திருந்துங்கள்!
1. தி.மு.க.வினருக்கு
கலைஞர் கருணாநிதி திருந்துவதாகவோ தம் தவறுகளை உணர்வதாகவோ தெரியவில்லை. தோல்விக்குப் பின் தமக்கு மக்கள் நல்ல ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னவர், அந்த ஓய்வைப் பயன்படுத்திக் கொள்ளாமல், மறுபடியும் அறிக்கைகள், பேச்சுகள் என்று பழையபடியே தம் தவறுகளுக்கு சுண்ணாம்படிக்கும் வேலையை ஆரம்பித்து விட்டார்.தி.மு.க.தான் படுதோல்வியடைந்து விட்டதே, கருணாநிதிதான் அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்டுவிட்டாரே, ஏன் தொடர்ந்து அவர்களைப் பற்றி இன்னமும் எழுதவேண்டும் என்று சில நண்பர்கள் கேட்டார்கள். எழுத சில காரணங்கள் இருக்கின்றன.
முதல் காரணம்
ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா எடுக்கும் சில நடவடிக்கைகள் பற்றிய சர்ச்சைகள், விமர்சனங்கள், தி.மு.க ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்து தப்பு செய்துவிட்டார்கள் என்ற ஒரு கருத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஜெயலலிதாவின் தவறுகளை நிச்சயம் விமர்சிக்க வேண்டும். ஆனால் அவையெல்லாம், தி.மு.க ஆட்சியின் அராஜகங்களை, முறை கேடுகளை நியாயப்படுத்திவிட முடியாது. அவற்றுக்கான தண்டனை தேர்தல் தோல்வி மட்டுமல்ல; ஊழலும் முறைகேடும் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இரண்டாவது காரணம், தி.மு.க. என்ற கட்சி அடியோடு அழிந்துபோவதில் எனக்கு உடன்பாடில்லை. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க இரண்டுக்கும் மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாகவேண்டுமென்பதும், அது திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், காந்திய இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களின் சிறந்த கூறுகளின் கலப்பாக அமைய வேண்டுமென்பதும் என் கனவுகளில் ஒன்று. ஆனால் அப்படி ஒன்று நிகழ்வதற்கான சமூகக் காரணங்கள் கனிவதற்கும் கனிந்து வரும் வரையிலும், தி.மு.க. என்ற கட்சி புதுப்பிக்கப்பட வேண்டும்.
தி.மு.க.வின் வீழ்ச்சிக்கு பிரதானமான காரணம் கருணாநிதி தம் குடும்பங்களின் சுயநலத்தை முன்னிறுத்தி அதற்கேற்ப கட்சியை வடிவமைத்துக் கொண்டார். தம் குடும்பம் போலவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தம்மை அண்டிப் பிழைக்கும் ஒரு பிரமுகரின் குடும்பம் பாளையக்காரராக ஆட்சி செய்யும் முறையை அவர்தான் வலுப்படுத்திப் பாதுகாத்தார். இதையெல்லாம் மறைப்பதற்கான முகமூடியாக தமிழ், பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவற்றைத் தம் முழுத்திறமையுடன் பயன்படுத்தி வந்தார் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகி விட்டது.
இனி தி.மு.க.வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு அது குறைந்தபட்சம் அண்ணா காலத்து தி.மு.கழகமாகவேனும் ஆகவேண்டுமானால், கருணாநிதி உருவாக்கிய குடும்ப அரசியல் கலாசாரம் வேரறுக்கப்பட வேண்டும். அதற்கான சூழல் இப்போது உருவாகத் தொடங்கியிருக்கிறது. டெலி ஃபோன் நிலையத்தையே டி.வி.க்காக பயன்படுத்தியது போன்ற கருணாநிதி குடும்பத்தினரின் முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து, ஒவ்வொருவராக சிறை நோக்கி நெடிய பயணம் தொடங்குகிறார்கள். அவரது பாளையக்காரக் குடும்பங்களும் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. அடுத்து அவர்கள் மீதும் நிலப்பறி, மணற்கொள்ளை போன்ற பல குற்றங்களுக்காக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
சுருக்கமாகச் சொல்வதானால், இன்று தி.மு.க.வைக் காப்பாற்ற வேண்டுமானால் கருணாநிதியைக் கட்சியிலிருந்து விலகியிருக்கச் சொல்லக் கூடிய அளவு உட்கட்சி ஜனநாயகம் மறுபடியும் ஏற்பட்டால்தான் முடியும். ஆனால், அவரோ தொடர்ந்து தம் வார்த்தை விளையாட்டுகள், பேச்சுத்திறமை போன்றவற்றின் மூலம் எஞ்சியிருக்கக்கூடிய தொண்டர்களை ஏமாற்ற முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். அதற்கான அடையாளம்தான் திருவாரூர் நன்றியுரை. அதில் அவர் சொல்லிய ஒவ்வொரு கருத்தையும் மயக்கமின்றி கேள்வி கேட்டால் தான் உண்மையான திராவிட இயக்கத் தொண்டனால் தி.மு.க.வைக் காப்பாற்ற முடியும்.
