Search This Blog

Monday, September 27, 2010

எந்திரன் - வெளிவராத 25 தகவல்கள்

அக்டோபர் 1-ல் வெள்ளித்திரைக்கு வருகிறான், 'எந்திரன்'. இந்தியிலும் தெலுங்கிலும் 'ரோபோ'வாக. 

எண்ணிக்கையில் ரஜினியின் 154-வது படம், ஷங்கரின் இயக்கத்தில் 10-வது படம், ஐஸ்வர்யா ராயின் 5-வது தமிழ் படம். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் முதல் படம்.

'இந்தியன்' பட வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், ப்ரீத்தி ஜிந்தாவை வைத்து 'ரோபோ' என்ற பெயரில் படம் எடுக்க ஆரம்பித்தார் ஷங்கர். சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. பின்னர், 'ரோபோ'வை ஷாருக்கான் நடித்து தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளிவரத் தொடங்கின. 2007ம் ஆண்டு ஷாருக்கானும் ஷங்கரும் தாங்கள் இப்படத்தை கை விட்டுவிட்டதாக அறிவித்தனர். தனக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்காது என்பது ஷாருக்கானின் எண்ணம்.

ரஜினி - ஷங்கர் இணைந்த 'சிவாஜி' படத்தின் வெற்றியை அடுத்து, தனது 'ரோபோ'வில் ரஜினி நடிக்கிறார் என்று 2008-ம் ஆண்டு அறிவித்தார் ஷங்கர். 'ரோபோ' கதை ரஜினிக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இப்போது எந்திரனாக வருகிறது.

எந்திரனை முதலில் ஐங்கரன், EROS நிறுவனங்கள் கூட்டாக தயாரித்தன. ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, EROS அப்போது வாங்கி விநியோகம் செய்த படங்களும், ஐங்கரன் தயாரித்த படங்களும் தொடர் தோல்வியடைய, எந்திரன் படத் தயாரிப்பில் சிக்கல் வந்தது. பின்னர், இந்த இரண்டு நிறுவனங்களிடமிருந்து எந்திரன் படத்தை வாங்கி, தானே தயாரித்தது சன் பிக்சர்ஸ்.

எந்திரன் படத்துக்காக நடிகை ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம் ரூ.6 கோடி. படத்தில் வில்லனாக நடித்து இருப்பவர், Danny Denzongpa.

ரஜினி நடித்த சந்திரமுகி, சிவாஜி படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் வலம் வந்தவர்கள் வடிவேலு மற்றும் விவேக். ஆனால், எந்திரனில் ரஜினியுடன் காமெடி செய்திருப்பதோ சந்தானம் மற்றும் கருணாஸ்.

Men in Black Series படங்களுக்கு காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்றிய Mary E. Vogt, எந்திரனில் மனிஷ் மல்கோத்ராவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். Mary E. Vogt பணியாற்றிய முதல் இந்திய திரைப்படம் இதுவே!

உலக அளவில் சூப்பர் ஹிட் படங்களான The Matrix, Crouching Tiger and Hidden Dragon ஆகிய படங்களுக்கு சண்டைக் காட்சிகள் வடிவமைத்த Yuen Woo Ping இப்படத்துக்கு பீட்டர் ஹெய்னுடன் இணைந்து சண்டை காட்சிகள் அமைத்திருக்கிறார்.

Avatar, Star Wars, Titanic ஆகிய படங்களுக்கு ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் செய்த Industrial Light & Magic நிறுவனம் தான் இப்படத்தில் பணியாற்றியுள்ளது. இந்த நிறுவனம் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் பிரிவில் இதுவரை 15 முறை ஆஸ்கர் விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Aliens, Terminator 2 மற்றும் Jurassic Park ஆகிய படங்களுக்கு Animatronics செய்த Stan Winston Studios இப்படத்தில் பணியாற்றியுள்ளது.

ரஜினியின் மேக்கப்புக்காக செலவழிக்கப்பட்ட தொகை ரூ.3 கோடி. சிகை அலங்காரத்துக்காக செலவழிக்கப்பட்ட தொகையில் தமிழில் ஒரு படமே தயாரிக்கலாம்!

எந்திரன் படத்தில் நடித்ததற்காக ரஜினி இதுவரை சம்பளம் வாங்கவே இல்லை. ரீலிஸ் ஆகும் தினத்தில் சம்பளம் வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.

எந்திரன் படத்தில் வரும் 'கிளிமாஞ்சாரோ..' எனும் பாடலை மிச்சு பிச்சு என்ற இடத்தில் படமாக்கி இருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படமான 'Quantum of Solace' படத்துக்கு கூட அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவில்லை. அங்கு நடந்த முதல் சினிமா ஷுட்டிங் 'எந்திரன்' தான்!

