Search This Blog

Sunday, December 11, 2011

மகாகவி பாரதி பற்றிய சிறு தொகுப்பு

கடையத்தில் பாரதி 

ஒரு சமயம் செட்டிமார் நாட்டுக்குப் பாரதியார் சென்றிருந்தார். அவரது அன்பர்களான செட்டிமார் நண்பர்கள் அவரை நன்கு போற்றித் தேவையான பொருளுதவி செய்து, அவருடைய பொன் மொழிகளை எழுத ஒரு மாணிக்கக் கல்லிழைத்த பௌண்டன் பேனாவும், ஓர் அழகான வேலைப்பாடமைந்த மரக் கைப் பெட்டியும் காணிக்கை கொடுத்து அனுப்பினார்கள்.கடையத்தில் அவரது நண்பரான ஸ்ரீ நாராயணப் பிள்ளைக்கு மேற்படி பேனாவை பாரதியார் கொடுத்து விட்டார். “சபரி”, ராமபிரானுக்குப் பழங்களை ருசி பார்த்து வைத்திருந்து அளித்தது போல, ஸ்ரீ.நாராயணப் பிள்ளையும்,  ‘கற்பகப் பூங்காவனம்’ என்று சொல்லும் வண்ணம் இருந்த தமது தோட்டத்திலிருந்து, பாரதியாருக்குத் தினமும் ஒட்டு மாம்பழமும், மாதுளைப் பழமும், ரோஜாப் புஷ்பமும், ராஜமல்லிகைப் புஷ்பமும், எழுமிச்சம் பழமும் கொணர்ந்து கொடுத்து அளவளாவுவார். ரோஜா மலரைத் தாமே பாரதியாருக்குச் சூட்டி மகிழ்வார். பின்னும் அனேக பிராமணரல்லாத நண்பர்களும் கடையத்திலுண்டு. பாரதியார் அந்நண்பர்களோடு ‘சூஷ்மமுடையவர்’ கோவிலில் சமபந்தி போஜனம் செய்வார். கேட்பானேன் அக்ரஹாரத்தில் பாரதியாருக்கு வசை மொழிதான்.அருகிலுள்ள சிற்றூரான பொட்டல்புதூர் என்ற ஊரிலிருந்து கூட்டங் கூட்டமாக முஸ்லிம் நண்பர்கள் வந்து பாரதியாரின் ‘குர்ஆன்’ உபதேச மொழிகளைக் கேட்டு ஆனந்தமடைந்து போவது வழக்கம்.நாங்கள் குடியிருந்த வீட்டுக்குப் ‘பட்டர் அகம்’ என்று பெயர். வீட்டு வாசலில் நின்று பாரதியார் “அமிர்த சாஸ்திரம்” என்னும் சாகாதிருக்கும் வழியைப் பற்றி பிரசங்கங்கள் புரிவார். அதைக்கேட்டு, எதிரிலுள்ள ராமசாமி கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ.ராமரும் சீதையுமே மகிழ்வார்களென்று கூறுவது மிகையாகாது.சாணார்கள் என்று அழைக்கப்படும் நாடார் வகுப்பினர் எங்கள் ஊரில் நிலங்கள் பயிரிட்டுச் சாகுபடி செய்பவர்களில் முதல் ஸ்தானம் பெற்றவர்கள். என் வீட்டைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் சகோதரர்கள். அவர்களில் ஒருவன் ‘நாராயணன்’ என்பவன். பாரதியாருக்கு ஆருயிர் நண்பன், ராமபிரானுக்குக் குகனைப் போல.ஒரு சமயம், பணமில்லாததற்காகத் தம்மைப் பந்துக்கள் கேவலமாக மதிக்கிறார்கள் என்று அவர் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. என்னடா உலகம்! என்ன பைத்தியம் என்று கோபங்கொண்டார். ஜேபியில் 100 ரூபாய் வைத்திருந்த சமயமாக இருந்தது. கையை ஜேபியில் போட்டு ரூபாய்களைத் தெருவில் வீசினார். பார்த்தவர் பரிகசிப்பதற்குக் கேட்பானேன். குழந்தைகளோ அவைகளைப் பொறுக்கிச் சேகரித்துக் கொண்டனர்.

