இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஒருங்கிணைந்த
பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்த மேற்கு
பஞ்சாப், பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. சீக்கியர் மற்றும் இந்துக்கள்
அதிகம் வாழ்ந்த கிழக்கு பஞ்சாப், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்தியாவின்
உணவுக் களஞ்சியம் எனப்படும் பஞ்சாப், வீரத்தின் விளைநிலம். இன்று வரை
ராணுவத்தில் சீக்கியர்களே பெருமளவில் இருக்கின்றனர். சமயம், பண்பாடு,
கலாசாரம் எனத் தங்களுக்கென தனித்துவமான அம்சங்களைக்கொண்ட சீக்கியர்கள்,
விசுவாசத்துக்காக உயிர்கொடுப்பவர்கள். இந்தியப் பிரிவினை, பல்லாயிரம்
சீக்கியர்களைக் காவு வாங்கியிருக்கிறது. அதன் ஓலக் குரலை இன்றும் பஞ்சாபி
இலக்கியங்களில் காணலாம்.
சீக்கியம் 15-ம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய
மதம். சீக்கியம் என்பதன் பொருள் சீடர் அல்லது மாணவர் என்பதே. இது, ஞானி
குருநானக் உருவாக்கிய மதம். ஒரே முடிவற்ற இறைவனையும், குருநானக் முதல்
ஸ்ரீகுரு கோவிந்த் சிங் வரையிலான பத்து குருக்களையும், புனித நூலான கிரந்த
சாஹிப்பையும், பத்து குருக்களின் போதனைகளையும் முழுமனதாக நம்புபவனே
சீக்கியன். சீக்கிய ஆண்கள் சிங்கம் எனப் பொருள்படும் சிங் என்ற பெயரையும்,
பெண்கள் ராணி எனப் பொருள் தரும் கௌர் என்ற பெயரையும் தங்களின் பெயருக்குப்
பின்னால் இணைத்துக்கொள்கின்றனர். சீக்கிய மதத்தின் பூர்வீகம், ஒருங்கிணைந்த
பஞ்சாப் மாகாணம். சீக்கியர்கள் ஐந்து விஷயங்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க
வேண்டும். அவை, கேஷ் எனப்படும் வெட்டப்படாத தலைமுடி, இதை சுருக்கி சிறிய
கொண்டை போல போட்டுக்கொள்கின்றனர். கங்கா எனப்படும் மரத்தாலான சீப்பு,
கச்சாஹெரா எனப்படும் இடுப்பிலிருந்து முட்டி வரை இருக்கும் வெள்ளை ஆடை, கடா
எனும் இரும்பாலான கையணி, அத்துடன் கிர்ப்பான் எனும் வளைகத்தி. குரு
கோவிந்த் சிங் 'கல்சா’ எனும் அமைப்பை 1699-ல் நிறுவி இந்த ஒழுக்கமுறையை
அறிமுகம்செய்தார். மொகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதம் பல்வேறு
நெருக்கடிகளுக்கு உள்ளானது. சீக்கியக் குருமார்கள் சிலர் மொகலாயர்களால்
கொல்லப்பட்டனர். இன்று, உலகளவில் 27 மில்லியன் சீக்கியர்கள் வாழ்கின்றனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு
இடங்களிலிருந்தும் சீக்கியர்கள் இடம்பெயர்ந்து, அதிக அளவில்
இங்கிலாந்துக்குச் சென்றனர். பிறகு, அமெரிக்கா, கனடா மற்றும் ஆப்ரிக்கா
ஆகிய நாடுகளிலும் குடியேறினர். இந்திய ராணுவத்தில் சீக்கிய ரெஜிமென்ட்,
மிகவும் திறமை வாய்ந்தது. இந்த ரெஜிமென்ட், 2 பரம்வீர் சக்ரா
விருதுகளையும், 14 மஹாவீர் சக்ரா, 5 கீர்த்தி சக்ரா, 67 வீர் சக்ரா மற்றும்
1,596 கேலன்டிரி விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய
சுதந்திரப் போராட்டக் களத்தில் சீக்கியர்கள் மிகுந்த மனவலிமையோடு
போராடினர். பிரிட்டிஷ் அரசால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான்
தீவுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட 2,646 இந்தியர்களில், 2,147 பேர்
சீக்கியர்கள். ஜாலியன் வாலாபாக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களில் 799 பேர்
சீக்கியர்கள். விடுதலைப் போராட்டத்தின்போது, தூக்கிலிடப்பட்ட இந்தியர்களில்
73 பேர் சீக்கியர்கள்.
தங்களுக்கெனத் தனி வரலாறுகொண்டிருக்கும் சீக்கியர்கள்
நெடுங்காலமாகவே, தங்களின் சுயாட்சிக்காக தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைத்துக் குரல் எழுப்பி வந்தனர். தங்களுக்கான தனி நாடாக 'காலிஸ்தான்’
வேண்டும் என்று குரல் எழுப்பினர். காலிஸ்தான் என்றால், தூய்மையின் தேசம்
என்று பொருள். இந்தக் கோரிக்கையை அகாலி அமைப்பு, மின்டோ மார்லி
கமிட்டியிடம் முன்வைத்தது. காலிஸ்தான் குறித்து பல தரப்புப் பேச்சு
வார்த்தைகள் நடந்தன. ஒருங்கிணைந்த இந்தியாவில் சீக்கியர்களுக்கான சமூக,
பொருளாதார மற்றும் மத ரீதியான உரிமைகள் முழுமையாகக் காப்பாற்றப்படும்
என்று, நேரு வாக்குறுதி அளித்தார். காந்தியும் சீக்கியர்கள் சார்பாகவே
பேசினார். ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு தனி நாடு கோரிக்கை கிடப்பில்
போடப்பட்டது. தங்களை ஏமாற்றிவிட்டதாக சீக்கியர்கள் குரல் எழுப்பினர்.
