Search This Blog

Sunday, July 29, 2012

எனது இந்தியா (இமயம் எனும் அரண் ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


ஒரு தேசத்தின் நிம்மதியை அதனுடைய எல்லைப் பாதுகாப்பே முடிவு செய்கிறது. எல்லைகள் யாவும் மனிதர்கள் வகுத்துக் கொண்டது என்ற போதும் அவற்றை உருவாக்குவதும் கட்டிக் காப்பதும் எளிதானது அல்ல. வெறும் படைபலத்தால் மட்டுமே எல்லைகளைக் காப்பாற்றி விடமுடியாது. அதற்கு உயிர்த்தியாகம் செய்யும் அளவுக்கு தேசப்பற்றும், உறுதியான காவல் நடவடிக்கைகளும், கவசம் போல தடுப்பு அரண்களும் அவசியம். அந்த வகையில், இந்தியாவின் எல்லை உறுதியானது. காரணம், அது மனிதர்கள் உருவாக்கிய எல்லைக்கோடு அல்ல. இயற்கையாகவே அமைந்த அரண். ஒரு கவசம் போல இந்தியாவை பாதுகாக்கிறது இமயம்.

இமயமலையின் வரலாறு இந்தியச் சரித்திரத்தில் மிக முக்கியமானது. அது வெறும் மலைத்தொடர் மட்டுமின்றி இந்திய நாகரிகத்தின் தொட்டில் என்றே அழைக்கப்படுகிறது. இமயமலையின் ஊடாகத்தான் இந்தியச் சமூகத்தின் தொன்மை நினைவுகள் புதையுண்டு இருக்கின்றன. மகாபாரதம் போன்ற இதிகாசம் சுட்டிக்காட்டும் வாழ்க்கைமுறைஇமயமலையோடு தொடர்பு உடையதே. இமயமலையைச் சேர்ந்த வனப்பகுதியில் பூர்வகுடி மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர். புராதனச் சிற்றரசர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்து இருக்கின்றனர். மற்ற ஆசிய நாடுகளில் இருந்து இந்தியாவைப் பொத்திப் பாதுகாக்கும் உள்ளங்கையைப் போலவே திகழ்கிறது இமயம்.

மகாகவி காளிதாசன், மலைகளின் அரசன் என்று இமயத்தை புகழ்ந்து பாடி இருக்கிறார். ஞானிகள், துறவிகள், வரலாற்று ஆய்வாளர்கள், கவிஞர்கள் என்று பலராலும் புகழ்ந்து பாடப்படும் இமயம், சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் நெருக்கடியால் இன்று சூழப்பட்டு இருக்கிறது. இந்த மலையில் இருக்கும் அரியவகை விலங்குகளும், தாவரங்களும் அழிந்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இமயம் என்றால் ஒரு பிரம்மாண்டமான மலை என்ற பொதுப்பிம்பம் நமக்கு இருக்கிறது. அது உண்மை அல்ல. இமயமலை என்பது ஒரு நீண்ட மலைத்தொடர். இந்தியாவின் பத்து மாநிலங்களை இணைக்கும் ஒரு சங்கிலித்தொடர். பிறை வடிவ அரண் போல அமைந்து இந்தியாவை பாதுகாக்கிறது இமயமலை.

உலக வரலாற்றில் இரக்கமற்ற தண்டனைகளை தந்த கொடூர மன்னர் என செங்கிஸ்கான் பற்றி அழுத்தமான பிம்பம் ஒன்று பதிந்து இருக் கிறது. அதேநேரம், அவரது ஆளுமைத்திறன் காரணமாக சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றுசேர்த்து  புத்தம் புதிய தேசத்தை உருவாக்கி ஒரு மகா பேரரசை அமைத்தவர் என்றும் செங்கிஸ்கான் புகழப்படுகிறார்.

செங்கிஸ்கான் தனது படையை பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம் வீரர்கள் கொண்ட தனித் தனிப்பிரிவுகளாக அமைத்துச் செயல்பட்டார். இப்படி, படையை டிவிசன்களாகப் பிரிப்பது அதுதான் முதன்முறை. இவரது மங்கோலிய வீரர்கள் ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் பயணம் செய்தனர். வழியில், உணவோ நீரோ கிடைக்காவிட்டால் குதிரையைக் கொன்று அதன் உதிரத்தைக் குடிப்பது இவர்களது வழக்கம்.

செங்கிஸ்கானின் நிஜப்பெயர் தெமுசின். கி.பி. 1162-ம் ஆண்டு பிறந்தவர். இவர் உருவாக்கிய மங்கோலியப் படை, எதிரிகளைக் கொன்று குவித்து வடசீனா முழுவதையும் கைப்பற்றியது. ஐம்பதாயிரம் வீரர்களுடன் இந்தியா நோக்கி புயலென வந்து கொண்டிருந்த செங்கிஸ்கானை வழிமறித்து தடுத்தது இமயமலையே. அவர், அரசியல் நெருக்கடி காரணமாக ஆப்கான் பக்கம் தன் கவனத்தைத் திருப்பி விடவே இந்தியா தப்பித்தது.

