ஈழத் தமிழர்களைப் போலவே பெரும் இன அழிப்புக்கு உள்ளான
சமூகம் ஆர்மீனியர்கள். பல லட்சம் ஆர்மீனியர்களைக் கொன்றுகுவித்த துருக்கிய
அரசு, இன்று வரை அதை இனப்படுகொலையாக ஒப்புக்கொள்ளவே இல்லை. அதே
நிலைப்பாட்டைத்தான் இலங்கையும் இன்று பின்பற்றுகிறது. ஆனால், உலக அரங்கில்
ஆர்மீனியாவின் நியாயக் குரல் அங்கீகரிக்கப்பட்டதைப் போல, ஈழத் தமிழர்களின்
குரலும் இன்று உரத்துக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. கல்கத்தா, மும்பை
மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இன்று மிகக் குறைவான எண்ணிக்கையில்
ஆர்மீனியர்கள் வசிக்கின்றனர். மொத்த இந்தியாவில் 100 ஆர்மீனியக்
குடும்பங்கள் இருக்கக்கூடும் என்கிறது ஒரு புள்ளிவிவரம். சென்னையில்
ஆர்மீனியன் தெரு இன்றும் இருக்கிறது. ஆனால், ஆர்மீனியர்கள் ஒருவர்கூட அங்கு
குடியிருப்பதாக தெரியவில்லை. ஒரு காலத்தில் இந்த நகரங்களின் வளர்ச்சிக்கு
ஆர்மீனியர்கள் பெரும் உதவி செய்திருக்கிறார்கள்.
ஏழாம் நூற்றாண்டிலே ஆர்மீனியர்கள் வணிகநிமித்தம்
கேரளாவுக்கு வந்திருக்கிறார்கள். தாமஸ் கானா என்ற வணிகர், மலபார்
கடற்கரைக்கு வந்து மிளகும் ஏலமும் மஸ்லினும் வாங்கிச் சென்றார். அவரை கனேய்
தோமன் என்று கேரள வரலாறு குறிப்பிடுகிறது. இதற்கு 700 ஆண்டுகளுக்குப்
பிறகே வாஸ்கோடகாமா கேரளக் கடற்கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். ஆகவே,
வணிக முன்னோடியான ஆர்மீனியர்கள் இந்தியாவோடு பல நூறு ஆண்டுகளாக
நல்லுறவுகொண்டவர்கள்.
கல்கத்தாவில் ஆர்மீனியர்கள் உருவாக்கிய கல்லூரி இன்றும்
நடைபெறுகிறது. அங்குள்ள கல்லறைத் தோட்டம் 1630-களில் கல்கத்தாவில் வசித்த
ஆர்மீனியர்களின் நினைவுத் தோட்டமாக விளங்குகிறது. ஆக்ரா,
சூரத், கான்பூர், குவாலியர், லக்னோ, சென்னை, கல்கத்தா, ஹைதராபாத், மும்பை
எனப் பல்வேறு நகரங்களில் ஆர்மீனியர்களின் வணிக மையங்கள் செயல்பட்டன.
இந்தியாவுக்கு வந்து தங்கி வணிகம் செய்யும்படி மொகலாய மன்னர் அக்பர்,
ஆர்மீனியர்களுக்கு அழைப்பு விடுத்தார் என்றும் அதன்படியே அவர்கள் ஆக்ராவில்
குடியேறினர் என்றும் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. அக்பரின்
ஆட்சிக் காலத்தில் ஆக்ராவில் வணிகம் செய்த ஆர்மீனியர்களுக்கு வணிக வரி
ரத்து செய்யப்பட்டது. அதனால், ஏராளமான ஆர்மீனியர்கள் இந்தியாவுக்கு வந்து
வணிகம் செய்தனர். 1562-ல் ஆக்ராவில் தேவாலயம் ஒன்றை ஆர்மீனியர்கள்
கட்டியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு மதச் சலுகை
தந்திருக்கிறது மொகலாய அரசு.
அக்பர் ஆட்சிக் காலத்தில் ஆர்மீனியர்களில் ஒருவரான
அப்துல், நீதிபதியாகப் பணியாற்றியிருக்கிறார். 1579-ம் ஆண்டு டொமிங்கோ
பைரஸ் என்ற ஆர்மீனியர், அக்பரின் பிரதிநிதியாக கோவா சென்று இயேசு சபை
பாதிரிகளை அக்பரின் சபைக்கு அழைத்து வந்திருக்கிறார்.
