பதறிய
காரியம் சிதறும்! அனுபவம் வாய்ந்த இந்தப் பொன்மொழியின் உண்மையை நாம்
எல்லோருமே ஏதாவது ஒரு தருணத்தில் நேரிடையாக உணர்ந்திருப்போம். அதனால்தான்,
எந்தவொரு காரியத்திலும் தெளிவான முடிவெடுக்கப் பெரியவர்கள்
வலியுறுத்துவார்கள்.
எனக்குத் தெரிந்த ஒருவர், மறுநாள் அதிகாலையில் வெளியூர்
புறப்பட்டுச் செல்ல வேண்டியது இருந்தது. வழக்கமாக அதிகாலை 5 மணிக்கெல்லாம்
எழுந்துவிடும் அவர், அந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகளை முந்தைய நாளே
செய்யாமல், 'நாளைக்கு மட்டும் இன்னும் சற்று முன்னதாக 4 மணிக்கே
எழுந்திருந்தால், எல்லா ஏற்பாட்டையும் செய்துவிடலாமே!’ என்று நினைத்துப்
படுத்துவிட்டார்.
அதிகாலை 4 மணிக்கு எழுவதற்காக தனது மொபைல் போனில் அலாரமும் வைத்துக் கொண்டார்.
வழக்கமாக 5 மணிக்கெல்லாம் விழித்துவிடும் அவர்,
அன்றைக்கு ஏனோ 6 மணிக்குத்தான் விழித்தார். மொபைலில் இன்னும் அலாரம்
அடிக்கவில்லையே என்று எண்ணியபடியே, எதிரே சுவரில் தொங்கிக் கொண்டிருந்த
கடிகாரத்தைப் பார்க்க நேரம் 6 மணி என்பதைக் காண்பித்தது. பதறிப்போனார்
நண்பர். மொபைலை அவசரமாக ஆய்வு செய்ததில்
4 A.M. என வைப்பதற்குப் பதிலாக 4 P.M. என செட் செய்திருந்தார். அதனால்தான், அலாரம் மாலை நேரத்து 4 மணிக்காகக் காத்திருந்தது.
அப்புறம் என்ன... அறக்கப்பறக்கப் புறப்பட்டு பஸ் பிடித்து வெளியூர் போனார் அவர். யாரைப் பார்க்க வேண்டுமோ அவரையும் சந்தித்தார்.
'தாமதமாக வந்தாலும் பரவாயில்லை; நல்ல நேரத்தில்தான்
வந்து இருக்கிறீர்கள். இன்னும் 10 நிமிஷம் தாண்டி வந்திருந்தால் ராகு காலம்
வந்திருக்கும்...' என்றார், நெற்றி நிறையத் திருநீறும், அதன் நடுவே ஒரு
ரூபாய் நாணய அளவுக்குக் குங்குமமும் வைத்திருந்த அந்த ஜோதிடர்.
ஆம்... தனது மகளுக்கு வந்திருந்த வரனின் ஜாதகத்தை இவரிடம் கொடுத்துப் பொருத்தம் பார்க்கவே வந்திருந்தார் அந்த நண்பர்.
'சரி, ஜாதகத்தைக் கொடுங்கோ! பொருத்தம் எப்படின்னு
பார்த்துச் சொல்லிடுறேன்...' என்று ஜோதிடர் சொல்லவும், தான் கொண்டு வந்த
பையில் ஜாதகத்தைத் தேடினார் நண்பர். ஆனால், மகளின் ஜாதகம் இருந்ததே தவிர,
மாப்பிள்ளையின் ஜாதகத்தைக் காணவில்லை.
புறப்பட்டு வந்த வேகத்தில், மாப்பிள்ளையின் ஜாதகத்தை
எடுக்காமல் வந்தது அப்போதுதான் நண்பரின் ஞாபகத்துக்கு வந்தது. அப்புறம்
என்ன... 'ஆரம்பமே தடையாகவும், அலைக்கழிப்பாகவும் இருக்கே...’ என்று நினைத்த
நண்பர், தன் மகளுக்கு அடுத்த வரனைத் தேடவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.
