Search This Blog

Sunday, June 19, 2011

பர்சனல் லோன் - எளிதாக மீள இதோ சில வழிகள்


திடீரென உடல் நலமில்லாமல் போய் மருத்துவ மனையில் அட்மிட் ஆகிவிடுவது... நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உதவுவது இப்படி யாக கொஞ்சமும்  எதிர்பாராமல் வந்து சேரும் திடீர் செலவுகளைச் சமாளிக்க ஒரே வழி, ஏதாவது ஒரு வங்கியில் பர்சனல் கடன் வாங்குவதே. அடமானம் மற்றும் ஜாமீன் எதையும் கேட்டு நோண்டாமல் கொடுக்கிற கடன் இது என்பதாலோ என்னவோ இதற்கு விதிக்கப்படும் வட்டியும் அதிகமே. ஏதோ ஒரு அவசரத்தில் இந்தக் கடனை வாங்கிவிட்டு, பிற்பாடு ஒழுங்காகத் திரும்பக் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் பலர். இந்தக் கடனிலிருந்து எளிதாக மீள இதோ சில வழிகள்...!

சொத்தை வைத்து சமாளிக்கலாம்!

உங்களிடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீடு, கார், ஆயுள் காப்பீட்டு பாலிசிகள், வரி சேமிப்புச் சான்றிதழ்கள், பங்குகள், பாண்டுகள், தங்க நகைகள், மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற சொத்துக்களை வங்கியில் அடகு வைத்து தனிநபர் கடனை அடைக்கலாம்.  சில வங்கிகள் இது மாதிரியான சொத்துகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கின்றன. அதனைப் பயன்படுத்தி அதிகளவி லான வட்டி கட்டுவதைத் தவிர்க்கலாம்.

மறுசீரமைப்பு!

நீங்கள் முப்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டின் பெயரில் வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறீர்கள் எனில், தற்போது அந்த வீட்டிற்கான மதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில் மீண்டும் வீட்டின் மீது கடன் வாங்கி தனிநபர் கடனை அடைக்கலாம். வீட்டுக்கான கடனின் வட்டி 10.75-11 சதவிகி தமாக இருக்கும் பட்சத்தில், தனிநபர் கடன் 16-24 சதவிகிதமாக இருப்பதால் வீட்டின் மீது மறுசீரமைப்பு (Restructure) முறையில் கடனைப் பெற்று, தனிநபர் கடனை அடைத்து விடலாம்.இம்முறையில் கடன் பெறும்போது மாறுபடும் வட்டி விகிதத்தில் இருந்தால், வருங் காலத்தில் வட்டி விகிதம் குறையும்போது கூடுதல் பலன் கிடைக்கும். இதற்கு நீங்கள் ஒழுங்காக இ.எம்.ஐ. கட்டியிருக்க வேண்டும்; சிபில் அமைப்பில் உங்கள் பெயர் இல்லாமல் இருக்க வேண்டும். இதுமாதிரி உங்கள் வங்கி  ரெக்கார்டில் எந்த குறை பாடும் இருக்கக்கூடாது.  

பல வங்கிகளில் வேண்டாமே!

பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் தனிநபர் கடன் வாங்கி இருப்பார்கள். ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமான வட்டி கணக்கிடப்படும். இதனாலும் அதிகளவில் நீங்கள் வட்டி செலுத்த வேண்டியிருக் கலாம். பல வங்கிகளில் தனிநபர் கடன் வாங்கியவர்கள், வட்டி குறைவாக இருக்கும் வங்கியில் தகுதி இருந்தால் அந்தத் தொகைக்கு ஈடாக கடன் வாங்கி, மற்ற வங்கிகளில் வாங்கிய கடன்களை அடைத்துவிடலாம். இதில் கண்ணுக்குத் தெரியாமல் போகும் அதிக வட்டி நமக்கு மிச்சமாகும்.

குறைந்த காலத்தில் கட்டுங்க!

நீங்கள் வாங்கிய தனிநபர் கடனைத் திரும்பச் செலுத்தும் போது இ.எம்.ஐ. குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக கடனைத் திரும்பச் செலுத்தும் காலத்தை அதிகமாக வைத்திருப்பீர்கள். ஆனால், காலம் செல்லச் செல்ல அதிக வட்டி கட்ட வேண்டி யிருக்கும் என்பதை பலரும் நினைத்துப் பார்ப்பதே இல்லை. எனவே, கடன் பணம் குறைவோ, அதிகமோ அதை எவ்வளவு சீக்கிரத்தில் கட்டி முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கட்டி முடித்து விட்டால், வட்டியாக கொடுக்கும் பெரும் பணத்தை எளிதாக மிச்சப்படுத்தலாம்.  

யோசித்து வாங்கவும்!

அதிகப்படியான வட்டியில் கொடுக்கப்படும் தனிநபர் கடனை வாங்கும்முன் ஒன்றுக்குப் பலமுறை யோசித்துவிட்டு வாங்குவது நல்லது. என்னதான் அவரசத் தேவை என்றாலும் நம்மிடம் இருக்கும் பங்குகளை விற்றோ, ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருக்கும் பணத்தை எடுத்தோ அவசரத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதே புத்திசாலித்தனம்.மாதச் சம்பளம் வாங்குபவர் எனில் உங்கள் சம்பள விவரம், தெளிவான வங்கி பரிவர்த்தனை ஆகிய விவரங்களைக் கொண்டு வங்கியை அணுகி குறைந்த வட்டியில் அடமானக் கடன் பெற்றுக் கொள்வது நல்லது.  வாங்குவது கடன்தான் என்றாலும், அதை குறைந்த வட்டியில் வாங்குவதே நல்லது. திட்டமிட்டு செயல்பட்டால், பர்சனல் லோனை எளிதாகக் கட்டி முடிக்கலாமே!

விகடன்  

1 comment:

  1. உபயோகமான தகவல்கள். நாம் கட்டும் வட்டியை கணக்கிட்டால் தலை பூபியை விட அதிக வேகத்தில் சுற்றுகிறது

    ReplyDelete