Search This Blog

Wednesday, July 18, 2012

பொருளாதார வளர்ச்சியில்... இந்தியா V/S சீனா

குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி, ஜூன் 26ம் தேதி தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தவுடன் பிரதம மந்திரி மன்மோகன் சிங் தற்காலிகமாக நிதி மந்திரி பொறுப்பையும் தாமே ஏற்றுக்கொண்டார். உடனே பிரதமர் நிதி அமைச்சகத்திலுள்ள அனைத்து உயர் அதிகாரிகளையும் கூப்பிட்டு அவர்களிடம் நாட்டின் இன்றைய பொருளாதார நிலையைப் பற்றிய தமது கவலையையும் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த பல கருத்துக்களையும் தெரிவித்தார். முக்கியமாக இப்போது நாட்டில் நிலவும் பண வீக்கம், விலை வாசி உயர்வு, அரசு வரி வசூலில் ஏற்பட்டிருக்கும் தொய்வு, உணவு, உரம் மற்றும் எரிபொருள் இவற்றுக்கான அரசு மானியத்தால் ஏற்படும் கடுமையான நிதிப்பற்றாக்குறை, நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சியில் காணும் தொய்வு முதலியவை. மேலும் நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் அதிக இறக்குமதியினால் ஏற்பட்டிருக்கும் நடப்பு கணக்கின் பற்றாக்குறை (Current Account Deficit).

மேற்சொன்ன பிரச்னைகள் அனைத்தும் புதிதாக ஏற்பட்ட பிரச்னைகள் அல்ல. சென்ற இரண்டு மூன்று வருஷங்களாகவே இந்தப் பிரச்னைகள் இருந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் சிறிய அளவுகளில் இருந்த பிரச்னைகள், அரசின் மெத்தனத்தால் இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம், மத்திய அரசின் மிக அவசியமான ஆனால் கடுமையான முடிவுகளை எடுக்க இயலாத போக்குதான். எரிபொருள் விலை நிர்ணயத்தில் அரசு எந்த ஒரு தீர்மானமான முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. ‘எடுத்தேன் - கவிழ்த்தேன்’ என்கிற மாதிரி அவ்வப்போது சில எரிபொருள்களின் விலையை ஏற்றுவது, அதற்கு எதிர்ப்பு கிளம்பிய உடன் ஏற்றிய விலையின் அளவில் கொஞ்சம் குறைப்பது. இதுதான் அரசின் இன்றைய போக்கு. செயலின்மைக்குக் காரணமாகச் சொல்வது ‘கூட்டணி தர்மம்.’ நாட்டின் பொருளாதார நிலைக்கும் கூட்டணி தர்மத்துக்கும் என்ன சம்பந்தம்?பிரதம மந்திரிக்கு பொருளாதார விஷயங்களில் ஆலோசனை சொல்ல எத்தனையோ பேர்... முக்கியமாக முன்னாள் ரிஸர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன், திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா, நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் கௌஷிக் பாஸு. இப்படி எத்தனையோ பேர் இருந்தும் என்ன பிரயோஜனம். இவர்களின் பொழுது போக்கு அவ்வப்போது பண வீக்கம் எப்போது எவ்வளவு குறையும், உற்பத்தி எவ்வளவு பெருகும் என்று ஜோஸ்யம் சொல்வதுதான்.இந்த நேரத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். சமீபத்தில் உலக வங்கி தனது இணையதளத்தில் சென்ற ஐந்து ஆண்டுகளில் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியைப் பற்றி ஒரு புள்ளி விவரம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி நம்நாடு மற்றும் சீனாவின் வளர்ச்சியைப் பார்ப்போம்.

2007 - 2008 முதல் 2011 - 2012 வரை ஐந்து ஆண்டுகளுக்கான சராசரி வளர்ச்சி (ஆண்டொன்றுக்கு):
1. நாட்டின் மொத்த உற்பத்தி அதிகரிப்பு : இந்தியா - 8.5 சதவிகி தம், சீனா 11.2 சதவிகிதம்.
2. பண வீக்கம் : இந்தியா - 7.8 சதவிகிதம், சீனா - 2.7 சதவிகிதம்.
3. நாட்டின் மொத்த உற்பத்தியில் உள் நாட்டிலேயே நுகரப்படுவது : இந்தியா - 68.2 சதவிகிதம், சீனா - 48.8 சதவிகிதம்.
இந்தப் புள்ளிவிவரத்தில் மறைந்திருக்கும் ஒரு முக்கியமான உண்மையைப் பார்ப்போம். நம் நாட்டு உற்பத்தியில் பெரும் பகுதியை இந்தியா உள் நாட்டிலேயே நுகருகிறது. (68.2. சதவிகிதம்) சீனாவில் இது 48.8 சதவிகிதம்தான். இதற்கு முக்கிய காரணம் சீனாவின் ஆண்டு உற்பத்தியின் அளவு நம் நாட்டின் அளவைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதுதான். சென்ற ஆண்டில் நமது நாட்டின் மொத்த உற்பத்தி அளவு சுமார் 80 லட்சம் கோடி ரூபாய் (1600 பில்லியன் டாலர்) இதுவே சீனாவில் 360 லட்சம் கோடி ரூபாய். (7200 பில்லியன் டாலர்). இந்தியாவின் ஜனத்தொகை 120 கோடி. சீனாவின் ஜனத்தொகை 140 கோடி. இந்த அதிக அளவு உற்பத்தியினால் சீனா, தனது உற்பத்தியில் 50 சதவிகிதத்துக்கு அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. நமது ஏற்றுமதி, உற்பத்தியில் 20 சதவிகிதம்தான். இந்த அதிக ஏற்றுமதியினால் சீனாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 2000 - பில்லியன் டாலருக்கும் அதிகம். நமது அன்னியச் செலாவணியின் கையிருப்பு சுமார் 280 பில்லியன் டாலர். இந்தக் கையிருப்பு, அதிக ஏற்றுமதியினால் ஏற்பட்டதல்ல. நமது நாட்டின் அன்னியக் கடன் 346 பில்லியன் டாலர். இந்தக் கடன் தொகையிலிருந்துதான் நமது தற்போதைய கையிருப்பு 280 பில்லியன் டாலர்.
பிரதம மந்திரி கவலைப்படுகிறார். அவருடன் சேர்ந்து மற்ற மந்திரிகளும் கவலைப்படுகிறார்கள். என்ன பிரயோஜனம்? உருப்படியாக உடனே ஏதாவது செய்யாவிட்டால் தொடர்ந்து எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.
 வி.கோபாலன்




1 comment:

  1. நல்ல ஒப்பீடு... விளக்கமான பதிவு...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete