Search This Blog

Wednesday, May 22, 2013

எனது இந்தியா ( இடைக்கால அரசாங்கமும் கல்கத்தா கலவரமும் !) - எஸ். ரா...

1945ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி இந்திய வைஸ்ராய் வேவல், ரேடியோவில் ஓர் உரை நிகழ்த்தினார். அதில், ''இந்திய மக்களுக்கு விரைவில் முழு சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள மத்திய, மாநில சட்டசபைத் தேர்தல்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்களைக்கொண்டு ஓர் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும். விரைவில், அரசியல் நிர்ணய சபை முறையாக உருவாக்கப்படும்'' என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை அவர் இங்கிலாந்து பிரதமர் ஆட்லியை சந்தித்துவிட்டு வந்த பிறகே அறிவித்தார். இதே அறிவிப்பு லண்டன் ரேடியோவில் பிரதமர் ஆட்லியாலும் அறிவிக்கப்பட்டது. இப்படி ஓர் அறிவிப்பை பிரிட்டிஷ் வெளியிடுவதற்கு வலிமையான காரணங்கள் இந்தியாவில் உருவாகியிருந்தன. அதுவரை தங்கள் கட்டுக்குள் இருந்த இந்திய மக்கள் இனிமேலும் தங்களை சகித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் என்பதைப் பிரிட்டிஷ்காரர்கள் நன்றாக உணர்ந்திருந்தனர். பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் அடித்தளங்கள் நொறுங்கிவருவதைக் கண்ட அரசு, முள்ளைக்கொண்டு முள்ளை எடுப்பதைப் போல தங்களின் ஆசைகளை இந்தியர்களைக்கொண்டே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது. அதன் விளைவே இந்த அறிவிப்பு. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறப்போவதன் முதல் படிதான் இந்த அறிவிப்பு என்று பலரும் கருதினர்.


இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது கப்பற்படை எழுச்சி. 1946-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி திங்கள்கிழமை மும்பை கடற்கரையில் இருந்த எச்.எம்.ஐ.எஸ். 'தல்வார்’ என்ற கப்பற்படையின் பயிற்சிக் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் ஒன்றுகூடி கப்பலின் கொடிக் கம்பத்தில் பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் கொடியை இறக்கினர். அதற்கு மாற்றாக காங்கிரஸின் மூவர்ணக் கொடி, முஸ்லீம் லீக்கின் பச்சை நிறக் கொடி, கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி ஆகியவற்றை ஒருசேரக் கம்பத்தில் பறக்கவிட்டனர்.

இந்தச் செய்தி வேகமாகப் பரவியது. ஒவ்வொரு கப்பலிலும் இதே நிலைமை உருவாகத் தொடங்கியது. மறுநாள் காலை, வேலைநிறுத்தம் செய்த மாலுமிகள் பம்பாய் மாநகரத் தெருக்களில் ஊர்வலம் சென்றனர். இந்தப் போராட்டக் குழுவுக்கு எம்.எஸ்.கான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தியக் கப்பற்படை எழுச்சிகொண்டது என்றாலும், இதன் அடிப்படையாக அமைந்தது சுதந்திர தாகமே. கப்பற்படை வீரர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலை ஏற்று, லட்சக்கணக்கில் மாணவர்களும் தொழிலாளர்களும் போராட்டத்தில் இறங்கினர். பம்பாய் மாநகரமே ஸ்தம்பித்தது. பிரிட்டிஷ் அரசு, பம்பாயை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடும் முயற்சி செய்தது. பீரங்கிகளும் துப்பாக்கிகளும் குவிக்கப்பட்டன. மக்கள் எழுச்சியை இரும்புக் கரம்கொண்டு அடக்க முயன்றது பிரிட்டிஷ் அரசு.


இதனால், இரண்டு நாட்களில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிழந்தனர். காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும் இந்தக் கிளர்ச்சியை நிறுத்துமாறு அறிக்கைகள் வெளியிட்டன. மாலுமிகள் உடனே சரணடையுமாறும், அவர்கள் பழிவாங்கப்படாமல் இருக்க காங்கிரஸ் துணை நிற்கும் என்றும் வல்லபாய் படேல் கூறினார். இறுதியாக, 'நாங்கள் இந்தியாவிடம் சரணடைகிறோம். பிரிட்டனிடம் அல்ல’ என கப்பற்படை வேலைநிறுத்தக் கமிட்டி சரணடைந்தது. மாலுமிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு கடுமையான சிறைத் தண்டனைக்கு ஆளாகினர். அதன்பிறகே, இந்தி யாவில் ஓர் இடைக்கால அரசு அமைப்பது என்ற எண்ணம் இங்கிலாந்தில் உருவானது.

