Search This Blog

Saturday, September 18, 2010

உமாசங்கர் கிளப்பும் அடுத்த பூதம் ஜெயலலிதாவை சந்திப்பேன்!

'பறிக்கப்பட்ட பதவி திரும்பக் கிடைத்த பிறகும் அமைதி ஆகும் ரகம் அல்ல நான்' என்பதை நிரூபிக்கிறார் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்! 

சாதிச் சான்றிதழ் முறைகேடு, ஊழல் புகார் போன்ற குற்றச்சாட்டுகளால் இடைநீக்கம் செய்யப் பட்டவருக்கு, திடீரென்று பதவியை மீண்டும் கொடுத்து அதிர்ச்சியைக் கொடுத்தது அரசு. உடனே, சென்னைப் பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு குடும்பத்தோடு வந்து, 'என்னுடைய வழக்கை சட்டப்படி சந்திப்பேன்' என்று பகிரங்கமாக அறிவித்தார் உமாசங்கர். பொதுவாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இப்படி நடந்து கொள்வதில்லை. அடுத்த அதிர்ச்சியாக திருநெல்வேலிக்கு வந்து ஒரு பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டார். அதில் அவர் பேசிய பேச்சு ஆட்சியாளர்களை இன்னும் கடுப்பேற்றும் பச்சை மிளகாய் ரகம்!

மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் நல சங்கங்களின் சார் பாகவே உமாசங்கருக்கு இந்தப் பாராட்டு விழா கடந்த 14-ம் தேதி நடந்தது. தான் பிறந்த மாவட் டத்தில்நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அவர் என்ன பேசப்போகிறார் என்று பரபரப்பாக எதிர்பார்த்து, கூட்டம் நடந்த அரங்கம் நிரம்பி வழிந்தது. 

எஸ்.சி., எஸ்.டி. நல சங்கத்தின் மாவட்டத் தலைவர் அரிராம், ''நாங்கள் இதுவரை உங்களை ஓரமாக நின்று கவனித்து பெருமைப் பட்டோம். உங்களது அறிவும் தைரியமும் எங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். நீங்கள் தலித் மக்களின் அறிவுக் கருவூலம். இப்போது எங்களோடு நெருங்கிவிட்டதால்... இனி இந்த அரசு உங்களுக்கு என்ன இன்னலைத் தந்தாலும் மத்திய மாநில எஸ்.சி., எஸ்.டி. அமைப்புகளை ஒருங்கிணைத்து வீதிக்கு வந்து போராடுவோம்!'' என்று காட்டம் காட்டினார். அடுத்துப் பேசியவர்களும் அரசை கடுமையாக வறுத்து எடுத்தனர்.

அனைவர் பேச்சையும் உன்னிப்பாக கவனித்த உமாசங்கர் மைக் பிடித்தார். ''எனக்கு அநீதி இழைக்கப் பட்டதைக் கண்டதும், அதைத் தங்கள் சொந்த சகோ தரனுக்கு ஏற்பட்ட அநீதியாக நினைத்துப் போராடி வெற்றி பெற்று இருக்கிறீர்கள். சுயநலம் பார்க்காமல் போராடிய உங்களுக்குத்தான் உண்மையில் பாராட்டு விழா நடத்த வேண்டும்! எனக்கு எதற்கு? எனக்காகப் போராடிய உங்கள் ஒவ்வொருவரின் பாதம் தொட்டு நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்!'' என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர், 

''நாடு முழுவதும் லஞ்சமும் ஊழலும் பெருகி விட்டன. பட்டியல் இனத்தவரான நம்மைப் பார்த்து, 'திறமை இல்லாதவர்கள், ஊழலுக்கு எளிதில் வசப்படுபவர்கள்' என்றெல்லாம் அவச் சொல் பேசுகிறார்கள். அதை மாற்ற வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும் 'லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம், வாங்கவும் மாட்டோம்' என உறுதியேற்க வேண்டும். அப்படி இருந்தால்தான், எந்த விளைவையும் துணிவுடன் நின்று எதிர்கொள்ள முடியும். நான் சட்டப்படி இப்போதும் இந்துதான். ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்பு கிறிஸ்துவத்துக்கு மாறிவிட்டேன். அது என் விருப்பம், உரிமை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. மதம் மாறியதால் மட்டும் சமூக அந்தஸ்து மாறிவிடாது. நீங்கள்கூட இப்படி மாறினால், ஞானஸ்நானம் எடுத்தாலும் அதற்கான சர்ட்டிஃபிகேட் வாங்காதீர்கள். எந்த ரெக்கார்டிலும் கையெழுத்துப் போடாதீர்கள். நீங்க பாஸ்டராவே இருந்தால்கூட, சட்டப்படி இந்துவாகவே இருங்கள்!'' என்று பள்ளிக்கூட மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதுபோல அவர் பேசியதைக் கூட்டத்தினர் உன்னிப்பாகக் கவனித்தனர்.

பத்திரிகையாளர்களிடம் மிகவும் கவனத்துடன் பேசிய உமாசங்கர், ''நான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 43 நாட்களும் எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் ஓய்வாகத்தான் இருந்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம், நான் பாதிக்கப்பட்டபோது எனக்காக எந்தக் குரலும் கொடுக்கவில்லை. ஒருவேளை நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியே இல்லை என்று விட்டுவிட்டார்களோ என்னவோ! என்னை இந்த அரசாங்கம் தூக்கி எறிந்தபோது, பட்டியல் இனத்து சமுதாயம் என்னைத் தங்கள் சகோதரனாகப் பாவித்து அன்போடும் ஆதரவோடும் பூ போல என்னைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். இது வரை நான் அவர்களுக்காக எதையும் செய்யவில்லை. அவர்களில் பலர் என்னை நேரில்கூட பார்த்தது கிடையாது. ஆனால், உணர்வுரீதியாக எனக்காகக் குரல் கொடுத்த அவர்களுக்காக நானும் நிறையச் செய்வேன். சமுதாயப் பணியாற்றுவேன். அதை யாரும் தடுக்க முடியாது. கடந்த 20 வருடங்களாக என்னிடம் வருவதற்குத் தயக்கம் காட்டியவர்கள், இப்போது நெருங்கிவிட்டார்கள். இனி மேல் நான்கூட அவர்களைத் தடுக்க முடியாது. பட்டியல் இனத்து மக்களுக்கு ஒரு தங்கமான சகோதரன் கிடைத்துவிட்டான். எனக்கு ஆதரவாகப் பல அரசியல் கட்சியினரும் தொடர்ந்து பேசினார்கள். குறிப்பாக, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயலலிதா போன்றவர்கள் தமிழகம் முழுவதும் பல கூட்டங்களில் பேசினார்கள். அவசியப்பட்டால்... அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்!'' என்று படபடத்தார்
.
ஏற்கெனவே நெல்லை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் காளியப்பன், ஜெயலலிதாவை சந்தித்த பரபரப்பு அடங்குவதற்குள்... உமாசங்கரும் இப்படிப் பேசி இருப்பதால், அ.தி.மு.க. தரப்பு உற்சாகம் அடைந்திருக்கிறது. அ.தி.மு.க-வை சந்தேகத்துடன் பார்க்கும் தலித் வாக்குகளைக் கவர நினைக்கும் ஜெயலலிதா, தேர்தல் சதுரங்கத்தில் அடுத்த 'மூவ்' வைக்கத் தயாராகிவிட்டார். இதற்கு தி.மு.க. சைடில் இருந்து என்ன செக் இருக்கும்?

விகடன் 

No comments:

Post a Comment