தனிநாடு கேட்கும் அமைப்புகளுக்குத் தடைவிதிக்கப்படும் என்று நேரு
எச்சரித்தார். பஞ்சாபில் 1952, 57 மற்றும் 62 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுத்
தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த
பிரதாப் சிங் கைரோன், பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்றார். இவர், மத்திய
அரசின் தலையாட்டி பொம்மையாகவே செயல்பட்டார் என்று குற்றம்சாட்டியது அகாலி
தளம். 1966-ல் இந்திரா காந்தி பிரதமரானதும், ஒருங்கிணைந்த பஞ்சாப் மாகாணம்
பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம் என மூன்று மாநிலங்களாகப்
பிரிக்கப்பட்டன. தங்களின் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக,
சீக்கியர்கள் சந்தோஷப்பட்டனர். அதன்பிறகு, அங்கு நடந்த தேர்தலில் அகாலி
தளம் தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அர சியல்
காரணங்களுக்கான பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்ட காலிஸ்தான் கோரிக்கை
உருமாறி, தீவிரவாத இயக்கமாகத் திசைமாறியது. 1972-ல் நடந்த பொதுத் தேர்தலில்
தோற்றுப்போனது அகாலி தளம். தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து ஆனந்த்பூர்
தீர்மானம் என்ற ஒன்றை வெளியிட்டது. அதில்தான் காலிஸ்தான் கோரிக்கை
மீண்டும் உயிர்பெற்றது. கூடவே, மதவாத அதிகாரம் வலுப்பெற வேண்டும். அதற்கு
இளைஞர்களை ஒன்றுதிரட்ட வேண்டும் என்ற எண்ணம் வெளிப்பட்டது. இதற்குத்
தூண்டுகோலாக அமைந்தது சீக்கியரான ஜகஜித் சிங் சௌஹானின் செயல். 1971-ம்
ஆண்டு ஜகஜித் சிங் சௌஹான் என்பவர், காலிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட
இருப்பதாக, அமெரிக்காவில் வெளியாகும் நியூ யார்க் டைம்ஸ் இதழில் விளம்பரம்
கொடுத்தார். இதையடுத்து, நிதி உதவிகள் குவியத் தொடங்கின. 1980-ம் ஆண்டு
ஏப்ரல் 12-ம் தேதி ஜகஜித் சிங் சௌஹான், இந்திரா காந்தியை சந்தித்து
பேசினார். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, தேசிய காலிஸ்தான்
கவுன்சிலை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார். அதன் தலை வராக தன்னையும்,
பொதுச் செயலாளராக பல்பீர் சிங் சந்து என்பவரையும் அறிவித்தார். 1980-ம்
ஆண்டு மே மாதம் சௌஹான், லண்டன் சென்றார். அங்கு, காலிஸ்தான் என்ற தனிநாடு
உதயமானதாக அறிவித்தார். அதேபோன்ற அறிவிப்பை அமிர்தசரஸில் சந்துவும்
வெளியிட்டார். அதோடு, காலிஸ்தான் நாட்டுக்கான தனி ரூபாய் நோட்டு,
ஸ்டாம்ப்கள் வெளியிடப்பட்டன. காலிஸ்தான் பற்றிய பகிரங்க அறிவிப்புகளுக்குப்
பிறகும் சௌகான் மற்றும் சந்து ஆகியோர் மீதோ அவர்களது அமைப்பின் மீதோ,
அப்போதிருந்த காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து,
காங்கிரஸின் கண்மூடித்தனமான போக்கை அகாலி தளத் தலைவர் லோங்கோவால் கடுமையாக
கண்டித்தார்.
1977-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பஞ்சாபில்
காங்கிரஸைத் தோற்கடித்தது அகாலி தளம். அதையடுத்து, பஞ்சாபில் காங்கிரஸ் வளர
வேண்டுமானால், அகாலி தளம் கட்சியை உடைக்க வேண்டும் என காங்கிரஸ்
திட்டமிட்டது. அதற்கு ஆயுதமாக அடையாளம் காணப்பட்டவரே பிந்தரன்வாலே. தீவிர
மதப்பற்றுமிக்க குடும்பத்தில் பிறந்து பஞ்சாபின் புகழ்பெற்ற சமயப் பள்ளியான
தம்தாமி தக்ஸால்சில் படித்தவர் பிந்தரன்வாலே. சமயப் பள்ளியான தம்தாமி
தக்ஸாலின் தலைவராக இருந்தார். பிந்தரன்வாலேயைக்கொண்டு சீக்கிய இளைஞர்களை
மனமாற்றம் செய்யத் தொடங்கியது காங்கிரஸ். நிரங்காரி பிரிவைச்
சேர்ந்தவர்களுக்கும் அகண்ட் கீர்த்தனி பிரிவுக்கும் இடையே, 1978-ம் ஆண்டு
மோதல் ஏற்பட்டது. அகண்ட் கீர்த்தனியைச் சேர்ந்த 13 பேர் வெட்டிக்
கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பஞ்சாபில் மதக் கலவரம் வெடித்தது.
No comments:
Post a Comment