Search This Blog

Saturday, July 21, 2012

டாக்டர் இல்லாத இடத்தில்... கல்வி இல்லாத இடத்தில்... - ஓ பக்கங்கள், ஞாநி


டேவிட் வெர்னர் 1977ல் எழுதிய ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ என்ற மருத்துவ வழிகாட்டி புத்தகத்தை வாலன்ட்டரி ஹெல்த் அசோசியேஷன் அஃப் இந்தியாவும் க்ரியா பதிப்பகமும் இணைந்து முதன் முதலில் தமிழில் வெளியிட்ட நாளிலிருந்து நான் அதைப் பயன்படுத்தி வருகிறேன். பல பதிப்புகள் வெளிவந்துவிட்ட அந்த நூலின் புதிய பதிப்பை இப்போது அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

அது வெறும் முதல் உதவிப் புத்தகம் அல்ல. கிராமங்களில் இருக்கும் நலப்பணியாளர்கள் அங்கே டாக்டர் இல்லாத இடத்தில் நோயாளிக்கு என்ன செய்ய வேண்டுமென்பதை விவரமாக ஒவ்வொரு நோய், விபத்து, நோயாளியின் நிலை சார்ந்து தெரிவிக்கும் வழிகாட்டி நூல் அது. நோக்கான மருந்துகள் பட்டியலும், மருந்துகளின் தன்மை பற்றியும் சாப்பிட வேண்டிய அளவு பற்றியும் சில நம்பகமான வீட்டு வைத்திய முறைகள் பற்றியும் நூலில் தெரிந்துகொள்ளலாம். பிரசவம் பார்த்தல், பாம்புக் கடி, தேள் கடிகளுக்கு சிகிச்சை அளித்தல், அவசரத்துக்கான சிறு அறுவைச் சிகிச்சைகள் செய்தல் பற்றியெல்லாம் இந்த நூல் சொல்லித் தருகிறது.

அதே சமயம் இந்த நூல் டாக்டருக்கு மாற்று அல்ல. டாக்டர் இல்லாதபோது என்ன செய்யவேண்டும் என்று சொல்வதோடு எப்போது உடனே டாக்டரிடம் போயாக வேண்டும் என்பதையும் சேர்த்தே சொல்லுகிறது.

உத்தரப்பிரதேச மாநில அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் அடிபட்டவர்களுக்கு அவசர சிகிச்சையாக, ஒரு வார்டுபாய் ஊசி மருந்தேற்றியும் காயத்துக்கு தையல் போட்டுச் சிகிச்சை செய்தது பற்றியும் ஆங்கில டி.வி.சேனல்கள் பெரும் சர்ச்சையை எழுப்பியதும் எனக்கு டேவிட் வெர்னரின் நூல்தான் நினைவுக்கு வந்தது. புலந்த்ஷஹார் போன்ற சிறிய மாவட்ட மருத்துவமனைக்கு விபத்தில் அடிபட்ட 20 பேரைக் கொண்டு வந்தால் நிச்சயம் அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் கவனிக்க ஆளுக்கொரு டாக்டராக 20 டாக்டர்களை அனுப்பமுடியாது. டாக்டரின் மேற்பார்வையில் வழிகாட்டுதலில் நர்சுகளும் வார்டு பாய்களும் சேர்ந்துதான் சிகிச்சை அளிக்க முடியும். புலந்த்ஷஹாரில் அதுதான் நடந்திருக்கிறது. சரியான வழிகாட்டுதலாய், சரியான சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பதை மட்டுமே கவனிக்க வேண்டும்.

இந்தியாவுக்கு இப்போது மொத்தம் 17 லட்சம் டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் இருப்பது 7 லட்சம் பேர்தான். பத்து லட்சம் டாக்டர் பற்றாக்குறை என்று மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் அடிப்படையான சில எளிய சிகிச்சைகளை அளிக்க மருத்துவ உதவியாளர்களைப் பெருவாரியாகப் பயிற்சி கொடுத்து நியமிக்கும் யோசனையும் திட்டமும் அரசுகளால் சுமார் 40 வருடங்களாக அவ்வப்போது பேசப்பட்டு வருகிறது.

சில தொண்டு நிறுவனங்கள் கிராமப் பகுதிகளில் ஏற்கெனவே அப்படிப்பட்ட முயற்சிகளை நடைமுறைப்படுத்தி வருவதை இணைய இதழான ஃபர்ஸ்ட் போஸ்ட் நிருபர் அப வைத்யா சுட்டிக் காட்டியுள்ளார்.

