Search This Blog

Saturday, May 04, 2013

இந்த மாதப் பிரபலங்கள்

ரபீந்திரநாத் தாகூர்
 

இந்திய தேசிய கீதத்தை மட்டுமின்றி, பங்களா தேஷத்தின் ‘அமர் சோனார் பங்களா’ தேசிய கீதத்தை இயற்றிய வரும் தாகூர்தான்! 1861 மே 7ம் தேதி கொல்கத்தாவில் தேபேந்திரநாத் தாகூருக்கும் சாரதா தேவிக்கும் மகனாகப் பிறந்தார். பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே படித்தார். முறையான கல்வியைப் பெறாவிட்டாலும் வரலாறு, புவியியல், கணிதம் என்று ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். பெங்காலி, சமஸ்கிருதம், ஆங்கிலம் என மும்மொழி வித்தகராக இருந்தார்.

1874ல் ‘அபிலாஷ்’ என்ற தலைப்பில் எழுதிய முதல் கவிதை ‘தத்துவபோதினி’ இதழில் வெளியானது. தொடர்ந்து அமிர்த பஜார், பாம்தி, பாலகா, பாரதி ஆகிய பத்திரிகைகளில் எழுதினார். 1878ல் ‘கபி கஹினி’ கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அதே ஆண்டு பாரிஸ்டர் படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். 1883ல் ம்ருணாளினியுடன் திருமணம் நடைபெற்றது. நான்கு குழந்தைகள் பிறந்தன.

கதை, கவிதை, நாவல், இசை நாடகம், நாட்டிய நாடகம், பயணக் கட்டுரை, சுயசரிதை, ஓவியம் என இலக்கியத்தில் சிகரம் தொட்டாலும் அடிப்படையில் தன்னைக் கவிஞராகவே அடையாளப்படுத்திக் கொண்டார். ‘மானசி’, ‘சோனார் தாரி’, ‘கீதாஞ்சலி’, ‘கீதிமால்யா’, ‘பாலகா’, ‘சித்ரா’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் அவரைப் புகழின் உச்சியில் அமர வைத்தன. ‘ரபீந்திர சங்கீத்’ என்னும் புதிய இசை வடிவத்தை உருவாக்கினார். இசை மற்றும் நடன ஆர்வம் காரணமாக நாட்டிய நாடகங்களையும், சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதிக் குவித்தார். 1913ல் தாகூருக்கு இலக்கியத்துக்கான ‘நோபல்’ பரிசு வழங்கப்பட்டது.

ஆங்கிலேய அரசு ‘சர்’ பட்டம் வழங்கி பெருமைப் படுத்தியது. ஆனால் ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தொடர்ந்து, தனக்கு அளிக்கப்பட்ட ‘சர்’ பட்டத்தைத் திருப்பிக் கொடுத்தார் தாகூர்.

1901ல் ‘சாந்திநிகேதன்’ பள்ளியைத் தொடங்கினார். 1921ல் அது ‘விஸ்வ பாரதி’ பல்கலைக்கழகமாக பரந்து விரிந்தது.

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்


உலகிலுள்ள செவிலியர்களுக்கு முன்மாதிரியாக மட்டுமின்றி, செவிலியர் பணியை வாழ்க்கைத் தொழிலாக உயர்த்திய பெருமைக்குரியவர் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல். 1820 மே 12, இத்தாலியிலுள்ள ஃப்ளாரன்ஸ் நகரில் வில்லியம்ஸ், ஃப்ரான்சஸ் தம்பதிக்கு மகளாகப் பிறந்தர். வசதியான குடும்பம். கிரேக்கம், லத்தீன், இத்தாலி, ஜெர்மன், பிரெஞ்ச், வரலாறு, தத்துவம் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றார். 1849ல் ஐரோப்பிய மருத்துவமனை அமைப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஜெர்மனிக்கும், செவிலியர் பயிற்சி பெற எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியாவுக்கும் பயணித்தார். 1853ல் லண்டனிலுள்ள இன்வாலிட் ஜெண்டில்வுமன் மருத்துவமனையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1854ல் கிரிமியன் போரின் போது துருக்கியில் காயமடைந்த படை வீரர்களுக்குப் பணிவிடை செய்ய முன்வந்தார். பிரிட்டிஷ் அரசின் ஆதரவுடன் தனக்கு உதவியாக 38 செவிலியர்களுடன் சென்று, பிரத்யேக செவிலியர் பிரிவை உருவாக்கினார். வீரர்களின் நோய்களை அட்டவணைப்படுத்தினார். அதன் மூலம் போதுமான மருந்து இல்லாமை, சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் தான் இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததைக் கண்டறிந்தார். சுகாதாரத்தைக் கொண்டு வந்தார். இரவு நேரங்களில் கை விளக்கை எடுத்துக் கொண்டு, நோயாளிகளைப் பார்க்கச் செல்வார். இதனால் கை விளக்கு ஏந்திய காரிகை என்று போற்றப்பட்டார். விரைவில் இறப்போர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

