Search This Blog

Saturday, December 17, 2011

2011ஆம் ஆண்டு டாப் டென் ஊழல்



1. சுதந்திர இந்தியாவின் மெகா ஊழலான அலைக் கற்றை ஊழல் ஏற்படுத்திய சுனாமியில் பதவி இழந்தவர்கள், மத்திய அமைச்சர் ராசா மற்றும் தயாநிதி மாறன். பிப்ரவரி 17ஆம் தேதி, திஹார் சிறையில் நுழைந்த ராசா, 2012ல்தான் ஜாமீனில் வெளி வருவார். இதே விவகாரத்தில் ஏர்செல் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டை இழுக்கடித்து, அந்த நிறுவனத்தைத் தமது லாபத்துக்காக உள்நோக்கத்துடன் கைமாற வைத்த விவகாரத்தில் தயாநிதிமாறன் அவுட். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் லாபம் பெற்ற நிறுவனம் 214 கோடியை, கலைஞர் தொலைக்காட்சிக்குக் கொடுத்த விவகாரம் பங்குதாரர் கனிமொழியை, ஆறுமாத காலம் திஹார் சிறையில் போட்டு விட்டது. ராசாவின் நண்பர சாதிக்பாட்சா இறப்பு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இப்போது மறக்கப்பட்டு விட்டது.

2. 2011ன் இந்தியக் கதாநாயகன் அண்ணா ஹசாரே - ரேலேகான் சித்தி என்ற குக்கிராமத்திலிருந்து புறப்பட்ட இந்த முன்னாள் ராணுவ வீரர், இன்று இந்தியாவின் ஊழல் எதிர்ப்பு பிம்பம். எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாத இவர் பின்னால் காஷ்மீரிலிருந்து குமரி வரை திரண்டது ஊழல் எதிர்ப்புப் படை. இவரது உண்ணாவிரதங்கள் ஏற்படுத்திய பதற்றத்தில் தடுமாறிய மத்திய அரசு, ஒரு வழியாக, டீம் அண்ணாவைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு ஒரு லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்து விடும் என்ற நம்பிக்கையை வளர்க்கிறது.

3. அண்ணா எங்கே தங்களுக்கு எதிராக வந்து விடுவாரோ என்ற களத்தில் (ரதத்தில்) குதித்தார் எல்.கே.அத்வானி. 1992ல் செய்ததுபோல நமது நிலப்பரப்பு முழுவதும் செல்லவில்லை அத்வானிஜி (வயதாகிவிட்டது). 7600 கி.மீ. 38 நாட்கள்; 27 மாநிலங்கள். இந்த யாத்திரையில் 14 முறை விமானத்திலும் 6 முறை ஹெலிகாப்டரிலும் பயணித்திருக்கிறார் அத்வானி. இடையில் ஊழலை ஒழிக்க பாபா ராம்தேவ் இருந்த உண்ணாவிரதம் கேலிக்கூத்து என்றால், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்திய நரேந்திரமோடி கேலிச்சித்திரம்.

4. மல்லோ ஜூலா கோடே ஸ்வரராவ்! இவரை கிஷண்ஜி என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். நக்ஸலைட் பிரிவு பொதுவுடைமை இயக்கத்தில் சிறு வயது முதற்கொண்டு தம்மை ஈடுபடுத்திக் கொண்டு உச்சத்துக்கு வந்த கிஷண்ஜி, நமது பாதுகாப்புப் படைகளுக்கு ஒரு சவாலாகவே விளங்கி வந்தார். மேற்கு வங்க மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் சுற்றி வளைக்கப்பட்ட கிஷண்ஜி, மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது என்கவுண்டரில் போட்டுத் தள்ளினார்களா என்ற சர்ச்சை நீடிக்கிறது. மாவோயிஸ்ட்டுகளுக்குப் பெரிய பின்னடைவு.

5. ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வுக்கு மற்றொரு உதாரணம் தலைமைக் கண்காணிப்பு ஆணையர் (விஜிலன்ஸ் கமிஷனர்) நியமனம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப் பட்டது. விஷயம் என்னவென்றால், தாமஸ் அண்ணன் கேரளாவில் உணவுத் துறைச் செயலாளராக இருந்தபோது, மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்ததில் ஆதாயம் பார்த்தார் என்பதுதான். ‘இவரை ஊழலை ஒழிக்கும் பணியில் போடுவதா’ என்று புறப்பட்டது பொதுநல வழக்கு. உச்சநீதிமன்றம் கறையைப் போக்கியது.

6. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலும் கூட ஊழலுக்கு எதிராகத் திரண்ட மக்கள் கருணாநிதியின் அரசைத் தூக்கிப் போட்டார்கள். மிக புத்திசாலித்தனமாக, விஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் கூட்டணி கண்ட ஜெயலலிதா, மூன்றாவது முறை ஆட்சியைப் பிடித்தார். ஆறே மாதத்தில் கூட்டணி ஹனிமூன் முடிந்து, ‘தனியா நின்னா வெற்றி பெற்றிருக்க முடியுமா?’ என்று கேப்டன் சவால் விடும் நிலை வந்திருக்கிறது. புரட்சித் தலைவியும்,கேப்டனும் மோதிக் கொள்ள இன்னமும் பல களங்கள் காத்திருக்கின்றன. 

7. தமிழ் நாட்டின் மின் தேவை அதிகரிக்க, உற்பத்தி சரிந்த நிலையில் மின் வெட்டோ வெட்டு. இந்த நிலையில் டிசம்பரில் மின் உற்பத்தியைத் தொடங்க இருந்த கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு பிரேக் போட்டு விட்டார்கள் உள்ளூர் மக்கள். 13000 கோடி ரூபாய் செலவழித்த நிலையில் ஷாக் அடித்து நிற்கிறது மத்திய அரசு. மின்பற்றாக்குறை போக்கப் பாடுபடும் ஜெயலலிதா, உள்ளூர் மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்துப் பேசாமல் இருக்கிறார். மக்களின் அச்ச உணர்வைப் போக்கி, அணுமின் நிலையத்தைச் செயல்பட வையுங்கள் என்று சொல்பவர்களின் குரல் வலுவாகிக் கொண்டே வரும் நிலையில் எதிர்ப்பாளர்கள் பக்கம் சோர்வு தெரிகிறது.

8. கூட்டணிக் கட்சிகள் தயவே வேண்டாம்’ என்று அவர்களை கட் செய்துவிட்டு, தனியாகவே உள்ளாட்சித் தேர்தல் களத்தில் குதித்தது அ.தி.மு.க. மொத்தம் உள்ள 20000 உள்ளாட்சிப் பதவிகளில், 50 சதவிகிதத்தை அள்ளிக் கொண்டு போனார் ஜெயலலிதா. நீண்ட காலத்துக்குப் பிறகு கட்சிகள் தனியாகவே தேர்தலைச் சந்தித்ததுதான் குறிப்பிடத்தக்க விஷயம். மிகக் குறைவான இடங்களைப் பிடித்த பா.ம.க.மற்றும் ம.தி.மு.க. கட்சிகளும் கூட ‘வெற்றி... வெற்றி...’ என்று முழங்கியது சற்று வினோதம்தான். 

9. நல்ல மாற்றத்தைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் ஜெ.வுக்கு வோட்டுப் போட்டார்கள் மக்கள். சமச்சீர் கல்வி குழப்பம், தலைமைச் செயலகக் கட்டடம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம் ஆகியவை மருத்துவ மனைகளாக மாறும் என்ற அறிவிப்புகள் மக்களால் அவ்வளவு ரசிக்கப்படவில்லை. மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது, உச்ச நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்டது. பால் கட்டணம், பஸ் கட்டண உயர்வு மக்களைக் காயப்படுத்தி விட்டது. கடனைக் குவித்து கஜானாவைக் காலி செய்துவிட்டார் கருணாநிதி. நிதி ஒழுக்கத்தைக் கொண்டுவந்து, எனது திட்டங்களைச் செயல்படுத்த இந்தக் கசப்பு மருந்து அவசியம்," என்றார் ஜெ.

10. வருடம் முடியும் நேரத்தில் தமிழகத்தைக் கலக்கிவிட்டது முல்லைப் பெரியாறு அணை விவகாரம். ‘120 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கி வைக்கலாம்’ என்று அழிச்சாட்டியம் பண்ணும் கேரளாவுக்கு எதிராக, தமிழகமே திரண்டுவிட்டது. ஆட்சியில் இருப்பதால் ரொம்பவே பொறுப்புணர்வுடன் விவகாரத்தைக் கையாள்கிறார் முதல்வர். ஆனால், மத்திய அரசு தொடர்ந்து வேடிக்கை பார்த்தால், அம்மா தமது வழக்கமான அதிரடியால் மன்மோகன்சிங்கை அதிர்ச்சியடைய வைப்பார். 2012ல் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்குமென்று நம்புவோமாக!   

தொகுப்பு : ப்ரியன்




1 comment:

  1. ஊழல் ஊழல் கேட்டுகேட்டு அலுத்துவிட்டது... பகிர்வுக்கு நன்றி...

    இன்று என் பதிவு:-- வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய முழுமையான அலசல்...

    ReplyDelete