பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து
பங்காளதேஷ் என்ற பெயரில் தனிச் சுதந்திர நாடாக்கித் தந்ததில் இந்தியாவின்
பங்கு முக்கியமானது. இந்தியப் பிரிவினையின் குளறுபடிகளில் ஒன்று,
வங்கதேசத்தை பாகிஸ்தானுடன் இணைத்தது. கிழக்கு பாகிஸ்தானுக்கும் மேற்கு
பாகிஸ்தானுக்கும் இடையில் 1,600 கிலோமீட்டர் இடைவெளி உள்ளது. இந்த இரண்டு
பகுதிகளுக்குள் எவ்விதமான போக்குவரத்து நடைபெற்றாலும் அது இந்தியாவின்
வழியாகவே நடைபெற வேண்டும். மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான்களை இஸ்லாமிய
மதம் ஒன்றுபடுத்திவைத்திருந்தபோதும் மொழி அவர்களைப் பிரித்துவைத்திருந்தது.
மேற்கு பாகிஸ்தானில் வசிப்பவர்கள் உருது பேசுபவர்கள். கிழக்கு
பாகிஸ்தானில் வசித்தவர்களோ வங்க மொழி பேசுபவர்கள். ஆகவே, அவர்களுக்குள்
மொழி சார்ந்த பிரிவினை இயல்பாகவே இருந்தது.
ஒன்பதாம் நூற்றாண்டில்தான் வங்கத்தில் இஸ்லாம்
அறிமுகமானது. டெல்லி சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில், பக்தியார்
கில்ஜியின் படையெடுப்பு காரணமாக, மரபான இந்து ராஜ்ஜியப் பரிபாலனத்தை
இழந்தது வங்கம். அதன் தொடர்ச்சியாக, இஸ்லாமியமயமாக்கம் வங்கத்தில்
பரவலானது. மொகலாயர்கள் காலத்தில் வங்கம் முழுமையாக அவர்கள் வசமானது.
ஒன்றிரண்டு சிற்றரசுகள் மட்டுமே திரைசெலுத்தி ஆண்டுவந்தனர். 15-ம்
நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் தங்களது வணிக முயற்சிகளுக்காக
வங்கத்தில் களமிறங்கினர். ஆனால், அவர்களால் அங்கே வேர்விட முடியவில்லை.
ஒளரங்கசீப் காலத்தில் வங்கத்தின் நவாப் ஒருவர் தன்வசமிருந்த மூன்று
கிராமங்களையும் அதை ஒட்டிய நிலப்பரப்பை முழுமையும் பிரிட்டிஷ்காரர்களுக்கு
விற்றுவிட்டார். அப்படி விற்கப்பட்ட ஊர்களில் ஒன்றுதான் கல்கத்தா.
பிரிட்டிஷ் வணிக முயற்சிகளுக்கு கல்கத்தா ஆதாரப்புள்ளியாக விளங்கியது.
கல்கத்தா துறைமுகத்தை தனது தலைமைக் கேந்திரமாகக்கொண்டு செயல்படத் தொடங்கிய
கிழக்கிந்தியக் கம்பெனி, உள்ளுர் அரசியலிலும் தலையிட்டு கொஞ்சம் கொஞ்சமாக
அதிகாரத்தைக் கைப்பற்றி வங்கத்தை ஆளத் தொடங்கியது. வங்கத்தை இரண்டாகப்
பிரித்து கூறுபோட்டது கிழக்கிந்தியக் கம்பெனி. அதன் இறுதிக் கட்டமே இந்திய-
பாகிஸ்தான் பிரிவினை. முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளைப் பிரிக்க
வேண்டும் என்று குரல் எழுப்பியபோது, இந்தியாவோடு நெருக்கமாக உள்ள
வங்கத்தைப் பிரித்து பாகிஸ்தானோடு இணைக்கக் கூடாது என்ற எதிர்ப்புக்
குரல்கள் எழுந்தன. ஆனால், ஜின்னா அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
பாகிஸ்தான் தனிநாடாக உதயமானது. அதன் கிழக்குப் பகுதியாக
மாறிய கிழக்கு வங்கம், ஆட்சி அதிகாரம் தங்களை இரண்டாம்தரப் பிரஜைகள்போல
நடத்துகிறது என்பதை உணர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம் வங்க மொழியை ஆட்சி
மொழியாக பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ள மறுத்ததுதான். பணம் மற்றும் நாணயங்களில்
வங்க மொழி இடம்பெறவில்லை. அரசாணைகளில் வங்க மொழி புறக்கணிக்கப்படுகிறது
என்ற எதிர்ப்புக் குரல்கள் 1948-ல் உரத்து ஒலிக்கத் தொடங்கின. குறிப்பாக,
டாக்கா பல்கலைக்கழகத்தில் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதற்கு எதிரான
போராட்டத்தில் குதித்தனர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவத்
தலைவர்களில் ஒருவரே முஜிபுர் ரஹ்மான். போலீஸார் கடுமையான தாக்குதல் நடத்தி
போராட்டத்தை ஒடுக்கினர்.
மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு சித்ரவதைசெய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, முக்கிய அரசியல் தலைவர்களும் வங்க மொழிப் பிரச்னைக்குக்
குரல் கொடுக்கத் தொடங்கினர். பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழியாக வங்க மொழி
இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட அரசியல்
எழுச்சியை பாகிஸ்தான் இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கியது.
டாக்கா நகருக்கு வந்த ஜின்னா, உருது மொழி மட்டுமே
பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கும், வங்க மொழிக்கு ஒருபோதும்
அந்த இடம் கிடையாது என்று பேசியது கிழக்கு வங்க மக்களிட்ம் பலத்த கோபத்தை
ஏற்படுத்தியது. உருது மொழியை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என, முஸ்லிம்
லீக் அமைப்பில் இருந்த வங்காளத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மரபும்
செழுமையும் மிக்க தங்கள் மொழி அவமதிக்கப்படுகிறது என்று உணர்ந்த
வங்காளிகள், பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுவது என முடிவு செய்தனர். இதன்
விளைவாக, வங்கத்துக்கு சுயாட்சி வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
வங்க தேசியஉணர்வு கொண்டவர்கள் முஸ்லீம் லீக்கில் இருந்து பிரிவது என
முடிவு செய்தனர். அதன்படி, 1949-ம் ஆண்டு ஜூன் 23-ல் பிரிந்து 'அவாமி தேசிய
லீக்’ என தேசியக் கட்சியைத் தொடங்கினர். இது, சுயாட்சிக்கான கிளர்ச்சியில்
ஈடுபட்டது. ஆனால், அவர்களால் பாகிஸ்தானின் சர்வாதிகார பலத்தை எதிர்த்து
நிற்க முடியவில்லை. வங்க மக்களிடம் உருவாகி வரும் அரசியல் விழிப்புஉணர்வை
ஒடுக்க வேண்டும் என்பதில் தீவிர முனைப்புடன் பாகிஸ்தான் செயல்பட்டது.
1952-ல் வங்கத்தில் மாணவர் கிளர்ச்சி தீவிரம் அடைந்தது. அதை ஒடுக்க
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மாணவர்கள் பலர் அநியாயமாகக்
கொல்லப்பட்டனர். இந்தப் போராட்டமே வங்க தேச வரலாற்றின் முக்கியத்
திருப்புமுனை. மாணவர்கள் கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் எதிர்ப்பு
உணர்ச்சியை அதிகப்படுத்தியது. வங்க மொழியை பிரதானப்படுத்தி தேசிய அரசியல்
இயக்கம் வலுக்கத் தொடங்கியது. 1953-ல் 'அவாமி தேசிய லீக்’ இயக்கம்
இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ஆனதில்லை, அது ஒட்டுமொத்த வங்காளிகளின்
விடுதலைக்குப் பாடுபடும் என அறிவித்தது.
1954-ல் நடந்த தேர்தலில் முஸ்லிம் லீக்குக்கு எதிராகக் கூட்டணி அமைத்து களம் இறங்கியது அவாமி
லீக். தங்களின் சின்னமாக படகைத் தேர்வு செய்துகொண்டது அவாமி. வங்காளிகளின்
அன்றாட வாழ்வோடு இணைந்தது படகு. ஆகவே, அந்தச் சின்னம் அவர்களுக்கு பெரும்
உதவியாக அமைந்தது. தேர்தலில் அவாமி லீக் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது.
அந்தக் கட்சிக்கு 143 இடங்கள் கிடைத்தன. முஸ்லிம் லீக் வெறும் 9 இடங்களில்
மட்டுமே வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் முக்கிய அமைச்சர்கள் பலர் தோல்வி
அடைந்தனர். தேர்தலில் மாணவர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். அவாமி லீக்கின்
மாணவர் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டு பாகிஸ்தானின் முக்கியத் தலைவர்களை
தோற்கடித்தனர். இதன் காரணமாக, புதிய அமைச்சரவையில் மாணவர் தலைவர்களும்
இடம் பெற்றனர். முஜிபுர் ரஹ்மானுக்கு வர்த்தகத் துறை அமைச்சர் பதவி
வழங்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அவாமி லீக், வங்கத்துக்கு கூடுதல்
உரிமைகள் வேண்டும் என, பாகிஸ்தான் மைய அரசை வலியுறுத்தத் தொடங்கியது.