அந்த உரையில் கருணாநிதி சொல்கிறார்: “என் மகள் கனிமொழி இன்று மத்திய அரசின் உத்தரவாலோ, அலட்சியத்தாலோ, அல்லது வேறு காரணத்தாலோ, சிறையில் உள்ளார்.”
தி.மு.க. தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “தலைவா, அப்படின்னா, மத்திய அரசுல ஏன் இன்னமும் தி.மு.க. ஆட்சியில இருக்குது? அரசு அலட்சியம்னா ஏன் எதிர்த்துப் பதவி விலகாம இருக்காங்க? வேற காரணம்ன்னா என்ன? நீராராடியாவோட கனி பேசின பேச்சுல அவுட் ஆன சமாச்சாரமா? ராசா, கனி,டெலிகாம் அதிகாரிங்க, கம்பெனி நிர்வாகிங்க அல்லாரும் உள்ள இருக்கறதுக்கு சுப்ரீம் கோர்ட்டோட கண்டிப்புதானே காரணம், தலைவா?”
அடுத்து, கருணாநிதி, கட்சியினரின் அனுதாப உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதற்காகச் சொல்கிறார்: “திஹார் சிறையில் ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடத்தில் வாடிவிடும். அப்படிப்பட்ட இடத்தில் கனிமொழி இருக்கிறார்.”
தி.மு.க தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “அதே ஜெயில்ல தானே, ராசா மூணு மாசமா இருக்காரு? அவுரு வாடமாட்டாரா ? ராசாவுக்காக நீங்க இப்பிடி உருகலியே?
தவிர திஹார் சிறையைப் பத்தி நாங்களும் எல்லா பேப்பர்லயும் படிக்கறோம் தலைவா. ருச்சி சிங்குன்னு ஒரு பத்திரிகை நிருபர். அந்தம்மாவை உளவாளின்னு சொல்லி திஹார்ல போட்டாங்க. ஆறு வருஷம் கழிச்சு நிரபராதின்னு விடுதலை பண்ணிட்டாங்க. அவங்க திஹார் ஜெயிலப் பத்தி எழுதியிருக்காங்க, படிங்க.
‘வி.ஐ.பி. கைதிகள் மணிக்கணக்கில் அதிகாரிகளின் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம். மற்ற பெண் கைதிகள் அவரவர் சிறை அறைகளுக்கு அனுப்பப்பட்ட பிறகும் இவர்கள் அங்கேயே பொழுதைப் போக்கலாம். வி.ஐ.பி. கைதிகள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் அறைக்குத் திரும்பலாம். திஹார் ஜெயில் ஒரு ரிசார்ட்டைப் போல வசதியானது. அதற்கு ஒரு விலை உண்டு, அவ்வளவே. நீதிமன்றத்துக்கு விசாரணைக்குச் செல்லும்போது பியூட்டி பார்லரிலிருந்து வருபவர்களைப் போல பெண் கைதிகளை பளபளவென்று பார்க்கமுடியும்.’
அதுமட்டுமில்ல, தலைவா. வீட்டு சாப்பாடு உண்டு. தவிர கேண்டீன்ல தினசரி 200 ரூபாய்க்கு இட்லி, வடை, தோசை, சாக்லெட் எல்லாம் வாங்கிக்கலாம். கனிமொழிக்கு டி.வி, ஃபேன், தவிர அவங்க கேட்டுக்கிட்டபடி அவங்களுக்கு மேற்கத்திய கழிப்பறை தனியா தடுப்பு ஸ்கிரீன், டவல் ஸ்டாண்டோட குடுத்துருக்காங்கன்னு பேப்பர்ல போட்டிருக்குது. ஜெயலலிதாவுக்கு நீங்க மூட்டைப்பூச்சியோட கம்பளி குடுத்தமாதிரி எதுவும் குடுக்கல.”