1860ல் போர் முடிந்தவுடன் மீண்டும் இங்கிலாந்து திரும்பி, லண்டன் புனித தாமஸ் மருத்துவமனையில் ‘நைட்டிங்கேல் செவிலியர் பள்ளி’ தொடங்கினார். செவிலியர் பணி பிற்காலத்தில் வாழ்க்கைத் தொழிலாக உருவெடுக்க இந்தப் பள்ளியே அடிப்படை. செவிலியர் துறையைச் சீரமைத்து, மருத்துவத் துறைக்கு இணையாகத் தரமான கல்வி, பயிற்சிகளை முறைப்படுத்தினார்.

1907ல் இங்கிலாந்து வழங்கிய ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருதைப் பெற்ற முதல் பெண் இவர்தான்! செவிலிப் பணி பற்றி இவர் எழுதிய பல புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இன்றைக்கும் ஆதார நூல்களாகத் திகழ்கின்றன. இவரது பிறந்தநாள் ‘உலகசெவிலியர் தினம்’ ஆகக் கொண்டாடப்படுகிறது.

கார்ல் மார்க்ஸ்


‘மனித குலத்தின் பெரும்பான்மைக்குப் பாடுபடக்கூடிய வேலையைத் தீர்மானித்துக் கொண்டால், எந்தச் சுமையும் நம்மை ஒன்றும் செய்து விடாது. காரணம் அவை எல்லாம் அனைவருக்குமான தியாகங்கள். நமக்குக் கிடைக்கிற மகிழ்ச்சியோ எல்லையற்றது. இந்த மகிழ்ச்சி கோடானுகோடி மக்களுக்குச் சொந்தமானது. நான் அதுபோன்ற ஒரு வேலையைத் தான் செய்ய விரும்புகிறேன்.’

எதிர்கால வேலை என்ற தலைப்பில் பள்ளி இறுதி வகுப்பில் கார்ல் மார்க்ஸ் எழுதியது.

அன்றைய பிரஷ்யாவில் 1818 மே 5ல் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே உலக அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் செலுத்தினார். ட்ரையரில் பள்ளிப் படிப்பும் பெர்லின் பல்கலைக்கழகத்தில் சட்டமும் தத்துவமும் பயின்றார். தத்துவப் பேராசிரியர் ஹெக்கலின் எழுத்துகள் இவரை ஈர்த்தன.

1842ல் ரைனிஷ் ஷெடுங் என்ற பத்திரிகையில் எழுதத் தொடங்கி, பிறகு அந்தப் பத்திரிகை ஆசிரியரானார். அவரது சமூக விழிப்புணர்வு கட்டுரைகளைப் பொறுத்துக் கொள்ளாத பிரஷ்ய அரசாங்கத்தால் அந்தப் பத்திரிகை மூடப்பட்டது.

1843-ம் ஆண்டு காதல் மனைவி ஜென்னியைத் திருமணம் செய்து கொண்டார். உழைப்பாளர்கள், அடிதட்டு மக்களுக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்ததால், அவர் அடிக்கடி நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. வறுமை அவர்களை வாட்டியது. மருத்துவம் பார்க்க வசதி இல்லாததால் 7 குழந்தைகளில் 4 குழந்தைகளைக் காப்பாற்ற முடியாமல் போனது.

கார்ல் மார்க்ஸுக்கு ஃப்ரெடரிக் ஏங்கெல்ஸின் நட்பு கிடைத்தது. உரிமையற்ற உழைப்பாளிகள், உழைக்காத உரிமையாளர்கள் என்னும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பு இவர்களைப் பெரிதும் பாதித்தது. இருவரும் சேர்ந்து போராட்டங்கள் நடத்தினர். பத்திரிகைகளில் எழுதினர். ஆராய்ச்சியில் இறங்கினர். மார்க்ஸின் இறுதிக் காலம் வரை பொருளாதார உதவி செய்து வந்தார் ஏங்கெல்ஸ்.

உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, சுரண்டப்படுகிறார்களோ அங்கெல்லாம் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற, மார்க்ஸின் சிந்தனைகள்தான் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன.

1867ல் ‘மூலதனம்’ நூல் வெளிவந்தது. உலகம் முழுவதும் கவனம் பெற்றது. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த சிந்தனையாளர் யார் என்று பிபிசி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், மக்கள் கார்ல் மார்க்ஸைத் தேர்ந்தெடுத்தனர்!

அரசியல்வாதி, தத்துவவாதி, பொருளியல் கோட்பாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர், புரட்சியாளர் என்று போற்றப்படும் கார்ல் மார்க்ஸ், அவர் நினைத்ததைப் போலவே எளிய மக்களுக்காக வாழ்ந்த மாமனிதர்!

ஜனனி ரமேஷ்
 
 
 

No comments:

Post a Comment