விஸ்வநாதன் ஆனந்த் - மேக்னஸ் கார்ல்சன் இடையேயான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில் (நவம்பர் 6-26) நடக்கும் என்று தமிழக முதல்வர் அறிவித்ததிலிருந்து இந்திய செஸ் வட்டாரம் ஒரே மகிழ்ச்சியும் பரபரப்புமாக இருக்கிறது. உலக செஸ் மேப்பில் இனி சென்னைக்கும் இடமுண்டு என்று எல்லோரும் குதூகலிக்கிறார்கள். ஆனால், போட்டி சென்னையில் நடக்காமலும் போகலாம் என்கிற நிலை உருவாகி உள்ளது.
2012 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பு முதலில் சென்னைக்குத்தான் கிடைத்தது. உலக செஸ் கூட்டமைப்பிடம் (FIDE) விருப்பத்தைத் தெரிவித்து, ரூ. 20 கோடி செலவழிக்கவும் தயாரானது, தமிழக அரசு. எதிர்பாராத விதமாக சென்னையை விடவும் அதிகத் தொகையை ரஷ்யா அளிக்க முன்வந்ததால் சென்னைக்குக் கிடைக்க வேண்டிய தங்க வாய்ப்பு பறிபோனது. பதிலுக்கு, அடுத்த போட்டி, சென்னையில் நடத்தப்படும் என்று FIDE தலைவர் கிர்சான் உறுதியளித்திருந்தார். மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் ஐந்தாவது முறையாக உலக சாம்பியன் ஆனார் ஆனந்த். இப்போது வாக்களித்தபடி ஏலம் எதுவும் இல்லாமல், சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த FIDE ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கும் FIDE-க்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவில் நடக்கும் முதல் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இது. தமிழக அரசு, இப்போட்டிக்காக 29 கோடி ரூபாயைச் செலவழிக்கிறது. வெற்றி பெறுபவருக்கான பரிசுத் தொகை, ரூ. 14 கோடி.
ஆனால், திடீர் திருப்பமாக சென்னையில் விளையாட அதிருப்தி தெரிவித்துள்ளார் கார்ல்சன். ஏலம் எதுவும் இல்லாமல் நேரடியாக சென்னைக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது ஆனந்துக்கு ஆதரவாக அமையும் என்கிறது கார்ல்சன் தரப்பு. சென்னையின் சீதோஷ்ண நிலை, உணவு வகைகள் எல்லாமும் கூட கார்ல்சனுக்குப் பிரச்னையாகச் சொல்லப்படுகிறது. ஏலம் நடத்தவேண்டும், இருவருக்கும் பொதுவான இடத்தில் போட்டி நடத்தப்பட வேண்டும், இருவரிடமும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் கார்ல்சன் தரப்பிலிருந்து வைக்கப்பட்டுள்ளன. FIDE விதிமுறைப்படி, ஏலம் வழியாகத்தான் போட்டிக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மேலும், இரு வீரர்களும் சம்மதிக்கும் பட்சத்திலேயே போட்டிக்கான இடம் உறுதி செய்யப்படும். நியூயார்க், மியாமி, பாரிஸ் போன்ற நகரங்களும் இப்போட்டியை நடத்த ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால், சென்னைக்கு எந்தப் பங்கமும் ஏற்படாதபடி, கார்ல்சனை சமரசப்படுத்த FIDE முயன்று வருகிறது.
நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல் சனுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னையிலேயே பல இளம் செஸ் வீரர்களின் ஆதர்சமாக கார்ல்சன் திகழ்கிறார். ஆனந்துக்கு 43 வயது. கார்ல்சனுக்கு 22 வயது. எனவே, இந்தப் போட்டி இரு தலைமுறை வீரர்களுக்கிடையேயான மாபெரும் போட்டியாகப் பார்க்கப்படுகிறது. 1972ல் நடந்த பாபி ஃபிஷர் - போரிஸ் ஸ்பாஸ்கி இடையே நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு நிகராக, செஸ் வரலாற்றில் 2872 புள்ளிகள் எடுத்து சாதனை செய்தவர், கார்ல்சன். 19 வயதில் நெ.1 வீரராகி புதிய எழுச்சியை உண்டாக்கினார். ஆனந்த் ஐந்துமுறை உலக சாம்பியன் என்றாலும், இன்றைக்கு நெ.1 செஸ் வீரர், கார்ல்சன்தான். இப்போது, கார்ல்சனுக்கு உதவ முன்னாள் உலக சாம்பியன் காஸ்பரோவ் முன்வந்திருக்கிறார். கார்ல்சன் விரும்பினால் அவருடைய குழுவில் பங்குபெறத் தயார் என்று அறிவித்திருக்கிறார்.மொத்தம் 12 ரவுண்டுகள் நடக்கும் இந்தப் போட்டியைக் காண தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர்கள் இப்போதிருந்தே ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனந்தின் தாக்கத்தால் இதுவரை தமிழ்நாட்டில் ஏராளமான கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகியிருக்கிறார்கள். மேலும், தமிழகப் பள்ளிகளில் செஸ் கற்றுத் தரப்படுகிற புதிய முயற்சிக்கும் முக்கியக் காரணம் ஆனந்த்தான். ஆனந்த், ஆரோன், விஜயலஷ்மி, ஆர்த்தி ராமசாமி, ஸ்ரீநாத், அதிபன், சேதுராமன், மகாலஷ்மி என இந்திய அளவில் பல செஸ் சாதனையாளர்களை அளித்து, செஸ்ஸின் தலைநகராக இருக்கிறது தமிழ்நாடு. இந்தப் போட்டி சென்னையில் நடப்பதால் இன்னும் அதிக இளைஞர்கள் செஸ்ஸில் ஆர்வம் செலுத்துவார்கள். பலன், அடுத்த ஐந்து வருடங்களில் தெரியவரும்" என்கிறார் ஆனந்த். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்தான், போட்டியை சென்னையில் நடத்த முடியாதபடி புதிய சிக்கல் உருவாகியிருக்கிறது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆனந்தை ஆட்டத்தில் வெல்ல முடியாத சூழ்நிலை உருவாகிறபோது, மனரீதியாகத் தொல்லைகள் கொடுக்கும் இன்னொரு உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்தமுறை ஆரம்பத்திலேயே தடைக்கற்கள். சென்னையில் போட்டி நடந்தால் ஆனந்த் வெற்றி பெற்றுவிடுவார் என்பதால், எதிர்த்தரப்பு முரண்டு பிடிக்கிறது. ஒவ்வொரு தடையையும் சாமர்த்தியமாகத் தாண்டிச் சென்று உலக சாம்பியன் ஆவது, ஆனந்துக்குப் புதிதல்ல. எதிர்ப்புகளைத் தாண்டி, சென்னையில் போட்டி நடப்பதற்கான சாதகமான சூழல்கள் உருவாகும் என்று எதிர்பார்ப்போம்
No comments:
Post a Comment