கனிமொழி செய்த குற்றமென்ன என்று கருணாநிதி பேசியிருக்கிறார்: “கலைஞர் டி.வி.யில் பங்குதாரராக இரு என்று நான் தான் சொன்னேன். அவர் வேண்டாமென்றார். நான் வற்புறுத்திய காரணத்தால் சேர்ந்தார். வேதனையைப் பகிர்ந்துகொள்வதற்காக நான் வரவில்லை. நீங்கள் எனது சகோதரர்கள், சொந்தக்காரர்கள் என்பதற்காக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.”
தி.மு.க. தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி: “தலைவா, நாங்கள்லாம் சொந்தக்காரங்கன்னு இப்ப ஷோக்கா சொல்றீங்க இல்ல? இதே நினைப்பு ஏன் கலைஞர் டி.வி.ல பங்கு குடுக்கறப்ப உங்களுக்குத் தோணலே? கனியை வற்புறுத்தினா மாதிரி எங்களையும் கேட்டிருக்கலாமில்ல? பங்கு குடுக்கறப்ப அவங்க ஞாபகம் மட்டும்தான் வருது. மாட்டிக்கிட்டு கஷ்டப்படறப்ப சப்போர்ட் சேர்க்க மட்டும்தான் எங்க ஞாபகம் வருமா உங்களுக்கு?”
இனி கலைஞர் கருணாநிதி என்ன முயற்சி செய்தாலும் வரலாற்றில் அவர் பங்களிப்பு ஏற்கெனவே குறிக்கப்பட்டு விட்டது. 1917ல் நீதிக் கட்சியாகத் தொடங்கிய திராவிட இயக்கத்தின் 94 ஆண்டு வரலாற்றில் கருணாநிதி ஓர் அடிக் குறிப்பாகவே எஞ்சுவார். சமூக இயக்கமான திராவிட இயக்கத்துக்கு வலுவான அரசியல் அதிகாரம் கிடைப்பதற்கு அண்ணா காரணமாக இருந்தார். தமது குடும்ப சுயநலத்துக்காக அந்த அரசியல் அதிகாரத்தைப் பணயம் வைத்தவர் கருணாநிதி.
அவரிடமிருந்து இயக்கத்தை மீட்கும் பணிதான் இனி நிகழ வேண்டிய தி.மு.க, திராவிட இயக்க வரலாறு. அந்த மீட்பை முன்னெடுத்துச் செல்ல தி.மு. க.வுக்கு இப்போதைக்கு இருக்கும் தலைவர், கருணாநிதியின் மகன் ஸ்டாலின்தான் என்பது வரலாற்றின் விசித்திரம். தலைவர்கள் திருந்தாவிட்டால் அவர்களைத் தூக்கி எறிபவர்களாகத் தொண்டர்கள் திருந்தினால்தான் வரலாறு மாறும்.
2. புதிய ஆட்சிக்கு:
ஒவ்வொரு ஆட்சியும் தனக்கு முந்தைய இன்னொரு கட்சி ஆட்சியின் திட்டங்களைத் தன் விருப்பத்துக்கேற்ப மாற்றுவது என்பது தி.மு.க.-அ.இ.அ.தி.மு.க வரலாற்றில் மாறாத அம்சம். மாற்றுவது புதிய ஆட்சியின் உரிமையாக இருக்கலாம். ஆனால் கூடவே அதற்கு ஒரு கடமையும் இருக்கிறது. ஏன் மாற்றுகிறோம் என்பதைத் தெளிவாகச் சொல்லி, மக்களை ஏற்கச் செய்யவேண்டியதுதான் அந்தக் கடமை. ஸ்விட்சர்லாந்தில் இருப்பது போல முக்கிய திட்டங்களை, சட்டங்களைக் கொண்டு வரும்போது ரெஃபரண்டம் நடத்தும் முறையை ஜெயலலிதா பரிசீலிக்க வேண்டும்.
