Search This Blog

Saturday, July 07, 2012

மூன்று ஓக்கள்! - ஓ பக்கங்கள், ஞாநி


1.ஜாதி உண(ர்)வு...

படிக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. தலித் பெண்கள் சத்துணவு சமைத்தால் எங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கே அனுப்ப மாட்டோம் என்று கம்மாபட்டியில் ஸ்ரீவில்லி புத்தூர் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் படிக்கும் தங்கள் வீட்டு மாணவர்களை அந்த ஊரின் கம்பளத்து நாயக்கர் குடும்பங்கள் அனுப்ப மறுத்திருக்கிறார்கள்.

இதைவிட பேரதிர்ச்சி இந்த முறையீட்டை அரசு ஏற்றுக் கொண்டிருப்பதுதான். வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் கல்வித் துறை அதிகாரிகள் வரை இரு தலித் ஊழியர்களான மரகதவல்லியையும் வீரலட்சுமியையும் இடம் மாற்ற ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் குழந்தைகள் படிக்காவிட்டாலும் பரவாயில்லை, நாங்கள் தலித் ஊழியர்களை இடம் மாற்ற முடியாது என்றல்லவா அரசு அதிகாரிகள் சொல்லியிருக்க வேண்டும்?

கம்மாபட்டி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் சஞ்சீவி இது தீண்டாமை கிடையாது என்று மறுத்துவிட்டு, வேறு எந்தச் சாதியினர் சமைக்கும் உணவையும் எங்கள் சாதியினர் சாப்பிடமாட்டோம் என்ற பழக்கம்தான் காரணம்" என்று விசித்திரமான விளக்கம் சொல்லியிருக்கிறார். இவர்தான் கிராம கல்வி கமிட்டித் தலைவர். இந்த லாஜிக்படி ஒவ்வொரு சாதியும் இதுதான் எங்கள் பழக்கம் என்று சொல்ல ஆரம்பித்தால் சாதிவாரியாகத் தான் பள்ளிகளை நடத்த வேண்டிவரும்.

இப்போது தெரியவரும் இன்னோர் அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், முன்னர் 2007லும் இப்படி எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் சத்துணவு ஊழியர்களாக கம்பளத்து நாயக்கர்களையே நியமித்தார்களாம்!

கம்பளத்து நாயக்கர் சாதியிலிருந்து படித்து வெளியூரில் வேலை பார்க்கும் இளைஞர்கள் எங்கிருந்தாலும் ஒரு பதில் சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன். போகிற இடத்திலெல்லாம் நீங்கள் வேற்று சாதியினர் சமைத்துத்தரும் உணவைச் சாப்பிடுகிறீர்களா, இல்லையா? அதற்காக உங்களை, சாதியிலிருந்து நீக்கியிருக்கிறார்களா? அப்படி விலக்கியிருந்தால், நீங்கள் ஊருக்கு அனுப்பும் பணத்துக்கு, சாதிவிலக்கு கிடையாதா?

சுமார் 100 வருடங்களுக்கு முன்னால், 1920களில் வ.வே.சு அயர் நடத்திய சேரன் மாதேவி குருகுலத்தில் கல்வி விடுதிக்கு தங்கள் குழந்தைகளுக்கு தனி பந்தியில் பிராமணர் சமைத்த உணவு பரிமாறினால்தான் அனுப்புவோம் என்று சொன்ன பிராமணக் குடும்பங்களுக்கும் இப்போதும் அதேபோன்ற விதியைச் சொல்லும் கம்மாபட்டி நாயக்கர்களுக்கும் என்ன வித்தியாசம்? கம்மாபட்டிக் காரர்கள் நிபந்தனையை இன்றைய அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்றால், அன்று அதேபோன்ற நிபந்தனையை ஏற்ற வ.வே.சு அயருக்கு எதிராக பெரியார் நடத்திய சுயமரியாதைப் போராட்டத்தின் பயன்தான் என்ன?

2.வாடகை அரசாங்கம்...

