Search This Blog

Sunday, February 03, 2013

ஓ பக்கங்கள் - மெஹருன்னிசாவிடமிருந்து ஒரு கடிதம்!, ஞாநி

அன்புள்ள ஞாநிக்கு

அசலாம் அலைக்கும்.

உங்களுக்கு என்னைத் தெரியாது. எனக்கு உங்களைத் தெரியும். நான் ஒரு பெண். நான் ஒரு முஸ்லிம். இந்த இரண்டு காரணங்களுக்காகவே எனக்கு இந்தச் சமூகத்தில் நிறைய துயரங்கள் இருக்கின்றன.

நான் கல்லூரி சென்று படிப்பதை என் வீட்டார் வேண்டா வெறுப்பாகத்தான் அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள். என் அண்ணன்கள் இரண்டு பேரும் படித்துவிட்டு வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தானுண்டு வேலையுண்டு என்று இருப்பவர். அவருக்கு மூத்தவர் சில வருடங்களாக ஒரு முஸ்லிம் இயக்கத்தில் சேர்ந்து அதில் ஆர்வமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பெரிய அண்ணன் தாடி வளர்த்து தலையை மூட குல்லா போடும் பழக்கத்துக்கு மாறிவிட்டார். சின்னவரையும் மாறச் சொல்கிறார். அவர் மறுத்துக் கொண்டிருக்கிறார்.


முதல் வருடம் நான் கல்லூரிக்குச் சென்ற போது பர்தா ஏதும் அணியாமல்தான் போய் வந்தேன். பெரிய அண்ணன் இப்போது என்னை பர்தா போடாமல் வெளியே செல்ல அனுமதிப்பதே இல்லை. கல்லூரி கேட்டுக்குள் நுழையும் வரை பர்தா போடுகிறேன். அதன் பின்னர் அதைக் கழற்றிவிட்டு மற்ற பெண்களைப் போல சாதாரண உடையில் இருக்கிறேன். மாலை வீடு திரும்பும் முன்பு திரும்ப பர்தா அணிந்து கொண்டு கல்லூரியை விட்டு வெளியே வருகிறேன். இது எனக்குப் பிடிக்கவில்லை தான். ஆனால் இதற்காக நான் தகராறு செய்ய ஆரம்பித்தால், என் படிப்பையே நிறுத்திவிடும் ஆபத்து இருக்கிறது. படிப்புக்காக இதை சகித்துக் கொண்டு இருக்கிறேன்.

என்னுடன் படிக்கும் இந்து பெண்களுக்கெல்லாம் முஸ்லிம் என்றால் யார், இஸ்லாம் என்பது என்ன என்று எதுவும் தெரியாது. பல விஷயங்களை சகஜமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் எங்கேயாவது ஒரு குண்டுவெடிப்பு ஏற்பட்டு அந்தச் செய்தி ஓயாமல் டிவியிலும் பேப்பர்களிலும் இரண்டு மூன்று நாள் வரும்போது, என்னுடன் என் தோழி ஒருத்தி பேசும் பேச்சின் தொனியே மாறிவிடும். ‘எல்லாம் உங்க ஆளுங்க வேலைதான்’ என்று பகிரங்கமாகவே என்னிடம் சொல்வாள். ‘இப்படி குண்டு வெக்கறவங்க யாரும் எங்க ஆளே இல்லை. இதை நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்’ என்று நான் சொன்னால் அவளுக்குப் புரியாது.

அண்ணன்கள் இரண்டு பேருக்கும் நல்ல வேலை கிடைத்ததும், கொஞ்சம் பெரிய வீடாகப் பார்த்துக் கொண்டு போகலாம் என்று முடிவு செய்தோம். நிறைய நல்ல வீடு காலியாக இருந்ததைப் போய் பார்த்தோம். ஆனால் ஒருத்தரும் எங்களுக்கு வீடு தரவில்லை. முஸ்லிம்களுக்குத் தருவதில்லை என்று பச்சையாகவே சிலர் சொன்னார்கள். அதனால் ஏற்பட்ட பெரிய இழப்பு எனக்குத்தான். வெவ்வேறு சாதி, மத ஆட்கள் குடியிருக்கும் பகுதியில் போய் குடியிருந்திருந்தால், எனக்கு வீட்டிலும் தெருவிலும் இன்னும் கொஞ்சம் அதிக சுதந்திரம் கிடைத்திருக்கும். ஆனால் திரும்பத் திரும்ப எங்க ஆட்கள் இருக்கும் தெருவிலேயே, வட்டாரத்திலேயே குடியிருக்கும் போது, பக்கத்து வீட்டுக்காரங்க என்ன சொல்வாங்க, இயக்கத் தலைவர் என்ன சொல்வாரு என்றெல்லாம் பயமுறுத்தி என் சுதந்திரம்தான் பறிபோய்க் கொண்டிருக்கிறது. என் நிலையில்தான் பெருவாரியான முஸ்லிம் பெண்கள், என் வயது பெண்கள் இருக்கிறார்கள். என்னைப் போல கல்லூரிக்குப் போய் படிக்க வாய்ப்பு கிடைக்காத சின்னச் சின்ன பெண்கள் எல்லாம் வீட்டிலேயே இருந்துகொண்டு, அவர்களும் என் அம்மா, பாட்டி மாதிரி சின்ன வயதிலேயே கிழவிகள் மாதிரி யோசிக்கவும் பேசவும் ஆரம்பித்து விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நீங்கள் விஸ்வரூபம் படம் பற்றி டி.வி.யில் பேசியதையெல்லாம் பார்த்தேன். இயக்கத்தில் இருக்கும் என் அண்ணனும் நானும் சேர்ந்து உட்கார்ந்து பார்த்தோம். உங்கள் கருத்துடன் அண்ணனுக்கு துளியும் சம்மதம் இல்லை. ஆனால் எனக்கு நீங்கள் சொன்னது எல்லாம் சரியாகவே தோன்றியது. ஆனால் அதை அண்ணனிடம் சொல்ல முடியாது.

கமல்ஹாசன் எனக்குப் பிடித்த நடிகர். அவர் படங்களில் எல்லா படமும் பிடிக்காது. சில படங்களில் என்ன சொல்கிறார் என்றே புரியாது. சில படங்கள் ரொம்பப் பிடிக்கும். விஸ்வரூபம் படம் தாலி பான் பயங்கரவாதிகள் பற்றிய கதை என்று சொன்னார்கள். இந்தப் படத்தை எதிர்த்து பல முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். படம் ரிலீசானால் தானே அதில் என்ன இருக்கிறது என்று தெரியும். இந்த தலைவர்களுக்கு மட்டும் போட்டுக் காட்டினாராம். அவர்கள் பார்த்துவிட்டு இதை மற்ற முஸ்லிம்கள் பார்க்கக்கூடாது என்று முடிவு செய்து எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இது என்ன நியாயம் என்று எனக்குப் புரியவில்லை.
 
அதற்கு அப்புறம் ஏன் கமல் இவர்களுக்குப் போட்டுக் காட்டினார் என்று எனக்குப் புரியவில்லை. மணிரத்னம் பம்பாய் படம் எடுத்த போது பால் தாக்கரேவுக்கு பயந்து படம் போட்டுக் காட்டின மாதிரி கமலும் பயந்துவிட்டார் போலிருக்கிறது.

இந்த விஷயங்களில் இந்த தலைவர்கள் எங்களைப் போன்ற பெண்களின் கருத்தையெல்லாம் கேட்பதும் இல்லை, பொருட்படுத்துவதும் இல்லை. இவர்கள் வீட்டை விட்டு போனதும் டி.வி.யில் எல்லா படங்களையும் பார்க்கிறோம். எந்தப் படம் எப்படி என்று எங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். பெண்கள் சினிமாவே பார்க்காமல் இருந்தால் எங்கள் தலைவர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். சினிமா ஹராம் என்பார்கள். நான் தினசரி கல்லூரி போய்விட்டு வரும் வழியில் நான்கு டாஸ்மாக் கடைகள். வழிநெடுக குடிகாரர்களுக்கு பயந்து பயந்துதான் தாண்டி வரவேண்டியிருக்கிறது. மதுவும் ஹராம்தான். ஆனால் இந்தத் தலைவர்கள் அதற்கெல்லாம் பெரிய போராட்டம் இப்படி முழுமூச்சாக நடத்துவதே இல்லை.

கமல்ஹாசன் படத்தில் பயங்கரவாதிகள் எல்லாரும் முஸ்லிம்களாக தொழுகை செய்வது, குரான் படிப்பது, அல்லாஹூ அக்பர் என்று சொல்வது எல்லாம் காட்டப்படுகிறது என்று என் பெரிய அண்ணன் சொல்கிறார். இதைப் பார்த்துவிட்டு எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று மக்கள் நினைக்க ஆரம்பிப்பார்கள் என்பது அவர் கருத்து. நான் அவரிடம் பதில் பேச முடியாது. ஆனால் டி.வி.யில் நீங்கள் சொன்ன பதில் எனக்கு சரியாகப்பட்டது. மதத்தின் பெயரால் பயங்கரவாதம் செய்பவர்கள் மதப் பழக்கத்தை பின்பற்றுபவர்களாகவும்தானே இருப்பார்கள். அதை எப்படி காட்டாமல் இருக்க முடியும்? பாபர் மசூதியை இடித்த இந்து மத வெறியர்கள் பற்றி சொன்னீர்கள். அவர்களெல்லாம் காவி உடுத்திக்கொண்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லிக் கொண்டுதான் மசூதியை இடித்தார்கள். அதற்காக ஜெய்ஸ்ரீராம் என்று சொல்லும் எல்லா ஹிந்துவும், ராமரைக் கும்பிடும் எல்லா ஹிந்துவும் பயங்கரவாதியென்றா நினைத்துக் கொள்கிறோம்? இல்லையே. உங்களுடைய இந்த வாதம் ரொம்ப சரி. என் தோழி உமா எப்போதும் ராம்ராம் என்றுதான் யாரையாவது பார்த்தால் சொல்வாள். என்னிடமும் சொல்வாள். நான் சிரித்துக் கொண்டே அசலாம் அலைக்கும் என்பேன்.

பொதுவாக தமிழில் நல்ல கருத்துள்ள படங்கள் வருவதே குறைவு. இப்படி ஒரு படம் எடுத்து அது சென்சார் ஆனபிறகு யாராவது எதிர்த்து அவர்களுக்கும் போட்டுக் காட்டி சம்மதம் கொடுத்தால்தான் ரிலீஸ் ஆகும் என்றால் இனிமேல் படம் எடுப்பவர்கள் எல்லாரும் திரும்பத் திரும்ப லவ், ஃபைட், குத்துப்பாட்டு மட்டும் இருக்கும் படங்களைத்தான் எடுப்பார்கள். எங்கள் ஆட்களும் அதில் இருக்கும் ஆபாசம், வன்முறை பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள். எதிர்க்கமாட்டார்கள். முஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் கடத்தல்காரனாக, அடியாளாகக் காட்டுவது எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களிலேயே இருப்பதை பார்த்திருக்கிறேன். விஜயகாந்த் படத்திலெல்லாம் வில்லன் முஸ்லிம் பயங்கரவாதிதான். அதையெல்லாம் இந்தத் தலைவர்கள் பெரிதாக எதிர்த்ததே கிடையாது. 

பயங்கரவாதிகள் சாதாரண முஸ்லிம்களான எங்களைப் போலவே தொழுகையும் இதர மதப் பழக்க வழக்கங்களையும் பின்பற்றுகிறார்கள் என்றால், அது தப்பு. அவர்கள் உண்மையான முஸ்லிம்களே அல்ல, அவர்கள்தான் காஃபிர்கள் என்று எடுத்துச் சொல்வதைத்தான் எங்கள் தலைவர்கள் செய்ய வேண்டும். தாலிபானுக்கும் அல்கொதாவுக்கும் சவால் விடமுடியாமல், உள்ளூரில் இருக்கும் கமல்ஹாசனுடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது.