கடையத்தில் ஸ்ரீ.ராமநவமி உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அச் சமயம் பிரபல சங்கீத வித்துவான்கள் விஜயம் செய்து, கச்சேரிகளும், கதா காலேட்சேபங்களும் நடத்தினார்கள். காயாக சிகாமணி முத்தையா பாகவதர், கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர் முதலியோரும் கூடி இருந்தனர்.பாரதியார் அச் சமயம் கடையத்தில் வசித்து வந்தபடியால், அந்த வித்துவாங்களைச் சந்தித்து, அவர்களோடு வார்த்தையாடிக் கொண்டிருந்தார். பாரதியார்ச் சற்றேறக்குறையப் பைத்தியம் என்றே மதித்திருந்த ஆக்ரஹாரத்தினர், அவரைப் பார்க்கும்போது கூட, ஏளனமாகவே பார்ப்பார்கள். காயாக சிகாமணி முதலியோருக்கு மாத்திரம் இவரது கல்வித் திறமை நன்கு தெரியும். பாரதியார் பாடிக் காட்டின “ஜெயபேரிகை கொட்டடா கொட்டடா” என்ற பாட்டை மிகவும் ரசித்தனர்.ஒரு பிரபல வித்துவான் வாசித்தார், கேட்பதற்கு ரசிகர்கள் இருந்தபடியால் பாரதியின் உற்சாகம் அதிகரித்தது. சரீரமும் மேல்ஸ்தாயியில் அபூர்வமாகச் சஞ்சாரம் செய்தது. அவரை எப்போதும் பரிகசிக்கும் பாமரரும் கூடத் தலையை ஆட்டி,  “அடே, பாடும் விதமாகப் பாடினால், பாரதி பாட்டு எல்லாப் பாட்டுக்களையும் விட நன்றாயிருக்கிறதடா!” என்று மெச்சத் தொடங்கினார்கள்.இரவில் தேவக்கோட்டை வித்துவான் ஒருவர் “வள்ளித் திருமணம்” கதா காலாட்சேபம் செய்தார். வேடுவர்கள் பயிர்களை மிருகங்கள் அழித்துப் பாழ் செய்வதைத் தடுக்கும்படி, அவர்கள் சாமிக்குப் பூசை போட்டனர். அவர்களில் ஒருவனுக்குச் சாமி ஆவேசம் வந்து பாடும் பாட்டாகிய “பாக்கும் வச்சான், பழமும் வச்சான், வெத்திலை வச்சான், பொயிலை வச்சான்,–ஒண்ணு வைக்க மறந்திட்டான்; சுண்ணாம்பில்லே, சுண்ணாம்பில்லே” என்ற பாட்டைக் கேட்டதும் பாரதி ‘கொல்’ லென்று சிரித்தார்.அருகில் இருப்பவர்கள் “ஏன் சிரிக்கிறீர்கள்” என்றார்கள். “இந்தப் பாட்டு நமது நாட்டு மக்களுக்கும் ஒருவாறு பொருந்தும்” என்றார் பாரதி. “எப்படி?” என்று அவர்கள் திருப்பிக் கேட்டனர். “தமிழ் மக்களுக்குக் கடவுள் நிலமும் வச்சான், பலமும் வச்சான், நிகரில்லாத செல்வம் வச்சான்–ஒண்ணு வைக்க மறந்திட்டான். “புத்தியில்லே, புத்தியில்லே” என்றார். நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.உற்சவ காலங்களில் தினம் கலையில் ஒரு பாகவதரின் தலைமையில் பஜனைக் கோஷ்டி, உஞ்சவிருத்தி செய்வது வழக்கம். வழக்கமாகப் பாடும் பஜனைப் பாடல்கள் அநேகமாகத் தெலுங்கும் சமஸ்கிருதமும் தான். பாரதியாரும் அவர்களுடன் சுற்றுவதுண்டு. தினமும் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் பாடகருக்கு ஒரு மாதமாகப் பாடித் தொண்டையும் கட்டிவிட்டது. பாடிய பாட்டுக்களையே தினந்தோறும் பாடும் விரசமும் ஏற்பட்டுவிட்டது.