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தைக் கல்யாண ரிசப்ஷன் நிகழ்ச்சிகளுக்கு அரசு வாடகைக்குக் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சந்தேகத்துக்கு இடமில்லாமல், இது கண்டிக்கப்பட வேண்டியதுதான். இனி தரமாட்டோம் என்று அரசு, நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது.
சினிமா பூஜை, இசை வெளியீடு, டிரெலர் வெளியீடு நிகழ்ச்சிகளுக்கு இடத்தைக் கொடுத்தபோது, எதிர்க்காதவர்கள் எல்லாம் சேட்டு வீட்டு கல்யாணத்துக்குக் கொடுத்தபோது மட்டும் எதிர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. வள்ளுவர் கோட்டம் காலம் காலமாகத் தள்ளுபடி விற்பனை சேலைக் கண் காட்சிகளுக்கு வாடகைக்கு விடப்படுவதை யாரும் இதுவரை எதிர்த்ததாகத் தெரியவில்லை. அங்கே உருப்படியான ஒரு இலக்கிய நிகழ்ச்சி வருடத்துக்கு ஒரு முறை கூட நடப்பதாகத் தெரியவில்லை. 

இது தொடர்பாக சில அடிப்படை பிரச்னைகளைப் பார்ப்போம். முதலில் மாதா மாதம் லட்சக்கணக்கான ரூபாய் பராமரிப்புச் செலவுக்குத் தேவைப்படும் விதத்தில் அண்ணா நூலகத்தில் பெரிய அரங்குகளைக் கட்டியதே தவறு. நூலகத்தில் சிறு கருத்தரங்க அறைகளே போதுமானவை. மற்றபடி சென்னையில் விதவிதமான அரசு அரங்கங்கள், பொது அரங்கங்கள் உள்ளன.

வருமானத்துக்காக கல்யாணத்துக்கு வாடகைக்கு விடுவதை அரசு இங்கே மட்டுமல்ல, இன்னும் பல இடங்களில் செய்கிறது. மாநகராட்சியின் பள்ளிக் கூடத்தை இடித்துக் கட்டப்பட்டது பிட்டி தியாகராயர் அரங்கு. அதுவும் திருமணங்களுக்குத் தரப்படுகிறது. நகராட்சி வசம் நிறைய சமுதாயக் கூடங்கள் உள்ளன. அவையெல்லாம் பெரும்பாலும் திருமண நிகழ்வுகளுக்கே தரப்படுகின்றன. இலக்கிய, நாடக முயற்சிகளுக்கு எங்கேயும் இவை குறைந்த வாடகையில் தரப்படுவதில்லை.

அரசுக்கு வருவாய் வேண்டுமென்றால் தனியே திருமண மண்டபங்களைக் கட்டி வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கலாம். அறிவுசார், இலக்கியம் கலைசார் இடங்களை அத்தகைய விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். போகிற போக்கில் அரசு ரேஷன் கடையில் டாஸ்மாக் கிளை திறந்தாலும் நாம் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

காசுக்காக எதையும் செய்யலாம் என்பதே சமூக விதியாக மாற்றப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இல்லையில்லை, இருக்கிறோம். இதெல்லாம் ஒரு வாழ்வா என்ன?

3. நீதியே தலை வணங்கினால்?

அரசியல் வாதிகள் ஏமாற்றுகிறார்கள்; அதிகாரிகள் ஏமாற்றுகிறார்கள். கடைசி புகலிடம் நீதிமன்றம்தான் என்று சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நீதிமன்றங்களை நாடும் கட்டாயம் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

அந்த நம்பிக்கையையும் தகர்க்கும் விதத்தில் நீதிபதிகள் சிலரே அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு நிகரான லஞ்சப் பேய்களாக இருக்கும் தகவல்கள் அம்பலமாகும்போது கவலையாக இருக்கிறது. அடுத்தது என்ன ? இது எங்கே போய் முடியும்?
சாதாரண போலீஸ், ஸ்பெஷல் போலீஸ் விசாரணைகளெல்லாம் போதாது, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சில கேஸ்களில் சொல்லும்போது எப்படியும் உண்மை வெளிவந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை பொதுமக்கள் மனத்தில் தோன்றுகிறது. அப்படி சி.பி.ஐ. விசாரித்த கேஸ்களில் எத்தனை என்ன கதியை அடைகின்றன, அதற்கு என்ன அரசியல் காரணம் என்பது தனிக்கதை.

சி.பி.ஐ., துப்புத் துலக்கிய வழக்குகளை விசாரிக்க, தனி சி.பி.ஐ. நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட மன்றத்தின் நீதிபதி ஊழல் பேர்வழியாக இருந்தால்...?

ஹைதராபாத் சி.பி.ஐ. நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி பட்டாபிராம ராவ் கையும் களவுமாகப் பிடிபட்டு பணி நீக்கம் செய்யப்பட்டு கைதும் ஆகிவிட்டார். கர்நாடக மாநிலத்தில் பி.ஜே.பி. அரசியலை, தங்கள் பண பலத்தால் ஆட்டிப்படைத்து வரும் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி சுரங்கத்தொழிலில் பெரும் தகிடுதத்தங்கள் செய்த குற்றத்துக்காக போன வருடம் கைது செய்யப்பட்டிருந்தார்.

தமக்கு ஜாமீன் வழங்குவதற்காக நீதிபதியுடன் தரகர்கள் மூலம் பேரம் பேசிய ரெட்டி, பத்து கோடி ரூபாயில் முன்பணமாக மூன்று கோடி ரூபாய் தர ஏற்பாடு செய்தார்.விஷயம் அம்பலமானதே தற்செயலாகத்தான். மே மாதம் விசாரணையின்போது ஐந்து லட்ச ரூபாய் சொந்த ஜாமீனில் ரெட்டியை விடுவிக்க பாட்டாபிராம ராவ் உத்தரவிட்டார். இந்தப் பணத்தை உடனே ரெட்டியின் சகோதரர் நீதிமன்றத்தில் கட்டினார். எப்படி அவருக்கு முன்கூட்டியே ஜாமீன் தொகை இதுவாகத் தானிருக்கும் என்று தெரிந்து, ரொக்கத்துடன் வந்தார் என்று ஒரு சி.பி.ஐ. அதிகாரிக்குச் சந்தேகம் வந்தது.

விசாரித்ததில், பட்டாபிராமராவ் தம் மகன் பெயரில் ஒரு வங்கியில் ஐந்து லாக்கர்களை எடுத்து அவற்றில் கத்தை கத்தையாக பணத்தைப் பூட்டி வைத்திருப்பது தெரிந்தது. பட்டாபியும் அவர் மகனும் கைதானார்கள்.

பட்டாபிக்கும் ரெட்டிக்கும் தரகராக வேலை பார்த்தவர் ஓவு பெற்ற நீதிபதி சலபதிராவ் (ஓவுபெறுவதற்கு முன்பு என்ன மாதிரி இவர் நீதி வழங்கியிருப் பார் என்று யூகிக்கலாம்.) இதற்கு முன்பு ஒரு ஊழல் போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் கொடுக்க பத்து லட்ச ரூபாயை சலபதி மூலம் பட்டாபி வாங்கியிருக் கிறார். எனவே சலபதி நம்பிக்கைக்குரிய தரகராகிவிட்டார். இப்போது அவரும் கைதாகிவிட்டார்.

ரெட்டியின் சுரங்க ஊழல் வழக்கில் இன்னொரு அக்யூஸ்டுக்காக இன்னொரு வரும் தரகு வேலை பார்த்திருக்கிறார் என்று சலபதி மூலமே தகவல் கிடைத்திருக்கிறது. அவர் மாநிலத் தேர்தல் கமிஷனில் இருக்கும் இன்னொரு நீதிபதி பிரபாகர். இவர் 10 கோடி ரூபாய் லஞ்சம் தருவதாகப் பேசினாராம். பட்டாபிராமராவ் சலபதிராவை நம்பிய அளவுக்கு இவரை நம்பவில்லை போலிருக்கிறது. நேர்மையான தொழிலில் கூட்டாளிகளை நம்புவதை விட அதிகமான நம்பிக்கை ஊழல் விவகாரங்களில் கூட்டாளிகள் மீது இருந்தால்தான் மாட்டாமல் ‘தொழில்’ செய்ய முடியும் இல்லையா?

மாட்டியிருக்கும் இந்நாள், முன் னாள் நீதிபதிகளுக்குக் கடைசியில் என்ன தண்டனை கிடைக்குமோ தெரியாது. ஆனால் சட்டங்கள் உடனடியாக திருத்தப்பட வேண்டும். எந்தக் குற்றத்துக்கும் சாதாரண மனிதனுக்கு விதிக்கும் தண்டனையைப் போல இரண்டு மடங்கு அதிக தண்டனை அரசு ஊழியர், அதிகாரிகள், நீதிபதிகள், பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு எல்லாம் தரப்படவேண்டும் என்று சட்டமியற்ற வேண்டும்.

பலே பாண்டியா!