மரியம் என்ற ஆர்மீனியப் பெண்ணை அக்பர் திருமணம்
செய்துகொண்டார் என்றும்கூட ஒரு குறிப்பு வரலாற்றில் இருக்கிறது. மரியம்
ஜமானி பேகம் என்ற அக்பரின் மனைவி ஒரு ஆர்மீனியப் பெண். அவளது சகோதரி
ஜுலியானா, தமக்கையின் ஆதரவுடன் கிறிஸ்தவ மதப் பிரசாரம் மேற்கொண்டதுடன்
தேவாலயம் அமைப்பதிலும் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார் என்கிறார்கள்.
ஆனால், அது உண்மையில்லை. ஜுலியானா, ஒரு பெண் மருத்துவர். அவர் அந்தப்புரப்
பெண்களுக்கான சிறப்பு மருத்துவராகப் பணியாற்றியவர். அவரது முயற்சியே
தேவாலயம் உருவாகக் காரணமாக அமைந்தது என்கிறது யேசுசபை குறிப்பேடு.
ஆறாம்
ஹென்றியின் அரசகுடும்பத்து வம்சாவழியான பிரெஞ்சு இளவரசர் ஜான் பிலிப்
போர்பன், 1560-களில் நாடு கடத்தப்பட்டு ஒரு மதத் துறவியுடன் கப்பலில்
சென்னை வந்து சேர்ந்தார். அவர் அடைக்கலம் கேட்பதற்காக ஆக்ரா சென்று
அக்பரைச் சந்தித்தார். அரச வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ஆதரித்த
அக்பர், ஆக்ராவில் அவர் தங்குவதற்கான வசதி செய்து தந்ததோடு உரிய பதவியும்
வழங்கினார். அவரே அந்தப்புர மருத்துவரான ஆர்மீனியப் பெண் ஜுலியானாவை
திருமணம் செய்துகொண்டவர். இவரது வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் ஆக்ராவிலும்
போபாலிலும் வசித்து வந்தனர். போர்பன், அக்பரின் ஆட்சியில் முக்கியப்
பிரமுகராகக் கருதப்பட்டார். அவர் இயேசுசபை பாதிரிகளுடன் இணைந்து கிறிஸ்தவ
ஊழியங்களைச் செய்துவந்தார் என்கிறது மொகலாய வரலாறு.
அக்பரை மணந்துகொண்ட மரியம், ஆர்மீனியப் பெண் கிடையாது.
அவள் ஒரு இந்துப் பெண் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் நீரஜ் கபூர். ஆனால்,
வில்லியம் ஹன்டர் என்ற வரலாற்று அறிஞர், மரியா என்ற பெயரில் அக்பரின் மனைவி
இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அது மரியம்தான். அவரது கல்லறை
பதேபூர் சிக்ரியில் இன்றும் இருக்கிறது என்கிறார். ஆசியாடிக் சொசைட்டியில்
இதுகுறித்து சொற்பொழிவு செய்த எப்.ஹுஸ்டைன், மரியம் ஜமானி பேகம் ஒரு
ஆர்மீனியப் பெண்ணே என்று சான்றுகளுடன் குறிப்பிடுகிறார். இதுகுறித்து
மேலும் ஆராய்ச்சி செய்த எப்.ஹுஸ்டைன், ஸ்டேட்ஸ்மேன் இதழில் ஒரு விரிவான
கட்டுரை எழுதியிருக்கிறார்.
அதில், அக்பர் தனது கிறிஸ்தவ மனைவி மரியாவுடன்
அமர்ந்திருக்கிற வண்ண ஒவியம் ஒன்றைச் சான்றாக காட்டுகிறார். அந்த
ஓவியத்தில் புகைக்குழலைப் பிடித்தபடி அக்பர் அமர்ந்திருக்கிறார்.
அவருக்கு அருகில் சிலுவை மாலை அணிந்த பெண் ஒருத்தி இருக்கிறாள். அது,
மரியம் பேகமே என்று குறிப்பிடுகிறார் ஹுஸ்டைன். ஆனால், அந்த ஓவியம்
பிற்காலத்தைச் சேர்ந்தது. அது மரியம் பேகம் இல்லை என்று மறுத்திருக்கிறார்
டெல்லி அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த பெர்சி பிரௌன். இதற்கிடையில்,
நீதிபதியாக இருந்த அப்துல் ஹை, தனது மகளை அக்பருக்குத் திருமணம்
செய்துகொடுத்ததாக அக்பரின் அரசசபைக் குறிப்புகள் கூறுகின்றன. ஆகவே, அக்பர்
ஆர்மீனியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டது உண்மையே என்கின்றன ஆர்மீனிய
வரலாற்று சாட்சியங்கள். இந்த சர்ச்சை இன்றும் நீடிக்கிறது.
அக்பர் காலத்தில், வணிகம் செய்வதற்காக ஆக்ரா நகருக்கு
வந்த இஸ்கந்தர் என்ற வணிகர், அக்பரோடு நெருங்கிய நட்புடன் இருந்தார்.
அவரது மகனை அக்பர் தனது வளர்ப்புப் பிள்ளை போல அரண்மனையில் வளர்த்தார்.
அந்தப் பையனின் பெயர் மிர்ஸா உல் குவார்னின். அவருக்குப் பல மொழிகள்
பேசவும் எழுதவும் தெரியும் என்றும், கவிஞராகவும் பாடகராகவும் இருந்த
மிர்ஸா, அரசரின் நெருக்கமான தோழன் என்கிறார்கள். உப்பு வரி வசூல் செய்யும்
அதிகாரியாக இருந்த மிர்ஸா, கவர்னராகவும் உயர்ந்திருக்கிறார்.
1596-ல் பாதர் ஜெரோம் சேவியர் எழுதிய கடிதம் ஒன்றில்,
அக்பரின் கிறிஸ்தவ மனைவி பொதுமக்கள் முன்னிலையில் தனது வளர்ப்புப்
பிள்ளையான மிர்ஸாவுக்கு தங்க நகை ஒன்றை அணிவித்து அழகு பார்த்தார், அது
ஆர்மீனியர்களுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இளவரசர் ஷாஜகான், மிர்ஸாவின் குடும்பத்துடன் நெருங்கிப்
பழகியிருக்கிறார். மிர்ஸா உடல்நலமற்று இருந்த நாட்களில் அவரைக் காண்பதற்கு
ஷாஜகான் தானே ஆர்மீனியக் குடியிருப்புக்குச் சென்றிருக்கிறார். இளவரசரை
வரவேற்பதற்காகப் பெரிய மணியை முழங்கியிருக்கிறார்கள், அந்த மணியோசை
பிடிக்காத ஷாஜகான், மணியைப் பறிமுதல் செய்து யானை கழுத்தில் கட்டிவிடும்படி
உத்தரவிட்டு இருக்கிறார். மறு நிமிடமே ஆர்மீனியக் குடியிருப்பில் இருந்த
மணி அகற்றப்பட்டு யானையின் கழுத்தில் அணிவிக்கப்பட்டதாக வெர்னியரின்
பயணக்கு றிப்பு தெரிவிக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த மணி
மிகப் பிரம்மாண்டமானது. அவ்வளவு எடை உள்ள மணி யானையின் கழுத்தில்
தொங்கியதால் அது நடக்க சிரமப்பட்டது, அந்த அவஸ்தையைக் கண்ட ஷாஜகான்,
கோபத்தில் பிறப்பித்த உத்தரவை மாற்றி ஆர்மீனியர்களுக்கே அந்த மணியைத்
திரும்பத் தந்துவிட்டார். அந்த நிகழ்வு ஆர்மீனியரான மிர்ஸாவின் உடல்நலம்
மீது இளவரசர் ஷாஜகானுக்கு இருந்த அக்கறையின் நிதர்சனமான சாட்சி
என்கிறார்கள்.
ஆக்ரா போலவே முக்கியத் துறைமுக நகரமான சூரத்திலும்
ஆர்மீனியர்களுக்கு எனத் தனி குடியிருப்பு இருந்தது. சூரத் நகரில் இரண்டு
முக்கியத் தேவாலயங்களை ஆர்மீனியர்கள் கட்டியிருக்கிறார்கள். ஆர்மீனிய
மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் அந்த தேவாலயத்தில் இருக்கின்றன.
ஒளரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் சர்மாத் எனப்படும் ஆர்மீனியத் துறவி
மிகப் பிரபலமாக இருந்தார். அவரது ஞானமொழிகளைக் கேட்பதற்கு மக்கள் திரண்டு
வருவர். 18-ம் நூற்றாண்டில், வங்காளத்தின் புகழ்பெற்ற வணிகர்கள்
ஆர்மீனியர்களே. அவர்களே வங்கத்தின் பொருளாதாரப் பலத்தைத்
தீர்மானிப்பவர்களாக இருந்தனர். ஜே.சி.கேல்ஸ்டன் என்ற ஆர்மீனியல் கட்டுமானப்
பொறியாளர் அழகிய வடிவமைப்புடன் 350 வீடுகளை தெற்கு மற்றும் மத்திய
கல்கத்தாவில் கட்டியிருக்கிறார். ஆர்தூன் ஸ்டீபன் என்ற வணிகர்தான்
கல்கத்தாவில் முதன்முறையாக ஐந்து மாடிக் கட்டடம் கட்டியவர். அது, பார்க்
வீதியில் அமைந்திருந்தது. அதை பின்னாளில் ஓபராய் விலைக்கு வாங்கி ஹோட்டலாக
மாற்றினார்.