தனது விதியை நினைத்து நொந்து கொண்டார்.
நம் காஞ்சி மகா ஸ்வாமிகளும் இப்படிப்பட்ட விதி பற்றி ஓர் உண்மை நிகழ்வைச் சொல்கிறார்.
'எண்ணூறு
வருஷங்களுக்கு முன் பாஸ்கராசார்யார் என்று பெரிய கணித ஸித்தாந்தி ஒருவர்
இருந்தார். நமக்கு என்னதான் கெட்டிக் காரத்தனம் இருந்தாலும், பகவத்
ஸங்கல்பத்தை மாற்றமுடியாது என்பதற்குத் திருஷ்டாந்தமாக அவர் வாழ்க்கையில்
ஒன்று நடந்தது.
அவருடைய பெண் லீலாவதிக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதை
ஜ்யோதிஷப் புலியான பாஸ்கராசார்யார் அறிந்திருந்தார். ஆனாலும், தமது
கெட்டிக்காரத்தனத்தினால் ஸகல க்ரஹங்களும் தீர்க்க ஸெளமங்கல்யத்தைத்
தரும்படியான ஒரு லக்னத்தைக் கண்டுபிடித்து, அதிலே புத்திரிக்கு விவாஹம்
செய்துவிட்டால், அவளை தீர்க்கஸுமங்கலியாக இருக்கச் செய்து விடலாம் என்று
நினைத்தார். அந்த மாதிரியான ஒரு லக்னத்தில் லீலாவதிக்குக் கல்யாண
முஹூர்த்தம் வைத்தும் விட்டார்.
அந்தக் காலத்தில் இப்போதுபோல் கடிகாரம் கிடையாது.
ஆனாலும், வாஸ்தவத்தில் அக்காலத்தில் இருந்ததுதான் அசல் கடிகா. கடம், கடிகா,
கடிகை என்பதெல்லாம் பானை மாதிரியான தீர்த்த பாத்திரத்தைக் குறிக்கும்.
இப்படிப்பட்ட ஜல பாத்திரமே பூர்வகாலத்திய கடிகா அல்லது கடிகாரம். அதிலே
மேல்பாகம், கீழ்பாகம் என்று பிரிந்திருக்கும். மேல் பாகத்தில் விட்ட ஜலம்
ஒரு துவாரம் வழியாகக் கீழ் பாகத்தில் துளித்துளியாக விழும். மருந்து
பாட்டிலில் டோஸ்மார்க் பண்ணியிருக்கிற மாதிரி, கீழ் பாகத்தில் அளவுக்
கோடுகள் போட்டிருக்கும். துளித் துளியாய் விழும் ஜலம், இன்ன கோடு வரை
வந்தால் இத்தனை நாழிகை என்று கணக்குப் பண்ணிவிடுவார்கள்.
அதிலுள்ள டோஸ்மார்க் ஒரு நாளில் அறுபதில் ஒரு
பங்காகும். 'நாழிகை’ என்று தமிழில் சொல்லப்படும் இந்தக் கால அளவுக்கு
ஸம்ஸ்கிருதத்தில் 'நாடிகா’ என்பதோடு 'கடிகா’ என்றே இன்னொரு பெயர் உண்டு.
அது 24 நிமிஷம் கொண்டது. Water -clock, water-glass என்று இங்கிலீஷிலும்
சொல்வார்கள். ஜலம், சீதோஷ்ணத்தைப் பொறுத்து evaporate (ஆவி) ஆவதால், இதில்
ஏதாவது கணக்குப் தப்பு வரும் என்று, பின்னர் மணல் கடிகாரம் பண்ணினார்கள்.