1946-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி, இந்தியத் தலைவர்களோடு பேசுவதற்கு கிரிப்ஸ், லாரன்ஸ், அலெக்சாண்டர் ஆகியோர் அடங்கிய கேபினட் மிஷனை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தார் பிரிட்டிஷ் பிரதமர் அட்லி. இடைக்கால அரசு அமைப்பது என்றும் அதற்காக அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கத் தேவையான ஒரு குழு அமைப்பது என்றும் அந்தக் கமிஷன் முடிவுசெய்தது. அதன் வழிகாட்டலில் மூன்று அடுக்குகளால் ஆன ஓர் அரசியலமைப்பு முன்வைக்கப்பட்டது.  அதன்படி, தகவல் தொடர்பு, ராணுவம், அயல்நாட்டு விவகாரம் போன்றவற்றைக் கவனிக்க மத்திய அரசாங்கம் என்றும், அடுத்ததாக மாநிலங்கள் என்றும், மூன்றாவதாக சமஸ்தானங்கள் என்றும் வரையறை செய்யப்பட்டது.  இதில், சமஸ்தானங்கள் தங்கள் விருப்பப்படி அரசாங்க அமைப்புகளுடன் சேர்ந்துகொள்ள உரிமை வழங்கப்பட்டது. காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் இதர சிறுபான்மையினர் பிரதிநிதிகளுடன் வைஸ்ராய் ஆலோசனை நடத்தி ஓர் இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்த முயற்சித்தார். முஸ்லிம் லீக், காங்கிரஸுக்கு இணையான பிரதிநிதித்துவம் வேண்டும் என்றது. மேலும், முஸ்லிம் பிரதிநிதிகளைத் தேர்தெடுக்கும் உரிமை தனக்கே வேண்டும் என வலியுறுத்தியது. காங்கிரஸ் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கிடையில், எங்கள் குறிக்கோள் தனி பாகிஸ்தானே என முஸ்லிம் லீக் அறிவித்தது. இந்த நிலையில்தான், இடைக்கால அரசு அமைப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த தலைவர்கள், தேர்தலை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், சதி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தவர்களை விடுவிக்கவில்லை. முதலில், மத்திய சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 102 இடங்களில், காங்கிரஸ் 57 இடங்களில் வெற்றி பெற்றது. முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முஸ்லிம் லீக் 30 இடங்களைப் பிடித்தது. சுயேச்சைகளுக்கு 5 இடங்களும் சீக்கியர்​களுக்கு 8 இடங்​களும் கிடைத்தன.
மாநிலச் சட்டசபைகளுக்கு 1946-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை தேர்தல் நடத்தப்பட்டது. சென்னை மாகாணம், மும்பை, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒரிசா, அசாம், பீகார் ஆகிய ஏழு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதாகக் கருதப்பட்ட சிந்து, வடமேற்கு எல்லை, வங்காளம், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் காங்கிரஸுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் முஸ்லிம் லீக்குக்கும் அங்கே பெரும்பான்மை கிடைக்கவில்லை.

சென்னை மாகாணத்தில் டி.பிரகாசம் தலைமையில் காங்கிரஸ் மந்திரிசபை பதவியேற்றது. இந்த மந்திரிசபையில் ருக்மணி லட்சுமிபதி (சுகாதாரம்), வி.வி.கிரி (தொழில்), கே.கோடி ரெட்டி (வரி), டேனியல் தாமஸ் (உள்ளாட்சி, டிராம் போக்குவரத்து), கே.ஆர்.காந்த் (வருவாய்), எம்.பக்தவத்சலம் (பொதுப் பணி), பி.எஸ்.குமாரசாமி ராஜா (வேளாண்மை), டி.எஸ்.அவினாசி லிங்கம் (கல்வி), வி.கூர்மையா (செய்தி, அரிஜன முன்னேற்றம்), வி.வீராசாமி (கைத்தொழில்), ராகவ மேனன் (போக்குவரத்து) ஆகியோர் அமைச்சர்களாக இடம்பெற்றனர்.

