Search This Blog

Wednesday, May 01, 2013

எனது இந்தியா (இரண்டு புகைப்படக் கலைஞர்கள்!) - எஸ். ரா

புகைப்படக்கலை இன்று பெருமளவு பொழுதுபோக்காக மாறியிருக்கிறது. ஆனால், இந்தியாவுக்குப் புகைப்படக்கலை அறிமுகமான 19-ம் நூற்றாண்டில் அது ஒரு பொன் முட்டையிடும் வாத்து.

மன்னர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகள், ஜமீன்தார்​கள், நவாப்புகள் என சகலரும் தங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஸ்டுடியோக்களில் காத்துக்கிடந்தனர். இங்கிலாந்தில் இருந்து தங்களுக்கான பிரத்யேகப் புகைப்பட கலைஞரை வரவழைத்து பணிக்கு வைத்துக்கொள்ளும் பழக்கம் அப்போதுதான் உருவானது.

இன்று நாம் காணும் பழமையான இந்தியப் புகைப்படங்களின் பின்னே, காலத்தின் நீண்ட நெடிய கதைகள் இருக்கின்றன,தனது உருவச்சித்திரம் வரைவதற்காக மெக்காலே பிரபு, 1853-ம் ஆண்டு எட்வர்ட் மேத்யூ என்ற ஓவியரை பணிக்கு அமர்த்தினார். ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் ஓவியருக்கு முன் உட்கார நேர்ந்தது அவருக்கு சலிப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பதில், உட்கார்ந்த நிமிடத்தில் தன்னை அப்படியே படம் வரைந்து தருவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று கேட்டார். அப்படி ஒரு வழிமுறை அறிமுகமாகியிருக்கிறது. அதன் பெயர் புகைப்படக்கலை. இப்போது, ஐரோப்பாவில் புகழ்பெற்று வருகிறது என்றார் மேத்யூ. 


ஒவியம் வரைய நாள்கணக்கில் ஒத்துழைப்புத் தந்தபோதும், முடிவில் அது தன்னைப் போல இல்லாமல் மிகையாக மாறியிருந்ததில் மெக்காலேவுக்கு வருத்தம். அதுபோன்ற சுயஓவியங்களுக்கு மாற்றாக ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார். இங்கிலாந்துக்குப் போகும்போது மறக்காமல் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்கிறது ராயல் பெங்கால் குறிப்பேடு. இதுதான் அந்தக் கால நிஜம். இந்தியாவைப் பற்றிய உலகின் பார்வையை மாற்றி அமைத்த புகைப்படங்களை எடுத்தவர்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர், சாமுவேல் பெர்ன் என்ற பிரிட்டிஷ் புகைப்படக்கலைஞர். மற்றவர், இந்தியப் புகைப்படக்கலையின் ராஜா என அழைக்கப்படும் தீன் தயாள். இந்த இருவரின் புகைப்படங்களே 19-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான வரலாற்று ஆவணங்கள்.

1863-ல் கங்கை ஆற்றின் நதிமூலத்தை புகைப்படம் எடுக்க சாமுவேல் பெர்ன் நீண்ட பயணம் செய்தார். பயணத்தின்போது தேவைப்படும் பொருட்களை 30 தொழிலாளர்கள் தூக்கிவந்தனர். கங்கோத்ரியை நோக்கிப் பயணம் செய்தார். பனியின் ஊடாக மூன்று மாதங்கள் சென்ற அந்தப் பயணம் பெரும் சவாலாக இருந்தது.

இன்று இருப்பதுபோல அந்தக் காலத்தில் புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிது அல்ல. அன்றைய கேமரா மிகப் பெரியது. அதை ஒரு குதிரை வண்டியில்தான் எடுத்துச் செல்ல முடியும். 40 பவுண்ட் எடை கொண்ட கண்ணாடி பிளேட்டை உபயோகித்துப் படம் எடுப்பார்கள். பிலிம் மாதிரிகள் மற்றும் பிரின்ட் போடும் முறையும் ரகசியமாகவே இருந்தன. குளிர்ப் பிரதேசங்களில் படம் பிடிப்பது என்பது ஒரு சவால். பல நேரங்களில் கேமரா உறைந்து போய்விடும். அத்துடன், குறைவான வெளிச்சத்தில் படம் எடுப்பதற்குத் தனித்திறமை வேண்டும்.