அந்நாள்
வழக்கப்படி, லீலாவதி விளையாட் டுப் பெண்ணாக இருந்த சின்ன வயசிலேயே
கல்யாணம் நிச்சயித்திருந்தது. அந்தக் குழந்தை, மேலே சொன்ன மாதிரியான ஜல
கடிகாரத் திடம் வந்து, குனிந்து பார்த்து, ஏதோ சேஷ்டை பண்ணிற்று. அப்போது
அதன் மூக்குத்தியில் இருந்து ஒரு சின்ன முத்து, கடிகாரத்துக்குள் விழுந்து,
மேல் பாகத்துக்கும் கீழ் பாகத்துக்கும் நடுவேயுள்ள துவாரத்தில்
மாட்டிக்கொண்டுவிட்டது.
இதனால், விழுகிற துளி சின்னதாகிவிடும் அல்லவா? இப்படி,
இருக்கவேண்டியதைவிடச் சின்னதான துளிகளாக விழுந்து முஹூர்த்த லக்னக்
கோட்டுக்கு ஜலம் வந்தபோது, வாஸ்தவத்தில் அந்தச் சுப நேரம் தப்பி, அடுத்த
லக்னம் வந்துவிட்டது. அது கெட்ட லக்னம். அந்த லக்னத்தில் விவாஹமானதால்
லீலாவதி ஜாதகப்படியே ரொம்பவும் பிஞ்சு வயஸில் பதியை இழந்துவிட்டாள்.
முத்து விழுந்ததை அந்தக் குழந்தை உள்பட ஒருத்தரும்
முதலில் கவனிக்காததால், இத்தனைப் பெரிய விபரீதம் நடந்துவிட்டது. அப்புறம்
விஷயம் தெரிய வந்தபோது விதியை யாரும் மாற்ற முடியாது என்று தெரிந்து
கொண்டார்கள்.
கணித சாஸ்திர விஷயமாகப் பிற்காலத்தில் பாஸ்கராசார்யார்
ஒரு கிரந்தம் செய்ய வேண்டுமென்று நினைத்தார். சின்ன வயசிலேயே விதவையாகித்
தம்மிடம் வந்துவிட்ட லீலா வதியை கணிதத்தில் பண்டிதை ஆக்கி, அவள் பெயரிலேயே
தம் புஸ்தகத்தை எழுதினார். சாதாரணமாக ஒரு பரம்பரையில் பாட்டி,
முப்பாட்டிகளின் பேரைக் குழந்தைக்கு வைத்து, அவர்களுடைய நினைவை நீடிக்கச்
செய்கிறார் கள் அல்லவா? பாஸ்கராசார்யார் என்ன பண்ணினார் என்றால், குழந்தையே
பெறாத தம்முடைய குழந்தையை, கணித மாணாக்க பரம்பரை முழுவதற்கும் ஓர் ஆதிப்
பாட்டியாகச் சிரஞ்சீவித்துவம் பெறும்படியாகத் தம்முடைய புஸ்தகத்துக்கே
'லீலாவதி கணிதம்’ என்று அவள் பேரை வைத்துவிட்டார்.
அதில் வியக்த கணிதம், பீஜ கணிதம் முதலிய பலவகைக்
கணிதங்கள் இருக்கின்றன. 'லீலாவதி கணக்கு’கள் கதை மாதிரியும், விடுகதை
மாதிரி யும், கவிதை மாதிரியும் சுவாரஸ்யமாக இருக்கும்.
கிரஹ ஸ்திதிகள், கிரஹங்களின் கதிகள் முதலியவற்றை
நிர்ணயிப்பதற்கு உபயோகமாக 'ஸித்தாந்த சிரோமணி’ என்ற ஒரு கிரந்தத்தையும்
பாஸ்கராசார்யார் எழுதியிருக்கிறார்.'
அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
ReplyDeleteநம்பிக்கையிருப்பவர்கள் படிக்கலாம். மற்றவர்கள் இதை கடந்து செல்லலாம்.
நன்றி.