எந்திரன் படத்துக்கு திரைக்கதை - வசனம் எழுதியவர், எழுத்தாளர் சுஜாதா. 2008ம் ஆண்டு அவரது மறைவுக்கு பின், கதையில் சின்னச் சின்ன டெக்னிக்கல் அப்டேட்களுக்காக மட்டுமே 250 பேர் வேலை பார்த்து இருக்கிறார்கள். 'சுஜாதா சார் ஒருவருக்குப் பதிலா 250 பேர் தேவைப்படுறாங்க பாருங்க... சுஜாதா சார் வாஸ் ரியலி கிரேட்!' என ஷங்கர் நெகிழ்ந்தார். இப்போது பட டைட்டிலில்... வசனம் - சுஜாதா, ஷங்கர், கார்க்கி. 

சின்ன வயதில் சுஜாதாவை அனைவரும் 'ரங்குஸ்கி' என்றே அழைப்பார்காளாம். அந்தப் பெயரை எந்திரன் படத்தில் வரும் கொசு ஒன்றுக்கு சுஜாதா சூட்டி இருந்தார்

சிவாஜி படம் வெளியான சமயத்தில் ரஜினி மொட்டை பாஸ் கேரக்டரில் வருவதை ரசிகர்களுக்கு சஸ்பென்ஸாக வைத்து இருந்தார் ஷங்கர். அது பெரும் வரவேற்பை பெற்றது. ரஜினி ஆசைப்பட்டார் என்று எந்திரன் படத்திலும் கடைசி 45 நிமிடங்கள் ரஜினி வித்தியாசமான கேரக்டரில் வருவது போல் உருவாக்கி இருக்கிறார் ஷங்கர். அது என்ன கேரக்டர் என்பது சஸ்பென்ஸ்.

எந்திரன் படத்தில் முக்கியமான காட்சிக்கு ஒன்றுக்கு இசை அமைப்பதற்கு 60 லட்ச ரூபாய் செலவு ஆகும் என்று கூறி இருக்கிறார், ஏ.ஆர்.ரகுமான். காட்சிக்கு தேவைப்பட்டால் கூட 70 லட்சம் கூட தருகிறேன் என்று கூறினாராம் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

எந்திரன் படத்தில் வரும் ஒரு காட்சிக்காக ஒரு அட்டைப் பெட்டிக்குள் சுமார் 7 மணி நேரம் கை, கால்கள் எதுவும் அசையாமல் உட்கார்ந்து சிரத்தையுடன் நடித்து கொடுத்திருக்கிறார், ரஜினி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில் மிக அதிக பொருட்செலவில் உருவான படம் எந்திரன். இப்படத்தின் பட்ஜெட் ரூ.190 கோடி. இதில் 40% (ரூ.76 கோடி) கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டும் செலவிடப்பட்டுருக்கிறது.

தமிழில் ஆடியோ உரிமையை THINK இசை வெளியூட்டு நிறுவனம் ரூ.7 கோடி கொடுத்து வாங்கியது. இதுவரை எந்த ஒரு தென்னிந்திய திரைப்படத்தின் ஆடியோ உரிமையும் இவ்வளவு விலைக்கு விற்பனை ஆனது இல்லை.

எந்திரன் ஆடியோ வெளியான அடுத்த நாளே அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஐ.டியூன்ஸில் முதல் இடத்தை பிடித்தது. இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்தின் பாடல்களும் வெளியான அடுத்த நாளே ஐ.டியூன்ஸில் டாப் 10-ல் இடம் பிடித்தது இல்லை. 

எந்திரன் பாடல்கள் வெளியான ஒன்றரை மணி நேரத்தில் ஒன்றரை கோடி சிடிக்கள் விற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்த் திரைப்பட சிடி விற்பனையில் இதுவரை இருந்த எல்லா சாதனைகளையும் 'எந்திரன்' ஆடியோ சிடி முறியடித்தது. 

'ஸ்பைடர்மேன்' படத்தை அடுத்து உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் வெளியாகும் படமாக எந்திரன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் எந்திரன் படத்துக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த அரை மணி நேரத்தில் முதல் 10 நாட்களுக்கு முடிந்து விட்டது. படத்தின் ஒரு டிக்கெட் விலை $30. இதுவரை அமெரிக்காவில் எந்த ஒரு திரைப்படத்தின் டிக்கெட்டும் இவ்வளவு விலைக்கு விற்பனை ஆனது இல்லை. இதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் ரஜினியின் சிவாஜி டிக்கெட் விலை $15.

"எந்திரன் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் அமைந்துள்ளது. எந்திரன் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை," என்று ரஜினி கூறியுள்ளார்.


No comments:

Post a Comment