மங்கோலியப்படை சென்ற இடங்கள் எல்லாம் வன்கொலைகள், கற்பழிப்புகள் நடைபெற்றன. ஓய்வு இல்லாமல் படை நடத்திச்சென்று நகரங்களைத் தாக்கி தீ வைத்து வெறியாட்டம் ஆடியது செங்கிஸ்கானின் படை. தன்னால் கொல்லப்பட்ட ஒவ்வொருவரின் ஒரு முடியைப் பிடுங்கி தனது கொடியில் தொங்க விடுவது செங்கிஸ்கானின் வழக்கம். அப்படி, மயிர்களால் ஆன கொடிமரம் ஒன்று அவர் கூடவே இருந்தது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். 1227-ல் செங்கிஸ்கான் இறந்த போதும் அவர் கல்லறையில் இருந்து உயிர்பெற்று எழுந்து வந்து ஒரு உலகப் பேரரசை நிறுவுவார் என்று மங்கோலியர்கள் இன்றுவரை நம்புகின்றனர். ஒருவேளை, இந்தியாவுக்குள் செங்கிஸ்கான் படை நுழைந்து இருந்தால் இந்தியா சிதறுண்டு போயிருக்கும் என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். இந்த ஆபத்தில் இருந்து காத்தது இமயமலை.

இன்னும் முழுமையாக ஆராயப்படாத இமயமலை, உறைபனி மூடி மேகங்கள் உரசும் எழில் கொண்டது. ஹிம் என்றால் பனி. ஆலயா என்றால் கோயில். பனி தெய்வத்தின் உறைவிடம் எனப்படும் இமயத்தை, கடவுளின் வீடு என்றே இந்தியர் நம்புகின்றனர். பௌத்தர்களும் அதை புத்தரின் உறைவிடம் என்று வழிபடுகின்றனர். பௌத்த மற்றும் இந்து மதத் துறவிகள், இமயமலையை வழிபடுவதை ஒரு புனிதச் சடங்காகவே இன்று வரை கருதுகின்றனர். உலகிலேயே மிக உயரமானதும் நீளமானதுமான இமயம், 2500 கி.மீ. தூரம் வரை அறுபடாமல் நீண்டு செல்லும் ஒரு மலைத்தொடர்.மூன்று மலைத்தொடர்களாக  அமைந்துள்ளது இமயம். இதில் உள்இமயம் எனப்படும் ஜான்ஸ்கர் மலைத்தொடர், சிந்து ஆற்றின் வளைவுக்கு அருகில் உள்ள நங்க பர்வதத்தில் தொடங்கி தென்கிழக்கு மற்றும் கிழக்கு திசை வழியாகச் சென்று பிரம்மபுத்திரா ஆற்றின் முகப்பை அடைகிறது. இந்த மலைத்தொடரின் உயரம் 7,000 மீட்டர். சராசரி அகலம் 25 கிமீ.

நடு இமயம் எனப்படும் பங்கி தொடரின் உயரம், 5000 மீட்டருக்கும் அதிகமானது. இதன் அகலம் 80 முதல் 100 கிமீ. புற இமயம் எனப்படும் சிவாலி, 15 முதல் 50 கிமீ அகலம் கொண்டது. அதன் உயரம் 9,000 மீட்டர். இதன் தென்சரிவு செங்குத்தானது. வடசரிவில் டிராய் காடுகள் அடர்ந்துள்ளன. சிவாலிக் குன்றுகளுக்கும் தாழ்ந்த இமயத் தொடர்களுக்கும் இடையில் உள்ள வண்டல் மண் நிறைந்த அகன்ற தட்டையான பள்ளத்தாக்குகள் 'தூன்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கொரு உதாரணம் டேராடூன்.

இந்தியாவின் வளமைக்குக் காரணமான பல முக்கிய ஆறுகள் இமயமலையில்தான் உற்பத்தி ஆகின்றன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, சீனா, பூடான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் வழியாக இமயமலைத் தொடர் அமைந்துள்ளது. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி மற்றும் யாங்சி போன்ற ஆறுகள் இமயமலையில் ஓடும் முதன்மை ஆறுகள். இந்த ஆறுகள் பெரும்பாலும் பெண் பெயரில்தான் அழைக்கப்படுகின்றன. இதில் விதிவிலக்கு பிரம்மபுத்திரா. அதுமட்டுமே ஆண் பெயரைக் கொண்டது.

பிரம்மபுத்திரா நதி, திபெத் பகுதியைச் சேர்ந்த இமயமலையில் தோன்றி, இந்தியாவுக்குள் அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் வழியாக ஓடி வங்கதேசத்துக்குள் நுழைந்து கடலில் கலக்கிறது. 2,800 கி.மீ. ஓடும் இந்த ஆறு இந்தியாவின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்று. 1,700 கி.மீ. தூரம் வரை திபெத் மலைப்பகுதிகளிலேயே பிரம்மபுத்திரா பாய்கிறது. பல கிளை ஆறுகளைக் கொண்ட பிரம்மபுத்திரா, 10 கி.மீ. அகலம் கொண்டது. பிரம்மபுத்திரா நதியை நம்பியே அருணாசல பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் விவசாயம் இருக்கிறது.
சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் இருப்பதால் பிரம்மபுத்திரா பாயும் பகுதியில் சீனா ஓர் அணையைக் கட்டி நீர்மின் திட்டத்துக்காக பயன்படுத்தியது. இப்போது மேலும் ஓர் புதிய அணை ஒன்றைக் கட்டி இந்தியாவுக்கு நீர் வரத்தை குறைக்க சீனா முயற்சி செய்கிறது.

