Search This Blog

Monday, July 16, 2012

ஆடித் தள்ளுபடி கண்கட்டி வித்தையா?

 
ரம்பமாகிவிட்டது ஆடித் தள்ளுபடி சீசன். வருஷா வருஷம் வருகிற திருவிழாக்களைபோல ஆடித் தள்ளுபடியும் ஒரு கொண்டாட்டமாகவே மாறிவிட்டது. பண்டிகை காலத்தில் விலையைப் பார்க்காமல் வாங்கும் அதே துணிமணிகள் குறைந்த விலையில் கிடைக்கும்போது வாங்கலாமே என்கிற ஆசையில் பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கித் தள்ளிவிடுகிறார்கள் மக்கள்.
 
துணிமணிகள் மட்டுமல்ல, மொபைல்கள், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அவ்வளவு ஏன், செருப்புகள்கூட இப்போது ஆடித் தள்ளுபடியில் விற்கப்படுகிறது.

இந்த ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா? தள்ளுபடி என்று அறிவித்துவிட்டு, விலையை ஏற்றி, இறக்கி விற்கிறார்களா?

துணிக் கடைகள்!

முன்பெல்லாம் விற்க முடியாமல் இருக்கும் துணிமணிகளை தள்ளுபடி தந்து விற்றார்கள். ஆனால், இன்று ஆடி தள்ளுபடிக்காகவே பல துணிக் கடைகள் துணிமணிகளை வாங்கி, விற்கின்றன. புதுத் துணிக்கு இவ்வளவு தள்ளுபடியா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், இங்குதான் இருக்கிறது வியாபாரத் தந்திரம். புதிய துணிமணிகளோடு, விற்க முடியாமல் தேங்கிக் கிடக்கும் பழைய துணிமணிகளையும் கலந்துவிடுவது, சிறிய அளவில் டேமேஜ்-ஆன துணிமணிகளை புதிய துணிகளோடு கலந்துவிடுவது போன்ற வேலைகள் சூப்பராக நடக்கும்.

தள்ளுபடி உண்மைதானா?
விலையில் தள்ளுபடி என்பது வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு மட்டும்தான். 10 முதல் 20 சதவிகித தள்ளுபடியைத்தான் பெரும்பாலான கடைகள் தள்ளுபடி தருகின்றன. இது ஓரளவு நியாயமான தள்ளுபடி. ஆனால், 50 சதவிகித தள்ளுபடி என்பது விளம்பரத்துக்காகச் சொல்லப்படும் வாசகம் மட்டுமே. அதை நம்பி உள்ளே போனால், ஒப்புக்கு ஒன்றிரண்டு பொருட்களை மட்டுமே 50 சதவிகித தள்ளுபடி விலையில் வைத்திருப்பார்கள். மற்றவற்றுக்கு 10-20 சதவிகித தள்ளுபடிதான் இருக்கும்.

துணிகளின் மீது விலைப்பட்டியல் ஒட்டுவதில்தான் பலே தந்திரங்களை கடைப்பிடிக்கிறார்கள் சில கடைக்காரர்கள். பொதுவாக, இரண்டு வகை விலைப்பட்டை உண்டு. ஒன்று, துணியின் உண்மையான விலை, மற்றொன்று தள்ளுபடிக்காகவே ஒட்டப்பட்ட விலை. 350 ரூபாய் கொண்ட ஒரு புடவையின் விலை ஆடித் தள்ளுபடியில் 600 ரூபாயாக உயர்ந்து மீண்டும் 350 ரூபாயாக குறையும். இந்த முறையில் ஆடியில் வாங்கினாலும் சரி, ஆவணியில் வாங்கினாலும் துணியின் விலை மாறாது.

கடைக்காரர்கள் பயன்படுத்தும் அடுத்த டெக்னிக், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது. யாருமே வாங்க விரும்பாத மோசமான துணியை ஒரு நல்ல துணியோடு சேர்த்து விற்பது இந்த டெக்னிக். ஒரு நல்ல துணி 300 ரூபாய், ஒரு மோசமான துணி 150 ரூபாய் என இந்த இரண்டையும் சேர்த்து, 450 ரூபாய் விற்பார்கள். காசைக் கொடுத்து நல்ல துணியை மட்டும் வாங்குவது புத்திசாலித்தனம்.   

ஏமாறாமல் துணி வாங்க..!
 
ஆடித் தள்ளுபடியில் துணி வாங்கும்போது நன்றாக பிரித்துப் பார்த்து வாங்க வேண்டும். அப்போதுதான் இழை இல்லாமல் இருப்பது, சாயம் ஒட்டி இருப்பது போன்றவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

மொத்தமாக கூடைகளில் கொட்டிக்கிடக்கும் துணிகளை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அவை மிக பழைய ஸ்டாக்-ஆக இருக்கும். அதிக டேமேஜும் இருக்கும்.

நீங்கள் வாங்கிய பொருட்களில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதனை ஓரிரு நாட்களில் மாற்றிக்கொள்வது நல்லது. பத்து, இருபது நாட்கள் கழித்து சென்றால் கடைக்காரர்கள் நம்மை இழுத்தடிப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு. சில கடைகளில் தள்ளுபடி விற்பனையில் வாங்கிய பொருளை மாற்றித்தரமாட்டார்கள்.

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்!

முன்பெல்லாம் ஆடித் தள்ளுபடியில் துணிமணிகளே விற்பனையாகும். இப்போது எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்கூட ஆடித் தள்ளுபடியில் அமோகமாக விற்பனை ஆகின்றன.

ரைஸ் குக்கர், பிரட் டோஸ்டர், அயர்ன் பாக்ஸ், டேபிள் ஃபேன், இன்டெக்ஷன் ஸ்டவ் போன்ற பொருட்களும், டி.வி.டி. பிளேயர், ஹோம் தியேட்டர் சாதனங்களுக்கும் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இவை அனைத்துமே சைனா பிராண்டுகள் எனப்படும் ரகத்தினை சேர்ந்தவை. இவற்றை உடனடியாக விற்றுவிடுவது நல்லது என்பதால் ஆடித் தள்ளுபடியில் தள்ளிவிட்டுவிடுகிறார்கள். 

தவிர, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களில் புதுப்புது மாடல்கள் அடிக்கடி வருவதால்,  ஏற்கெனவே தேங்கிக் கிடக்கும் பொருட்களை தள்ளிவிடவும் ஒரு அருமையான வாய்ப்பாக கருதுகிறார்கள். ஆடித் தள்ளுபடியில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கும்போது குறைந்தபட்சம் ஒன்றுக்கு இரண்டு முறையாவது பொருட்களை செக் செய்து வாங்குவது நல்லது.

எம்.ஆர்.பி. ரேட்!

ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், எல்.சி.டி. டிவி போன்ற பொருட்களுக்கு எத்தனை சதவிகிதம் தந்தாலும் தங்களது லாபத்தைக் கடைக்காரர்கள் தக்க வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு எம்.ஆர்.பி. விலை குறிப்பிடப்பட்டாலும் உள்ளூர் விற்பனை விலை சற்று குறைவாகவே இருக்கும். இது பொதுவாக 10,000 ரூபாய்க்கு 600 ரூபாய் வரை குறைந்து இருக்கும். எனவே, நமக்கு தரப்படும் தள்ளுபடி எம்.ஆர்.பி. விலையிலிருந்து குறைக்கப்படுகிறதா, விற்பனை விலையிலிருந்து குறைக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தே லாபமா, இல்லையா என்பதைச் சொல்ல முடியும்.

தயாரிப்பு தேதி!  

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை தள்ளுபடியில் வாங்குவதற்கு முன்னர் தயாரிப்பு தேதி மற்றும் மாடலை கவனிக்க வேண்டியது முக்கியமானது. பொதுவாக, தயாரிக்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டரை வருடங்களுக்கு மட்டுமே அந்தந்த மாடல்களுக்கான உதிரிப்பாகங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். மேலும், நிறுவனங்கள் தரும் கியாரண்டி இந்த இரண்டரை வருடங்களுக்கு உத்தரவாதமாக நம்பலாம். இடைப்பட்ட காலத்தில் புதிய மாடல்களும் வந்துவிடும் என்பதால் பழைய மாடல்களுக்கு அதிக தள்ளுபடி தந்து விற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, பழைய மாடலாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் மட்டுமே இதை வாங்கலாம். எனினும், உதிரிப்பாகங்கள் மற்றும் சர்வீஸ் தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. 

வாரண்டி!
 
சின்ன சின்ன குறைபாடுடைய பொருட்கள் மற்றும் வாரண்டி இல்லாதப் பொருட்களையும் ஆடித் தள்ளுபடியில் நம் தலையில் கட்ட முயற்சி நடக்கும். ஃபிரிட்ஜ் எனில், பக்கவாட்டுகளில் கீறல், ஏற்றி இறக்கும்போது ஏற்படும் பெண்ட், கால்பகுதி உடைந்து இருப்பது, உள்பகுதியில் ட்ரேக்கள் உடைந்திருப்பது போன்ற குறைபாடுகளுடன் கிடைக்கும். இந்த குறைபாடுகளைப் பொறுத்து தள்ளுபடி தரப்படும். இவற்றை வாங்கும்போது கியாரண்டி,  வாரண்டி கிடைக்காது. அதிக தள்ளுபடி கிடைத்தாலும், அதிக ரிஸ்க் என்பதை மறக்க வேண்டாம்.

செல்போன்!

பழைய மாடல் செல்போன்களுக்கு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்கிற வகையில் ஆடித் தள்ளுபடியில் அமர்க்கள விற்பனை நடக்கிறது. இந்த இரண்டு போன்களில் ஒன்று மட்டுமே நமக்கு நீண்ட காலம் பயன்படும். ஓசியாக கிடைக்கும் மற்றொன்று ஏறக்குறைய உதவாததாகவே இருக்கும். பொதுவாக, அதிக விலைகொண்ட புதிய மாடல்களுக்கு 10-15% தள்ளுபடி எம்.ஆர்.பி. விலையிலிருந்துதான் தரப்படுகிறது என்பதால் ஆடித் தள்ளுபடியில் செல்போன் வாங்குவது நமக்கு லாபமுமில்லை, நஷ்டமுமில்லை. ஆனால், தள்ளுபடியில் கிடைக்கும் செல்போன் விலையை  ஆன்லைனிலோ அல்லது பிற செல்போன் விற்பனைக் கடைகளிலோ விசாரித்து தெரிந்துகொண்டு வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கலாம்.

காலணி!  

ஷூ மற்றும் செருப்பு கடைகளும் தற்போது 50% வரை தள்ளுபடி தந்து அசத்துகிறார்கள்.   பிராண்டட் காலணிகளில் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் அல்லது நெடுநாளாக விற்பனையாகாத மாடல்களுக்கு அதிக தள்ளுபடி தரப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மாடல் காலணி அதிக அளவில் தேக்கமாக கிடந்து, அதை கழித்துகட்ட வேண்டும் என்றாலும் அதிக தள்ளுபடி தருகிறார்கள். ஆனால், புதிதாக வந்திருக்கும் காலணிகளுக்கு எந்த தள்ளுபடியும் தரப்படுவதில்லை என்பதைக் கட்டாயம் கவனிக்க வேண்டும்.

நமது கண்ணே நம்மை ஏமாற்றிவிடும் என்கிற அளவுக்கு தள்ளுபடி கொண்டாட்டம் நடக்கிறது. தள்ளுபடியில் பொருட்கள் வாங்குவது என்பது நமக்கு லாபமானது என்று கொண்டாடவும் வேண்டாம்; ஏமாற்றம் என்று தள்ளவும் வேண்டாம். இடம், பொருள் பார்த்து, தரம் பிரித்து வாங்கினால் தள்ளுபடியிலும் நல்ல வரும்படியைப் பார்க்கலாம்.

விகடன் 2 comments:

 1. தெளிவைத் தரும் அருமையான
  பயனுள்ள பதிவு
  விரிவான பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. நீங்கள் சொல்வது நூறுக்கு நூறு உண்மை...

  பகிர்வுக்கு நன்றி...
  தொடருங்கள்...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete