Search This Blog

Tuesday, April 15, 2014

ஓட்டுனரில்லா கார் - தொழில்நுட்பம்


ஏதோ ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் கதை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். தானியங்கி / ஓட்டுனரில்லா கார் - முற்றிலும் நிஜம்!!! என்ன இப்படிப் பாக்கறீங்க? தானியங்கி புகைவண்டி ஜப்பான் போன்ற நாடுகளிலும், எல்லா வெளிநாட்டு விமான நிலையத்திலும் ஓடும்போது தானியங்கி கார் சாத்தியமில்லையா? உலகம் முழுவதும் நடக்கும் விபத்துகளின் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால் பாதிக்குப் பாதி மனிதரின் (கவனக்குறைவு) பிழையினால்தான் நடக்கிறது. அதற்கு இந்த ஓட்டுனரில்லா கார் நல்ல தீர்வாக அமையும் என்கிறார்கள் ஆட்டோமோட்டிவ் நிபுணர்கள்.

கூகிள் நிறுவனம்தான் இந்த முயற்சியில் வீறு நடைபோட்டு முன்னேறி வருகிறது. டொயோட்டா ப்ரியஸ் என்ற காரை சோதனை ஓட்டமாக இதுவரை சுமார் முந்நூராயிரம் கி.மீ. ஓட்டிச் சாதித்திருக்கிறது. அமெரிக்காவில் இந்தக் கார் இதுவரை எந்த விபத்திலும் மாட்டிக் கொள்ளவில்லை. ஜி.எம்., பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ., வோல்வோ என்ற எல்லா நிறுவனங்களும் தத்தம் ஓட்டுனரில்லா காரைச் சந்தைக்குக் கொண்டுவர முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றன. நீஸான் நிறுவனம் 2020இல் தன் ஓட்டுனரில்லாக் காரைச் சந்தைக்குக் கொண்டு வருவதாக மார்தட்டுகிறது. அமெரிக்காவில் ஒன்றிரண்டு மாகாணங்கள் தானியங்கிக் காருக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டன.

காருக்குள் ஒரு கணினி இருக்கும். காருக்கு வெளியே லேசர் நிலப்படம் இருக்கும். அந்த நிலப்படம் காரைச்சுற்றி 200 அடிவரை சுற்றளவில் இருக்கும் பொருட்களை, சாலையைப் படம்பிடித்து உள்ளிருக்கும் கணினிக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். இதனால் சாலையின் 3டி பிம்பம் கிடைத்துவிடும். அதே போல், காரின் ஓட்டுனர் கண்ணாடிக்குக் கீழே இருக்கும் காமிரா பாதசாரிகள், சிக்னல் விளக்கு எல்லாவற்றையும் படம்பிடித்து கணினிக்கு அனுப்பும். இதன்மூலம் கார் தன் முன்னே வரும் இடையூறுகளை அறிந்து கொள்ளும். காரின் முகப்பில் மூன்றும், பின்புறம் ஒன்றும் என நான்கு ரேடார் உணரிகள் உள்ளன. இவை தூரத்துப் பொருட்களைக் கண்டுபிடிக்க உதவும்.

தானியங்கிக் கார்களுக்குச் சாலைகளின் கட்டமைப்பு மிகமிக முக்கியம். இல்லையேல் இந்தக் காரை கொண்டுவந்து எந்தப் பயனும் இல்லை. உலகில் ஒரு சில நாடுகளைத் தவிர எல்லா நாடுகளிலும் இது கேள்விக்குறியே. அதே போல், காரில் சென்சார் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் ஒரு குறிப்பிட்ட கார் இந்த விநாடியில் எந்தச் சாலையில் எந்த ஊரில் இருக்கிறது என்று மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இதனால் குறிப்பாக பிரபலங்களின் அந்தரங்கம் பாதிக்கப்படும்!  

அதே போல் 100% தானியங்கி கார் தற்பொழுது சாத்தியம் இல்லை. அதெல்லாம் இன்னும் நூறு வருடம் கூட பிடிக்கலாம். இடைஇடையே, காரை இயக்க வேண்டி வரும். அதனால், கிடைத்தது சாக்கு என்று காரில் ஏறிக் குறட்டை விட்டுத் தூங்கிவிடலாம் என்று பகல்கனவு காணாதீர்கள். ஆனால் பாவம், உலகம் முழுவதும் காரையே நம்பி பிழைப்பு நடத்தும் ஓட்டுனர்கள், கால் டாக்ஸி நிறுவனங்கள், ஏர்போர்ட் வாடகைக் கார்கள் என எல்லா தொழிலும், அதில் ஈடுபட்டுள்ள ஏழை மக்கள் பலரும் இந்த ஓட்டுனரில்லா கார் வந்தால் கஷ்டப்படுவார்கள் என்று ஒரு பக்கம் விமர்சனம் எழுந்தவண்ணம் உள்ளது. 

அண்ணா, எதுக்கும் எங்க இந்தியச் சாலைகளில் ஒரு முறை ரவுண்டு அடிச்சுட்டு அப்புறம் இந்தக் காரை பெருமளவில் தயாரிக்க ஆரம்பிங்க! இரண்டு காரை சுற்றிலும் குறைந்தது பத்து மோட்டார் சைக்கிள், ஆட்டோ இருக்கும். அப்புறம் உங்க ஓட்டுனரில்லா காரில் இருக்கும் உணரிகள் எல்லாம் செய்வதறியாது தடுமாறிவிடும்!!!

தி.சு.பா.

No comments:

Post a Comment