Search This Blog

Saturday, April 19, 2014

ஐ.பி.எல். வண்ண வண்ணக் கனவுகள்!

 
டி20 உலகக் கோப்பைப் போட்டி முடிந்த அடுத்த பத்தாவது நாள், ஐ.பி.எல். ஆரம்பிப்பது ஒருவகையில் நல்லதுதான். இறுதி ஆட்டத்தில் இந்திய அணி மிக மோசமாகத் தோற்றுப்போனதால் உண்டான கோபம், ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் மறக்கடிக்க ஐ.பி.எல். லால் மட்டுமே முடியும்.
 
தோனிக்கு டி20 இறுதிப் போட்டிகள் தொடர்ந்து ஏமாற்றத்தைக் கொடுத்து வருகின்றன. 2012, 2013 ஐ.பி.எல். இறுதிப் போட்டிகளில் சி.எஸ்.கே. தோற்றுப் போனது. இப்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் தோனிக்கு இன்னொரு தோல்வி. ஆனால், கடந்த 6 ஐ.பி.எல்.களிலும் அரையிறுதி/ஃப்ளே ஆஃப்புக்கு தகுதி பெற்ற ஒரே அணி சி.எஸ்.கே.தான். கடைசி இரண்டு இடங்களில் இதுவரை எல்லா அணிகளும் ஒரு முறையாவது இடம்பிடித்திருக்கின்றன. சி.எஸ்.கே. இதுவரை அப்படியொரு சங்கடத்தை ரசிகர்களுக்கு அளிக்கவில்லை.  டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லாமல் போனதற்கு எல்லோரும் கைநீட்டுவது யுவ்ராஜ் சிங்கை மட்டும்தான். கோபத்தில் ரசிகர்கள் யுவ்ராஜ் வீட்டில் கற்கள் எறிந்தெல்லாம் கலாட்டா செய்திருக்கிறார்கள். 2007, 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்குப் பக்கபலமாக இருந்தவர் யுவ்ராஜ். பங்களாதேஷில் யுவ்ராஜ்சிங்குக்கு டைமிங்கே வரவில்லை. அவரை 11வது ஓவரில் அனுப்பியது தோனியின் தவறு. ரைனாவுக்கும் ஜடேஜாவுக்கும் பேட்டிங்கே கிடைக்காதது அவலம். இந்த நிலையில், எல்லோருடைய கவனமும் ஆர்.சி.பி.க்குத் திரும்பியிருக்கிறது. யுவ்ராஜுக்கு 14 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கியிருக்கிறார் மல்லையா. ஐ.பி.எல்.லிலும் தம் திறமையை நிரூபிக்காவிட்டால் யுவ்ராஜின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். 
 
புதிய ஏலத்துக்குப் பிறகு சி.எஸ்.கே., ஆர்.சி.பி., மும்பை போன்ற அணிகள்தான் இன்னும் கூடுதல் பலத்துடன் உள்ளன. மும்பையில் சச்சின் இல்லாவிட்டாலும் ஹஸ்ஸி, ஆண்டர்சனின் வரவு இன்னும் அசைக்க முடியாத சக்தியாக மும்பையை மாற்றியுள்ளது. இதுதான் சச்சின் இல்லாமல் நடைபெறப் போகும் முதல் ஐ.பி.எல். சச்சின், டிராவிட், கில் கிறிஸ்ட் ஆகியோர் சென்ற வருடம் ஐ.பி.எல். லிலிருந்து ஓய்வு பெற்றார்கள். சச்சின் ஆடும் மைதானங்களெல்லாம் சச்சினுக்காக நிறைந்தன. சச்சினுக்காக மும்பையை ஆதரித்தவர்கள் பலர். அதேபோல டிராவிட் இல்லாதது ராஜஸ்தானுக்கும் பெரிய இழப்பு. மேட்ச் ஃபிக்ஸிங்கினால் அதிகம் பாதிக்கப்பட்ட ராஜஸ்தானுக்கு டிராவிடின் பக்குவம், அணியை மெல்ல அதன் பாதிப்பிலிருந்து வெளியேற்றியது. இந்த ஏழாவது ஐ.பி.எல்.லில் தில்லி, பஞ்சாப் அணிகள் புதுச்சட்டை அணிந்துள்ளன. பழைய வீரர்களைக் கழற்றி விட்டு புதிய வீரர்களுடன் ஐ.பி.எல்.லில் கலந்து கொள்கின்றன. சென்ற ஐ.பி.எல்.லில் ராஜஸ்தான், ஹைதரபாத் அணிகள் பல ஆச்சரியங்களைக் கொடுத்தன. அதே போல தில்லி, பஞ்சாப் அணிகள் என்ன செய்யப்போகின்றன என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.  

இந்த முறை மெக்குலம், டுப்ளெஸ்ஸி, ஸ்மித் (மே.இ.) போன்ற டி20 சிறப்பு ஆட்டக்காரர்கள் சென்னையின் ஆரம்ப ஓவர்களில் நிலவும் ஒருவித ஆமைத் தனத்தைப் போக்குவார்கள் என்று நம்பலாம். கடந்த இரண்டு வருடங்களாக ஒரு வாய்ப்பும் கிடைக்காத பாபா அபரஜீத்தை நம்பி பத்ரிநாத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது சி.எஸ்.கே. 19 வயது சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் முத்திரை பேட்ஸ் மேன் ஆகி, பேர் புகழ் அடைந்துவிட்டார். பாபா சிறந்த ஆல்ரவுண்டர். அட்டகாசமான ஃபீல்டர். சாம்சன் போல பாபாவும் ஐ.பி.எல்.லால் பலனடைய வேண்டிய நேரமிது.
 
