Search This Blog

Thursday, July 19, 2012

ஏவுகணையின் தந்தை!


'இந்தியாவின் அக்னி - 5 சோதனை வெற்றி! 5,000 கி.மீ. பறந்து சென்று வெற்றிகரமாக இலக்கைத் தாக்கியது. சீனாவின் எந்தப் பகுதியையும் நம்மால் தாக்க முடியும்’ - நாளிதழ்களில் அவ்வப்போது இப்படியான செய்திகளைப் படித்திருப்பீர்கள். இதேபோல பாகிஸ்தான் ஏவுகணை சோதித்தால் சென்னை குறி வைக்கப்படும். வட கொரியா சோதனைக்கு தென்கொரியா அலறும். இரான் சோதித்தால் இஸ்ரேல் எகிறும். உலக நாடுகளைக் குளிர் ஜுரத்தில் கிடுகிடுக்கவைக்கும் ஏவுகணைகளுக்குக் காரணமாக இருந்தவர் ஒரு ஜெர்மானியர். அவரது பெயர் வெர்னர் வான் பிரவுன். நவீன ஏவுகணையின் தந்தை!

 சீனர்கள் முதன்முதலில் ஏவுகணை தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தபோது, நாம் வில், வாளையே தாண்டவில்லை. ஒரு நீண்ட மூங்கில் கம்பு, அதன் முனையில் கூம்பு வடிவக் குழாயில் கருமருந்து... கிட்டத்தட்ட தீபாவளி ராக்கெட்டின் பெரிய வடிவம்தான், அப்போது சீனர்கள் மீது அச்சத்தை உண்டாக்கியது. ஐரோப்பிய நாடுகளுக்கு அதுவரை தெரியாத டெக்னாலஜி அது.

அதேசமயம், 'அகண்ட ஜெர்மன்’ என்ற கனவை நிறைவேற்ற நாஜி கொள்கையை உலகம் முழுக்கப் பரப்ப வேண்டும் என்ற தீராத தாகத்தில் இருந்தார் ஹிட்லர். ஒரே உலகம்... ஒரே தலைவன்! அதைச் சாத்தியப்படுத்தும் வழிகளை ஆராய்ந்தபோது ஏவுகணைகள் மீது ஹிட்லரின் கவனம் விழுந்தது. 'ஜெர்மன் ஆர்மி ராக்கெட் சென்டர்’ என்கிற அமைப்பை ஆரம்பித்த ஹிட்லர், அதற்குத் தலைவராக வெர்னரை நியமித்தார். 

அதுவரை ராக்கெட்களில் இருந்த திட எரிபொருளுக்குப் பதிலாக திரவ எரிபொருளைப் பயன்படுத்தினார் வெர்னர். எரிபொருள் எடை குறைந்ததால், அதுவரை 70 கிலோ மீட்டர் தூரம் தாண்டாத ஏவுகணைகள் அநாயாசமாக 300 கிலோ மீட்டரைத் தாண்டி பட்டாசு கிளப்பின.  ராக்கெட்டின் வடிவத்தை இப்போதைய பாலஸ்டிக் வடிவத்துக்கு மாற்றியதும் வெர்னரே!  (இப்போது வரை இந்த பாலஸ்டிக் ஏவுகணைகள்தான் செம ஹிட். இந்தியாவின் அக்னி 5-ம் இதே ரகம்தான்). V-4 என்று பெயரிடப்பட்ட ஜெர்மனியின் முதல் ஏவுகணை, பரிசோதனை சமயங்களிலேயே பல முறை வெடித்துச் சிதறியது. ஸ்பாட்டில் வெடித்தது, பாதி தூரத்தில் வெடித்தது என மொத்தம் 12 ஆயிரம் பேரைப் பலி வாங்கியது. அதற்கெல்லாம் ஹிட்லரா அசருவார்? வண்டி வண்டியாக ஆட்களை இறக்கினார். 10 ஆண்டுகள் ஆராய்ச்சியின் பலனாக 1,000 கிலோ வெடிபொருளைத் தூக்கிக்கொண்டு, 3,000 கிலோ மீட்டர் வேகத்தில் 300 கிலோ மீட்டர் தூர இலக்கை அடித்து நொறுக்கி அதகளப்படுத்தியது V-2.

'ரைட்டு... நாமதாண்டா ராஜா’ என்று ஹிட்லர் இறுமாந்திருந்த நேரம் ரஷ்யாவும் அமெரிக்காவும் கை கோத்துக் களத்தில் இறங்க... இனிதே ஆரம்பித்தது இரண்டாம் உலகப் போர். இங்கிலாந்து, பெல்ஜியம் என சுத்துப்பட்டு நாடுகளை V-2 கொண்டு சாத்தியது ஜெர்மனி. குத்துமதிப்பாக குண்டு போடும் விமானங்கள், ஒளிந்து நின்று சுடும் பீரங்கிகளைவிடக் குறைந்த நேரத்தில் அதிக சேதம் விளைவித்தது ஜெர்மனின் ஏவுகணைகள். ஏழாயிரத்துச் சொச்சம் ராணுவ வீரர்கள் பலியானர்கள். ரஷ்யாவும் அமெரிக்காவும் அசந்துபோயின.