நாகபுரிக்கு 360 கிலோமீட்டர் தொலைவில் ஹேமல்காசா என்ற இடத்தில் சமூக சேவகர் பாபா ஆம்தேவின் மகன் டாக்டர் பிரகாஷ் ஆம்தே நிறுவியிருக்கும் மருத்துவ மனையில் வருடத்துக்கு சுமார் 40 ஆயிரம் பழங்குடி மக்களுக்கு மருத்துவ சிகிச்சை தரப்படுகிறது. சிகிச்சை தருவோரில் பெரும்பாலோர் எம்.பி.பி.எஸ். படிக்காத மருத்துவ பணியாளர்கள்தான். இவர்களும் பழங்குடியினரே. இதற்கென சிறப்புப் பயிற்சியை ஆம்தேவின் நிறுவனம் அளித்துவருகிறது. இதேபோல சமூக சேவகர் பங்க்கர் ராய், ராஜஸ்தான் மாநில திலோனியா கிராமத்தில் எழுபதுகளில் ஏற்படுத்திய பேர்ஃபுட் காலேஜ், கிராமப் பெண்களை மருத்துவப் பணியாளர்களாக வேலை செய்யப் பயிற்றுவிக்கிறது.

பேர்ஃபுட் டாக்டர்கள் என்பது பல காலமாகப் பேசப்பட்டு வரும் ஒரு கருத்து வடிவம். மருத்துவரைத் தேடி நோயாளி வராமல், நோயாளியைத் தேடி மருத்துவரே நடந்து சென்று சிகிச்சை அளித்தல் என்ற இந்தக் கருத்து, கிராமங்களில் மருத்துவ வசதி கிட்டாமல் இருந்த நிலையில் முன் வைக்கப்பட்டது. நலப்பணியாளரே ஒவ்வொரு கிராமமாகச் சென்று நோயாளிகளுக்கு முதல்கட்ட சிகிச்சையை அளிப்பது என்றும் அடுத்தகட்ட சிகிச்சை தேவைப்படுவோர் மட்டும் மருத்துவ மனைக்குச் சென்றால் போதுமென்பதும் இந்தக் கருத்துருவத்தின் அம்சங்கள்.

சீன நாட்டில் மாவோவின் ஆட்சிக்காலத்தில் அவர் முன்வைத்த திட்டம் இது. நெல் விவசாயிகளிலிருந்தே இந்த நடை நலப்பணியாளர்களை மாவோ உருவாக்கினார். இந்தத் திட்டத்தின் விளைவாக சீன கிராமங்கள் பெரும் கொள்ளை நோய்கள் வராமல் தப்பித்தன என்றும்; அடிப்படைச் சுகாதாரம் மேம்பட்டது என்றும் உலகச் சுகாதார நிறுவனம் 2008ல் குறிப்பிட்டுள்ளது என்று அப வைத்யா சுட்டிக்காட்டுகிறார்.

நமக்குப் பற்றாக்குறையாக இருக்கும் பத்து லட்சம் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களை உருவாக்குவது ஒரு பக்கம் நடக்கட்டும். இன்னொரு பக்கம் ஒரு தேர்ந்த டாக்டர் சொன்னால், அவர் சொன்னபடி ஊசி போடுவதையும், தையல் போடுவதையும் கட்டுக் கட்டுவதையும் செய்து முடிக்கும் திறன் உடைய ஆயிரக்கணக்கான நலப்பணியாளர்களைத் தயாரிக்க வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது.

