Search This Blog

Wednesday, September 29, 2010

முதல்வர் கோபம் -- ஸ்டாலின்க்கு லாபம்

''ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரன் 1012-ம் ஆண்டில்தான் பட்டம் சூட்டிக்கொண்டான். தந்தையும் மகனுமாக சிறப்பாக ஆட்சி செய்தார்கள் என்பது வரலாறு. தந்தைக்குத் துணையாக நின்று வெற்றிகளைக் குவித்தான் ராஜேந்திரன்...'' - தஞ்சை பெரிய கோயிலின் 1000 ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் இப்படி கருணாநிதி உதிர்த்த வார்த்தைகள் 'அரசியல் சாணக்கியத்தன'மாகப் பார்க்கப்படுகின்றன! 

தி.மு.க. நடத்தும் முக்கிய விழாக்களில் கட்சிக்குள் இருக்கும் முக்கியப் புள்ளிகளே... கசப்பு, துரோகம், ஆவேசம், மோதல், புறக்கணிப்பு என்று வெடித்துக் கிளம்புவது அடிக்கடி நடக்கக்கூடிய நிகழ்வாகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நாகர்கோவிலில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழா பொதுக் கூட்டத்துக்கு, தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற வகையில் மு.க.அழகிரிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்கிற கொதிப்பு கிளம்பி இருந்தது. அழகிரியும் அப்செட் ஆகி அந்த விழாவுக்கு ஆப்சென்ட் போட... 'அழகிரி - ஸ்டாலின் சகோதர யுத்தம்' என்று அரசியல் உஷ்ணத்தோடு யூகங்கள் ஆவி பறந்தன. இந்தக் கசப்புக் காயங்களுக்கு மருந்து போடும் முயற்சி நடந்த வேளையில் தஞ்சை பெரிய கோயில் விழா தொடங்கிவிட்டது.

கோவை செம்மொழி மாநாட்டைப்போலவே, தஞ்சையிலும் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியத் துவம் தரப்பட்டது. கோவை செம்மொழி மாநாட்டின் கண்காட்சியைத் திறந்துவைக்கும் பொறுப்பு மத்திய அமைச்சர் அழகிரிக்கு வழங்கப்பட்டது. ஆனால், திடீரென டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததால் கிளம்பிப் போனார். அதேபோல, தஞ்சையிலும் நடந்துவிடக் கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ, விழாவில், எந்த அமர்வுக்கும் அழகிரியின் பெயர் அழைப்பிதழில் அச்சடிக்கப்படவில்லை. விழாவை ஒட்டிய கண்காட்சியை ஸ்டாலின்தான் திறந்துவைத்தார். ஆய்வரங்கத்தை முதல்வர் தொடங்கி வைப்பார் என்றது அழைப்பிதழ். ஆனால், கருணாநிதி வரவில்லை. அந்த வாய்ப்பும் ஸ்டாலினுக்கே! 

பெரிய கோயிலில் 1,000 பேர் நடனம் ஆடிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கருணாநிதி தனி மேடையில் இருந்து ரசித்தபோதும் அவருக்குப் பக்கத்தில் ஸ்டாலினே இருந்தார். அப்போது வெளியிட்ட புத்தகத்தைக்கூட ஸ்டாலினே பெற்றுக்கொண்டார். 'தலைவர் இருக்கும் இடத்தில் தளபதி இருப்பார்' என்று கமென்ட் அடித்தார் அமைச்சர் ஒருவர். இதெல்லாம் நடந்து, தன் ஆதரவாளர் களை வருத்தத்தில் ஆழ்த்தும் என்று புரிந்தேதான் தஞ்சை விழாவையும் புறக்கணித்துவிட்டார் மு.க.அழகிரி என்று காரணம் சொல்லப்படுகிறது. ஐந்து நாட்கள் நடந்த தஞ்சை பெரிய கோயில் விழாவின் நிறைவு விழா வில் கருணாநிதி பேசினார். அவரோடு மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், நாராயணசாமி, பழனிமாணிக்கம், ஆ.ராசா ஆகியோரும் மேடை யில் இருந்தனர். ''வரலாற்றில் மைல் கல்லாக இருக்கும் தஞ்சை பெரிய கோயில் விழாவில் பங்கெடுக்க அண்ணனுக்கு முக்கியத்துவமே கொடுக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மத்திய அமைச்சர்களை மேடை ஏற்றியவர்கள் மத்திய அமைச்சரான அண்ணனை எப்படியாவது அழைத்து வந்து கௌரவப்படுத்த மறந்தது ஏன்? திட்டமிட்டே அவரை மறக்கடிக்க வேண்டும் என்று செய்யப்பட்ட விஷயங்கள்தான் தஞ்சையில் அரங்கேறி இருக்கின்றன. விழாவுக்கு வெறுமனே பார்வையாளராக வந்துபோக, அவர் ஒன்றும் சாதாரண நபர் அல்ல. தேர்தல் வேலைக்கு மட்டும் பயன்படுத்தும் கறிவேப்பிலையாக அவரை இனியும் பயன்படுத்த முடியாது!'' என்கிறார்கள் அழகிரிக்கு நெருக்கமானவர்கள்.

