Search This Blog

Saturday, June 18, 2011

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை அரசே ஏற்கும் - கலெக்டர் சகாயம்

ன்னும் ஒரு வாரத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி... சீர் செய்யாவிட்டால், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை மோட்டார் வாகன விதி எண் 245(1)-ன் படி அரசே ஏற்கும்!’ - மதுரை மாநகராட்சி ஆணை யருக்கு கலெக்டர் சகாயம் அனுப்பி இருக்கும் இந்த நோட்டீஸைப் பார்த்து, அலறிக் கிடக்கிறார்கள், மாநகராட்சி அதிகாரிகள். 

ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே தி.மு.க-வினரின் ஆதிக்கம்தான். மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து தி.மு.க-வின் கையிலேயே இருப் பதால், இவர்களைத் தட்டிக்கேட்க ஆளில்லாமல் போனது. ஆரம்பத்தில் சுமார் 156 கடைகள்தான் இருந்தன. பயணிகள் வசதிக்காக போஸ்ட் ஆபீஸ், ஓய்வெடுக்கும் அறை, சுகாதாரமான டாய்லெட் வசதி இருந்ததைப் பார்த்துவிட்டு (ஏமாந்து!) ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கொடுத்தார்கள். ஆனால், இந்தச் சான்றிதழ் வாங்கிய பிறகு, இஷ்டத்துக்கு புகுந்து விளையாடிய தி.மு.க-வினர், நடைபாதைகளை மட்டுமில்லாமல் பயணிகள் தங்கும் அறையையும் கடைகளாக்கிக் காசு பார்த்துவிட்டார்கள். இவர்களின் ஆக்கிரமிப்புக்கு போஸ்ட் ஆபீஸும் தப்பவில்லை!



இப்போது கிட்டத்தட்ட 250 கடைகள் இருப்பதாகச் சொல்கிறது மாநகராட்சி. இதில் மூன்றில் ஒரு பங்கு கடைகள் முறையான அனுமதி இல்லாதவை. அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரே நபரே இங்கு 14 கடைகளை வளைத்துப் போட்டிருக்கிறாராம். அனுமதி பெற்ற கடைக்காரர்கள்கூட பயணிகள் நடமாட முடியாதபடிக்கு அக்கம் பக்கத்தில் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து உள்ளார்கள்.ஒரு கடைக்கு மாத வாடகை யாகக் குறைந்தபட்சம் 10 ஆயிரமும் அதிகபட்சமாக 25 ஆயிரமும் வசூலிக்கிறது மாநகராட்சி. ஆனால், இங்கே கடைகளை வளைத்துப் போட்டி ருப்பவர்கள்   80 லட்சம் வரை பகடி வசூலித்துக்கொண்டு உள்வாடகைக்கு விட்டு இருக் கிறார்கள். இப்படி கடைகளை எடுக்கும் வியாபாரிகள், டூப்ளி கேட் சரக்குகளையும் எடை குறைவான பொருட்களையும் அப்பாவிப் பொதுமக்கள் தலையில் கட்டி, போட்ட பணத்தைத் திருப்பி எடுக்கிறார்கள்!


இங்குள்ள கட்டணக் கழிப்பிடங்களில் சிறுநீர் கழிப்பதற்கே 3 அழுதால்தான் உள்ளே விடுவார்கள். கேள்வி கேட்டால், ''இங்க எதுக்கு வர்றே... பிளாஸ்டிக் பையில் பிடிச்சு வீட்டுக்கு கொண்டு போ!'' என்பார்கள் நக்கலாக. 'இதற்கு எப்படி ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கொடுத்தார்கள்?’ என்று வியக்கும் அளவுக்கு குடிநீர், சுகாதாரம் எல்லாமே இங்கு மகாமட்டமாக இருக்கும். இந்த அவலங்களுக்குத்தான் சாவு மணி அடித்து இருக்கிறார் சகாயம்!

இது குறித்து சகாயத்திடம் பேசியபோது, ''மாட்டுத்தாவணி பேருந்து நிலைய அவலங்கள் குறித்து எனக்குப் பொதுமக்கள் தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள். என்னதான் நடக்குதுன்னு பாக்குறதுக்காக நான் மக்களோடு மக்களாக யாருக்கும் தெரியாமல் தனியே அங்கே விசிட் போனேன். கழிப்பறையில் என் கண் முன்னாடியே 3 வசூல் பண்ணுனாங்க. அப்போதைக்கு எதையும் வெளிக்காட்டிக்காம வந்துட்டேன். மாகராட்சிக்குன்னு மேயர் இருக்காங்க, கமிஷனர் இருக்காங்க. அவங்களோட அதிகாரத்துல குறுக்கிடக் கூடாதுன்னுட்டு. 'இதையெல்லாம் சரி செய்யுங்க’ன்னு அவங்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்தேன். ஆனா, அவங்க சரியான நடவ டிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகுதான் நானே டிரான்ஸ்போர்ட் அதிகாரிகளைக் கூட் டிட்டு முறைப்படி பேருந்து நிலையத்துக்கு விசிட் போய், அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு போட்டேன்.

பேருந்து நிலையத்துக்கு ஆர்.டி.ஓ. மூணு வருடங்களுக்கு ஒரு முறை உரிமம் கொடுக்கணும். ஆனா, அதைக்கூட கடந்த ஆறு வருடங்களாக வாங்காமல் இருக்கிறார்கள். உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தால், ஆர்.டி.ஓ. மூலமாக அதை நேரடியாக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்னு விதி இருக்கு. அதன் அடிப்படையில்தான் 'ஒரு வாரத்துக்குள் பேருந்து நிலைய சீர்கேடுகளைச் சரிசெய்யவில்லை என்றால், அரசே ஏற்கும்’னு ஷோகாஸ் நோட்டீஸ் கொடுத்தேன். 'சீர்கேடுகளைச் சரிசெய்துகொண்டு இருக்கிறோம்’னு பதில் கொடுத்து இருக்கிறார்கள். அதிகாரிகளை அனுப்பி சரிபார்ப்போம். திருப்தி இருந்தால் சரி... இல்லாவிட்டால், சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்!'' என்று உறுதியாகச் சொன்னவர்,

''எடை குறைவான பொருட்களை விற்பது சம்பந்தமான புகார்கள் தொடர்பாக நேற்றுக்கூட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சோதனை நடத்தி, தராசுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள். மாட்டுத்தாவணியில் மட்டும் இல்லாமல் ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்கிறார்கள். இதே போல் திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி நகராட்சிகளிலும் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி ஆர்.டி.ஓ-க்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்...'' என்றும் கூறினார்.

கலெக்டர் அனுப்பி இருக்கும் ஷோகாஸ் நோட்டீஸ் குறித்து மாநகராட்சி கமிஷனர் செபஸ்டியனிடம் கேட்டதற்கு, ''இத்தனை நாளும் ஆக்கிரமிப்புகள் குறித்து யாரிடம் புகார் செய்யவேண்டுமோ, அவர்களே ஆக்கிரமிப்புகளை ஆதரிப்பவர்களாக இருந்தார்கள். நாங்கள் சொல்வதை யாரும் கேட்பதாக இல்லை. அதனால் ஆக்கிரமிப்புகளை எடுக்க முடியாத சூழல்! இப்போது கலெக்டர் எங்களுக்குப் பக்கபலமாக இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நாங்களும் ஆர்வமாய் இருக்கிறோம். எங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வார காலத்தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் காட்டுவோம்!'' என்றார் அழுத்தமாக!

விகடன்  

No comments:

Post a Comment