ஒரு வார்டுபாய் சிகிச்சை தரலாமாய் என்று குமுறுபவர்களுக்கு, இரண்டு செய்திகளைச் சொல்ல விரும்புகிறேன். வார்டுபாய், டாக்டரின் கண்காணிப்பில் சரியானபடி தையல் போட்டாரா என்பது மட்டுமே முக்கியமானது. இரண்டாவதாக 1996ல் நான் தினமணியில் இதழாசிரியராகப் பணியாற்றியபோது, என் ஆசிரியராக இருந்தவர் மறைந்த நண்பர் ஆர்.எம்.டி. எனப்படும் திருஞானசம்பந்தம். டேபிள் டேபிளாகச் சென்று பேப்பர்களையும் ஃபைல்களையும் விநியோகிப்பதும் காபி வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பதையும் செய்து கொண்டிருந்த ஒரு அட்டெண்டர், செய்திகளில் காட்டிய ஆர்வத்தைக் கவனித்த ஆர்.எம்.டி மெல்ல மெல்ல அந்த அட்டெண்டரை சின்னச் சின்ன செய்திகளை எழுதவைத்து ஒருசில வருடங்களில் நிருபராக, உதவி ஆசிரியராக ஆக்கியதை நேரில் பார்த்தேன். இது அத்தகைய இரண்டாவது அனுபவம். ஏற்கெனவே அவர் இந்தியன் எக்ஸ்பிரஸில் எங்கள் நிருபர் பிரிவில் பணியாற்றிய இரண்டு டைப்பிஸ்ட்டுகளை மெல்ல மெல்ல வளப்படுத்தி நிருபர்களாக்கியவர்.

வார்டுபாய்களும் நர்சுகளும் கூட சில வருடங்கள் தொழில் அனுபவத்துக்குப் பின்னர் பார்ட்டைம் படிப்பு வசதி செய்து கொடுத்தால் டாக்டர்களாக முடியும் என்பதை நாம் உணரவேண்டும். ஒரு பக்கம் பெரும் வசதிகள் குவிந்திருக்கும் மிகச் சில மாநகரங்களும்; மறுபக்கம் பெருவாரியான ஊர்களிலும் கிராமங்களிலும் அடிப்படை மருத்துவ வசதிகளே இல்லாமல் மக்கள் இருக்கும் நிலையும் உள்ளதை மாற்ற, வித்தியாசமான வழிகளை நாம் யோசித்தே ஆகவேண்டியிருக்கிறது.

(கண்ணைத் தொடைச்சுக்க)
தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட மம்தா பேனர்ஜிக்கு இ.வா.கை.கு.
கல்வி இல்லாத இடத்தில்....

‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே’ என்ற கவிஞர் பாட்டை நினைவுக்குக் கொண்டு வந்தது ஒரு கொடூரச் செய்தி.

மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளிலும் தங்கள் இடங்களில் 25 சதவிகிதத்தை ஏழை மாணவர்களுக்குக் கொடுத்தாகவேண்டும் என்ற விதியின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்ட மூன்று சிறுவர்களின் முன்தலை முடியை வெட்டி அவர்களை மட்டும் அடையாளப்படுத்தியிருக்கிறது பெங்களூருவில் ஒரு தனியார் பள்ளி நிர்வாகம். அடிமைகளுக்கு சூடு போட்டு முத்திரை குத்தியதன் நவீன வடிவம். (நூறு ரூபாய் திருடினால் அவன் பெயர் ஊர் விலாசம் ஃபோட்டோ எல்லாம் போட்டு அமர்க்களப்படுத்தும் நம் பத்திரிகைகள் எந்தப் பள்ளி என்று அதன் பெயரை வெளியிடாமல் காப்பாற்றுகின்றன).

இதர பணம் கட்டும் மாணவர்களுடன் இந்தச் சிறுவர்கள் சேரக் கூடாதாம். தனி இருக்கை. இவர்களுக்கு அசெம்ப்ளி பிரேயர் கிடையாதாம். ஹோம் வொர்க்கும் கிடையாதாம். சீருடை மட்டும் உண்டு!

ஏற்கெனவே தமிழ்நாட்டில் பள்ளிக் கட்டணங்களை (தப்புத் தப்பாக) சீரமைத்து அறிவித்தபிறகு, பல பள்ளிகள் அரசு அறிவித்த கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு தனி வகுப்பு, தாங்கள் சொல்லும் ஃபீசைக் கட்டுவோருக்கு தனி வகுப்பு என்று நடத்தி வருகின்றன.

அரசு கொண்டு வரும் சட்டங்கள் அரை குறையாகவும் ஓட்டைகளோடும் இருப்பது இந்த அராஜகங்களுக்கு வசதியாக இருக்கின்றன. ஏற்கெனவே கல்வி உரிமைச் சட்டத்தில் பல விஷயங்கள் தெளிவாகச் சொல்லப்படவில்லை என்ற குறையை ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு சுட்டிக் காட்டியிருக்கிறார்.