உடனே பாரதியார், “நான் சொல்லிக் கொடுக்கிறான், புதுப்பாட்டு என்று ” கோவிந்த கிருஷ்ண பாஹி –யது வீரா ! ராஜ கோபால கிருஷ்ண பாஹியது வீரா” என்ற பஜனைப் பாட்டு மெட்டில்,

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா -- நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா,
கேட்கு மொழியிலெல்லாம் நந்தலாலா -- நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா,
தீக்குள் விரலையிட்டால் நந்தலாலா -- உன்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதையே -- நந்தலாலா,
காக்கைச் சிறகினிலே நந்தலாலா -- நின்றன்
கரிய நிரந்தோன்றுதையே நந்தலாலா.  


என்ற பாட்டை அப்படியே ஆசு கவியாகச் சொல்லவும், கோஷ்டியினர் சந்தோஷத்தோடு, 
(தமிழ்ப் பாட்டாகையால்) அர்த்தந் தெரிந்து உரக்கப் பாடலாயினர். 
 
 
கவிராஜனும் வன ராஜனும் 
ஒரு சமயம் திருவனந்தபுரம் சென்றிருந்தோம். அங்கு எங்களுக்கு நெருங்கிய நண்பரும், ஒரு வகையில் பந்துவுமான ஒருவர் வீட்டில் கல்யாணம். சம்பந்தி வீட்டார் பெரிய சர்க்கார் உத்தியோகத்திலிருப்பவர்கள், “பாரதியார் வந்திருக்கிறார்” என்றதை கேட்டதும், ஒரு பக்கா சுதேசியை இந்த கல்யாண சமயத்தில் வரவிடக் கூடாது என்று தீர்மானித்து, பாரதியாரை நேரில் கண்டும் கூட, “விவாகத்துக்கு வாருங்கள்”, என்று அழைக்கவில்லை.ஆயினும், அவ்வீட்டு அம்மாளுக்கு மாத்திரம் பாரதியாரிடம் உள்ளன்பு விசேஷமாக உண்டு. நாங்கள் அவ்வீட்டுக்குச் செல்லக் கூடாதென்று பலமுறை வேண்டிக் கொண்டும் கேளாமல், அழையாத வீட்டிற்குள் பாரதியார் நுழைந்தார். வீட்டு எஜமான் அவரை வாவென்று அழைக்கவில்லை. பாரதியார் கொஞ்சங்கூட முகவாட்டமும் சங்கோசமும் இன்றி மடமடவென்று உள்ளே சென்றார். வீட்டு அம்மாளிடம் சென்று, “அம்மா! குழந்தைக்கு விவாகம் ஆயிற்றா ?” என்று பரிவோடு கேட்டார். அந்த அம்மணியின் கண்களில் நீர் துளித்தது. மனம் உருகிற்று. பாரதியாரின் சுபாவத்தைக் கண்டு அந்த அம்மையார் தம் கணவரது நடத்தையை உள்ளூற வெறுத்தார்.உடனே அவர், “பாரதியாரே என்னை மன்னிக்க வேண்டும். நீர் மாசு மருவற்றவர், நாங்கள் உத்தியோக ஆசையினாலும், பணத் திமிரினாலும் சில சமயங்களில் மெய்மறந்து தங்களைப் போன்ற உத்தமர்களின் சகவாசத்தை கைவிடுகிறோம். நேற்று தங்களை நேரில் கண்டும் அழையாதிருந்தோம். அதிலிருந்து என் மனது தவறு செய்கிறாய் என்று வாட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனையோ பெரிய பெரிய மனிதர்கள் வந்து கல்யாணம் விசாரித்துச் சென்றார்கள். ஆயினும் இப்போது நீங்கள் விசாரிக்கும்போது எனக்கு ஏற்பட்ட சந்தோஷமும் ஆறுதலும் இதற்கு முன் ஏற்படவில்லை”. என்று பரிவுடன் கூறினார்.