முஸ்லிம் பெண் என்ற விதத்தில் எனக்கும் மற்ற முஸ்லிம் பெண்களுக்கும் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. தொழுகைக்கு மசூதிக்குச் செல்ல முடியாது என்பதில் இருந்து, என் அத்தையின் ஜீவனாம்சப் பிரச்னை, என் மாமா பெண்ணின் வரதட்சிணைப் பிரச்னை என்று பல இருக்கின்றன. அதிலெல்லாம் தலைவர்களோ முல்லாக்களோ ஒரு உருப்படியான தீர்வையும் தருவதில்லை. படிப்பு இன்னும் பெரிய பிரச்னை. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் சுட்டு காயப்படுத்திய மலாலா 14 வயது முஸ்லிம் சிறுமிதான். படிக்கும் உரிமைக்காகப் போராடிய அந்தப் பெண் இன்று உலகம் முழுக்க பெண் கல்வி உரிமைக்கான அடையாளமாகக் கொண்டாடப்படுகிறாள். ஆனால் தமிழ்நாட்டில் கமல் படத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் எங்கள் ‘தலைவர்கள்’ மலாலாவைக் கொண்டாடுவதில்லை. என் அண்ணன் கோபம் வந்தால் என்னிடம் ‘நீ என்ன மலாலான்னு நினைப்பா உனக்கு?’ என்கிறார்.

எங்களுடைய பிரதான தேவைகள் இன்று எல்லா முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் பெண்களுக்கும் தரமான கல்வி, வேலைவாப்பு, வியாபாரம் செய்து பிழைப்பதற்கான சமமான வாய்ப்புகள் என்று நீங்கள் சொன்னது முழுக்க முழுக்க சரி.

எங்கள் தலைமுறையில் இதெல்லாம் மாறும் என்று நானும் நம்பி வந்தேன். ஆனால் என் தலைமுறை ஆண்களைப் பார்க்கும்போது அந்த நம்பிக்கையும் பலவீனமாகிறது. பல பையன்கள் இப்போதே முல்லாக்களைப் போல பேசுகிறார்கள். நடக்கிறார்கள். எங்கள் பெண்கள் படித்து அதிகாரத்துக்கு வந்தால்தான் நிலைமை மாறும். அதனால்தான் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்துகிறேன். மலாலாதான் எனக்கு ரோல் மாடல்.

கல்லூரிக்குள் போய்விட்டால், எனக்கு அது இன்னொரு உலகமாக இருக்கிறது. நூலகத்தில் நிறைய புத்தகங்கள். உடன் பேச நல்ல தோழிகள். எல்லாருமே பெருவாரியான நேரம் அவரவர் மதம் சாதியை கழற்றி வைத்துவிட்டு உறவாடுகிறோம். கல்லூரிக்கு வெளியிலும் இப்படி ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும். அதற்குத்தான் நம் கலை, சினிமா, அரசியல் எல்லாம் பயன்பட வேண்டும் என்று நீங்கள் ஸோல்வதை நானும் ஆமோதிக்கிறேன்.

இதையெல்லாம் பகிர்ந்து கொள்ள என் வீட்டிலும் தெருவிலும் எனக்கு ஆள் இல்லை என்பதால்தான் என் முகம் தெரியாத உங்களுக்கு இதை எழுதியிருக்கிறேன். நான் நினைக்கும் பல விஷயங்களை நீங்கள் பேசுவதால் இந்த உரிமை எடுத்துக் கொண்டேன். நன்றி.

தேவைப்பட்டால் திரும்ப எழுதுவேன். முடிந்தால் (என் கல்லூரி முகவரிக்கு) பதில் போடுங்கள்.


பின்குறிப்பு: தன் படத்துக்கு ஒரேயடியாக தடை விதித்தால் தமிழ்நாட்டை விட்டோ இந்தியாவையே விட்டோ போய்விடப் போவதாக கமல் சொல்லியிருக்கிறார். மலாலா மாதிரி இருந்து ஃபைட் பண்ணுவதுதான் சரி என்று அவரைப் பார்த்தால் சொல்லுங்கள். 
 
மெஹருன்னிசா என்ற கற்பனைப் பெண் எனக்கு எழுதியதாக இருக்கும் இந்தக் கற்பனைக் கடிதம் பல முஸ்லிம் நண்பர்களுடன் தொடர்ந்து எனக்கு நடக்கும் உரையாடல்களில் தெரியும் நிஜங்களை அடிப்படையாகக் கொண்டது.


அன்புடன்
மெஹருன்னிசா, இளங்கலை வரலாறு.

2 comments:

  1. thiru gnani raahul saarbaakavum, kamal saarbaakavum pesi, niyaayaththai ethirththu pesumpothe purinthu vittathu. avar yaar pakkam nirkirar endru. thaan aadavillai endraalum than sadhai aadividum.

    ReplyDelete