Search This Blog

Saturday, May 18, 2013

டாக்டர் ராமதாஸ் - ஓ பக்கங்கள், ஞாநி

அன்புள்ள டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு,


வணக்கம். மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், என் மீது நீங்கள் வைத்திருந்த மதிப்பினால் வீடு தேடி வந்து என்னுடன் ஒரே கட்டிலில் அமர்ந்து மூத்த உறவினர் போல தயக்கமும் இன்றி மூன்று மணி நேரம் உரையாடியது என் மனத்தில் இன்னமும் பதிந்திருக்கிறது. விடை பெற்று காரில் ஏறியதுமே நீங்கள் தன்னிச்சையாகப் பாதுகாப்பு பெல்ட்டை அணிந்ததை நான் வியந்து பாராட்டியதும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

சமூகத்தில், ஆழமான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குடன் நீங்கள் சங்கம் தொடங்கிய நாள் முதல் கட்சி வளர்த்த நாள் வரை என்னவெல்லாம் செய்து வந்திருக்கிறீர்கள் என்று கோப்புகள், ஆவணங்கள் உதவியோடு அன்று எனக்கு விளக்கினீர்கள். சினிமாவைச் சார்ந்திராத தொலைக்காட்சி நடத்துவது, தாய்மொழிக் கல்வி, அரசின் நிதி நிலை அறிக்கைக்கு துறை வாரியாக மாற்று யோசனை அறிக்கைகள், பூரண மதுவிலக்கு என்று நீங்கள் அன்று சொன்ன உங்களின் பல கொள்கைகள் எனக்கும் உடன்பாடானவையே. அனைத்தையும் விட வட தமிழகம் முழுவதும் நீங்களும் தொல். திருமாவளவனும் சேர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் வாயிலாக கடந்த சுமார் பத்தாண்டுகளாக ஏற்படுத்தியிருக்கும் சாதி சமரச அமைதி உணர்வு மகத்தானது. ஏனென்றால் வன்னியர்களை நான் ஆதிக்க சாதியாகக் கருதியதில்லை. தீண்டாமை என்ற ஒற்றை அம்சத்தைத் தவிர வன்னியரும் தாழ்த்தப்பட்டோரும், ஒரே அடித்தள வாழ்நிலையில்தான் வட தமிழகத்தில் வாழ்கிறார்கள். அதை அந்த மண்ணின் மைந்தனான நான் நேரடியாக அறிவேன். இந்த இரு பிரிவினரும் அரசியல்ரீதியாக ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்த வட்டாரத்தில் வேறு எந்த அரசியல் சக்தியும் ஆதிக்க சாதியும் தேர்தல் அரசியலில் வீழ்த்தவே முடியாது என்ற உண்மையையும் நாம் விவாதித்தோம். ஆனால் நீங்களோ, தாழ்த்தப்பட்ட சாதியினர் தம் கட்சி ஆதரவுடன் சாதி மறுப்பு கலப்புத் திருமணம் என்ற பெயரால் காதல் நாடகங்கள் நடத்தி மிரட்டிப் பணம் பறிப்பதை எதிர்க்கவே ஓர் உயர் சாதிக் கூட்டமைப்பை ஏற்படுத்தியதாகப் புரியவைக்க முயற்சித்தீர்கள்.  விடலைக் காதலை, காதல் நாடகங்களை, மிரட்டிப் பணம் வசூலிக்கும் கட்டப் பஞ்சாயத்தை நானும் ஆதரிக்கவில்லை; மனிதநேயமும் சமத்துவமும் விரும்பும் எவரும் ஆதரிப்பதில்லை. ஆனால் நீங்கள் காண மறுக்கும் உண்மை, இந்த அட்டூழியங்கள் எல்லாம் ஏதோ ஒரு சாதியினர் மட்டும் செய்பவை அல்ல. இப்படி செய்வோர் எல்லா சாதிகளிலும், கட்சிகளிலும் - உங்கள் கட்சி உட்பட இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரையும் நம் சமூகம் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதுதான் தீர்வே தவிர, பழியை ஒற்றைச் சாதி மீது மட்டும் போட்டு இதர சாதிகளை ஓரணி திரட்டும் முயற்சி தவறானது என்பதை உங்களிடம் சொன்னேன். இதனால் என்ன ஆயிற்று? சாதி சங்கத்தலைவர் என்ற குறுகிய வட்டத்திலிருந்து எல்லாருக்குமான பொதுவான அரசியல் தலைவர் என்ற பிம்பத்தைப் பெறத் தொடங்கிய நீங்கள் மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கே போய்ச் சேர்ந்துவிட்டீர்கள். எப்படிப்பட்ட வீழ்ச்சி இது உங்களுக்கு! பொது மேடையிலும் தனிப் பேச்சிலும் கண்ணியமாக, கறாராகப் பேசுபவர் என்ற பிம்பம் நொறுங்கி, மாமல்லபுர மேடையில் உங்கள் சகா காடுவெட்டி குருவே வெட்கப்படும் அளவுக்கு அல்லவா உங்கள் பேச்சு தரம் தாழ்ந்து போயிற்று!

