1. ஆபத்தான அதிகாரிகள்
ஊழலுக்காக முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அரசியல்வாதிகளா, அதிகாரிகளா என்று என்னைக் கேட்டால், நான் அதிகாரிகளைத்தான் குறிப்பிடுவேன். இதில் கருத்து மாறுபடுபவர்கள் இருக்கலாம். ஆனால், அதிகாரிகளின் மூளையும் உழைப்பும் ஒத்துழைப்பும் இல்லாமல் ஓர் அரசியல்வாதிகூட ஊழல் செய்ய முடியாது என்பதும், அரசியல்வாதியின் ஒத்துழைப்பு இல்லாமலே அதிகாரிகள் ஊழல் செய்ய முடியும் என்பதும் நடைமுறை உண்மைகள்.
வரலாறு காணாத விதத்தில் உயர் அதிகாரிகளும் பெரும் அரசியல்வாதிகளும் அடுத்தடுத்து சிறைக்குப் போய்க் கொண்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலையே எடுத்துக் கொண்டு பார்த்தால், டெலிகாம் துறையின் உயர் அதிகாரிகள் பலர் இப்போது சிறையில் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிகாரிகள் மிகக் குறைவு. அவர்கள் இடம் மாற்றப்படுவார்கள்; பந்தாடப்படுவார்கள்; அதைப் பற்றிக் கவலைப்படவும் மாட்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகளின் ஊழல்களில் பங்குதாரர்களாகவோ, பிரதான கருவிகளாகவோ, குறைந்தபட்சம் எதிர்ப்பு காட்டாமல் சொன்னதைச் செய்து தருபவர்களாகவோதான் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும், உயர் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கமாகிவிட்டது. இதன் நோக்கம் நிர்வாகத் திறமையை மேம்படுத்துவது அல்ல. முந்தைய ஆட்சியில் ஊழல்களுக்கு ஒத்துழைத்தவர்களை இடம் மாற்றிவிட்டு, தமது ஆட்சியில் தன் ஊழல்களுக்கு உடந்தையாக இருக்கக் கூடியவர்களை முக்கிய பொறுப்புகளில் கொண்டு வந்து வைப்பதுதான் நோக்கம். ஆட்சி மாறியதுமே இவர்களும் கட்சி மாறிவிடுவார்கள்.
உயர் மட்டத்தில் ஒரு பேரம் நடக்கும்போது அமைச்சர் பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதிக்குத் தெரிந்ததெல்லாம் இந்தப் பேரத்தில் அதிகபட்சம் தாம் எவ்வளவு பெறமுடியும் என்பதுதான். அதை முடிவு செய்தபின்னர் மீதி எல்லா வேலைகளையும் அரசு அதிகாரிகளும், பேரத்தில் லாபமடையப் போகும் தனியார் நிறுவன அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டுச் செய்து முடிக்கிறார்கள். ஒப்பந்தத்திலோ, லைசன்சிலோ என்னென்ன விதிகள் இருக்கலாம், எதை எப்படி மாற்றலாம், எப்படி வளைக்கலாம் என்பதையெல்லாம் இவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.செய்து முடித்ததும், அவற்றைப் பற்றி சட்டமன்றத்திலோ, மக்களவையிலோ கேள்விகள் வரக் கூடும். அந்தக் கேள்விகளும் வருவது பெரும்பாலும் பேரத்தில் பயன் பெற முடியாமல் போன கம்பெனிகள் சில அரசியல்வாதிகளை தகவல் கொடுத்துத் தூண்டிவிட்டுக் கேட்கவைப்பதால் தான். நியாயப்படுத்தி பதில்கள் சொல்வதற்கான குறிப்புகளையும் முன்கூட்டியே அரசு அதிகாரிகளும், தனியார் அதிகாரிகளும் திட்டமிட்டுத் தயாரித்து அமைச்சர்களுக்குக் கொடுத்திருப்பார்கள். கொஞ்சம் படிப்பறிவும், கோப்புகளைப் படித்துப் பார்த்துத் தானே ஆராயும் ஆர்வமும் உடைய ஒரு சில அமைச்சர்கள், இந்தத் திட்டமிடல்களில் எல்லாம் தாங்களும் பங்களிப்பார்கள். மற்றவர்கள் முற்றிலும் அதிகாரிகளைச் சார்ந்திருப்பார்கள்.
இப்படித்தான் நாட்டில் எல்லா ஊழல்களும் நடக்கின்றன.