ஜெயலலிதா முதலமைச்சர் பதவி ஏற்றதும் தி.மு.க.வின் இலவச வீட்டு வசதித் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சமச்சீர் கல்வித் திட்டம், புதிய சட்டமன்ற, செயலகக் கட்டடம், மெட்ரோ ரயில் எல்லாம் கைவிடப்படும் என்பதும் சில வேறு பெயரில் செயலாக்கப்படும் என்பதும் எதிர்பார்த்ததுதான்.சமச்சீர் கல்வி திட்டத்தை ஆய்வு செய்யக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. குழுவில் அரசியலுக்கு அப்பாற்பட்ட அறிஞர்கள் இருக்க வேண்டும். குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற, கால வரையறை தேவை. எப்படிப் பார்த்தாலும் அடுத்த கல்வியாண்டில் பொதுப் பாடத் திட்டம் நடைமுறையில் வரவேண்டும். சமச்சீர் கல்வியில் அது ஒரு சிறிய அம்சம்தான். கூடவே பொதுத் தேர்வு முறையும் சேர்த்துச் செயல்படுத்தப் படவேண்டும். ஒரே பாடத் திட்டத்துக்கு வெவ்வேறு விதங்களில் தேர்வு நடத்தக் கூடாது.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எல்லா பொதுமக்களுக்குமாக விரிவுபடுத்தப்படும் என்றும் தனியார் முதலீடு மருத்துவத்தில் அதிகரிக்கப்படும் என்றும் ஜெயலலிதா அரசு அறிவித்திருக்கிறது. அப்படியானால் அரசு மருத்துவமனைகளின் வேலை என்ன? தனியார் மருத்துவ சேவைக் கட்டணம், தனியார் கல்விக் கட்டணம் போலவே எல்லாராலும் செலவிட முடியாதது. மெட்ரோ ரயில் திட்டமும் புதிய தலைமைச் செயலகமும் இன்னமும் முடிக்கப்படாதவை. மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் ஆய்வு அளவிலேயே இருப்பதால் அதைக் கைவிடுவதில் சிக்கல் இல்லை. தலைமைச் செயலகம் கட்டி முடிக்காமலே தி.மு.க அரசு திறப்பு விழா நடத்தியது. கட்டியதில் ஊழல் பற்றி விசாரிப்பதற்காக மீதி கட்டட வேலையைக் கைவிடுவது அபத்தமானது. விசாரணை முடியும்வரை கட்டடம் பயன்படாமலே வீணாகும்.
ஜெயலலிதா அரசு அறிவித்து வரும் மாற்றங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு திட்டத்திலும் விளக்கமான வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சிக்கு வந்துவிட்டோம். அதனால் நாம் விரும்பியதைச் செய்தால் கேட்பார் இல்லை என்ற பழைய மனோநிலை இனி உதவாது. அந்த மனநிலையிலிருந்து திருந்தாவிட்டால், மக்கள் அடுத்த தேர்தலில் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற பாடத்தை தி.மு.க.வுக்கு ஏற்பட்ட கதியிலிருந்து ஜெயலலிதா கற்கவேண்டும்.
3. மீடியாவுக்கு
அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் மூன்று நாள் நடந்தது. நாடே கொந்தளிப்பது போன்ற ஒரு மாயையை அப்போது ஆங்கில டி.வி.சேனல்கள் உருவாக்கின. அந்த மாயையில் அடுத்து பத்திரிகைகளும் சிக்கின.அடுத்தபடியாக யோகா வணிகர் பாபா ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டத்தின்போதும் அதேபோன்ற ஒரு மாயையை உருவாக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. இரண்டுக்கும் நடுவில் மேதா பட்கர் எட்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அதை இதே ஆங்கில டி.வி. சேனல்களும் பத்திரிகைகளும் கண்டுகொள்ளவே இல்லை. ஒப்புக்கு ஒரு வரி செய்தி சொல்லி விட்டுவிட்டன. காரணம் மேதா பட்கரின் உண்ணாவிரதம் மும்பையில் கோல்பார் பகுதியில் 24 ஆயிரம் குடிசைவாசிகளை அகற்றி நிலத்தை தனியார் ரியல் எஸ்டேட்காரர்களுக்குத் தருவதைக் கண்டிப்பதாகும். அதில் மேட்டுக்குடி மீடியாவுக்கு அக்கறையில்லை. ஆனால் மேதாவின் உண்ணா விரதம்தான் ஜெயித்தது. காரணம் மக்கள் அவரோடு திரளாக இருந்ததுதான். மகாராஷ்டிர அரசு மேதாவின் கோரிக்கைகளை ஏற்று விசாரணைக்கு உத்தரவிட்டது.
அரசியல்வாதிகள் மட்டுமல்ல மீடியாவும் பத்திரிகைகளும் கூட திருந்த வேண்டியிருக்கிறது. அசல் பிரச்னைகளை விட்டுவிட்டு போலியானவற்றுக்கு முக்கியத்துவம் தருவது மக்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்து விட்டது.
இந்த வார அதிர்ச்சி!
இந்தியாவில் இருக்கும் சுமார் 1450 பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒரு சதவிகிதம் கல்லூரிகளில் மட்டுமே முறையான உள்கட்டமைப்பும் ஆய்வக வசதிகளும் இருப்பதாக அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்திருக்கிறது.
அருமையா எழுதி இருக்கீங்க
ReplyDelete