“அம்மா! மனதுக்கு மனமே சாட்சி! நான் வராவிட்டால், உன் மனம் துயரடையும் என்று தெரிந்தே வீட்டில் அனைவரும் தடுத்தும் நான் இங்கு வந்தேன்” என்று கூறினார் பாரதியார். திருமணத் தம்பதிகளை வர வழைத்து, அவர்களைத் தழுவி ஆசீர்வதித்தார். அந்த அம்மாள் அன்புடன் தந்த சிற்றுண்டியைக் களிப்புடன் புசித்தார். பிறகு விடைபெற்று வீடு வந்து சேர்ந்தார்.சாயங்காலம் மூன்று மணிக்கு வந்திருந்த விருந்தினரும், கல்யாண வீட்டாரும் காட்சி சாலைக்குச் சென்றனர். அதாவது மிருகக் காட்சி சாலைக்கு, பாரதியாரும் புறப்பட்டார். நாங்களும் சென்றோம். விடுதியிலிருந்து “காட்சி பங்களா” இரண்டு மைலுக்கு மேலிருக்கும். மேற்படி கல்யாண வீட்டார் “வண்டியிலேறிக் கொள்ளுங்கள்” என்று மரியாதைக்குக் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை. நாங்கள் அவமானத்தினாலும் துயரத்தினாலும் ஒன்றும் பேசாமல் நடந்து போனோம்.அங்கே சென்றதும் மிருகங்களைப் பார்ப்பதில் சற்றும்நேரம் கழிந்தது. மறுபடியும் எங்களுக்குக் கஷ்டம் ஆரம்பித்தது. ஏனெனில் பாரதியார் எல்லா மிருகங்களையும் கையினால் தொட்டுப் பார்க்க ஆரம்பித்தார். குரங்குகள், கரடிகள், எல்லாவற்றையும் தொட்டுப் பார்த்துக் கடலை, பழங்களைக் கையிலே கொடுத்தார். அந்த மிருகங்கள் நகங்களினால் கிழித்துப் பிராண்டி விடாதிருக்கவேண்டுமே என்று நாங்கள் கவலைப்பட்டோம். அந்த இடத்தில் மிருகங்களுக்குத் தீனி போடும் வேலைக்காரக் கிழவனொருவன் மிருகங்களைக் கத்தச் சொல்லியும் ஆடச் சொல்லியும் எங்களுக்கு வேடிக்கை காண்பித்து வந்தான். அவன் இவரது போக்கைக் தெரிந்து கொண்டு, “சாமி, புலியையும் சிங்கத்தையும் மட்டும் தொட வேண்டாம். ஏனென்றால் அவைகளுக்கு ஒரு சமயம் இருக்கும் புத்தி மற்றொரு சமயம் இராது. அவை கையினால் லேசாக ஒரு தட்டுத் தட்டினால் கூட உங்களால் தாங்க முடியாது” என்று எச்சரிக்கை செய்தான்.
அதற்கு, “தம்பி நீ பயப்படாதே என்னை ஒன்றும் செய்யாது. அவற்றைச் சமீபத்தில் கூப்பிடு, நான் தழுவிக் கொண்டால் ஒரு தீங்கும் செய்யாது”  எனவும் எங்களுக்குப் பயத்தினால் உடம்பு கிடுகிடுவென்று நடுங்க ஆரம்பித்தது. நான், “சிங்கத்துக்கு நல்ல புத்திகொடு பகவானே” என்று பிரார்த்தித்தேன். மெதுவாக அரை மனதோடு கிழவன் சிங்கத்தை அருகில் வரவழைத்தான். உள்ளூற அவனுக்கும் பயம் இருந்தபடியால் அதன் வாலை மட்டும் பிடித்துக் கொண்டு “தொடுங்கள் சாமி” என்றான்.