Search This Blog

Friday, April 25, 2014

அட்சய திருதியை


காம்யக வனத்தை ஒட்டிய கங்கை நதிக்கரை. சலசலத்து ஓடும் அக்கங்கை நதி அன்று ஒலியெழுப்பாமல் தமது மௌனப் பயணத்தைத் தொடர்ந்தது. அன்றைய பொழுதை புலர வைக்க, ஆதவனின் ஒளிக்கதிர்களும் ஏனோ யோசித்தன. மலர்ந்து மணம் வீசக் காத்திருந்த மலர்களும், விடியலை உணர்த்த எத்தனித்திருந்த பறவையினங்களும் தமது கடமையை மறந்து, தத்தமது கூட்டுக்குள் முடங்கிக் கிடந்தன. கௌரவர் சபையில் இழைக்கப்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் - தருமர் தவிர, திரௌபதி உட்பட பாண்டவர் அனைவரும் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். நாடாள வேண்டிய பாண்டவர்களின் 12 ஆண்டு கால வனவாசத்தை எண்ணி அந்த நதிக்கரைச் சூழலே அமைதி பூண்டிருந்தது.

மௌனம் கலைந்த தருமபுத்திரர் தம்முடன் கானகம் வந்த அந்தணர்களை நோக்கி, அந்தணப் பெருமக்களே, இனியும் நீங்கள் எம்முடன் வர வேண்டாம். நாடு திரும்புங்கள். ஏனெனில் வனத்தில் உங்களை உபசரித்து, கவனிக்க நாங்கள் இயலாதவர்களாக இருக்கிறோம்" என்று கூறினார்.

எங்களைக் குறித்து நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. எங்கள் தேவைகளை நாங்களே கவனித்துக் கொள்கிறோம்" என்று அவர்கள் கூறினர். 

அவ்வுரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த பாண்டவர்களின் புரோகிதரான தௌமியர், தரும புத்திரரின் மனத் துயரைப் போக்க எண்ணி, யுதிஷ்டிரனே, அனைத்து உயிர்களுக்கும் சூரியனே ஆதாரம். அவனே அனைத்து உயிர்களையும் காப்பவன். அவனின்றி உலக இயக்கமில்லை. அதனால் நாள்தோறும் அவனுக்குரிய துதிகளைச் சொல்லி சூரியனை தியானித்து வா. அதனால் பலவித நன்மைகளைப் பெறலாம்" எனக் கூறினார்.

தருமபுத்திரரும் சூரிய பகவானை எண்ணி தூய மொழிகளால் துதி செய்து தியானித்தார். தரும புத் திரரின் வழிபாட்டில் மகிழ்ந்த பகலவன், தரும புத்திரனே, நான் கொடுக்கும் இந்த அட்சய பாத்திரத்தைப் பெற்றுக்கொள். இதன்மூலம் 12 ஆண்டுகளுக்கு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் நீ உணவைப் பெறலாம். ஆனால் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் இதிலிருந்து உணவைப் பெற முடியும்" என்று கூறியதோடு, பதினான்கு ஆண்டுகள் கழித்து பாண்டவர்கள் இழந்த உரிமையை மீண்டும் பெற ஆசி கூறியும், அட்சய பாத்திரத்தை தரும புத்திரனின் கைகளில் கொடுத்தும் மறைந்தான்.

அட்சயம் என்றால் ‘குறையாதது’, ‘மேலும் வளர்வது’ என்று பொருள். தமக்குக் கிடைத்த அட்சய பாத்திரத்தை தௌமியரிடம் காட்டி ஆசி பெற்ற யுதிஷ்டிரன், திரௌபதி மூலமாக தம்முடன் வந்த அனைவரின் பசியாற்றி, தாமும் பசியாறினான். 

சூரிய பகவானிடமிருந்து தருமபுத்திரர் அட்சய பாத்திரம் பெற்ற தினம் அட்சய திருதியை நன்னாள்.

சித்திரை மாத அமாவாசைக்கு அடுத்த நான்காவது நாள் அட்சய திருதியை. அன்று அதிகாலை நீராடி ஹரியின் நாமங்களைச் சொல்லி வழிபடுவது சிறப்பு. இந்நாளில் வேத பாராயணம், ஜபம், தியானம் செய்வதால் குறையாத இறையருள் கிடைக்கும். திருத்தல தரிசனம், புனித நதி நீராடல், தான தர்மங்கள் செய்தல், புதிய சுப காரியங்களைத் தொடங்குதல் நலம் சேர்க்கும். 

கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை நாள் சுவர்ண கௌரி விரதமாகக் கடைபிடிக்கப்படுகிறது. பெண்கள் அன்று கலசம் வைத்து அதில் கௌரி தேவியை எழுந்தருளச் செய்து, பூஜித்து வழிபடுகிறார்கள். இதனால் குடும்பத்தில் சுபிட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.

பிரம்மதேவன் உலகைப் படைத்ததும், கிருத யுகம் பிறந்ததும் அட்சய திருதியை நாளில்தான் என்கிறது புராணம். வறியவன் குசேலனை, ஸ்ரீ கிருஷ்ண பகவான் குபேரனாக்கியதும் இந்நாளே.  பொதுவாக, விஜயதசமி நாளில்தான் குழந்தைகளுக்கு ‘அட்சராப்பியாசம்’ எனப்படும் கற்பித்தல் சடங்கைச் செய்கிறோம். அதை அட்சய திருதியை நாளில் செய்ய, குழந்தைகளின் கல்வி அறிவு வற்றாத ஜீவ நதியாய் பெருகும் என்கிறார்கள் பெரியோர்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் நல்லது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், தானம் வழங்கச் சிறந்த நாள் இது. இந்த நாளில் வழங்கப்படும் தானம், பல மடங்கு வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. ‘கொடுத்தால் குறையாதது’ என்று கல்வியைத்தான் சொல்வார்கள். மாறாக, அட்சய திருதியை நாளில் தானம் வழங்கினால், அது மேலும் வளர்ச்சியைத் தரும் என்பது அனுபவ உண்மை!

அட்சய திருதியை துளிகள்...

ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள திருக்கோளூரில் அருள்பவர் ‘வைத்த மாநிதி பெருமாள்.’ இவர் குபேரனுக்கு செல்வம் அளந்த ‘மரக்கால்’ (படி) என்ற அளவைப் பாத்திரத்தை தலைக்கு அடியில் வைத்து சயனித்திருக்கிறார். 

இவரை அட்சய திருதியை நாளில் வணங்க, செல்வ வளம் கொழிக்கும்.

காசியில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க, பார்வதிதேவி, அன்னபூரணியாக சிவபெருமானின் பிட்சை பாத்திரத்தில் உணவு இட்ட நாள் அட்சய திருதியை. இத்தினத்தில் அன்ன பூரணியை வழிபட்டால் உணவுக்குப் பஞ்சம் ஏற்படாது.
அட்சய திருதியை அன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலய முக்கூடல் தீர்த்தத்தில் நீராடினால் எல்லா பாவமும் விலகும் என்பது நம்பிக்கை.

கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 14 பெருமாள் கோயில் உற்சவர்களும் கருட வாகனத்தில் புறப்பட்டு வந்து, பெரிய தெருவில் காட்சி தருவது அட்சய திருதியை அன்று மட்டும்தான்.

அட்சய திருதியை அன்று மரக்காலில் முனை உடையாத அரிசியை வைத்து வழிபட, குபேர சம்பத்து கிடைக்கும் என்பது ஐதீகம்.


 எம். கோதண்டபாணி


No comments:

Post a Comment