அப்போது அமெரிக்கா விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தில் இருந்தார்கள். ரஷ்யாவும் செயற்கைக் கோள் தயாரிப்புக்கான மும்முரத்தில் இருந்தார்கள். இவ்விரு நாடுகளின் கண்களையுமே உறுத்தியது வெர்னரின் அசாத்திய திறமை. ஹிட்லரை அழிப்பது... வெர்னரைக் கடத்துவது... இது தான் அப்போது இரண்டுநாடு களின் இலக்கும். 

ஹிட்லர் தற்கொலைக்குப் பின் சரணடைந்த ஜெர்மன் ராணுவத்தினரை ரஷ்யர்கள் சித்ரவதைப்படுத்துவதாகச் செய்தி கிளம்ப, வெலவெலத்துப் போன வெர்னர், அமெரிக்காவிடம் சரணடைந்தார். வெர்னரின் ஜூனியர்களை அப்படியே அலேக்காகக் கொத்திச் சென்றது ரஷ்யா. அதட்டல், உருட்டல், மிரட்டல்களுக்குப் பிறகு அமெரிக்காவின் நாசாவுக்காக வேலை செய்யச் சம்மதித்தார் வெர்னர். ரஷ்யாவில் வெர்னரின் ஜூனியர்கள் ரஷ்ய விஞ்ஞானிகளுடன் இணைந்து செயற்கைக் கோள் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கி னார்கள். ஜெர்மனி வீழ்ச்சிக்குப் பிறகு, 'உலகின் வல்லரசு யார்’ என்ற பனிப்போர் அமெரிக்கா- ரஷ்யாவுக்கு இடையே உச்சத் தில் இருந்த சமயம் அது! 

'அடப் போடா... வெர்னரே நம்ம பாக்கெட்ல!’ என்கிற மிதப்பில் அமெரிக்கா சொதப்ப, முந்திக்கொண்டது ரஷ்யா. 1957-ம் ஆண்டு ஸ்புட்னிக்-1 செயற்கைக் கோளை ஏவி உலகத்தையே மிரளவைத்தது. கடுப்பான அமெரிக்கா அடுத்த வருடமே எக்ஸ்ப்ளோரர்-1 என்கிற செயற்கைக்கோளை ஏவியது. நாயை ராக்கெட்டில் அனுப்புவது, விண்வெளியில் மனிதனை மிதக்கவைப்பது, நிலவில் மனிதனை நடக்கவைத்தது, மிர் விண்வெளி நிலையம் அமைத்தது, கண்டம் விட்டுக் கண்டம் பாயும்ஏவுகணை களைத் தயாரிப்பது, அதில் அணுகுண்டுகளைப் பொருத்துவது என அடுத்து 20 ஆண்டுகள் அமெரிக்கா வும் ரஷ்யாவும் விண்வெளிப் போரில் இறங்கின. உண்மையில் அது வெர்னருக்கும் அவரது ஜூனியர் களுக்கும் நடந்த மறைமுகப் போர்.

வெர்னர் மாபெரும் கனவுகள் கொண்டவர். நிலவுக்கு மனிதனை அனுப்பிவைத்ததில் வெர்னரின் பங்கு அளப்பரியது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்பது அவரது கனவுகளில் ஒன்று. 'நான் 'முடியாது’ என்கிற வார்த்தையை மிகுந்த யோசனைக்குப் பின், மிகுந்த எச்சரிக்கையோடு பயன்படுத்துவேன்!’ என்பது வெர்னர் ஸ்டேட்மென்ட். அவர் வகுத்த  பாதையிலேயே நாசா பயணிக்க, ரஷ்யா சிதறுண்ட பின் இன்று விண்வெளியில் நம்பர் ஒன் ஆகிவிட்டது அமெரிக்கா. 1977-ல் வெர்னர் இறந்தபோது, பல நாடுகளும் ராக்கெட் தொழில்நுட்பத்தின் மேல் ஆர்வம் கொண்டு அதில் ஆராய்ச்சிகளைத் துவக்கி, செயற்கைக்கோளைத் தயாரிக்கத் துவங்கி விட்டன. 

இன்று நாம் பயன்படுத்தும் செல்போன், சேட்டிலைட் டி.வி-க்கள், தொலைத்தொடர்புகள் எல்லாமே வெர்னரின் உபயம். மொட்டை மாடியில் நள்ளிரவில் மினுக்மினுக் புள்ளி யாக சேட்டிலைட் நகர்வதைப் பார்த்தாலோ, அதி பயங்கர வேகத்தில் ஏவுகணை கடந்து செல்வதைப் பார்த் தாலோ... ஒருமுறை வெர்னரை நினைத்துக் கொள்ளுங்கள்!

எஸ்.கலீல்ராஜா

No comments:

Post a Comment