இங்கிலாந்தின் ஷார்ப் ஷையர் நகரில் பிறந்த சாமுவேல் பெர்ன், புகைப்படம் எடுக்க தானாகவே கற்றுக்கொண்டவர். புகைப்படக்கலை 1839-ல் ஐரோப்பாவில் அறிமுகமாகி புகழ்பெறத் தொடங்கிய காலத்தில் சாமுவேல் அதுகுறித்த புத்தகங்களை வாங்கிப் படித்தார். ஒரு கேமராவை விலைக்கு வாங்கி புகைப்படங்கள் எடுத்துப் பழகத் தொடங்கினார்.

ஆரம்ப காலத்தில் இவர் எடுத்த ஒரு புகைப்படம்கூட சரியாக விழவில்லை. ஒளியை எப்படிப் பயன்படுத்துவது என்பதை முறையாகக் கற்றுக்கொண்டதோடு இயற்கையான சூழலில் புகைப்படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த சாமுவேல் பெர்ன், ஏரிகள் அதிகம் உள்ள இங்கிலாந்தின் கிழக்குப் பகுதிக்கு சென்றார். பிரகாசமான காலை வெளிச்ஜ்சத்தில் ஏரியின் அழகை பல்வேறு புகைப்படங்களாகப் பதிவுசெய்தார். இரண்டு மாதங்கள் ஒவ்வொரு ஏரியாக சுற்றி அலைந்து அவர் எடுத்த புகைப்படங்களை பிரின்ட் போட்டு ஒரு கண்காட்சி நடத்தினார்.

1859-ல் அந்தக் கண்காட்சியைப் பார்க்க வந்த பிரபல வணிகர்கள், புகைப்படங்களைப் பார்த்து வியந்தனர். தங்களுக்கும் அதுபோன்ற புகைப்படங்கள் எடுத்துத் தர வேண்டும் என்று ஆர்டர் தந்தனர். வணிக ரீதியான போட்டோகிராபராக தன்னை மாற்றிக்கொண்ட சாமுவேல் பெர்ன், இதற்காக இங்கிலாந்தின் அரிய இயற்கைக் காட்சிகளைப் படம்பிடிக்கத் தொடங்கினார். 1861-ல் இவரது புகைப்படங்கள் லண்டனில் வெளியான வார இதழ்களில் வெளியானதுடன் மிகப் பெரும் விலை கொடுத்து வாங்கி வரவேற்பு அறைகளில் வைக்கும் பழக்கமும் பரவத் தொடங்கியது.

ஒருமுறை, சாமுவேலின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட வந்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி எட்வின், 'இந்தியாவுக்கு வந்து புகைப்படம் எடுத்தால் நிறைய சம்பாதிக்கலாம், அதிசயமான இயற்கைக் காட்சிகள் இந்தியாவில் இருக்கின்றன’ என்று கூறினார். அந்த ஆசையில் இந்தியாவைப் பற்றிய புத்தகங்களை வாசிக்க தொடங்கிய சாமுவேல் பெர்ன், தனது புகைப்படத் தொழிலுக்கு இந்தியாவில் மிகப் பெரிய கிராக்கி இருக்கும் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டார். இதற்காக, 1863-ல் லண்டனில் இருந்து கப்பலில் புறப்பட்டு கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தார். சாமுவேல் பெர்ன் வருவதற்கு முன்பே கல்கத்தாவுக்கு புகைப்படக்கலை வந்துவிட்டது. குறிப்பாக, பாரிஸில் புகைப்படக்கலை அறிமுகமான சில மாதங்களிலேயே இந்தியாவுக்கு புகைப்படக்கலை அறிமுகமாகிவிட்டது. அடுத்த ஆண்டுகளில் பல்வேறு தொழில்முறை புகைப்படக்கலைஞர்கள் கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தனர்.

வில்லியம் ஹோகார்த் என்ற புகைப்படக்​கலைஞர் கல்கத்தாவில் ஒரு ஸ்டுடியோவை தொடங்கினார். அவரிடம் புகைப்படம் எடுத்துக்​கொள்வது, உயர்தட்டு மக்களின் அந்தஸ்தாக இருந்தது. புகைப்படம் எடுப்பதால் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும்கூட வதந்தி பரவியது. அத்துடன், புகைப்படக்கலை என்பது ஓவியக்கலையை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட நாசவேலை எனவும் கூறப்பட்டது. இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணிகூட தனது அரண்மனை ஓவியர்களை அழைத்து புகைப்படக்கலையால் ஓவியம் அழிந்துவிடும் ஆபத்து இருக்கிறதா என விசாரித்தது உண்டு. ஆல்பிரட் சாலன் என்ற ஒவியர், 'புகைப்படக்கலையால் ஓவியத்தின் தனித்துவத்தை ஒருபோதும் அழித்துவிட முடியாது. மனிதர்களுக்குக் கற்பனை என்ற ஒன்று இருக்கும் வரை ஓவியம் நிச்சயமாக இருக்கும்’ என்றார்.

கல்கத்தாவில் புகைப்படக்கலை அறிமுகமானவுடன், அது பரபரப்பான தொழிலாக மாறியது. பெரும்பான்மை ஸ்டுடியோக்களில் பிரிட்டிஷ்காரர்கள் மட்டுமே புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்தியர்கள் புகைப்படக்கலையை கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. 1860-களில் கல்கத்தாவில் மிசஸ் கேரிக் என்ற பெண் ஒரு ஸ்டுடியோவை நிறுவினார். இந்த ஸ்டுடியோவின் சிறப்பு, பெண் புகைப்படக்கலைஞரே பெண்களைப் புகைப்படம் எடுப்பார் என்று விளம்பரம் செய்யப்பட்டது. மண்டாரியோ என்ற புகைப்படக்கலைஞரே 1844-ல் கல்கத்தாவின் புகழ்பெற்ற புகைப்படக்காரராகத் திகழ்ந்தார். 1857-ல் இந்தியாவில் நடந்த சிப்பாய் எழுச்சியின் பல முக்கியச் சம்பவங்கள் புகைப்படங்களாக எடுக்கப்பட்டன. ஜான்முர்ரே மற்றும் ராபர்ட் டைலர் ஆகியோர் எடுத்த சிப்பாய் எழுச்சிப் புகைப்படங்கள் ஆவணக்காப்பகங்களில் இன்றும் உள்ளன.

1856-ல் சென்னை அரசாங்கம் லினகஸ் ட்ரிப் என்ற புகைப்படக்கலைஞரை பணிக்கு அமர்த்தி மதுரை, தஞ்சை ஸ்ரீரங்கம் உள்ளிட்ட முக்கியக் கோயில்களையும், சிற்பங்களையும் புகைப்படங்களாக எடுத்து ஆவணப்படுத்த முயன்றது. இந்தப் பணிக்காக, லினகஸ் தமிழகம் முழுவதும் தனது கேமராவுடன் மாட்டு வண்டியில் ஒரு வருடம் பயணம்செய்து அரிய பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார். நிகோலஸ் அண்ட் கம்பெனி என்ற நிறுவனம், சென்னையில் ஸ்டுடியோ அமைத்துப் புகழ்பெற்றிருந்தது. ஊட்டியில் ஆல்ஃப்ரெட் தாமஸ் வாட்சன் பென் என்ற ஸ்டுடியோ பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் விருப்பத்துக்குரியதாக இருந்தது.

