Search This Blog

Friday, April 04, 2014

சாக்கடல்


சாக்கடல் என்ற பெயரில் ஒரு கடல் இருக்கிறது. ஆனால் அது சாவை ஏற்படுத்தாத கடல். சாக்கடலில் ஒருவர் இறங்கினால் அவர் மூழ்கி இறந்து போக மாட்டார். சாக்கடலில் ஒருவர் கால்களை நீட்டிக்கொண்டு, ஜாலியாக நீரில் மிதந்தபடி, கையில் பேப்பரை வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருக்கலாம். மனிதன் மிதக்கக் கூடிய கடல் அது ஒன்றுதான் என்று சொல்லலாம். சாக்கடலில் மனிதன் மூழ்கமாட்டான் என்பதற்கு சாக்கடல் தண்ணீரின் தன்மையே காரணம்.

சாக்கடல் மேற்காசியாவில் அமைந்துள்ளது. இந்தக் கடலுக்கு கிழக்கே ஜோர்டான் நாடு உள்ளது. மேற்கே இஸ்ரேலும் பாலஸ்தீனப் பிராந்தியமும் அமைந்துள்ளன. கடலின் நீளம் சுமார் 50 கிலோ மீட்டர். அகலம் அதிகபட்சம் 15 கிலோ மீட்டர். ஆழம் சுமார் 300 மீட்டர்.

பெயர்தான் கடலே தவிர மற்றபடி இது நான்கு புறங்களிலும் நிலத்தால் சூழப்பட்ட பெரிய ஏரி.

சாக்கடலின் தண்ணீர் சொல்ல முடியாத அளவுக்குக் கடுமையான அளவுக்கு உப்பு கரிக்கும். கடல் நீரில் உள்ளதைவிட சாக்கடல் நீரில் உப்பு அளவு அதிகம். ஒரு லிட்டர் கடல் நீரை எடுத்துக் காய்ச்சினால் 35 கிராம் உப்பு கிடைக்கும். ஆனால் ஒரு லிட்டர் சாக்கடல் நீரை எடுத்துக் காய்ச்சினால் 340 கிராம் உப்பு கிடைக்கும்.உப்பு என்றவுடன் எல்லோருக்கும் சமையல் உப்பு தான் ஞாபகத்துக்கு வரும். சமையல் உப்புக்கு சோடியம் குளோரைடு என்ற வேதியியல் பெயரும் உண்டு.கடல்களில் உள்ள நீரில் சோடியம் குளோரைடு மட்டுமன்றி சிறிதளவுக்கு இதர உப்புகளும் உண்டு. மொத்த உப்புகளில் சோடியம் குளோரைடு 97 சதவிகிதம் அளவுக்கு உள்ளது. ஆனால் சாக்கடல் நீரில் சோடியம் குளோரைடு அளவு சுமார் 30 சதவிகிதமே. பொட்டாஷியம், புரோமைன், கால்சியம் ஆகியவை அதிகம் உள்ளன.சாக்கடல் நீர் கடுமையான அளவுக்கு உப்பு அடங்கியது என்பதால் இந்தக் கடலில் மீன், ஆமை, நண்டு என எந்த வகையான உயிரினமும் கிடையாது. சிறு உயிரினங்களும் கிடையாது. கடல் வாழ் தாவரங்களும் இல்லை. ஆகவேதான் செத்த கடல் என்ற பொருளில் சாக்கடல் என்று பெயர் ஏற்பட்டுள்ளது.சாக்கடலில் உப்பு அளவு அதிகம் என்பதால் சாக்கடல் நீர் அதிக அடர்த்தி கொண்டதாக உள்ளது. மனிதன் சாக்கடலில் மூழ்காமல் மிதப்பதற்கு இதுவே காரணம்.சாக்கடலின் உப்பு அளவு அதிகரித்ததற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது சாக்கடலில் வந்து சேருகிற நீரின் அளவு எப்போதுமே குறைவு. ஆனால் இந்தக் கடலிலிருந்து ஆவியாகி மேலே செல்கிற நீரின் அளவு அதிகம். பன்னெடுங்காலமாக இந்த நிலை இருந்து வந்துள்ளதால்தான் சாக்கடலின் நீர் கடுமையான அளவுக்கு உப்பு கரிப்பதாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.

உயிரற்ற சாக்கடலை யார் சீந்தப் போகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் சாக்கடலுக்கு வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தங்களுக்குள்ள சில குறிப்பிட்ட நோய்கள் அல்லது கோளாறுகளுக்கு நிவாரணம் பெற சாக்கடல் பகுதிக்கு வருகின்றனர். சாக்கடல் நீரில் குளித்தால் உடலுக்கு நல்லது என்பது அனுபவ ரீதியாகக் கண்டறியப்பட்டுள்ளது.சாக்கடலில் உள்ள சேற்றை அள்ளி உடல் முழுவதும் பூசிக்கொள்பவர்கள் பலர் உண்டு. சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்களை இந்தச் சேறு குணப்படுத்தி விடும் என்று கருதப்படுகிறது. தசை வலிக்கு சிகிச்சை பெறுவதற்காகவும் மூட்டு வலிக்காகவும் பலர் இங்கு வருகின்றனர்.சாக்கடலில் கிடைக்கும் உப்பு, சேறு ஆகியவற்றைக் கொண்டு பல் வகையான மருந்துகளும் அழகு சாதனப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன அவை பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.சுவாசக்கோளாறு உள்ளவர்களும் சாக்கடல் நோக்கி வருகின்றனர். சாக்கடல் வட்டாரத்தில் உள்ள காற்றில் ஆக்சிஜன் அளவு அதிகம் என்பது இது ஒரு காரணம்.சாக்கடலுக்கு அடியிலிருந்து அவ்வப்போது தார் போன்ற கறுப்பான பொருள் வந்து மேலே மிதக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தின் பிரமிடுகளில் வைக்கப்பட்ட மன்னர்களின் சடலங்கள் கெட்டுப் போகாமல் பதப்படுத்துவதற்கு இந்தப் பொருள் பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.சாக்கடல் பிராந்தியம் உலகிலேயே மிகத் தாழ்வான பகுதி. உலகின் நிலப்பகுதியில் அநேகமாக எல்லா இடங்களுமே கடல் மட்டத்தைவிட உயரமாக இருக்கும். கடலோரமாக உள்ள இடங்கள் கூட கடல் மட்டத்தை விட சில மீட்டர் உயரமாக இருக்கும். ஆனால் சாக்கடல் பகுதியானது கடல் மட்டத்தை விட 427 மீட்டர் தாழ்வாக உள்ளது. ஆகவே இங்கு காற்று அடர்த்தி அதிகம். அந்த அளவில் இங்கு காற்றில் ஆக்சிஜன் அளவும் அதிகம்.உடல் குணம் பெறவும் தங்களுக்கு உள்ள சில வகைக் கோளாறுகளுக்குச் சிகிச்சை பெறவும் ஏராளமானவர்கள் சாக்கடல் நோக்கி வருவதால் சாக்கடலைச் சுற்றிலும் பல தங்கும் விடுதிகள் உள்ளன.சாக்கடல் நீரிலிருந்து பொட்டாஷ் உரம் தயாரிக்கும் ஆலைகளும் இங்கு உள்ளன.

ஆனால் சாக்கடலின் பரப்பளவு சுருங்கி வருகிறது. சாக்கடலைச் சுற்றிலும் இயற்கையான பல நீர் ஊற்றுகள் இருந்தாலும் இந்தக் கடலில் வந்து கலக்கிற ஒரே நதி ஜோர்டான் நதி. ஆனால் 1960களில் தொடங்கி ஜோர்டான் நதி மீது ஜோர்டான், இஸ்ரேல், சிரியா ஆகிய நாடுகள் பல அணைகளைக் கட்டி நதி நீரில் பெரும் பகுதியைப் பாசனத்துக்குத் திருப்பிவிட்டதன் விளைவாக ஜோர்டான் நதி மூலம் சாக்கடலில் வந்து சேரும் நீரின் அளவு குறைந்துவிட்டது. தவிர, சாக்கடல் பகுதியில் மழை அளவும் குறைவு.ஆகவே சாக்கடலுக்குத் தொடர்ந்து நீர் கிடைக்கும்படிச் செய்ய அதை அருகே உள்ள செங்கடலுடன் இணைப்பதற்கு ஒரு திட்டம் கூறப்பட்டது. சில நூறு கிலோ மீட்டர் நீளத்துக்கு குழாய்களையும் மற்றும் கால்வாய்களையும் அமைப்பதன் மூலம் செங்கடலிலிருந்து சாக்கடலுக்கு நீர் கொண்டு வர இயலும்.இப்படிச் செய்யும்போது வழியில் உள்ள பகுதிகளில் கடல் நீரைச் சுத்திகரித்து குடிநீர் பெற முடியும். செங்கடல் நீர் மிகவும் பள்ளமாக உள்ள சாக்கடல் பகுதியை நோக்கி இறங்கும்போது புனல் மின்சாரத் திட்டத்தையும் மேற்கொள்ளலாம். இப்படிப் பல சாதகங்கள் இருந்தாலும் இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. சாக்கடல் வட்டாரம் பாதிக்கப்படும் பிரச்னையும் உள்ளது. சாக்கடல் நீண்ட வரலாற்றுத் தொடர்பு கொண்டது. மத நூல்கள் உட்பட பழங்கால ஏடுகளில் சாக்கடல் பற்றிய குறிப்புகள் உள்ளன.சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் சாக்கடல் ஐரோப்பாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் உள்ள மத்திய தரைக்கடலுடன் இணைந்து இருந்ததாகக் கருதப்படுகிறது. அதற்கு 10 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய தரைக்கடலுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டு அது உள்நாட்டுக் கடலாக மாறியது.

என்.ராமதுரை

No comments:

Post a Comment