Search This Blog

Friday, September 03, 2010

தி.மு.க. ஆட்சி மீண்டும் வரலாமா? - கலெக்டர்களிடம் கருணாநிதி கேள்வி

.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்தாவது முறையாக கலெக்டர்கள் மாநாடு நடந்திருக்கிறது. ஆண்டுதோறும் வழக்கமாக நடக்கும் சம்பிரதாயம் என்றாலும் விரைவில் தேர்தல் வருவதால், இந்த முறை கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகம். தொடக்கத்தில் முதல்வர் கருணாநிதி உரையாற்றினார். அதன் பிறகு ஒட்டுமொத்த மாநாட்டை நடத்தியது தலைமைச் செயலாளர் ஸ்ரீபதிதான். முதல்வரின் மனசாட்சியாக இருந்து, அவர் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம் ஸ்ரீபதிதான் எழுப்பினார் (போலீஸ் அதிகாரிகள் மாநாட்டிலும் ஸ்ரீபதியே பிரதானம்!).

''நான் தொடங்கிய திட்டமே இப்படியா?''

ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அலாவுதீன், ''கலைஞர் வீடு வழங்கும்திட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில்தான் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் எல்லா வீடுகளும் கட்டி முடிக்கப்பட வேண்டும். இதற்கு கலெக்டர்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்த வீடுகளைக் கட்டும் பணியில் சுயஉதவி குழுவி னரைப் பயன்படுத்த வேண்டும்!'' என்றார். மே மாதத்துக்குள்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும் என்பதால்தான் அப்படி அவர் மூலம் சொல்லப்பட்டதாம். 

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி பேசும்போது,

''குடிநீருக்காக இருக்கும் திட்டங்களில் முக்கியமானது கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்தான். ஆனால், இந்தத் திட்டங்கள் தொய்வாக நடக்கிறது. ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் இன்னும் இழுத்துக்கொண்டே போகிறது. தண்ணீரை பம்ப் செய்வதற்கு தேவையான மின்சாரம் இல்லை...'' என்றார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, ''நான் இந்தத் திட்டத்தை ஆரம்பித்து ஒரு வருடம் ஓடிவிட்டது. இதற்காக தனி டிரான்ஸ்ஃபார்மர்கள் போடப்பட்டும் அதிலும் பெரிய முன்னேற்றம் இல்லையே, ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார். உடனே அசோக்வர்தன் ஷெட்டி, ''நிறைய பம்பிங் ஸ்டேஷன்கள் இருப்பதால் தொடர்ந்து மின்சாரம் சப்ளை செய்ய முடியவில்லை...'' என்றார். உடனே, ''இதற்காக ஒரு திட்டம் தீட்டி இருக்கிறோம். எவ்வளவு சீக்கிரத்தில் முடிக்க முடியுமோ... அவ்வளவு சீக்கிரத்தில் முடிக்கிறோம்'' என்று சொல்லி இருக்கிறார் மின்சார வாரிய சேர்மன் சி.பி.சிங்.

''கலைஞர் காப்பீடு திட்டத்தில் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள், அந்த மருத்துவமனையின் உரிமையாளராக இருக்கவேண்டும் என்று புதிதாக விதிமுறை சேர்த்திருப்பதால் திட்டத்தின் பயன், மக்களுக்குக் கிடைக்காமல் போகும் நிலை... மருத்துவமனையின் உரிமையாளர் எல்லோரும் எல்லா மருத்துவப் பிரிவிலும் சிறப்பு நிபுணராக இருக்க வாய்ப்பில்லை!'' என்று ஒரு பாயின்ட்டை அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தார் கோவை கலெக்டர் உமாநாத். இதனை அதிகாரிகள் குறித்துக்கொண்டார்கள்.
'ஒரு ரூபாய்க்கு ஒரு அரிசி!'

