ஆசியக் கோப்பையில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கமும், காமன் வெல்த் போட்டியில் 400 மீ. தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்ற மேற்கு வங்க கிராமத்துப் பெண், பிங்கி பிரமாணிக். நாட்டுக்காக சாதித்தபோது பெரிதாகக் கவனம் பெறாத பிங்கி, பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு நாடு முழுக்க ஒரே நாளில் பரபரப்பானார். பிங்கி பிரமாணிக், பெண்ணல்ல, அவர் ஒரு ஆண். பிங்கி என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த சில மாதங்களாக என்னோடு வாழ்ந்துவிட்டு, இப்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்" என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து பிங்கியை போலீஸார் கைது செய்தார்கள். பிங்கி, ஒரு ஆண் என்று புகாரில் சொல்லப்பட்டது. இது தொடர்பாக நடந்த சம்பவங்கள்தான் பிங்கி மீதான குற்றச்சாட்டை விடவும் அசிங்கமாக இருக்கின்றன.
நீதிமன்றக் காவலில் இருந்த பிங்கி, காவலர்களால் துன்புறுத்தப்பட்டதால் அவருக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்புகள் களமிறங்கியுள்ளன. போலீசார் மிக மோசமாக நடத்துவதாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. ஒரு தனியார் மருத்துவமனையில் பிங்கிக்கு நடந்த பாலினப் பரிசோதனையின் காட்சி அடங்கிய வீடியோ பதிவு இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டு, பிங்கியின் மானம் பட்டம்போலப் பறக்கவிடப்பட்டது. நீதிமன்றம் பிங்கிக்கு ஜாமீன் அளித்துள்ளது. பிங்கிக்கு ஆதரவாக எல்லா விளையாட்டு வீரர்களும் துணை நிற்கிறார்கள். ஆனால், விசாரணையின் போதே எல்லாவிதமான துன்புறுத்தல்களையும் அவமானங்களையும் சந்தித்து விட்டார் பிங்கி. பிங்கியின் தவறுகள் நிரூபணமானால் அவருக்கு நிச்சயம் தண்டனை உண்டு. அதுவரை அவரை ஒரு விளையாட்டு வீரராகக்கூட மதிக்கவேண்டாம். ஒரு சகமனிதராக மதித்திருக்கலாமே.பெண்கள் டென்னிஸில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார் செரீனா வில்லியம்ஸ். இந்த வருடம், 5-வது முறையாக விம்பிள்டனை ஜெயித்திருக்கிறார். கடந்த வருட தொடக்கத்தில் செரீனாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவரு டைய நுரையீரலில் ரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து குணமடைந்து மீண்டும் டென்னிஸ் களத்துக்குள் இறங்கினார் செரீனா. டென்னிஸ் விளையாடுவதே சந்தேகம் என்றுதான் சொல்லப்பட்ட நிலையில், விம்பிள்டனையும் 14வது கிராண்ட்ஸ்லாமையும் கைப்பற்றியிருக்கிறார் செரீனா. வாழ்க்கையில் எப்போதும் மனம் உடையக்கூடாது, எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணக்கூடாது" என்று பேட்டியளித்திருக்கிறார் செரீனா.
‘மீண்டும் யுவ்ராஜ் சிங்’ என்கிற செய்தியைப் படிப்பதற்கே எவ்வளவு ஆர்வமாக இருக்கிறது! நுரையீரலில் ஏற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த யுவ்ராஜ் சிங் கடந்த ஒரு வருடமாக அதற்கு சிகிச்சை எடுத்து, தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்து தொடரின் போது அணியிலிருந்து வெளியேறிய யுவ்ராஜ் சிங், இப்போது மீண்டும் இந்திய அணியில் ஆடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். செப்டெம்பரில் இலங்கையில் நடைபெறுகிற டி20 உலகக் கோப்பையில் கட்டாயம் ஆடுவேன். அதற்கு முன்பு, நியூசிலாந்து அணி இந்தியாவில் ஆடவிருக்கிற இரு டி20 போட்டிகளில் கலந்துகொள்வேன்," என்று சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.
கிரேக் சேப்பலால் இந்திய கிரிக்கெட்டைப் பற்றிப் பேசாமல் இருக்கவே முடியாது போலிருக்கிறது. ராகுல் திராவிட் பற்றிய புதிய புத்தகம் ஒன்றில் இந்திய வீரர்களைக் (வேறு யார், சச்சின், கங்குலி போன்ற சீனியர் வீரர்களைத்தான்) கடுமையாக விமர்சித்திருக்கிறார் சேப்பல். ‘திராவிட் கேப்டனாக இருந்த போது (2005-2007) இந்திய அணி பெற்ற வெற்றிகளை எல்லா வீரர்களும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவில்லை. அந்த வெற்றிகளை சில வீரர்கள் விரும்பவில்லை. திராவிடுக்கு எதிரான வேலையை சில வீரர்கள் செய்தார்கள். திராவிடுக்கு அணியிலுள்ள வீரர்களின் முழு ஆதரவு கிடைத்திருந்தால் தற்போதைய இந்திய கிரிக்கெட்டின் நிலையே வேறு மாதிரியாக இருக்கும்’ என்று கொளுத்திப் போட்டிருக்கிறார். இங்கே சேப்பலுக்குச் சில கேள்விகள். சேப்பல் சொல்வது போல திராவிடுக்கு எதிராக இந்திய வீரர்கள் வேலை செய்திருந்தால், தோனிக்கு மட்டும் எப்படி ஒத்துழைப்பு கொடுத்திருப்பார்கள்? திராவிட் அணியிலிருந்த அதே வீரர்கள்தான் தோனி அணியிலும் இருந்தார்கள். பிறகு எப்படி, இந்திய அணியால் டெஸ்டில் நெ.1 ரேங்கிங்கைப் பெற முடிந்தது? எப்படி உலக சாம்பியனாக முடிந்தது? எந்த ஓர் அணியிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதை ஊதிப் பெருசாக்குவதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார் சேப்பல்?
No comments:
Post a Comment