1946-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி மத்தியில் இடைக்கால மந்திரிசபை அமைக்க நேருவை அழைத்தார் வைஸ்ராய். மந்திரி சபையில் முஸ்லிம் லீக்குக்கு 5 இடங்கள் உண்டென்றும் அதை எப்போது வேண்டுமானாலும் நிரப்ப ஜின்னாவுக்கு உரிமை உண்டு என்றும் வைஸ்ராய் அறிவித்தார். மந்திரிசபை அமைக்க வைஸ்ராய் தன்னிச்சையாக நேருவை அழைத்ததை அறிந்து, ஜின்னா மிகவும் கோபம் அடைந்தார். இந்தச் செயல் மூலம் முஸ்லிம் சமுதாயத்தை வைஸ்ராய் மிகவும் அவமதித்துவிட்டதாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். அத்துடன், நேருவின் தலைமையில் அமையவிருப்பது இந்துக்களின் ஆட்சி. அது, தங்களுக்கு ஏற்புடையது இல்லை எனக் கண்டனம் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆகஸ்ட் 16-ம் தேதியை நேரடி நடவடிக்கை நாளாக முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.

'நேரடி நடவடிக்கை நாள்’ அன்று இந்தியாவின் பல இடங்களிலும் கல​வரங்கள் ஏற்பட்டன. கல்கத்தாவில்தான் உக்கிரமாக இருந்​தது. கொலை, கொள்ளை, தீ வைப்பு, கற்பழிப்பு என கல்கத்தா முழுமை​யாகச் சூறையாடப்பட்டது. கொத்துக்கொத்தாக மனிதர்கள் சாலையோரங்களில் செத்துக்கிடந்தனர். சடலங்களைப் புதைப்பதற்குக்கூட வழியில்லாத நிலை உருவானது. இந்தக் கலவரம், இந்திய வரலாற்றில் ஒரு மறக்க முடியாத படிப்​பினையை ஏற்படுத்தியது. கல்கத்தா கலவரத்துக்கு இரண்டு முக்கியக் காரணங்​களைக் கூறுகின்றனர். ஒன்று, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் ஆகியவற்றுக்கு இடையே உருவாகி வளர்ந்த கசப்பு உணர்ச்சி. மற்றொன்று, வங்காளத்தின் கிழக்குப் பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாகவும் மேற்குப் பகுதியில் இந்துக்கள் அதிகமாகவும் வாழ்கின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்டு இருந்த வியாபாரப் போட்டிகள், வேறுபாடுகள், மதவாதிகளால் தூண்டி​விடப்​பட்டு இந்த கலவரத்துக்​கான விதை விதைக்கப்பட்டது என்​கின்றனர்.

ஆகஸ்ட் 16-ம் தேதி கல்கத்தாவில் வன்முறை வெடிக்கக்கூடும் என, போலீஸ் அதிகாரிகள் அரசிடம் முன்னெச்​சரிக்கை செய்தனர். இதையட்டி, தலைமைச் செயலாளர் ஆர்.எல்.வாக்கர், கவர்னரைச் சந்தித்து 16-ம் தேதி பொது விடுமுறை அளித்துவிட்டால் கலவரத்தைக் கட்டுப்படுத்திவிடலாம் என்ற யோசனை​யைத் தெரிவித்தார். ஆனால், அப்படி பொது விடுமுறை அளிப்பது கலவரத்தை மேலும் தூண்டுவதற்கு வழிவகுத்துவிடும், ஓய்வில் இருப்பவர்கள் பெரும் திரளாக வந்து கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்று காங்கிரஸ் எதிர்த்தது. ஆனால், 16-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கவில்லை என்றால் வணிக வளாகங்கள் போக்குவரத்து ஆகியவை பெரிதும் பாதிக்கப்படும் எனக் கருதிய கவர்னர், விடுமுறை அறிவிப்பை வெளியிட்டார். அதே நேரம், முஸ்லிம் லீக் நாடு முழுவதும் அன்று ஹர்த்தால் நடைபெற வேண்டும் என்றும் அதன் முடிவில் பெரிய பேரணி நடத்தப்போவதாகவும் அறிவித்தது. இந்த எதிர்ப்பு தினத்தை, ஒரு பகிரங்க யுத்த தினமாகவே லீக் தலைவர்கள் அறிவித்தனர்.

No comments:

Post a Comment