கல்வியைப் போலவே மருத்துவத்தில் ஆர்மீனியர்கள்
முன்னோடிகளாக விளங்கினர். ஜோசப் மார்க்ஸ் ஜோசப் என்ற மருத்துவர், 1852-ல்
பிரிட்டிஷ் படைப் பிரிவின் முக்கிய மருத்துவராகப் பணியாற்றினார். அவரைப்
போலவே, காலரா பாதித்த இடங்களுக்குச் சென்று மருத்துவ சேவை செய்த ஸ்டீபன்
மோனக்கும் ஓர் ஆர்மீனியரே. ஆர்தர் ஜோரப் என்ற ஆர்மீனிய மருத்துவர், கண்புரை
நோய்க்கு புதிய அறுவைசிகிச்சை முறையைக் கண்டுபிடித்தார். அது, பெரிய
வெற்றி பெற்றது. இன்று வரை அந்த சிகிச்சை முறை ஜோரப் அறுவைசிகிச்சை என்றே
அழைக்கப்படுகிறது. ஆர்மீனியர்களைப் பற்றி குறிப்பிடும்போது எப்போதுமே
மாதுளம் பழத்தை உதாரணமாகச் சொல்கிறார்கள். மாதுளை முத்துகளைப் போல அவர்கள்
ஒன்றாகச் சேர்ந்து வாழ்பவர்கள். அமைதியான வாழ்க்கை நடத்துபவர்கள்.
தங்களுக்கெனத் தனியான பண்பாடும் சடங்குகளும்கொண்டவர்கள். கிறிஸ்தவ
சமயத்தைத் தழுவிய நாடுகளில் முன்னோடி, ஆர்மீனியா. ஆர்மீனியர்கள் கலையிலும்
மத ஈடுபாட்டிலும் அதிக அக்கறைகொண்டவர்கள்.
அலெக்சாண்டருடன் ஆர்மீனியர்கள் இந்தியாவுக்கு வந்தனர்
என்றும் ஒரு குறிப்பு இருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் கல்கத்தாவுக்கு வந்த
ஆர்மீனியர்கள், அங்கிருந்து சென்னைக்கும் வரத் தொடங்கினர். 17-ம்
நூற்றாண்டில் சென்னையின் புகழ்பெற்ற வணிகர்கள் ஆர்மீனியர்களே. ரோம
சாம்ராஜ்யத்துக்கு முன்பே ஆர்மீனியா, கிறிஸ்தவ தேசமானது. அதற்குக் காரணம்,
ஆர்மீனிய மலைச் சிகரமான ஆராரட் மலையின் மீதுதான் மகாபிரளயத்துக்குப் பிறகு
நோவாவின் கப்பல் கரைதட்டி நின்றது என்ற நம்பிக்கை. இன்றும் அந்த மலையின்
மீது நோவாவின் படகின் மிச்சங்கள் இருப்பதாக ஆர்மீனியர்கள் நம்புகிறார்கள்.
அந்த வகையில், ஆராரட் அவர்களது புனித மலையாகும். அதைப் புனித ஸ்தலமாக
வழிபடுகின்றனர்.
ஆர்மீனியர்கள், கிறிஸ்துமஸை டிசம்பர் மாதம் 25-ம் தேதி
கொண்டாடுவதில்லை. மாறாக, அவர்கள் ஜனவரி 6-ம் தேதியை கிறிஸ்துமஸ் தினமாகக்
கொண்டாடுகின்றனர். அதுதான் பண்டைய வழக்கம் என்றும் கி.பி. 325-ல்தான்
டிசம்பரில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் முறை அமலுக்கு வந்தது என்றும்
ஆர்மீனியர்கள் கூறுகின்றனர். ஆர்மீனியாவின் தலைநகரம், எரவான். அது, கிரேக்க
நகரங்களைப் போல உன்னதமான நாகரிகமும் கலாசார மேன்மையும் கொண்டது. 1915-ம்
ஆண்டு துருக்கிய அதிகாரிகள், ஏராளமான ஆர்மீனியர்களை கான்ஸ்டான்டி நோபிள்
நகரில் இருந்து வெளியேற்றினர். தனிமைப்படுத்தி பல நூறு மைல் நடக்கச் செய்து
அவர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்தனர். ஆர்மீனிய இனப்படுகொலையே
உலகின் மிகப் பெரிய மனிதப் பேரழிவு. ஒன்றரை லட்சம் ஆர்மீனியர்கள்
கொல்லப்பட்டனர். சிரியா பாலைவனத்தில் ஆர்மீனியர்கள்
விரட்டியடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். ஆர்மீனிய நகரங்கள்
எரிக்கப்பட்டன. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அமைதியான ஓர் இனம் அதிகார
வெறியால் அழிக்கப்பட்டது.
நிறைய விபரங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.
ReplyDelete