Search This Blog

Saturday, April 05, 2014

கம்பியில்லா மின்சாரம் !

 
லேப்டாப், மோடம், ரௌட்டர், தொலைபேசி, தொலைக்காட்சி, கேபிள் டி.வி. என்று எந்த வீட்டு ஷோகேஸ் பின்னாடியும் கசமுசவென்று வயர்கள். இந்த வயர்கள் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்டன. இந்த வயர் இல்லாமல் நம்மால் ஒரு வாழ்வை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆனால் அமெரிக்காவில் மசசூஸெட்ஸ் மாகாணத்தில் "Witricity" என்ற நிறுவனம் கம்பியில்லா மின்சாரத்தை உருவாக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்பொழுது சிறிய அளவில் அந்த ஆராய்ச்சியில் வெற்றியும் கண்டுள்ளது. 
 
கம்பியில்லா இணையம் இருக்கும் பொழுது கம்பியில்லா மின்சாரம் ஏன் கூடாது என்று அந்நிறுவனம் கேட்கிறது. ஹை! கம்பியில்லா மின்சாரம் மட்டும் வந்துவிட்டால், நம் தெருக்களில் குறுக்கும் நெடுக்கும் ஓடும் மின்கம்பிகளில் இனி துணி காயப்போடலாம்.  இந்தக் கம்பியில்லா மின்சாரம் எப்படி இயங்கும் என்பதைக் காணலாம். காற்றில் மின்சாரத்தைச் செலுத்த மாட்டார்கள். அதற்குப் பதில் காந்தப்புலத்தைக் காற்றில் உருவாக்குவார்கள். காந்தப்புலத்தில் மற்றொரு சுருள் வரும்பொழுது மின்சாரம் உற்பத்தியாகும். அந்தக் காந்தப்புலத்துக்குள் ஓர் உபகரணம் வந்தவுடன், ஆற்றல் கடத்தப்பட்டு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும். உடனே நமக்கு ஒரு சந்தேகம் வரும். மனிதர்களோ, விலங்குகளோ இந்தக் காந்தப்புலத்தினுள் வந்தால் பாதிப்பு ஏற்படுமா? ‘இல்லை’ என்று அந்த நிறுவனம் அடித்துக் கூறுகிறது. இன்று லேப்டாப்பில், செல்பேசியில் உபயோகிக்கப்படும் வயர்லெஸ் - கம்பியில்லா இணையம் - போலத்தான் இதுவும். பாதிப்பு கிடையாது. இந்நிறுவனம் மடிக்கணினி, மின்விளக்கு, தொலைக்காட்சி என அன்றாட சாதனங்களை இக்கம்பியில்லா மின்சாரம் மூலம் (சிறிய அளவில்) இயக்கிக் கொண்டுள்ளது. அதை மக்களுக்கும் செய்து காண்பித்து விளக்கியிருக்கிறது அந்நிறுவனம்.வரும்காலத்தில் நமது வீடுகளில், நம் பாக்கெட்டுகளில் இருக்கும் செல்பேசியில் சார்ஜ் குறைந்தால், அதுவே கம்பியில்லா மின்சாரம் மூலம் சார்ஜ் செய்து கொள்ளும். அதேபோல் மின்சாரக் கார்களும் சந்தையில் வரத் தொடங்கியிருக்கின்றன. உங்கள் அப்பார்ட்மென்ட் பார்க்கிங்கில் இரவு காரை நிறுத்தி விட்டு தூங்கப் போனால் மறுநாளுக்குள் அதுவே சார்ஜ் செய்து கொள்ளும். பெட்ரோல் பங்குக்கு ஓடத் தேவையில்லை. தவிர, இன்று புழக்கத்தில் இருக்கும் மின்சாதனப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் என எல்லாவற்றையும் வேறு மாதிரி அதாவது மிக எளிதாகத் தயாரித்தாலே போதும்.
 
எனினும் இந்த வைட்ரிசிட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர பல சவால்களும் உள்ளன. குறிப்பாக, கம்பியில்லை என்றால் எவ்வளவு தூரம்? நம் வீடுகளில் கூடத்தில் பரவியிருக்கும் காந்தப்புலத்தைக் கொண்டு படுக்கை அறையிலிருந்து கொண்டு மின்சாரத்தைப் பெறமுடியுமா? அதற்கான விடை இன்னும் தெரியவில்லை. இது தற்பொழுது ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. இதன் மீது பல விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன.

கம்பியில்லா மின்சாரம் வெற்றி பெற்றால், உலகையே புரட்டிப் போடும் என்பதில் ஐயமில்லை.


ஆர்வமுள்ளவர்கள் www.witricity.com என்ற இணையதளத்துக்குச் சென்று விவரங்களைப் படிக்கலாம்.

தி.சு.பா.

No comments:

Post a Comment