பகிரங்கமாக எந்தக் கூச்சமும் இல்லாமல், தங்கள் விருப்பு வெறுப்புகளைக் காட்டும் பள்ளி நிர்வாகங்கள் மீது அரசுகள் ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாணவர்களை பாரபட்சமாக நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை தேவைப்படுகிறது. ஆனால் அத்தகைய நடவடிக்கையை நம் அரசுகளிடம் எதிர்பார்ப்பதே அர்த்தமில்லாமல் போய்விட்டது. ஏழைக் குழந்தைகளை கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நம் பள்ளியில் சேர்த்துக் கொண்டால், உங்கள் குழந்தைகளுக்குத் தொற்று நோய் வரும்; கெட்ட பழக்கங்கள் ஏற்பட்டுவிடும்; எனவே இந்தச் சட்டத்தை எதிர்த்து அரசுக்குக் கடிதம் எழுதுங்கள் என்று பெற்றோருக்குக் கடிதம் எழுதிய ஒரு பள்ளி பிரின்சிபாலை அரசு தன் உயர்மட்டக் குழுவில் நியமிக்கிறது. அப்புறம் எப்படி விளங்கும்?

கல்வி உரிமைச் சட்டம் என்பது ஒரு நாசூக்கான மோசடி. ஏதோ முற்போக்காக எல்லாருக்கும் கல்வி கிடைக்கத்தான் வழி செய்துவிட்டது போல பாவனை செய்து அரசு நம்மை ஏமாற்ற பயன்படுத்தும் முகமூடி அது.

எல்லோருக்கும் தரமான கல்வி மலிவான விலையில் கிடைக்கச் செய்ய இது வழியல்ல. ஒவ்வொரு தனியார் பள்ளியிடமிருந்தும் 25 சதவிகித இடங்களுக்கான பணத்தை அரசு வாங்கிக் கொள்ளலாம். அதைச் சரியாகச் செலவிட்டு ஒவ்வொரு அரசு பள்ளியையும் தனியார் பள்ளியின் தரத்தில் நடத்தினாலே நிலைமை மாறிவிடும். அதைச் செய்ய அரசுக்கு மனமில்லை. ஆசிரியர்கள் சங்கத்தை நினைத்து பயம் வேறு.

சட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தத் தனியாரின் ரவுடிப் பள்ளிகளில் எப்படிப் பட்ட கல்வி கிடைக்கும்? இப்படி தன் வகுப்பில் மூன்று குழந்தைகளை மட்டும் வித்தியாசமாக ஆசிரியர் நடத்துவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மற்றக் குழந்தைகள் அதிலிருந்து என்ன கற்றுக் கொள்வார்கள்? சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை, ஒடுக்குமுறை வழிகளைத் தாங்களும் எப்படி பின்பற்றுவது என்றா?

கல்வி எங்கே இருக்கிறது? பள்ளிக் கூடத்திலா? இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடுகிறோமா? இப்படிப்பட்ட நிகழ்வுகள் கல்வி, பள்ளிக்கு வெளியில்தான் இருக்கும் என்ற எண்ணத்தையே உண்டாக்குகின்றன. அண்மையில் தங்கள் குழந்தைகளை, பள்ளிக்கே அனுப்புவதில்லை என்று முடிவெடுத்துச் செயல்படுத்தி வரும் ஒரு (மெத்தப் படித்தவர்கள்) குழுவுடன் தொடர்பு கிடைத்தது. அதெப்படி குழந்தையை வீட்டிலேயே வைத்துக் கற்பிப்பது, சரியாக இல்லையே என்று நினைத்தேன். இப்போது பெங்களூரு பள்ளி போன்றவற்றைப் பார்க்கும்போது மாற்றுத் திட்டம் பற்றி இன்னும் ஆழமாகத் தெரிந்துகொண்டால் தேவலை என்று தோன்றுகிறது. தெரிந்ததும் பகிர்வேன்.

மதுக்கடைகளை மூடக் கோரி அடையாளப் பூட்டுப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கும் பா.ம.க.வுக்கும் டாக்டர் ராமதாசுக்கும் இ.வா. பூ.

எப்படியும் தனி ஈழம் கேட்டு தீர்மானம் போடப் போவது இல்லை என்று கலைஞர் கருணாநிதி அறிவித்துவிட்ட நிலையில், ஏன் இன்னும் டெசோ மாநாட்டில் சிறப்புரையாற்ற அவர் ராஜபக்ஷேவுக்கு அழைப்பு அனுப்பாமல் இருக்கிறார் ?

No comments:

Post a Comment