Search This Blog

Sunday, September 19, 2010

கலாசார கொலைகள் - ஒரு பார்வை

கலாசாரத்தை சீரழிக்கும் வகையில், தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கள்ளக்காதல் மற்றும் செக்ஸ் கொலைகளால் அனைத்து தரப்பட்ட மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றரை ஆண்டுகளில் 890 கொலைகள் நடந்துள்ளன. பொதுவாகவே இதுபோல கொலைகள் வட மாநிலங்களில் நடக்கும். ஆனால், இது தற்பொழுது நம் தமிழகத்தையும் எட்டி உள்ளது.

பழமை வாய்ந்த நம் கலாசாரத்தில், காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டு, தற்போது மேற்கத்திய கலாசாரம் பல தரப்பினரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இதன் காரணமாக, ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு சில சமூக அக்கறையற்ற சக்திகளால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. சங்க காலத்திலேயே காதல் இருந்தாலும், அதில் கண்ணியம் இருந்தது. தற்போது காதல் விவகாரம், கொலை செய்யும் அளவிற்கு விபரீதமாகிக் கொண்டிருக்கிறது. காதலுக்கு தடைபோடும் பெற்றோர், கவுரவக் கொலை என்ற பெயரில் குற்றவாளிகளாக மாறி வருகின்றனர். ஆண்டுதோறும் கள்ளக்காதல் மற்றும் செக்ஸ் தொடர்பான கொலைகளின் எண்ணிக்கை, "ஜெட்' வேகத்தில் உயர்ந்து வருகிறது. கலாசார சீரழிவிற்கு சினிமாவும், "டிவி' சீரியல்களும் ஒரு புறம் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன.  

நல்ல விஷயங்களை கொண்ட சினிமாக்களும், சீரியல்களும் வந்தாலும், வன்முறை, "செக்ஸ்' வக்கிரங்கள், கள்ளக்காதல் விஷயங்கள், சமூக ஒழுங்கீனங்களை சித்தரிக்கும் சினிமாக்களும், சீரியல்களும் அதிகளவில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு ஆணும், பெண்ணும் காதலிக்கும்போது ஜாதி, மத பேதங்கள் இருக்காது. காதல் வீட்டிற்கு தெரியும் போது, அனைத்தும் தடைக்கற்களாக வந்து நிற்கின்றன. இதை உடைத்தெறிந்து சிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். தோல்வியடைவோரில் சிலர் யதார்த்தத்தை உணர்ந்து மாறினாலும், சிலர் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு சென்று விடுகின்றனர். இதில் தற்போது புதிதாக "கவுரவக்' கொலைகளும் சேர்ந்துள்ளன. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த கொலை சம்பவங்கள், தற்போது தமிழகத்தில் தொடர்கதையாகிவிட்டன.  

காதலித்ததால் தன் மகளை கூலிப்படையை வைத்து, விஷஊசி போட்டு தந்தையே கொன்ற மதுரை சம்பவம் இதற்கு எடுத்துக்காட்டு. மதுரை மாவட்டத்தில் மட்டும் இது போன்ற பல கொலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கள்ளக்காதல் தமிழகத்தில் வாரத்திற்கு ஒன்று என, கொலைக் கணக்கை உயர்த்தி வருகிறது. "கள்ளக்காதல்'கள், பெரும்பாலும் பணம் மற்றும் உடல் தேவையின் அடிப்படையில் தான் அமைகின்றன. ஆணோ, பெண்ணோ தனது இணையிடம் எதிர்பார்த்தது கிடைக்காதபோது, மற்றொருவரை நாடுகின்றனர். இதனால் "ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கோட்பாட்டுக்கு ஆபத்து ஏற்படுகிறது. வெளிநாட்டினர் கூட நம் கலாசாரத்தின் பெருமையை உணர்ந்து பின்பற்றத் துவங்கியுள்ள நிலையில், இங்குள்ளவர்கள் நம் கலாசாரத்தை சீர்குலைக்கும் வேலைகளில் இறங்குகின்றனர். 

தொழில்நுட்ப வளர்ச்சியால் ஐ.டி., துறையின் தாக்கம் அதிகரித்து, பெண்கள் அதிகளவில் பணிக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இருவருக்கும் பணிச்சுமையால் ஏற்படும் மன இறுக்கம், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாதது, துணையின் தேவையை பூர்த்தி செய்ய மறுத்தல் போன்றவை தற்போதைய கள்ளக்காதல், தற்கொலை மற்றும் விவாகரத்து வழக்குகளுக்கு அடிப்படையாக உள்ளன. சில நேரங்களில் கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிய வரும்போது, சிலர் நாசுக்காக பிரிந்து விடுகின்றனர். சிலர் கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகின்றனர். சென்னையில் சமீப காலமாக இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன.

வட சென்னையைச் சேர்ந்த மஞ்சுளா என்ற ஆசிரியை, தனது காலண்டரில் குறித்து வைத்து கள்ளக்காதல் புரிந்ததும், இறுதியில் முன்னாள் காதலனே அவரை குத்திக் கொன்ற சம்பவமும் நடந்தது. கள்ளக்காதல் கொலைகளைத் தொடர்ந்து, "செக்ஸ்' கொலைகளும் அதிகரித்துள்ளன. கொலை எதற்காக நடந்தது என்று பிரித்துப் பார்க்க முடியாத நிலையில், கள்ளக்காதலும், "செக்ஸ்' கொலைகளும் ஒன்றுக் கொன்று பிணைந்துள்ளன. இந்த வகையில், 2007ல் 123 கொலைகளும், 2008ல் 155 கொலைகளும், 2009ல் 217 கொலைகளும், 2010 ஜூலை வரை 195 கொலைகளும் பதிவாகியுள்ளன. தற்போது இது 200ஐ தாண்டியிருக்கும் என தெரிகிறது. இத்தகைய கொலைகளின் எண்ணிக்கை இந்தாண்டு, சென்னையில் அதிகரித்துள்ளது.

கொலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. அதற்கு, சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் என்று கருதாமல், வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்வது எப்படி என்பதை தம்பதியர் புரிந்து கொள்ள வேண்டும். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, மனம் விட்டுப் பேசி, ஒருமித்த வாழ்க்கை வாழ முற்படுவதே நல்லது.

தினமலர் 

1 comment:

  1. உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
    தமிழ்
    ஆங்கிலம்

    ReplyDelete