தலைநகர் சென்னையில் தி.மு.க. அரசு கொண்டுவந்த மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஜரூராக நடந்துகொண்டு இருக்க, புதிதாக மோனோ ரயில் கொண்டுவரப்படும் என அறிவித்து இருக்கிறார் ஜெயலலிதா. '300 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் இயக்க திட்டம் தீட்டப்பட்டு இருந்தாலும், முதற்கட்டமாக 111 கி.மீ. தூரத்துக்கு இயக்கப்படும்’ என்று, சட்டப் பேரவையில் ஆளுநர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, 2006-ம் ஆண்டு அன்றைய ஜெயலலிதா அரசு சென்னையில் மோனோ ரயில் திட்டத்தை அறிவித்தது. அதற்காக, ஒப்பந்தங்கள் கோரப்பட்ட நிலையில், ஆட்சி மாறி தி.மு.க. பதவி ஏற்றவுடன், மோனோ ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அப்போதும், 300 கி.மீ. தூரத்துக்குத்தான் மோனோ ரயில் திட்டம் தீட்டப்பட்டது. அந்தத் திட்டத்தின்படி பாரிமுனையில் இருந்து கூடுவாஞ்சேரி, பூவிருந்தவல்லி, போரூர், ஆவடி, செங்குன்றம், மணலிப்புதுநகர், கேளம்பாக்கம் ஆகிய இடங்களுக்கும், கிண்டி ஹால்டா சந்திப்பு - மேடவாக்கம், அண்ணா சதுக்கம் - அடையாறு, விருகம்பாக்கம் - சாந்தோம், எழும்பூர் - எம்.எஃப்.எல்., சைதாப்பேட்டை - அண்ணாநகர் ரவுண்டானா, சாலை மாநகர் - கண்ணதாசன் நகர், அயனாவரம் - அண்ணா சதுக்கம், அமைந்தகரை - அம்பத்தூர் தொழிற்பேட்டை, பாரிமுனை - கேளம்பாக்கம், காந்திசிலை - வில்லிவாக்கம் நாதமுனி, பட்டினப்பாக்கம் - நுங்கம்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் மோனோ ரயில் இயக்குவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது.
கடந்த வாரம், டெல்லியில் பிரதமரைச் சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, மோனோ ரயில் திட்டத்துக்காக மத்திய அரசு 16,650 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், மோனோ ரயில் திட்டத்தைக் கொண்டு வருவதில் உறுதியாக இருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆனால், கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதால், மோனோ ரயில் திட்டம் உலக அளவில் பல நாடுகளால் கைவிடப்பட்ட திட்டம் என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கேளிக்கைப் பூங்கா, விமான நிலையம் ஆகிய இடங்களில் இணைப்பு போக்குவரத்துக்காக மோனோ ரயில் பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் 60 இடங்களில்தான் மோனோ ரயில் இயக்கப்படுகின்றன. அதில் 48 இடங்களில் 3 முதல் 4 கி.மீ. தூரத்துக்குத்தான் இயக்கப்படுகின்றன. 10 கி.மீ-க்கும் அதிகமாக இந்த ரயில் இயங்குவது, 12 இடங்களில். அந்தப் 12-லும் 5 இப்போது பயன்பாட்டில் இல்லை. இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தா, மலேசியாவில் புத்ரகயா ஆகிய இடங்களில், கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டு இருந்தபோதே, மோனோ ரயில் திட்டப் பணிகளை நிறுத்தி விட்டனர். அமெரிக்காவின் சியாட் நகரிலும் திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கட்டுமானச் செலவு மட்டுமின்றி, மோனோ ரயிலை இயக்குவதற்கான செலவும் அதிகம் என்பதால்தான், உலக அளவில் இதற்கு வரவேற்பு இல்லை. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 8 கி.மீ. தூரத்துக்குப் பணிகள் முடிக்க 5 ஆண்டுகள் ஆனது. எட்டு மாதங்களுக்கு ரயில் இயக்கும் செலவு மட்டுமே 69 கோடி வீணானது. இந்தத் திட்டத்தால் தேவையற்ற செலவு மட்டுமே 1,200 கோடி ஏற்பட்டது. பிரச்னைகளைச் சமாளித்து மோனோ ரயிலைக் கொண்டுவந்து விட்டாலும், பழுது ஏற்பட்டால் அதை நீக்குவதும் எளிது அல்ல. காரணம், மோனோ ரயில் சேவையை அளிக்க ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்கள் அதைக் காப்புரிமை செய்திருப்பவை என்பதால், ஒரு போல்ட், நட்டைக்கூட மற்றவர்கள் மாற்ற முடியாது. அந்த நிறுவனங்கள் திவால் ஆகிவிட்டால், மோனோ ரயில் சேவையே நின்று விடும் அபாயமும் உண்டு.
ஜப்பான் நாட்டில், அதிகபட்சமாக 28 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் இயக்கப்படுகிறது. மும்பையில் 20 கி.மீ-க்கு மோனோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பாதகமான அம்சங்கள் இருந்தும் சென்னையில் 300 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் பாதை அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. போக்குவரத்து நிபுணர்களின் எச்சரிக்கையை மீறி இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டால் சென்னையின் முக்கியச் சாலைகள் நெடுக பள்ளங்களைத் தோண்டி உயரமான தூண்களை அமைத்த பிறகு, பணிகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். அப்போது, சாலைகளின் மத்தியில் எலும்புக்கூடுகளைப் போன்று தூண்கள் நிற்க, நெரிசல் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும். மேலும், பஸ் கட்டணத்தை விட 10 மடங்கு கட்டணம் வசூலித்தால்தான், மோனோ ரயிலுக்கு செலவு செய்த தொகையை திரும்பப் பெற முடியும் என்ற நிலை இருப்பதால், பயணிகளிடம் இது கண்டிப்பாக வரவேற்பைப் பெறாது. குறைந்த கட்டணத்தில் ஓட்டினால், அரசுக்குத்தான் இழப்பு!
ஆனால், தமிழக அரசு தரப்பிலோ, 'மோனோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும்’ என்று பிரதமருக்குத் தந்த மனுவில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.மோனோ ரயில் வந்து போக்குவரத்து குறைகிறதோ இல்லையோ இந்த திட்டம் அமலாகும் வரை சென்னை டிராஃபிக் அம்போதான்!
அருள்
மாநிலச் செயலாளர்
பசுமைத் தாயகம்’ சுற்றுச்சூழல் அமைப்பு
நன்றி ; விகடன்
No comments:
Post a Comment