இமயத்தில் இருந்து இந்துகுஷ் நீண்டு செல்கிறது. கிழக்கே லுஷாய் மலைகள் உள்ளன. இந்துகுஷ், வட ஆப்கானிஷ்தானில் உள்ள மலைத்தொடர். காபூல் மாநிலம் இந்த மலைத்தொடரை தொட்டுக் கொண்டே இருக்கிறது. இது, கடக்க முடியாத மலைத்தொடர். கணவாய்களே அதன் வாசல். ஆகவே இவை, இந்தியாவின் வட எல்லை அரணாக விளங்குகின்றன. தமிழின் சங்க இலக்கியத்தில் இமயம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சேரலாதன் கடம்ப மரத்தை வெட்டிக் கடம்பரை ஓட்டிய பிறகு, இமயத்தில் வில்லைப் பொறித்தான் என்று அகநானூற்றுப் பாடலில் குறிப்பு இருக்கிறது.

கொண்டல் மழை, இமயத்தைத் தீண்டிப் பொழியும் என்கிறது ஒரு புறநானூற்றுப் பாடல். இப்படி, இமயம் குறித்து நிறைய உதாரணங்களை நாம் இலக்கியச் சான்றுகளாகக் காண முடிகிறது. மாமல்லபுரத்தைச் சேர்ந்த சிற்பங்களை ஆராய்ந்துள்ள அறிஞர்கள், அவை இமயத்தைச் சேர்ந்த சிற்பிகளின் துணையோடு உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்கின்றனர். காரணம், அர்ச்சுனன் தபஸ் சிற்பத்தில் காணப்படும் கங்கையும், அங்குள்ள ஆடு, குரங்கு, மான் போன்றவையும் இமயத்தில் மட்டுமே காணப்படுபவை என்கின்றனர். குறிப்பாக, மாமல்லபுரம் சிற்பங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ள பேராசிரியர் பாலுசாமி, இமயத்தின் தாவரங்கள், விலங்குகளே இந்தச் சிற்பங்களில் காணப்படுபவை என்று உறுதியாகக் கூறுகிறார்.

உலகத்திலேயே உயர்ந்த மலையாக அறியப்படும் இமயமலை ஒரு காலத்தில் ஆழ்கடலுக்குள் இருந்தது என்கின்றனர்.  சுமார் நாற்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்தியக் கண்டம் தனியாக ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் இருந்து பயணித்து வடக்கு நோக்கி நகர்ந்து இருக்கிறது. அது, வட கண்டத்துடன் மோதி இடைப்பட்ட கடலடி பகுதி மேல் எழுந்து இமயமலையாக உருவாகி உள்ளது. இந்தப் பாறைகளிலிருந்து, பல கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைத்துள்ளன. அதை ஆராய்ந்த போது, இமயமலை கடலின் அடியில் இருந்தது என்பதை கண்டுபிடித்து இருக்கின்றனர்.

உலகின் பத்து மிக உயர்ந்த சிகரங்களில்ஒன்பது சிகரங்கள் இமயமலையில் இருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை கே 2, நங்கபர்வத், அன்ன பூர்னா, கஞ்சன்ஜங்கா மற்றும் எவரெஸ்ட். இமய மலைச் சிகரங்களை மூடியுள்ள பனியானது ஆண்டு முழுவதும் உருகுவது கிடையாது. மலையின் மேல் சுமார் இருபது அடி தடிமனுக்கு பனி மூடிய நிலையில் உள்ளது. இமயமலைப் பகுதி, இந்திய நாகரிகங்களின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கேதான் இந்தியாவின் புராதன சிந்துச்சமவெளி நகர நாகரிகம் தொடங்கி இருக்கிறது.

சர் சிட்னி புராடு (Sir Sidney Burraud) என்ற அறிஞர் இமயமலையைப் பல பிரிவுகளாகப் பிரித்து உள்ளார். அதன்படி, சிந்து ஆற்றுப் பகுதியில் உள்ளது பஞ்சாப் இமயமலை. இது, 134 கி.மீ. நீளமும் 40 கி.மீ. அகலமும் கொண்டது. வட மேற்கில் இருந்து தென்கிழக்காக இதில் பள்ளத் தாக்கு அமைந்துள்ளது. இதில்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. சட்லஜ் ஆற்றுக்கும் காளி ஆற்றுக்கும் இடையில் உள்ள பகுதி, குமான் இமயமலை.  இதில் நந்தாதேவி, பத்ரிநாத், கேதார்நாத், மானச கங்கோத்ரி போன்ற மலை உச்சிகள் உள்ளன.


No comments:

Post a Comment