“மிருக ராஜா! கவிராஜ் பாரதி வந்திருக்கிறேன். உனது லாகவ சக்தியையும் வீரத்தையும் எனக்குக் கொடுக்க மாட்டாயா? இவர்கள் எல்லோரும் நீ பொல்லாதவனென்று பயப்படுகிறார்கள். உங்கள் இனம்தான் மனிதரைப் போல உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் சுபாவம் இல்லாதது என்பதையும், அன்பு கொண்டோரை வருத்தமாட்டீர்கள் என்பதையும் இங்கிருப்போர் தெரிந்து கொள்ளும்படி, உனது கர்ஜனையின் மூலம் தெரியப்படுத்து, ராஜா” என்றார் பாரதி.என்ன ஆச்சரியம்! உடனே, சிங்கம் கம்பீரமாகப் பத்து நிமிஷம் கர்ஜித்தது. அவருக்குத் திருப்தியாகும் வரை, அரை மணி நேரம் மிருகேந்திரனைப் பிடரி, தலை, காது எல்லாம் தடவிவிட்டு, எங்களது தொந்தரவினால் வாயில் மட்டும் கைவிடாமல், அதனிடம் விடை பெற்றுக் கொண்டார்.நாங்கள் வாசலில் வந்து ஒரு வண்டி அமர்த்திக் கொண்டு வீடு போக வேண்டும் என்று நினைத்திருக்கையில், அவ்வூர்ப் பிரமுகரும், பிரபல வக்கீலுமான கே.ஜி.சேஷையர் தமது இரட்டைக் குதிரை சாரட்டோடு அங்கு வந்து, ” பாரதியாரே! நல்ல காரியம் செய்தீர், நடந்து வந்தீராமே! என்னிடம் ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? அப்பொழுதே வண்டி அனுப்பியிருப்பேனே, இனிமேல் இவ்வூரில் உள்ள வரை என் வண்டியையே உபயோகித்துக் கொள்ளுங்கள் ” என்று உபசரித்துச் சென்றார். அப்போது, எங்களுடன் இருந்த கல்யாண வீட்டார் முகத்தைப் பார்க்க வேண்டுமே!வீடு சென்று சாப்பாடு முடிந்தது. ஊர்வலம் அந்தத் தெரு வழியே சென்றது. அக்காலத்தில் பிரபல நாதஸ்வர வித்வான் ஸ்ரீசித்திரை, பிரம்மானந்தமாக பைரவி ராக ஆலாபனை செய்தார். பாரதியாரும் சென்று ஊர்வலத்தில் கலந்து கொண்டார். நல்ல ரசிகர் இருந்தால்தான் பாடகருக்கு உற்ச்சாகம் ஏற்படுமல்லவா? மேலும், மேலும் நாயனத்தில் ஆச்சரியமான வேலைகள் நடந்தன. பாரதியார் தாளம் போட்டார். மேளக்காரனைச் சுற்றிக் கூட்டம் அதிகரித்துவிட்டது. எள் போட்டால் கீழே விழாது. கூட்டத்திலிருந்து ஒருவர் ஓடிவந்து, சித்திரை கழுத்திலும் பாரதியார் கழுத்திலும் மாலைகள் போட்டார். அவர் யார் என்று நினைக்கிறீர்கள்? மேற்படி கல்யாணத்தின் சம்பந்தி அய்யரவர்கள்தான்! “வரவேண்டும்? வரவேண்டும்!” என்று பாரதியாரை அழைத்துச் சென்று வேண்டியமட்டும் உபசரித்தார். வீட்டு எஜமானன் இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவில்லை ஆகையால், தமது செய்கைக்கு நாணித் தலை குனிந்தார். பாரதியார் அதைக் கண்டு, அன்போடு “பாண்டியா! கண்ணப்பா! உனக்கு நல்ல சம்பந்தம் கிடைத்திருக்கிறது. க்ஷேமமாக வாழவேண்டும்”  என்று ஆசீர்வதித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார்.
தகவல் திரட்டு: பாரதியாரின் மனைவி செல்லம்மா பாரதி  அவர்கள் எழுதியுள்ள பாரதியார் சரித்திரம் என்கிற நூலிலிருந்து.
 


2 comments: