Search This Blog

Saturday, July 28, 2012

அருள்வாக்கு - தோல்வி, அவமானம் ஏன் வருகிறது?


‘அறுசுவை’ என்பார்கள். நாக்குக்கு ருசிக்கிற இந்த ‘ரஸங்’களை வைத்துத்தான் மனசுக்கு ருசியாக இருக்கப்பட்ட கலை அநுபவங்களுக்கும் நவ‘ரஸம்’ என்று பெயர் வைத்தார்கள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, கரிப்பு என்று ஆறு ரஸங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றுமே ‘ப்பு’ என்றுதான் முடிகின்றன. அதனால் எல்லாவற்றிலுமே ‘உப்பு’ இருப்பதாகச் சொல்லலாம். ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று இதனால் தான் சொல்கிறோம் போலிருக்கிறது! இதில் எந்த ரஸத்தையும் தனியாகச் சாப்பிட முடியவில்லை. வெறும் உப்பை, வெறும் புளியை, மிளகாயை, கடுக்காயை, பாகற்காயைச் சாப்பிடுவது என்றால் முடியாத காரியம். சர்க்கரை, வெல்லத்தை வேண்டுமானால் ஏதோ கொஞ்சம் சாப்பிடலாம். ஆனாலும் அது கூட, மாவு கீவு சேர்த்துத் தித்திப்புப் பட்சணமாகப் பண்ணினால். சாப்பிடுகிற அளவுக்கு வெல்லத்தையும் சர்க்கரையையும் சாப்பிட முடிவதில்லை. அது திகட்டி விடுகிறது. ஆனால் தனியாகச் சாப்பிட முடியாத இந்த ஷட் ரஸ வர்க்கங்களையும் விதம்விதமாகக் கலந்துவிட்டால், பல தினுசு வியஞ்சனங்கள் செய்து வயிறாரச் சாப்பிட முடிகிறது. ஒன்று சேருவதில், ஸங்கத்தில் விளைகிற பெரிய ருசிக்கு இது ஒரு திருஷ்டாந்தம். வாழ்க்கையிலும் இப்படியே ஏதோ ஓர் உணர்ச்சி மட்டும் இருந்தால் சீக்கிரம் திகட்டிவிடும். அதனால்தான் அழுகை சிரிப்பு, வெற்றி தோல்வி, மான அவமானம் எல்லாம் கலந்து வருகின்றன.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

No comments:

Post a Comment