ஸ்பெக்ட்ரமுக்கு அடுத்தபடி பெரிதாக வெடிக்கும் வாய்ப்பு இருக்கிற பெட்ரோலியம் ஊழல் பற்றி இதுவரை வெளிவந்துள்ள செய்திகளைப் பார்த்தால், அதிகாரிகள் எப்படியெல்லாம் ஊழல் வேலை பார்க்கிறார்கள் என்பது புரியும். கிருஷ்ணா கோதாவரி படுகையில் பெட்ரோல் இருக்கிறதா என்று ஆய்வு நடத்தி, அதை எடுத்து விற்கும் உரிமையை ரிலையன்ஸ் கம்பெனிக்கு இந்திய அரசு கொடுத்திருக்கிறது. இந்த உரிமை, இவ்வளவு பெட்ரோல் கிடைத்து விற்றால், இவ்வளவு ராயல்டி என்ற அடிப்படையில் தரப்படவில்லை. அரசும் ரிலையன்சும் சேர்ந்து பணம் முதலீடு செய்வார்கள். தொழிலை நடத்துவது ரிலையன்ஸ் வேலை. அதில் அரசுக்கு இடமில்லை.கிடைக்கும் லாபத்தில் இருவருக்கும் பங்கு.
மொத்தம் 45 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான இந்த ஒப்பந்தம் எப்படிச் செயல்பட்டது என்பதைத் தணிக்கை செய்திருக்கும் மத்திய தணிக்கை அதிகாரி, மொத்த ஒப்பந்தமும் அரசுக்கு நஷ்டமும் ரிலையன்சுக்கு லாபமும் இருக்கும் விதத்தில் இருப்பதாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அரசுக்கு இதனால் ஏற்படும் இழப்பை மதிப்பிடவே முடியவில்லையாம். மேலும் ஆவணங்கள் கிடைத்தால்தான் மதிப்பிட முடியும்.முதலில் சொன்னதிலிருந்து முதலீட்டு செலவை ரிலையன்ஸ் 117 சதவிகிதம் வரை உயர்த்திக்கொண்டே போயிருக்கிறது. இந்தப் பணம் எப்படிச் செலவிடப்படுகிறது என்ற முழு விவரங்களை ரிலையன்ஸ் தரவில்லை. இதைக் கேட்க வேண்டிய நிர்வாகக் குழுவின் அரசுப் பிரதிநிதிகளான அதிகாரிகளும் கேட்கவில்லை.
கிருஷ்ணா கோதாவரி படுகையில் எங்கெல்லாம் பெட்ரோல் இருக்கிறது என்று ஆய்வு செய்யும்போது, எந்தெந்த இடத்தில் எடுத்தால் லாபம் வராது என்று ரிலையன்ஸ் கருதுகிறதோ, அந்த இடத்தை அடுத்தபடியாக வேறு கம்பெனிக்குக் குத்தகைக்குக் கொடுத்து அரசு முயற்சிப்பதற்கும் தடை செய்யப்பட்டிருக்கிறது.துரப்பணப் பணியில் பயன்படுத்தும் டீசலைக் குறைந்த விலைக்கு அரசாங்கத்தின் பெட்ரோல் கம்பெனியிடம் வாங்காமல், அதிக விலைக்கு ரிலையன்ஸ் தன்னுடைய கம்பெனியிடமே வாங்கியிருக்கிறது. தணிக்கை அதிகாரி இதையெல்லாம் ஆராயும்போது, கேட்ட ஆவணங்களைத் தராமல், இது உங்கள் தணிக்கைக்கு அப்பாற்பட்டது என்று ரிலையன்ஸ் - அரசு கூட்டு நிறுவனம் தகராறும் செய்திருக்கிறது.
எல்லாம் அதிகாரிகள் வேலை. ஒப்பந்தத்தைத் தனியாருக்குச் சாதகமாகப் போடுவது முதல், நிர்வாகக் குழுவில் ஒப்புக்குக் கையெழுத்துப் போடுவது, தணிக்கை வந்தால் ஆவணத்தைத் தர மறுக்க விதிகளைச் சுட்டிக் காட்டுவது வரை எல்லாமே அதிகாரிகளின் கைவேலைதான். இந்தத் துறையின் உச்ச அதிகாரியான டைரக்டர் ஜெனரல் சிபால் என்பவருக்கு ரிலையன்ஸ் கம்பெனிதான் பெரிய பங்களா கட்டிக் கொடுத்திருப்பதாக ஆங்கில டி.வி. சேனல் அம்பலப்படுத்தியிருக்கிறது.உண்மையில் கிருஷ்ணா கோதாவரி படுகையில் பெட்ரோல் கிடைக்கிறது என்பதை முதலில் கண்டுபிடித்ததே அரசின் ஓ.என்.ஜி.சி எனப்படும் எண்ணெய், இயற்கை எரிவாயு கமிஷன்தான். ஆனால், அங்கே உற்பத்திக்கான வேலையைத் தொடங்காமல் கிடப்பில் போட்டார்கள். பின்னர் அதை தனியாருக்கு லாபப் பகிர்வு அடிப்படையில் தரலாம் என்று சொல்லி ரிலையன்ஸுடன் ஒப்பந்தம் போட்டார்கள். இதெல்லாம் நடந்த சமயத்தில் ஓ.என்.ஜி.சி.யில் இருந்த அதிகாரிகள் ஓய்வு பெற்றதும் ரிலையன்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்கள்.