இப்படி ஓர் இறுக்கமான சூழ்நிலையில் நடந்த கூட்டத்தில், ஸ்டாலினுக்குத் தரப்பட்ட முக்கியத் துவமும், கருணாநிதி தனது பேச்சில் கொடுத்த மரியாதையும், 'ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகத்தை விரைவில் நடத்துவற்கான முன்னறிவிப்பாகவே தென்பட்டது' என்கிறார்கள் உள் விஷயங்கள் அறிந்தவர்கள்!

''சோழ சாம்ராஜ்யத்தில் ராஜராஜனின் நிர்வாகத் திறமை எல்லா மன்னர்களுக்கும் ஓர் உதாரணமாக விளங்கியது. அவனது சாம்ராஜ்யத்தின் எல்லாப் பகுதிகளிலும் காவல் படைகள். சிங்கம்போல் சுற்றி வருவதற்கு மகன் ராஜேந்திரன் காரணமாக இருந்தான். நம்பிக்கையான அரசியல் அறிவு கொண்டவனாக விளங்கினான்!'' என்று கருணாநிதி பேசினார். அவர் பேச்சுக்கு உடன்பிறப்புகள் வேறு அர்த்தம் கற்பிக்கிறார்கள். ராஜராஜ சோழனாக கருணாநிதியையும், ராஜேந்திர சோழனாக ஸ்டாலினையும்தான் அவர்கள் பார்க்கிறார்கள். 

''எப்படி ராஜராஜ சோழனின் ராஜ்யத்தை ராஜேந்திர சோழன் காவல் காத்தானோ, அதேபோல, கட்சி என்கிற படையை நடத்திப்போகும் தளபதியாக துணை முதல்வர் விளங்குகிறார். அதைத்தான் தலைவர் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்!'' என்கிறார்கள்.

''ராஜராஜன் செல்லாத பகுதிகள் இல்லை, வெல்லாத மன்னர்கள் இல்லை. அப்படிப்பட்டவன் அமைதியின் உருவமாகவும், எல்லோருக்கும் நல்லவனாகவும், எல்லோரையும் சமமாகக் கருதுபவனாகவும் விளங்கி னான்!'' என்று கருணாநிதி சொன்ன வார்த்தைகளும் ஸ்டாலின் குறித்து அழகிரியின் ஆதரவாளர்களுக்குத் தெரிவிக்க விரும்பியவையே என்கிறார்கள். 

ஆனால், சீனியர் தலைவர் ஒருவரோ, ''அழகிரியையும் ஸ்டாலினையும் தலைவர் சமமாகவே கருதுகிறார். யாரையும் அவர் குறைத்து மதிப்பிடவில்லை. ராஜராஜ சோழனின் கம்பீரத்தோடு தான் இருப்பதை மட்டுமே யாருக்கோ அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்!'' என்று சொன்னார்.

தஞ்சை விழாவில் கருணாநிதி ஆற்றிய நிறைவு உரையின் இறுதிப் பகுதிதான் அர்த்தபுஷ்டியோடு இருந்தது. ''ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரன் 1012--ல் பட்டம் சூட்டினான். தந்தையும், மகனு மாக சிறப்பாக ஆட்சி செய்தது வரலாற்றுச் சிறப்புமிக்கது. தந்தைக்குத் துணையாக நின்று வெற்றிகளைக் குவித்தான். அந்த ராஜேந்திரனையும், அவரது தந்தை ராஜராஜ சோழனையும் பெற்ற இந்த தஞ்சை தரணியில் அவர்களுக்கு விழா எடுப்பது நம்மை நாமே பெருமைப் படுத்திக்கொள்ளும் விழா!'' என்று தனது உரையை முடித்தார் முதல்வர். 

''தந்தைக்குத் துணையாக வெற்றிகளைக் குவித்தான்' என்ற வார்த்தையிலேயே 'துணை' என்கிற வார்த்தை தளபதியைத்தான் குறிக்கும். சென்னையில் பெரம்பூர் மேம்பாலம் திறப்பு விழாவில்கூட தலைவர் பேசும்போது 'எனக்கு எல்லா வகையிலும் துணையாக இருப்பார் என்பதால்தான் அவரை துணை முதல்வர் ஆக்கி இருக்கிறோம்' என்றார். ராஜராஜ சோழனுக்குப் பிறகு அவரது மகன் அரியணையில் ஏறியதுபோது தளபதியும் அரியணையில் அமர்வார் என்பதை யாருக்கோ புரிய வைத்து இருக்கிறார் தலைவர்!'' என்கிறார்கள்.
கருணாநிதி மட்டுமல்ல... அழகிரியின் ஆதரவாளராகக் காட்டிக்கொண்ட அமைச்சர் துரைமுருகன் இப்போது ஸ்டாலின் விசுவாசியாக மாறிவிட்டார். 
சீனியரான அவரே விழாவில், ''ராஜேந்திர சோழன் உருவில் ஸ்டா லினைப் பார்க்கிறேன்!'' என்று முன்கூட்டி பொழிப்புரை கொடுத்தார்.

''ராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலன், மன்னரைவிட அதிகாரம் பெற்றவர்களால் கொல்லப்பட்டான். அவனுக்குப் பிறகு ராஜராஜ சோழன்தான் ஆட்சியில் அமர வேண்டும். ஆனால், அவனுடைய சித்தப்பா உத்தம சோழன் ஆட்சி செய்ய ஆசைப்பட்டார். ராஜராஜ சோழனும் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு அந்த ஆட்சி முறையைப் பற்றியும் ஆட்சியின் நுணுக்கங்களையும் பார்த்து தேர்ச்சி பெற்றான். 15 ஆண்டுகள் கழித்துதான் ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்தான். அதனால், இப்போது யார் பதவிக்கு வர ஆசைப்பட்டாலும் அதற்காக தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்!'' என்று ஆய்வரங்கத்தில் பேராசிரியர் அன்பழகன் வைத்த கருத்துகளும் யாரையோ மையப்படுத்தித்தான் வைக்கப் பட்டதோ? 

அதன் பிறகு கனிமொழி பேசும்போது, ''தகுதி உடையவர்கள் எந்த சாதியாக இருந்தாலும், அவர் கள் நிச்சயம் பதவிக்கு வரலாம். யோக்யதாம்சம் பொருந்தியவர்கள்தான் பதவிக்கு வர முடியும் என்று ராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் சொல்கின்றன!'' என்று குறிப்பிட்டதும் கவனிக்கப்பட்டது! அழகிரி யின் உரசல்களுக்குத் தொடர்ந்து சமாதான முயற்சிகள் நடந்து கொண்டே இருந்தனவாம். தஞ்சை விழாவுக்கு வரச் சொல்லி கருணாநிதியே அழகிரியிடம் கேட்டுக்கொண்டாராம். ஆனால், பிடிகொடுக்காமல் இருந்தார் அழகிரி. தஞ்சையில் சங்கம் ஹோட்டலில் தங்கி இருந்தபோது, சீனியர்கள் சிலரிடம் சற்றே கோபமும் கலந்து சில விஷயங்களை கருணாநிதி பகிர்ந்துகொண்டதாகப் பேச்சு இருக்கிறது. ''இன்னும் எத்தனை காலத்துக்குதான் அழகிரியை நான் சமாதானப்படுத்திக்கொண்டு இருக்க முடியும்? அரசியலில் அழகிரியின் வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய விஷயங்களில் நான் எதைச் செய்யவில்லை? கட்சிக்கு என்று கட்டுப்பாடு இருக்கிறதே... அதைக் காப்பாற்ற வேண்டாமா?'' என்றாராம் முதல்வர். 

மூத்தவர் மீதான இந்த கோபம் இளையவருக்கு லாபமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்கிறார்கள் தஞ்சை விழாவை நன்கு கவனித்தவர்கள். அதேசமயம், ''தெற்கே பலமிக்க அழகிரியைக் கோபப்படுத்தும் நேரமா இது? திட்டமிட்டு அழகிரிக்கு எதிராக காய் நகர்த்தும் சிலர் ஜெயிக்கும்படி முதல்வர் இருந்துவிடக் கூடாது! இல்லையேல், ஆட்சிக்கு வந்த இந்த நாலரை வருடங்களில் திட்டம்போட்டு தி.மு.க. குவித்த வெற்றிகளுக்கு க்ளைமாக்ஸில் அர்த்தமில்லாமல் போய்விடும்!'' என்பதும் இவர்கள் கருத்து!

No comments:

Post a Comment