திகார் ஜெயில் - தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவன நிர்வாகிகள், நாடறிந்த பிரபலங்கள் என .இப்போது இங்கே இருக்கும் வி.வி.ஐ.பி. கைதிகளால் சிறை அதிகாரிகளின் பிளட் பிரஷர் எகிறிக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரபலங்களுக்கு சட்டப்படி என்னென்ன சலுகைகள், வசதிகள் வழங்கப்பட வேண்டுமோ அவற்றை மட்டுமே வழங்கி இருக்கிறோம்" என்கிறார்கள் திகார் சிறை அதிகாரிகள்.
எல்லோருக்குமே பதினைந்துக்குப் பத்தடி அளவுள்ள தனி அறைகள்தான். காலையில் ஆறு மணிக்கு எழுந்திருக்க வேண்டும். ரோல் கால் எடுப்பார்கள். பல் துலக்கி, பேப்பர் பார்த்து, காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு ஏழரை எட்டு மணிக்கு ரெடியானால் எட்டரை மணிக்கு கோர்ட்டுக்குப் புறப்படத் தயாராக வேண்டும். 2ஜி வழக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடைபெறுவதால், சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் தினசரி அங்கே ஆஜராக வேண்டும். அங்கே போனாலும், நேரடியாக கோர்ட் ஹாலில் உட்கார்ந்து கொண்டு கோர்ட் நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்க அனுமதி இல்லை. அங்கே இருக்கும் லாக்-அப்பில்தான் இருக்க வேண்டும். 2ஜி கேஸ் நடக்கும் நேரத்தில் மட்டுமே அங்கே இருக்க அனுமதி உண்டு.
மறுபடியும் திகார் திரும்ப மாலை ஐந்தரை, ஆறு மணியாகிவிடும். ஏழு மணிக்கு இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு தூங்கப்போக வேண்டியதுதான். இரவு பத்தரை மணியானால், வளாகத்தினுள்ளே விளக்குகளை அணைத்துவிடுவார்கள். இரவு நேரத்தில் அறையில் ஒரு விளக்கும், மின் விசிறியும் மட்டுமே. ஏ.சி. குளிர்ச்சிக்குப் பழகிப் போன வி.வி.ஐ.பி.க்கள் முதல் சில நாட்கள் ரொம்பவே திண்டாடிப் போய்விடுவார்கள். வி.ஐ.பி கைதிகள் சிறைக்கு வரும்போது, சொந்தமாக சின்ன டி.வி.கொண்டு வர அனுமதி. ஆனால், விடுதலையாகிப் போகிறபோது அந்த டி.வி.யைக் கொண்டு போக முடியாது.
ஆ.ராசாவுக்கு ஜெயிலில் வழங்கப்படும் சாப்பாடு சரிப்பட்டு வராமல், தினமும் அவருக்கு வீட்டுச் சாப்பாடு வேண்டும் என கேட்க, அதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.ஸ்வான் டெலிகாமின் முதலாளியான ஷாகித் பால்வாவுக்கு, சிறைக்கொட்டடிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் சிமென்ட் மேடை மெத்து, மெத்தென்று இல்லை என்று புகார் சொன்னார்.
ஆறாம் எண் கொண்ட பெண்களுக்கான சிறையில், 15ஆம் எண் வார்டில் இருக்கும் கனிமொழிக்கு பாத்ரூமில் பிரச்னை. இதற்கு முன்பு சிறைக் கைதிகளின் நலனைக் கவனித்துக் கொள்ளும் அதிகாரியின் அறையாக இருந்த அறை இது. பாதுகாப்புக் காரணங்களுக்காக சிறை அதிகாரிகள் தவிர வேறு யாரும் செல்ல முடியாத இந்த அறை, கனிமொழிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஸ்டைல் பாத்ரூம் கொண்டது கனிமொழியின் அறை. அந்த பாத்ரூமில் டவல் ராடு, திரைச்சீலைகள் உட்பட சில சௌகரியங்கள் உண்டு. வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட படுக்கையைத்தான் கனிமொழி பயன்படுத்துவதாகக் கூட சொல்கிறார்கள். கைதிகள் நகை அணியக்கூடாது என்பது சிறை விதி. எனவே, சிறைக்குப் போகிறபோது கனிமொழி தன் மூக்குத்தியைக்கூட கழற்றிக் கொடுத்துவிட்டுப் போகும்படி ஆகிவிட்டது.
கனிமொழி, சிறை நூலகத்திலிருந்து எடுத்த அலெக்சாண்டர் மக்கால் ஸ்மித் எழுதிய நாவலான ‘தி கேர்ஃபுல் யூஸ் ஆஃப் காம்ப்ளிமென்ட்ஸ்’, நைஜீரிய எழுத்தாளரான சிம்மமன்டாவின் ‘தி திங் அரௌண்டு யுவர் நெக்’ என்ற சிறுகதைத் தொகுப்புகளைப் படித்து முடித்துவிட்டாராம்.நூறு நாட்களை திகாரில் கழித்துவிட்ட ஆ. ராசாவுக்கு இப்போது ஜெயில் அசௌகரியங்கள் ஓரளவுக்குப் பழகிவிட்டன. காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுகிறார். தினமும் உடற்பயிற்சி செய்கிறார். அவருக்கு மூன்று தினசரி பேப்பர்கள் வழங்கப்படுகின்றன. ஜெயில்வாசிகளுக்கு அடிப்படைக் கல்வி கற்பிப்பதற்காக வழங்கப்படும் புத்தகங்களின் உதவியோடு கொஞ்சம்போல இந்தி கற்றுக் கொண்டுவிட்டார்.
பகல் நேரத்தில் ரொம்ப புழுக்கமாக இருந்தால், ஜெயில் கண்காணிப்பாளர் அறைக்கு வந்து கொஞ்ச நேரம் ஏ.சி. காற்று வாங்கிவிட்டுப் போகிறாராம்.
ஒரு பெரிய நோட் புக்கில் சுரேஷ் கல்மாடி எப்போது பார்த்தாலும் ஏதாவது எழுதிக்கொண்டே இருக்கிறாராம். ஒரு நாள் குளியலறையில் தடுக்கிக் கீழே விழுந்து விட்டார் கல்மாடி. ஆனால் அந்த விஷயத்தை மூன்று நாட்கள் கழித்துத்தான் வெளியில் சொன்னாராம். மாலை நேரங்களில் பாட்மின்டன் ஆடுகிறார். இவருக்கு திகாரில் இருக்கும் மற்ற கைதிகள் மூலமாக ஆபத்து வரலாம் என்பதால், அவர் மீது கொஞ்சம் கூடுதல் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டியும் இங்கேதான் இருக்கிறார்.
எச்ச்ளுசிவே
புது தில்லி சாணக்கியபுரியிலிருந்து ஏழு கி.மீ. தூரத்தில் உள்ள திகார் ஜெயில் 1958ல் உருவாக்கப்பட்டது.
திகார் சிறை வளாகத்தில் தனித்தனியாக ஆறு சிறைச்சாலைகள் உட்பட மொத்தம் 10 உள்ளன. மொத்த கொள்ளளவு: 6,250; ஆனால் தற்போது இருப்பவர்கள்: 11,719 பேர். இவர்களில் அன்னிய நாட்டவர்: 428.
திகார் சிறைவாசி ஒருவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். அதிகாரி ஆகியிருக்கிறார்.
சிறைவாசிகள் கிரிக்கெட், வாலிபால், பாஸ்கெட் பால், பாட்மின்டன், செஸ், கேரம் போன்ற விளையாட்டுகள் விளையாட வசதி உள்ளது.
திகார் வளாகத்தில் 150 படுக்கைகள் கொண்ட ஒரு ஆஸ்பத்திரி உண்டு. சிறை வாசிகளில் சுமார் 6% பேருக்கு ஹெச்.ஐ.வி. பாசிடிவ்.
திகார் சிறைவாசிகள் தயாரிக்கும் ஊறுகாய், காகித கவர்கள், அப்பளம், மெழுகுவர்த்தி, பிஸ்கட் முதலிய உணவுப்பண்டங்கள், ரெடிமேடு ஆடைகள், பரிசுப் பொருட்கள் விற்பனைக்கென தில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு விற்பனை மையம் உள்ளது.
கிரன் பேடி, திகார் ஜெயிலின் ஐ.ஜி. ஆக இருந்தபோது, சிறைவாசிகளுக்கு யோகாசன தியானப் பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்து வைத்தார். இன்றும் தியான வகுப்புகள் தொடர்கின்றன.
மரண தண்டனை விதிக்கப்பட்ட அஃப்சல் குரு உட்பட மொத்தம் ஒன்பது மரண தண்டனைக் கைதிகள் திகாரில் இருக்கிறார்கள்.
தச்சுவேலைப் பிரிவு, நெசவு பிரிவு, தையல் பிரிவு, பேக்கரி பிரிவு, வத்தல், ஊறுகாய் போன்ற தயாரிப்பு வேலைகளில் சிறைவாசிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலை வழங்கப்படுகிறது. தினக்கூலி ரூ.40 முதல் 52 வரை.
No comments:
Post a Comment