இன்னும் உருவாகாத லோக்பால் சட்டத்தின்கீழ் பிரதமரைக் கொண்டு வருவது பற்றி சண்டை போடுவதைவிட, ஏற்கெனவே இருக்கும் சட்டங்களின் கீழ் ஊழல் அதிகாரிகளை உடனடியாக முதலில் தண்டிக்க வேண்டும் என்று யாராவது சிவில் சொசைட்டி மகான் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தால் ஆதரிப்பேன்.
2. ஆபத்தில் நிருபர்கள்
மும்பையில் மிட்-டே பத்திரிகையின் மூத்த நிருபர் ஜோதிர்ம டே, ஜூன் 11ந்தேதி பொவா பகுதியில் மார்க்கெட் அருகே தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் அவரைச் சுட்டுத் தள்ளிவிட்டு தப்பிவிட்டார்கள்.
ஜோதிர்ம டே மும்பையின் மாஃபியா பற்றித் தொடர்ந்து எழுதி வருபவர். கடந்த வாரம்கூட சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு நடந்துவரும் எண்ணெய் மோசடி பற்றி எழுதினார். இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய இதழ்களில் இதற்கு முன்பு பணியாற்றிய ஜோதிர்ம டே, மும்பையில் மிக முக்கியமான க்ரைம் ரிப்போர்ட்டராகக் கருதப்பட்டவர். சில ஆண்டுகள் முன்பு அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவரை மும்பை தாதாக்களில் ஒருவனான சோட்டா ஷகீல், ஃபோனில் அழைத்தான். ”இப்போது விக்ரோலி அருகே பைக்கில் போய்க் கொண்டிருக்கிறாய். உன் ரெயின்கோட்டை பின்பக்கம் மடித்து வைத்திருக்கிறாய். உன்னைப் போட்டுத்தள்ள சொல்லட்டுமா" முதலில் அதிர்ச்சியடைந்த டே, சமாளித்துக் கொண்டு பதில் சொன்னார்: ”என்னைக் கொல்ல என் அனுமதி கேட்கிறாயா? எதற்கு? கொல்வதானால் கொல்" என்றார்.
சில வாரங்கள் முன்பு டே, மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சரைச் சந்தித்து அவரிடம் மாஃபியா கும்பலுக்கும் போலீசுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி விவரமான அறிக்கை ஒன்றைக் கொடுத்தார். என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகளான போலீஸ் அதிகாரிகள் ஓய்ந்து போய்விட்டதையடுத்து மும்பையில் மறுபடியும் மாஃபியா தலைதூக்கிவிட்டதாக சில வாரங்கள் முன்னால் டே எழுதினார். 1983ஆம் வருட பேட்ச்சைச் சேர்ந்த 20 போலீஸ் அதிகாரிகள் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகளாகச் செயல்பட்டு 1995லிருந்து 2001க்குள் 600 தாதாக்களைக் கொன்றதாக அவர் எழுதியிருக்கிறார்.
தாதாக்களை உருவாக்குவதும் போலீஸ்தான்; அழிப்பதும் போலீஸ்தான் என்று கூறிய டே, நிழல் உலகம் பற்றி எழுதிய இரு புத்தகங்களும்தான் ராம்கோபால் வர்மா படக் கதைகளுக்கு உதவியதாகச் சொல்லப்படுகிறது.இந்தியாவில் இப்போது நிருபர்களுக்கான ஆபத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆறே மாதங்களில் இது மூன்றாவது கொலை. சட்டிஸ் கரில், பிலாஸ்பூர் பிரஸ் க்ளப்பின் செயலாளர் தனிக் பாஸ்கர் ஏட்டின் நிருபர் சுசீல் பதக் வீடு திரும்பும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். ந துனியா நிருபர் உமேஷ் ராஜ்புத்தைக் கொன்றவர்கள் ‘செய்தி வெளியிடுவதை நிறுத்தாவிட்டால் இதுதான் நடக்கும்’ என்று சீட்டு எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். எந்தக் கொலையிலும் இதுவரை யாரும் கைதாகவில்லை.கடந்த 18 வருடங்களில் இந்தியாவில் 28 பத்திரிகை நிருபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஜோதிர்ம டேவின் கொலைக்கு கண்டனமும் அனுதாபமும் தெரிவித்து எல்லா நகரங்களிலும் ஊர்வலமும் கூட்டங்களும் பத்திரிகையாளர்களால் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டுரை அச்சுக்குச் செல்லும்வரை சென்னையில் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் பல பத்திரிகையாளர்கள் சங்கங்களில், க்ளப்களில் தேர்தல்கள் நடந்து பல வருடங்கள் ஆகின்றன. என்ன செய்வது ? அதையும் தேர்தல் ஆணையமே நடத்தினால்தான் உண்டு போலிருக்கிறது.
இந்த வார பிரச்னை
சமச்சீர் கல்வி என்ற பெயரில் தி.மு.க. கொண்டு வந்த பொது பாடத் திட்டத்துக்கு அச்சிட்ட 200 கோடி ரூபாய் புத்தகங்களை வீணாக்காமல், ஒவ்வொரு புத்தகத்தையும் அதற்கான அறிஞர் குழுவிடம் கொடுத்து ஒரு வாரத்தில் படித்துப் பார்த்து ஏற்பதா, நிராகரிப்பதா என்று சொன்னால் வேலை எளிதாக முடிந்துவிடும் என்று ஓ பக்கங்களில் சொல்லியிருந்தேன்.உச்சநீதிமன்றம் அதேபோன்ற ஓர் உத்தரவைத்தான் போட்டிருக்கிறது. தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகளின் குழுவை நியமித்திருக்கிறது. என் பரிந்துரை அதிகாரிகள் குழு அல்ல. ஆசிரியர்/அறிஞர் குழு. நீதிமன்றம் சொல்லியிருக்கும் குழுவில் என்.சி.இ.ஆர்.டி (தேசிய கல்வி கவுன்சில்), மாநில கல்வி வாரிய அதிகாரிகள் மட்டும் வேண்டுமானால் அறிஞர்களாக இருக்க வாப்பிருக்கிறது.
இந்தக் குழுவின் பரிந்துரையை உயர்நீதிமன்றத்திடம் இரு வாரத்தில் தந்ததும், உயர்நீதிமன்றம் ஒரு வாரத்தில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. குழுவில் பெரும்பாலும் தமிழக அரசு அதிகாரிகளே இருப்பதால், முதலமைச்சர் மனநிலைக்கு விரோதமாக எதுவும் சொல்லாமல், பொதுப் பாடத்திட்டம் அடுத்த வருடம்தான் சாத்தியம் என்றே பரிந்துரை செவார்கள் என்பதே என் அரசியல் ஆரூடம். அப்போது உயர்நீதிமன்றம் என்ன சொல்லும் என்பதுதான் இறுதி முடிவை ஏற்படுத்தும். உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் பரிந்துரையைத் தேவைப்பட்டால், உயர்நீதிமன்றம் நிராகரிக்க சட்டத்தில் இடம் உண்டா என்பதெல்லாம் எனக்குப் புரியவில்லை.
புரிவது ஒன்றே ஒன்றுதான். இன்னும் ஒரு மாதத்துக்கு நம் தமிழ்க் குழந்தைகள் மார்க் தயாரிக்கும் மெஷின்களில் சிக்கி அரைபடமாட்டார்கள். அப்புறம் ஓவர் டைமாகப் போட்டு அரைக்கப்படுவார்கள்.பெற்றோர்களின் குழப்பத்தைக் கூட்ட, பள்ளிக் கட்டண நிர்ணய கமிட்டியின் உத்தரவும் வந்துவிட்டது. தி.மு.க. ஆட்சி ஜெயலலிதாவுக்கு விட்டுச் சென்ற தலைவலிகள் இவை. இரண்டு தலைவலிக்கும் என்னிடம் சரியான மருந்து இருக்கிறது. சொன்னால், அரசு, பெற்றோர், பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள் எல்லாருக்கும் கோபம் வரும். குழந்தைகள் மட்டுமே சந்தோஷப்படுவார்கள்.
குறைந்தபட்சம் எதிர்ப்பு காட்டாமல் சொன்னதைச் செய்து தருபவர்களாகவோதான் இருக்கிறார்கள்.//
ReplyDeleteஇந்த வகையில் வருபவர்கள் தான் அநேகம் பேர். வாய் மொழி ஆணைகளுக்கு மறுப்பு சொல்ல முடிவதில்லை.எழுத்து மூலம் ஆணை கேட்க முடிவதில்லை