சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்புச் சிறுவன், பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி, தற்கொலை செய்துகொண்டான். காரணம், காதல் தோல்வி. அதே போல், திருமண உறவில் ஏற்பட்ட கசப்பால், மற்றொருவர் தற்கொலை செய்துகொண்டார்.
சொல்லப்போனால், இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்று சென்னையைச் சொல்லலாம்.
2011 தேசிய க்ரைம் ரெகார்ட் பீரோவின் தவல்களின்படி, சென்னையில் அதிகபட்சமாக 2348 தற்கொலை வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.
அடுத்ததாக பெங்களூரு. 1717 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. விவாகரத்து, தனிமை, காதல் தோல்வி போன்று ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. விவாகரத்தால் ஏற்படும் தற்கொலைகள் மட்டும் சென்ற ஆண்டில் 54 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறதாம். தற்கொலை செய்துகொண்ட 448 விவாகரத்தானவர்களில், 237 பேர் ஆண்கள் என்பது அதிர்ச்சித் தகவல்!
இதற்கு என்ன காரணம்? தடுக்க முடியுமா? அலசுகிறார் தற்கொலைத் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனமான ஸ்நேகாவை உருவாக்கிய டாக்டர் லட்சுமி விஜயகுமார்.
மற்ற நாடுகளில் தற்கொலை செய்துகொள்பவர்கள் முதியவர்கள். இந்தியாவிலோ 15 முதல் 29 வயதுக்குள்தான் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இது இந்தியாவில் நடக்கும் தற்கொலைகளில் பாதிக்குப் பாதி. இதனால் வீட்டுக்கு மட்டுமில்லாமல், நாட்டுக்கும் பெரிய நஷ்டம்.
உளவியல் ஆட்டோப்சி மூலம் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டறிய முடியும். மேலைநாடுகளில் 80 முதல் 90 சதவிகிதம் வரை தற்கொலைக்குக் காரணம் மன அழுத்தம், மனச்சிதைவு, மதுப்பழக்கம் போன்றவை. நம் நாட்டில் மனோ ரீதியான காரணங்களால் நிகழும் தற்கொலைகள் 50 முதல் 60 சதவிகிதம் தான். மீதிப் பேர் எந்தவிதமான மன நோக்கும் ஆளாகாமல், வேறு காரணங்களுக்காக ஒரு கண நேரத்தில், தற்கொலைக்கு முடிவு செய்து, அதைச் செயல்படுத்திவிடுகிறார்கள்.
இதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம். முதலாவது நம் நாட்டுக் கலாசாரம். நாம் எதிலுமே ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு விடுவோம்; அடுத்தது, நம் நாட்டில் தற்கொலை செய்து கொள்பவர்கள் மிக அதிகமாய் நாடுகிற வழி. அதாவது, இங்கே பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகம். குழப்பமான மனநிலையில் இருக்கும் ஒருவர், கணப்பொழுதில் தற்கொலை முடிவெடுத்து, பூச்சிமருந்து சாப்பிட்டு விட்டால், அதன் வீர்யம் காரணமாக, அவரைப் பிழைக்க வைப்பது சாத்தியமில்லாமல் போய்விடுகிறது.
மூன்றாவது காரணம், இடப்பெயர்ச்சி, பிழைப்புத் தேடி சென்னை நகரம் நோக்கி வரும் ஏராளமானோர், இங்கே போதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறாமல், மன வேதனை அடைகின்றனர். வறுமை பீடிக்க, வாழ்க்கை சிதைய, தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
நகர்ப்புறங்களைவிட, கிராமப்புறங்களில்தான் அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்கின்றன. ஒரு காரணம், தற்போது விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக இல்லை என்பது மட்டுமில்லை; பெரும் நஷ்டம் ஏற்படுத்துவதாக உள்ளன. இன்னொன்று, கிராமப்புறங்களில் பூச்சிக் கொல்லிகள் சகஜமாகக் கிடைப்பது.
மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தற்கொலைகள் அதிகமாக உள்ளன. இதற்குக் காரணம் இந்த மாநிலங்களில் விவசாய முறைகள் மாறியுள்ளன. இதற்கு அதிகப்படியான உரங்களும், பூச்சிக் கொல்லிகளும் தேவை. இதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. இது விவசாயியைக் கடனாளியாக்குகிறது. கடன் என்ற சுழலில் சிக்கிக்கொண்ட விவசாயியால் அதிலிருந்து மீளவே வழி இல்லாமல், அவனை தற்கொலைவரை தள்ளுகிறது.
பெரும்பாலும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு நேரத்தில்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு மன அழுத்தம் காரணமாக இரவில் தூக்கம் வராது. இரண்டு, மூன்று மணிக்கு எல்லாம் விழித்துக் கொண்டு விடுவார்கள். அந்த நேரத்தில் அவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இளைய தலைமுறையினர் மத்தியில் தற்கொலை விஷயத்தில் மீடியா முக்கிய பங்குவகிக்கிறது. உதாரணமாக, ஒரு பிரபலமான சினிமா நடிகை தற்கொலை செய்துகொண்டு விட்டால், மீடியாவில் அதை ரொம்பவும் சென்சேஷனலாகத் திரும்பத் திரும்பக் காட்டினால், அடுத்த சில நாட்களில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாகிறது என்று தெரிய வருகிறது. இதனை உலகளாவிய மனோதத்துவ இயலில் ‘காப்பி கேட் தற்கொலை’ என்பார்கள். அதே நேரம், ஒரு பிரபலத்தின் தற்கொலை நிகழும்போது, அதை மிகுந்த பொறுப்புணர்வோடும் கையாள முடியும்.
இந்தியாவில் சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் தற்கொலைகள் அதிகமாக இருக்கின்றன. மேலே போகப்போக வடஇந்திய மாநிலங்களில் அது குறைந்து கொண்டே போகிறது. இதற்கு தென்னிந்திய நகரங்களில் கல்வி அறிவு அதிகமாக இருப்பது ஒரு காரணம். படித்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது, ஏமாற்றம் ஏற்படுகிறது; அது தற்கொலைக்குத் தூண்டுகிறது.
அடுத்த காரணம், வடக்கே மக்கள் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கலாசாரமாக உள்ளது. ஆனால் தெற்கே, நாம் ரொம்ப உணர்ச்சிகளை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டோம். இதனால்தான் மன அழுத்தம் அதிகமாகி, தற்கொலைகள் அதிகரிக்கின்றன."
உலகிலேயே மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடான சீனா, தற்கொலையிலும் முதலிடத்தில் உள்ளது. சீனாவிலும், இந்தியாவிலுமாகச் சேர்ந்து உலகில் 40 சதவிகித தற்கொலைகள் நடக்கின்றன. நம்மைவிட மிகவும் முன்னேறிய நாடான அமெரிக்காவில் தற்கொலைகள் விகிதம், இந்தியாவைப் போலவே உள்ளது. காரணம் வசதியான வாழ்க்கை மட்டுமே சந்தோஷத்தையும், மனத்துக்கு நிம்மதியையும் கொடுத்து விடாது. அமெரிக்காவில், பணக்கார வெள்ளைக்காரர்கள்தான், வசதி இல்லாத கறுப்பு இனத்தவர்களைவிட அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். இன்னொரு மிக முன்னேறிய நாடான ஜப்பானில், இந்தியாவைவிட அதிகமாகத் தற்கொலை விகிதம் உள்ளது. இங்கிலாந்தில், இந்தியாவைப் போலவே ஒரு லட்சத்துக்கு 11 பேர் என்று இருந்தது. ஆனால், அவர்கள், தற்கொலைகளைத் தடுக்க வேண்டும் என்று கடந்த ஐந்து வருடங்களாக பெரும் முயற்சி எடுத்து, இப்போது 9.5 அளவுக்குக் குறைத்திருக்கிறார்கள்.
உலகம் முழுக்கப் பார்த்தால், அதிகம் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்பவர்கள் பெண்கள்தான். ஆனால் தற்கொலை செய்து கொள்பவர்கள் யார் என்று பார்த்தால் ஆண்கள்தான். இந்தியாவிலோ, இதிலும் ஆண்களும், பெண்களும் சமமாகவே உள்ளனர்.
இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் நடக்கும் தற்கொலையில் இன்னொரு விஷயமும் தெரியவருகிறது. முப்பது வயது வரை நடக்கும் தற்கொலைகளில் ஆணும், பெண்ணும் சமமாக இருப்பது. அதற்குப் பிறகு எடுத்துக் கொண்டால், ஆண்கள் விகிதம் பழைய அளவிலேயே தொடர்கிறது; பெண்கள் விகிதம் படிப்படியாகக் குறைந்து விடுகிறது. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால், முப்பது வயது வரைதான் பெண்ணுக்கு வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகள் வருகின்றன. அவற்றைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். தற்கொலைதான் தீர்வு என முடிவு செய்து, தற்கொலை செய்து கொள்கிறார்கள். முப்பது வயதுக்கு மேல் என்றால், அதற்குள் அவர்களுக்கு ஒன்றிரண்டு குழந்தைகள் இருக்கும், அவர்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கும். அல்லது வாழ்க்கையின் கஷ்டங்கள் ஓரளவுக்குப் பழகிப் போயிருக்கும். அதனால் தற்கொலை முயற்சி குறைகிறது.
எஸ். சந்திரமெளலி
வேதனைக்குரிய தகவல்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...