இதனால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம்
பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. வங்காள மொழியின் சிறப்புகளைப் போற்றிப்
பாதுகாக்கும்படி டாக்காவில் புதிய அகாடமி உருவாக்கப்பட்டது.
வங்கத்தில் உருவான எதிர்ப்பு அரசியலை முற்றிலும்
ஒடுக்க வேண்டும் என்று, பாகிஸ்தான் அரசு காத்துக்கொண்டே இருந்தது. அதன்படி,
சுயாட்சி கேட்பது தவறு எனச் சுட்டிக்காட்டி வங்காள தேச அவாமி லீக் அரசை
1954-ல் பதவிநீக்கம் செய்தது. அது, வங்க அரசுக்குத் தற்காலிகப் பின்னடைவை
ஏற்படுத்தியபோதும் அரசியல்ரீதியாக அது தன்னைப் பலப்படுத்திக்கொள்ள
ஆரம்பித்தது. 1956-ல் புதிய கூட்டணி அமைத்து பாகிஸ்தானின் மைய அரசின்
தலைமையைக் கைப்பற்றியது அவாமி லீக். அந்தக் கட்சியின் தலைவர் ஹீசைன் சாகித்
சுக்ரவாடி, பாகிஸ்தானின் பிரதமராகப் பதவி ஏற்றார். இதன் காரணமாக,
வங்கத்துக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
அவாமி லீக்கின் வளர்ச்சியை முடக்க வேண்டும் என புதிய அரசியல் சிக்கல்களை
உருவாக்கத் தொடங்கியது பாகிஸ்தான் அரசு. அரசியல் கிளர்ச்சிகளையும்,
போராட்டத்தையும் தூண்டிவிட்டு ஹீசைன் சாகித் சுக்ரவாடி பதவி விலக வேண்டும்
என்ற நெருக்கடியை ஏற்படுத்தியது. 1957-ல் ஹீசைன் சாகித் சுக்ரவாடி
கட்டாயமாக பதவி விலக நேரிட்டது.
1958 நவம்பர் 7-ல் பாகிஸ்தான் அதிபர் இஸ்கந்தர் மிஸ்ரா,
ராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்தார். அத்துடன், ஜெனரல் அயூப்கானை
கட்டுப்பாட்டுப் பொறுப்பாளராக நியமித்தார். ஆனால், அதிகார வெறிகொண்ட
அயூப்கான் ராணுவத்தின் பிடியைக்கொண்டு தானே அதிபர் என
அறிவித்துக்கொண்டதுடன் எதிர்ப்பவர்களைக் கொன்று குவித்து எல்லா அரசியல்
கட்சிகளையும் தடை செய்தார். அரசியல் கட்சிகளில் முக்கியத்
தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
1962-ல் அயூப்கான் ஒரு கண்துடைப்பு நாடகம் ஆடி, புதிய
அரசியல் நிர்ணய சட்டங்களை உருவாக்கிக்கொண்டார். ராணுவ ஆட்சியை எதிர்த்து
நின்று அவரை அகற்ற முயன்ற அரசியல் முயற்சிகள் பலவும் தோற்றன.
பாகிஸ்தானின் ராணுவ ஆட்சிக்கு எதிராக வங்கத்தில் பெரும்
கிளர்ச்சி ஏற்பட்டது. இந்த முறையும் டாக்கா பல்கலைக்கழகமே இதன் தலைமைக்
கேந்திரமாக விளங்கியது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு ராணுவ ஆட்சியை
அகற்ற குரல் கொடுத்தனர். 1963-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி பெய்ரூட்டில்
உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் ஹீசைன் சாகித் சுக்ரவாடி, மர்மான முறையில்
இறந்துகிடந்தார். இது, அவாமி லீக்குக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
வங்கத்தின் உரிமைகளைக் கேட்டு சேக் முஜிபுர் ரஹ்மான் முன்மொழிந்த ஆறு
அம்சத் தீர்மானங்கள் வங்க மக்களிடம் அவருக்குப் பெரும் புகழை
ஏற்படுத்தியது. ஆகவே, அவர் அவாமி லீக்கின் பெரும் தலைவராக மக்களால்
ஏற்றுக்கொள்ளப்பட்டார். வங்கத்தில் எழுந்த கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக,
1966-ல் சேக் முஜிபுர் ரஹ்மான் சிறையில் அடைக்கப்பபட்டார்.
No comments:
Post a Comment