மெக்குலம், டுப்ளெஸ்ஸி, ஸ்மித், ப்ராவோ, சாமுவேல் பத்ரி, ஹில்பனாஸ் என இந்த ஆறு அட்டகாசமான வெளிநாட்டு வீரர்களிலிருந்து 4 பேரைத் தேர்ந்தெடுப்பது தோனிக்குப் பெரிய தலைவலியைக் கொடுக்கும். பங்களாதேஷில் கலக்கிய மே.இ. ஸ்பின்னரான சாமுவேல் பத்ரியை தக்காளி விலைக்கு (30 லட்சம் ரூபாய்) ஏலத்தில் எடுத்தது பெரிய ஆச்சர்யம்.
 
ஐ.பி.எல்.லில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிகாவை விடவும் மேற்கு இந்திய அணி வீரர்களுக்கு எப்போதும் கிராக்கி இருக்கும். கெல், பொலார்ட், ப்ராவோ, நரைன், சாமி, ஸ்மித் என மே.இ டி20 நட்சத்திரங்கள் ஐ.பி.எல். முழுக்க வியாபித்திருக்கிறார்கள். அசராமல் அடிக்கும் சிக்ஸர்கள், சிலிர்ப்பூட்டும் ஃபீல்டிங், எந்தத் தருணத்திலும் அசாத்திய துணிச்சலுடன் செயல்படுவது என ஐ.பி.எல். லுக்குப் புது வண்ணம் கொடுப்பவர்கள் மே.இ. வீரர்கள்தான். இவர்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த அணியும் அடுத்த கட்டத்துக்கு நகர்வது சிரமம்.
 
பாகிஸ்தான் வீரர்கள் இந்த ஐ.பி.எல்.லிலும் சேர்க்கப்படவில்லை. டி20 உலகக் கோப்பையை வென்றாலும் இலங்கை அணி வீரர்கள் ஐ.பி.எல்.லில் அதிகம் இல்லை. பெராரா (பஞ்சாப்), முரளிதரன் (ஆர்.சி.பி.), மலிங்கா (மும்பை) ஆகிய இலங்கை வீரர்கள் மட்டுமே ஐ.பி.எல்.லில் ஆடப் போகிறார்கள். (சங்ககரா ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை, மேத்யூஸ், ஜெயவர்தனே, தில்ஷன் ஆகியோரை ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை.) இந்த வருடமும் இரண்டு ப்ளே ஆஃப் மேட்சுகள் சென்னைக்கு வழங்கப்பட்டுள்ளன. சென்ற வருடம், தமிழக அரசு இலங்கை வீரர்களுக்குத் தடைபோட்டதால் சென் னைக்கு ஒதுக்கப்பட்ட ஃப்ளே ஆஃப் மேட்சுகள், தில்லிக்கு இடம் மாறின. இந்த முறை தமிழக அரசு எடுக்கும் முடிவில்தான் ப்ளே ஆஃப் மேட்சுகள் சென்னையில் நடக்குமா இல்லையா என்று தெரியவரும். (சி.எஸ்.கே.வின் இரண்டு மேட்சுகள் தோனியின் சொந்த ஊரான ராஞ்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.)
 
ஷேவாக், கம்பீர், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், யுவ்ராஜ் சிங், யூசுப் பதான், முரளி விஜய், தினேஷ் கார்த்திக், ராகுல் சர்மா, புஜாரா, வினய் குமார், இஷாந்த் சர்மா, ஓஜா, டிண்டா என்று பெரிய பட்டியலே இருக்கிறது. இவர்களெல்லாம் மீண்டும் இந்திய அணியின் ஒருநாள் அணியில் இடம்பிடித்து 2015 உலகக் கோப்பையில் பங்குபெற வேண்டுமென்றால் இந்த ஐ.பி.எல்.தான் நுழைவுச் சீட்டு.
 
இந்த ஒரு வாய்ப்பை நழுவவிட்டால் பிறகு மீண்டுமொரு சந்தர்ப்பம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அதே போல சஞ்சு சாம்சன், பாபா அபரஜீத், விஜய் ஜோல், ரிஷி தவான், கரன் ஷர்மா போன்ற புதிய வீரர்களுக்கு இந்த ஐ.பி.எல். புதிய வாசலைத் திறந்துவிட வேண்டும். ஒருபக்கம் ஐ.பி.எல்.லால் வீரர்கள் கோடிகளில் புரண்டாலும் சிலருக்கு ஐ.பி.எல்.தான் மிஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு. அஸ்வின், யூசுப் பதான், ஷேன் வட்சன், ஷேன் மார்ஷ் போன்றவர்கள் ஐ.பி.எல். லைப் புதையலாக மாற்றியவர்கள். இந்த வருடம் ஐ.பி.எல்.லை யார் யார் பயன்படுத்திக்கொள்ளப் போகிறார்கள், இந்த வாய்ப்பையும் யார் நழுவ விடப் போகிறார்கள் என்பதுதான் ஐ.பி.எல்.லின் பெரிய சுவாரசியங்கள்.
 
ச.ந.கண்ணன்

No comments:

Post a Comment