Search This Blog

Tuesday, April 15, 2014

இவரும் தமிழ்த் தெய்வமே!

 
தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். ‘கோயில்’ என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.
 
தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள்பாலித்து வருகிறார். அவரைப் ‘பிள்ளையார்’ என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். ‘பிள்ளை’ என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே ‘பிள்ளை’ என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் ‘பிள்ளையார்’ என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.
 
தெய்வம் என்று ஒன்று இருந்தால் அது லோகம் பூராவுக்குந்தான். ஆனாலும் அதை ‘நம்முது’ (நம்முடையது) என்று விசேஷமாகப் பிரித்து வைத்து ப்ரியம் காட்டி உறவு கொண்டாடணும் என்று பக்த மனஸுக்குத் தோன்றுகிறதுண்டு. ஒவ்வொரு தெய்வத்திடம் இப்படி ஒவ்வொரு ஜனஸமூஹத்திற்கு ஒரு அலாதி பந்துத்வம் இருப்பதுண்டு. தமிழ் மக்களுக்கு ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி என்றால் தனியான ஒரு ப்ரியம். முருகன், முருகன் என்று சொல்லி, தமிழ்த் தெய்வம் என்று அவரை இந்த நாட்டுக்கே, பாஷைக்கே உரித்தான வராக முத்ரை குத்தி வைத்துக் கொண்டாடுகிறோம்.
 
எனக்கென்னவோ அவரை மட்டும் அப்படிச் சொல்லாமல் அவருடைய அண்ணாக்காரரையும் தமிழ்த் தெய்வம் என்று சொல்லணும் என்று (இருக்கிறது)! இளையவரைத் தமிழ்த் தெய்வம் என்று குறிப்பாகச் சொல்ல எவ்வளவு காரணமுண்டோ அவ்வளவு - ஒருவேளை, அதைவிடக்கூட ஜாஸ்தியாகவே - அண்ணாக்காரரையும் சொல்வதற்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதனால் - அந்த அண்ணா - தம்பிகளைப் பிரிக்கவேபடாது, சேர்த்துச் சேர்த்தே சொல்லணும், நினைக்கணும், பூஜை பண்ணணும் என்பதாலேயும் - பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர் இரண்டு பேரையுமே தமிழ்த் தெய்வங்கள் என்று வைத்துவிட வேண்டுமென்று தோன்றுகிறது. அப்படி ஒரு ‘ரெஸொல்யூஷன்’ கொண்டு வரப்போகிறேன்!. (அது) ‘பாஸ்’ ஆகணுமே! அதனால், புஷ்டியான காரணம் நிறைய காட்டுகிறேன். ‘யுனானிம’ஸாகவே ‘பாஸ்’ பண்ணிவிடுவீர்கள்!
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment