸ் எதிர்ப்பு கோஷங்கள் விண்ணைத் தொட்டது. மத்திய அரசையும், சோனியா காந்தியையும் கடுமையாக சாடினார் பாபா ராம்தேவ். இனியும் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்று நள்ளிரவில் அதிரடி ஆபரேஷனைத் தொடங்கியது, மத்திய அரசு. உண்ணாவிரத பந்தலுக்குள் நுழைந்த போலீஸார், தொண்டர்களை அப்புறப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். அப்படியும் கலையாதவர்கள் மீது தடியடி நடந்தது. கைது செய்ய வருவதைக் கண்ட ராம்தேவ் யாரும் எதிர்பாராதவண்ணம், மேடையிலிருந்து கீழே குதித்து தப்பி ஓட முயற்சித்தார். அவரது பெண் சீடர்கள் சுற்றி நின்று மறைத்துக்கொள்ள, பாபா தனது காவி உடையிலிருந்து பெண்கள் அணியும் சல்வார்கமீஸ் உடைக்கு மாறி அந்த ஏரியாவையே அதகளப்படுத்தினார். பக்தைகள் கூட்டத்துடன் கலந்து தப்பிக்க முயற்சித்தபோது, போலீஸ் ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்து தனி விமானத்தில் ஏற்றி அவரது ஆசிரமத்துக்கே அனுப்பி வைத்தது. சீரியஸாக தொடங்கிய போராட் டம், கடைசியில் ஏகப்பட்ட காமெடிக் காட்சிகளுடன் முடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்போது, 'அரசின் காட்டுமிராண்டித் தனமான போக்கைக் கண்டித்தும், தடியடியை ஏவியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளைக் கண்டித்து பி.ஜே.பி-யும் போராட்டத்தில் குதித்துள்ளது. காந்தி சமாதியில் அத்வானி, நிதின் கட்காரி போன்ற தலைவர்கள் 24 மணி நேர தர்ணாவில் ஈடுபட்டு... நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனாதிபதியிடம் மனு கொடுத்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து கேள்வி எழுப்பவே, சிக்கலில் தவிக்கிறார் பிரதமர்.
நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் போராட்டத்தில் ஈடுபட உரிமை உண்டு. அகிம்சை வழியிலான போராட்டத்தை யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். பாபா ராம்தேவும் அதையேதான் செய்தார். வன்முறை ஏற்படுவதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லாதபோது, அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறை ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கேள்வியும்!ராம்தேவ் எதிர்பார்க்கும் சட்டங்களைக் கொண்டு வந்தால், தாங்கள் மாட்ட வேண்டிவரும் என்ற அச்சத்தினால் பாபா ராம்தேவை டெல்லியை விட்டே துரத்தி இருக்கிறது, காங்கிரஸ் அரசு. ஊழல் எதிர்ப்பு என்று யார் கிளம்பினாலும் அவர்களைக் காங்கிரஸ் கட்சிக்குப் பிடிக்காமல் போயிருப்பதன் மர்மம்தான் இதில் முக்கியமானது!
அக்கறை இல்லாத அரசு..!
மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் அண்ணா ஹஜாரே. ''லோக்பால் மசோதா விவகாரத்தில் மத்திய அரசு ரொம்பவே மெத்தனம் காட்டி வருகிறது. பிரதமர் உட்பட அனைவருமே லோக்பால் வரம்புக்குள் வருமாறு மசோதா திருத்தம் செய்யப்பட வேண்டும். பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தில் போலீஸார் நடந்து கொண்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விவகாரத்துக்கு மத்திய அரசு, மக்களிடம் விளக்கம் அளித்தாக வேண்டும். மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஜூன் 8-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிட்டு இருக்கிறேன்...'' என்று அறிவித்து இருக்கிறார் ஹஜாரே.
போராட்டங்கள் நடத்துவதைத் தடுப்பதற்காக, டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி ஹஜாரே உண்ணாவிரதம் இருக்கும்பட்சத்தில், அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாகச் சொல்கிறது, டெல்லி போலீஸ் வட்டாரம். இதே 8-ம் தேதி திருப்பூரில் வாயில் கறுப்புத்துணியைக் கட்டி போராட்டம் நடத்த இருக்கிறார் தமிழருவிமணியன்!
விகடன்
No comments:
Post a Comment