திராவிடக் கட்சிகளின் ஊழல் முகத்துக்கு முன்னால் இருக்கும் முற்போக்குச் சாயம் முற்றிலுமாக வெளுக்கும்வரை கூட இருந்து உங்களை வளர்த்துக் கொண்ட நீங்கள், இனி அவற்றுடன் கூட்டு இல்லை என்று அறிவித்தபின், அவற்றைவிட முற்போக்கான அமைப்புகளுடன் அல்லவா அணி சேர்ந்திருக்க வேண்டும்? நீங்களோ, திராவிடக் கட்சிகளை விட பிற்போக்கான சாதி அமைப்புகளை ஒன்றிணைத்து அதன் உடனடிப் பயனாக, சிறைக்குச் சென்றீர்கள்.  உங்களுக்கு ஒரு ரோல் மாடல் கலைஞர் கருணாநிதி. மற்றவர் செல்வி ஜெயலலிதா. இரண்டாமவரை அரசியலில் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளவே இயலாது. எம்.ஜி.ஆர். இல்லையென்றால் அவர் இல்லை. எம்.ஜி.ஆர். போன்ற செல்வாக்குடையவர் ஆசி இல்லாமல் வரும் நீங்கள் பின்பற்றியது கருணாநிதியின் ரோல் மாடலைத் தான். அவர் ஆசி வழங்க அண்ணா இல்லையென்றாலும் அரசியலில் மேலே வந்திருக்கக்கூடிய ஆற்றல் உடையவர். கலைஞரிடமிருந்து எங்கும் தமிழ், சாதிய எதிர்ப்பு, சமூக நீதி என்ற கோஷங்களையெல்லாம் எடுத்துக் கொண்ட நீங்கள், அவருடைய குடும்பப் பாசம், சுய நல அரசியல், வாரிசு ஊக்குவிப்பு, ஊழல், அராஜகம் என்ற அத்தனை எதிர்மறை அம்சங்களையும் எடுத்துக் கொண்டீர்கள். அவரை இன்று வீழ்த்திய அதே அம்சங்கள் உங்களையும் வீழ்த்திவிட்டன. மாமல்லபுரத்தில் நீங்கள் சாதி வெறியைத் தூண்டியதால் தாழ்த்தப்பட்டோர் மட்டும் பாதிக்கப்படவில்லை. உங்கள் சாதியினர் இருவரும் செத்தார்கள். அடித்தட்டில் இருக்கும் இரு சாதியினர் கைகளில் எழுது கோலைத் தர வேண்டிய மருத்துவர் நீங்கள். மனிதக் கறி வெட்ட, கத்தியைக் கொடுக்கும் கசாப்புக் கடைக் காரராகி விட்டீர்கள்.

நீங்களும் உங்களோடு சிறை புகுந்தோரும் இருக்க வேண்டிய இடம் சிறையல்ல. பல்கலைக்கழகம். சிறையிலிருந்து வெளியே வரும்போது தவறைத் திருத்திக் கொள்வீர்கள்; சாதி கூட்டமைப்பைக் கலைத்து விட்டு ஆரோக்கிய மாற்று அரசியலை முன்வைப்பீர்கள்; உங்கள் ரோல் மாடலாக இனியேனும் காந்தியையும் மண்டேலாவையும் அம்பேத்கரையும் எடுத்துக் கொள்வீர்கள் என்றெல்லாம் என்னைப் போன்ற சிலருக்கு ஒரு சிறிய நப்பாசை இருந்தது, ஆனால் நீங்கள் சாதி எனும் போதையில் அடிமையாகி விட்டீர்கள். இது அழிவுப் பாதை. உங்களையும் உங்களை நம்பி வருவோரையும் அழிக்கும். உங்களை விமர்சித்து 11.8.1996ல் ‘டாக்டருக்கு சிகிச்சை தேவை’ என்று எழுதினேன். பதினேழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நீங்கள் இப்படி நோய்வாய்ப்பட்டு சிகிச்சை தேவைப்படுபவராகி விட்டீர்கள்! உங்களைவிட மூத்தவரான கலைஞரைவிட உங்களுக்குத்தான் இப்போது அவசரமாக அரசியல் ஓய்வு தேவைப்படுகிறது. விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன். சிறை ஏற்படுத்தாத மனமாற்றத்தை மருத்துவமனையேனும் ஏற்படுத்தினால் மகிழ்வேன்.

அன்புடன்,

ஞாநி

No comments:

Post a Comment