இந்த வாரப் பூச்செண்டு : என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்ட பாடப் புத்தகங்களில் இருக்கும் கார்ட்டூன்கள் பற்றி சர்ச்சை ஏற்பட்டதையடுத்து அவற்றை ஆய்வு செய்து பரிந்துரைக்க அரசு நியமித்த தோரத் கமிட்டி உறுப்பினரான தமிழ்நாட்டைச் சேர்ந்த தில்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.எஸ்.எஸ் பாண்டியனுக்கு, கமிட்டி கருத்திலிருந்து மாறுபட்ட கருத்தை முன்வைத்ததற்காக இ.வா.பூ. 

இந்தப் புத்தகங்கள் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் தொடர்ந்து தேடிப் படித்து அறியும் ஆர்வத்தை உந்தும்விதத்திலும் எழுதப்பட்டிருப்பதால், அவற்றில் இப்போது எதையும் நீக்கத் தேவையில்லை என்று பாண்டியன் கூறியிருக்கிறார். (தோரத் கமிட்டி புத்தகத்தில் இருந்து ஏறத்தாழ எல்லா கார்ட்டூன்களையும் எடுக்கச் சொல்லியிருக்கிறது.) அரசியல்ரீதியாகத் தவறாகக் கருதப்படும் கருத்துகள் எல்லாம், கற்பிக்கத் தகுந்தவையல்ல என்று ஆகாது என்று கூறியிருக்கும் பாண்டியன், தாம் பரிசீலித்த பாடப்புத்தகங்களில் புத்தகம் எழுதியவர்களைப் பற்றியே விமர்சனப் பார்வையை எழுப்பும் கற்பனை கேரக்டர்களை பாடத்தில் பாடக்குழுவினர் சேர்த்திருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். 

பாடப்புத்தகத்துக்கு வெளியேயும் தேடிக் கற்கும் பார்வையைத் தூண்டும் விதத்தில் பாடப்புத்தகம் ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் இந்த நூல்கள் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதாக பாண்டியன் கூறியுள்ளார். எந்த பாடநூலும் நிலையானதல்ல. அடுத்த காலகட்டத்தில் இன்னும் மாற்றத்துக்குரியதுதான் என்பது அவர் கருத்து. திராவிட இயக்கம் பற்றியும் பெரியார் பற்றியும் வடக்கே இருந்து வரும் பிழையான கருத்துகளைத் தொடர்ந்து மறுத்து ஆங்கிலத்தில் எழுதிவருபவரான பாண்டியன், எம்.ஜி.ஆர் பற்றியும் பராசக்தி படம் பற்றியும் எழுதிய சமூக ஆய்வு நூல்கள் முக்கியமானவை.

இந்த வாரக் கேள்வியும் பதிலும்!

நிலப்பறி, அராஜக வழக்குகளில் கைதாகி இருக்கும் தி.மு.க. புள்ளிகளைக் காப்பாற்றுவதற்காக அரசைக் கண்டித்து 96 ஆயிரம் பேரை சிறைக்கு அனுப்பத் திரட்ட முடியும் கலைஞர் கருணாநிதியால், ஏன் ஜெயலலிதா அரசு பால் விலை, மின்கட்டணம், பஸ் கட்ட ணங்களை உயர்த்தியபோது இதே போலத் திரட்ட முயற்சிக்கவில்லை?  

ஜெயிலுக்குப் போயிருப்பவர்களின் நிதி ஆதாரத்தில்தானே கட்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கிறது? அவர்களைக் காப்பாற்றி னால்தானே கட்சியைக் காப்பாற்ற முடியும்? அப்பாவித் தொண்டர்களால் கட்சிக்குப் பணம் கொடுத்து உதவமுடியாது அல்லவா. எனவே அவர்களால் முடிந்தது உடல் உழைப்பு. அத னால் சிறைக்கு வரும்படி அழைக்கப்படுகிறார்கள். கட்சியைக் காப்பாற்றினால்தானே, அடுத்து தன் ‘மக்களைக்’ காப்பாற்றக் குரல் கொடுக்க முடியும்? பொதுமக்கள் எப்படியும் எந்த விலை உயர்வுக்கும் பழகிக் கொள்வார்கள். தவிர நாளை தான் திரும்ப வந்தாலும் இதையே தானே வேறு வடிவில் செய்யப் போகிறோம் என்பது அவருக்கும் தெரியும்தானே..!
 

 
 

1 comment: