Search This Blog

Tuesday, June 21, 2011

வான் வெளித் திருவிழா !


கடந்த ஜூன் முதல் தேதியில் இருந்து வரும் ஜூலை முதல் தேதிக்குள் வான்வெளி நமக்கு மூன்று அற்புதமான விருந்தினைப் படைக்கிறது. ஜூன் முதல் தேதி பகுதி நேர சூரிய கிரகணம் ஏற்பட்டது. ஜூன் 15-ல் இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் உருவானது. ஜூலை முதல் தேதி மீண்டும் பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

பொதுவாக, வருடத்தில் ஐந்து சூரிய கிரகணமும், மூன்று சந்திர கிரகணமும் ஏற்படலாம். சில சமயம், ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமல் போகலாம். ஆனால், ஒரு வருடத்தில் அதிகபட்சம் 7 கிரகணங்கள்தான் வரும். இதில் 4 சூரிய கிரகணமாகவும், 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். முழு சூரிய கிரகணத்தின் மிக நீண்ட நேரம் என்பது, 7.5 நிமிடங்கள் மட்டுமே. 

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜூன் 15-ல் நிகழ்ந்தது. இது 100 நிமிடங்கள் நீடித்தது. இந்தக் கிரகணத்தின்போது, சந்திரன் நொடிக்கு ஒரு கி.மீ வேகத்தில் கிரகணப் பகுதியைக் கடந்தது. கிரகணத்தின்போது, அதன் நிழல் விழும் பகுதியின் கருப்பு மற்றும் கருமை குறைவான பகுதிகளை முறையே, அம்பரா (Umbra), பெனும்பரா (Penumbera) என்பார்கள். சூரிய ஒளியே படாத பகுதி அம்பரா. சூரியக் கதிர் சிதறல் படும் பகுதி பெனும்பரா. சூரிய உதயம்/மறையும் சமயத்தில், சந்திர கிரகணத்தைப் பார்த்தால்... சூரியன், சந்திரன் இரண்டும் எதிரெதிர் திசைகளில் அற்புதமாய்த் தெரியும். இத்தகைய கிரகணத்தை முழுமையாக, உலகின் பாதி மக்கள் பார்த்து மகிழலாம். இப்போது வந்துள்ள முழு சந்திர கிரகணம், சரோஸ் சுழற்சியின் 130-ஆவது வகை. இந்த வகையில் மொத்தம் 72 கிரகணங்கள் நிகழும். இது 34- ஆவது கிரகணம். இனி அடுத்த சந்திர கிரகணம், 2011, டிசம்பர் 10-ல் ஏற்படும். 

பொதுவாக முழு சந்திர கிரகணத்தின்போது, சந்திரன் செம்பு வண்ணத்தில் மிளிரும். ஆனால், இம்முறை நிலா கருப்பாகக் காட்சி அளித்தது. இதில் சந்திரனைக் கண்டறிவதே சிரமம்தான். சந்திரனைக் காண முடியாமல் போவதால், மிகவும் ஒளி குறைவாய் தெரியும் விண்மீன்களைக்கூட பார்க்கலாம். இதுபோல ஒரு முழு சந்திர கிரகணம், 2058 ஜூனில் வரும்.


சரித்திரம் படைத்த முழு சந்திர கிரகண நிகழ்வுகளும் உண்டு. சந்திர கிரகணம் அரிதானதுதான் என்றாலும், முழு சூரிய கிரகணம்போல கிடையாது. ஏனெனில், முழு சூரிய கிரகணம், உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே தெரியும். ஆனால், முழு சந்திர கிரகணம், உலகில் இரவில் இருள் கவிந்த பாதி புவிப் பகுதிக்குத் தெரியும். சரித்திரத்தில்  எழுத்துக்களில் பதித்த முதல் முழு சந்திர கிரகணம், சீனாவில் சோயூ வம்சத்தின் (Zhou Dynasty) சோயு-சூ புத்தகத்தில் கிமு 1136-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 29-ஆம் நாள் நிகழ்ந்ததாய் குறிப்பிடப்பட்டுள்ளது!

No comments:

Post a Comment