இந்தச் சூழலில் இந்தியா வந்த சாமுவேல் பெர்ன், கல்கத்தாவில் புகழ்பெற்று விளங்கிய ஹோகார்த் உடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டார். இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். சாமுவேல் பெர்ன், ஹோகார்த் ஸ்டுடியோ வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியது. அதன் பிறகு, சாமுவேல் சிம்லாவில் புதிய ஸ்டுடியோவை நிறுவத் திட்டமிட்டார். அதற்குக் காரணம், பெரும்​பான்மை பிரிட்டிஷ்காரர்கள் கோடைக் காலத்தில் சிம்லாவில் தங்குவர். அங்கே, புகைப்படக்கலைக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று உணர்ந்த சாமுவேல், சிம்லாவில் புதிய ஸ்டுடியோவை நிறுவினார். இந்த ஸ்டுடியோ, பிரிட்டிஷ்காரர்களுக்கு மட்டுமே செயல்பட்டது.
அந்த நாட்களில் ராணுவத்தின் பல்வேறு பணிகளையும், இயற்கை வளங்களை அடையாளம் காண்பதற்கும், மன்னர்கள், ராணுவ அதிகாரிகளின் கேளிக்கைகள், வேட்டைகள், விளையாட்டு, பல்வேறு கோயில் விழாக்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தவும் புகைப்படக்கலை பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவின் இயற்கைக் காட்சி ஓவியங்களுக்கு மேற்குலகில் அதிக ஈடுபாடு இருப்பதை சாமுவேல் உணர்ந்திருந்தார். குறிப்பாக, இந்தியாவில் ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பயணம்செய்து வில்லியம் ஹட்சஸ் வரைந்த நிலக்காட்சி ஓவியங்கள் ஆறு தொகுதிகளாக வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன. அவைதான் 19-ம் நூற்றாண்டின் இந்திய அடையாளச் சின்னங்கள். வில்லியம் கார்பெந்தர், ஜான் லியர் ஆகிய புகழ்பெற்ற ஓவியர்கள், இந்தியா முழுவதும் அலைந்து ஓவியங்களை வரைந்தனர். அதனால், ஓவியர்களைப் போலவே தானும் இந்தியாவில் பல்வேறு இயற்கைக் காட்சிகளைத் தேடிப்போய் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் சாமுவேலுக்கு ஏற்பட்டது. 1863-ல் அவர் தனது முதல் பயணத்தைத் தொடங்கினார். அது இமயமலையின் அழகைப் புகைபடம் எடுப்பதற்கான தேடுதலாக அமைந்தது. சட்லஜ் நதிக்கரையை ஒட்டிய இயற்கைக் காட்சிகளைத் தேர்வுசெய்து புகைப்படங்கள் எடுத்தார். இமயமலையின் அழகை உலகுக்கு எடுத்துக்காட்டும் 187 அற்புத​மான புகைப்படங்களை அந்தப் பயணத்தில் எடுத்திருக்கிறார். அதனால், அதுவரை மலையேற்றப் பயணிகள் மட்டுமே கண்டிருந்த இமயத்தின் பேரழகு முதன்முறையாக பொதுமக்களின் பார்வைக்குக் கிடைத்தது. அந்தப் புகைப்படங்களின் உயிரோட்டம் காரணமாக சாமுவேல் பென்னுக்கு மிகுந்த பேரும் புகழும் கிடைத்தது. அவரைத் தேடி வந்த இன்னொரு புகைப்படக்கலைஞரான சார்லஸ் ஷெப்பர்ட் உடன் இணைந்து புதிதாக பெர்ன் ஷெப்பர்ட் என்ற ஸ்டுடியோவை நிறுவினார் சாமுவேல். ஷெப்பர்ட்டின் வேலை, சாமுவேல் எடுத்த புகைப்படங்களின் பிரின்ட்டுகளை வெவ்வேறு நிறுவனங்களைத் தேடிச்சென்று விற்பது. ஒரு பக்கம், சாமுவேல் புகைப்படங்கள் எடுப்பதற்காக தொடர்ந்து பயணங்களை மேற்​கொள்வார். மறுபக்கம், ஷெப்பர்ட் அழகிய புகைப்படங்களை நல்ல விலைக்கு விற்று வருவார்.  அவர்களுக்கு லாபம் கொட்டியது. 

No comments:

Post a Comment