Search This Blog

Saturday, April 05, 2014

குறைந்து வரும் பறவை இனங்கள்

 
தமிழகத்தின் நினைவுச் சின்னங்களாகவும் விவசாயிகளின் நண்பனாகவும் விளங்கும் பறவையினங்களின் பெருக்கமும் வரத்தும் குறைந்து வருவதற்கு சுற்றுச்சூழல் மாசே காரணம்" என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 
தமிழகத்தின் நினைவுச் சின்னங்களாகவும் விவசாயிகளின் நண்பனாகவும் விளங்கும் பறவையினங்களின் பெருக்கமும் வரத்தும் குறைந்து வருவதற்கு சுற்றுச்சூழல் மாசே காரணம்" என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நீர்காகம், மரகதப்புறா, சிட்டுக்குருவி போன்ற பறவை இனங்களைத் தற்போது பார்ப்பதே அரிதாகி விட்டன. தொழிற்சாலைகள், குடியிருப்புகளுக்காக காடு, மரங்கள் அழிக்கப்படுதல், ரசாயனக் கதிர்வீச்சுகள், பருவமழை பொய்த்து வருவது, பருவநிலை மாற்றம் போன்றவையே பறவை இனங்கள் அழிவதற்குக் காரணமாகின்றன என்கின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆறு, வாய்க்கால், குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் அளவுக்கதிகமாக இருக்கிறது. இவை மழைக்காலங்களில் நீரால் நிரம்பித் ததும்பும் நேரத்தில் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, ருஷியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் உணவு தேடியும் இனப்பெருக்கத்துக்காவும் இயற்கைவளம் சார்ந்த இங்கு இடம் பெயருகின்றன. அதுபோன்று நமது நாட்டு பறவைகள் அயல்நாடுகளுக்குச் செல்வதும் தொடர்கிறது.ஆனால் முன்புபோல இப்போது பறவைகளின் வருகை இல்லை. போதிய மழையின்மை, நீர்நிலைகள் தூர்ந்துபோனது, காலநிலை மாற்றம் போன்றவை பறவைகளின் வருகைக்குத் தடைக்கல்லாக இருந்து வருகிறது.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் குளங்கள் அதிகளவில் உள்ளன. பருவமழையை மட்டுமல்லாது இக்குளங்கள் எல்லாக் காலங்களிலும் தாமிரபரணி ஆற்றின் மூலமாக ஆண்டுதோறும் நல்ல நீர்வரத்தைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பறவை இனங்களின் வரத்து வெகுவாகக் குறைந்ததையடுத்து மணிமுத்தாறு அகத்தியமலை சமுதாயம் சார்ந்த இயற்கைவள பாதுகாப்பு மையம், முத்துநகர் இயற்கைச் சங்கத்தினர் இணைந்து நீர்வாழ்ப் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டனர்.கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், உள்ளூர்ப் பொதுமக்கள் என 61 பேர் அடங்கிய குழுவினர் கணக்கெடுப்பு நடத்தினர்.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள 63 குளங்களில் 3 நாட்கள் நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பின் முடிவில் 60 வகையான 58 ஆயிரம் பறவைகள் வாழ்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.முந்தைய ஆண்டை போன்று அதே எண்ணிக்கையிலான பறவைகளே தற்போதும் வாழ்வது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே எண்ணிக்கையில்தான் நீர்வாழ் பறவைகள் இருப்பது கணக்கெடுப்பின் மூலமாகத் தெரியவந்துள்ளது.

பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளி மற்றும் பூச்சி இனங்களைப் பிடித்துத் தின்று விவசாயிகளுக்கு நண்பனாக இருக்கும் பறவை இனங்கள் குறைந்து வருவது நல்லதல்ல. எனவே பறவை இனங்களைப் பாதுகாத்திடுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்ற குரல் பலமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.


எம்.பார்த்தீபன் சங்கர்
 

No comments:

Post a Comment