ஈரோடு கலெக்டர் சுடலைக் கண்ணண் பேசும்போது ஒரு காமெடி அரங்கேறியது. ''தனியருவனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னான் பாரதி. அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் ஒரு ரூபாய் அரிசியை முதல்வர் கொண்டு வந்து பலரின் பசியைத் தீர்த்திருக்கிறார். ரேஷன் கடை என்றால் ஒரு காலத்தில் அரிசி மட்டுமே போடுவார்கள் என்ற நிலை இருந்தது. இன்று கோதுமை, பருப்பு, பாமாயில், மசாலா பொருட்கள், கிருஷ்ணாயில் என்று ரேஷன் கடைகள் புரவிஷன் ஸ்டோராக மாறி விட்டது. இதற்குக் காரணம் முதல்வர்தான்...'' என்று ஐஸ் வைத்தார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று சொல்வதற்கு பதில், ஒரு ரூபாய்க்கு ஒரு அரிசி என்று அவர் சொல்ல அரங்கத்தில் பலத்த சிரிப்பாம். பிறகு சுதாரித்துக்கொண்டு மாற்றினாராம். ரேஷன் சமாசாரத்தையே தொடர்ந்து அவர் புகழாரமாகச் சொல்லியதைக் கேட்ட ஸ்ரீபதி, ''போதும்... இந்தத் திட்டத்தில் குறைகள் இருந்தால் சொல்லுங்கள்!'' என்று ரூட்டை மாற்றினார்.

குடித்தால்?

காஞ்சிபுரம் கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா, ''குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு மூவாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம். இதை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். அதோடு, சிறை தண்டனையும் விதிக்கலாம். பாதிப்பேர் குடித்துவிட்டுத்தான் வண்டி ஓட்டுகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்தால், இன்னொரு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் போய் வேறு லைசென்ஸ் எடுத்துக்கொண்டு ஏமாற்றுகிறார்கள். கொல்கத்தாவில் இருப்பதுபோல எல்லா ஆர்.டி.ஓ. அலுவலகங்களையும் கணினியால் இணைக்க வேண்டும்.'' என்றார். அதோடு, ''எங்கள் மாவட்டத்தில் பாம்பு பிடிப்பவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் பாம்புகளைப் பிடித்து விஷத்தை எடுத்து பாம்புகளைக் காட்டில் விட்டுவிடுகிறார்கள். இந்த விஷம் நச்சு முறிவு மருந்தாக பயன்படுகிறது. அதனால், காஞ்சிபுரத்தில் நச்சு ஆராய்ச்சி மையம் ஒன்றை அமைக்க அரசு முன்வரவேண்டும்!'' என்று கோரிக்கை வைத்தார். ''உடனே இந்த விஷயத்தை அனுப்பி வையுங்கள் மத்திய அரசு மூலம் இதற்கு முயற்சி எடுப்போம்...'' என்று சொன்னார் ஸ்ரீபதி.

''சிவகங்கை மாவட்டத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் ரொம்ப வருஷமாக பாதாளத்தில் கிடக்கிறது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?'' என்று கேட்டார் ஸ்ரீபதி. ''சிலர் நீதிமன்றம் சென்று தடை வாங்கியதால் தடைபட்டது!'' என்று சொன்னார் மகேஷன் காசிராஜன். ''திட்டம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது இடப் பிரச்னைப்பற்றி சொல்கிறீர்கள்... இன்னும் தாமதம் செய்யாமல் வேலையை சீக்கிரம் முடியுங்கள்'' என்றார் கறாராக. இதே போலத் தான் தஞ்சாவூர் பாதாள சாக்கடைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது பற்றியும் விவாதம் நடந்தது.

அப்படி யாரும் போராடவில்லை!

பெரம்பலூர் கலெக்டர் விஜயகுமார், ''தேர்வில் அதிக மார்க் எடுக்கும் போட்டியில் மாணவர்கள் ஏட்டுக் கல்வியைத்தான் கற்கிறார்கள். இதற்கு மாற்று ஏற்பாட்டை நாம் செய்ய வேண்டும். பள்ளிக்கூடங்களில் இருக்கும் 'பேஸ்கட் பால்' மைதானத்தின் தரை மண் பகுதியாக இருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது பேஸ்கட் பால் பிளேயராக இருந்தேன். அதனால் சொல்கிறேன்... தரைப்பகுதியை சிமென்ட் தளமாக அமைக்க வேண்டும்!'' என்றதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். அவரே தொடர்ந்து, ''சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டத்தை பெரம்பலூர் மாவட்டத்தோடு சேர்க்க வேண்டும் என்று மக்கள் போராடி வருகிறார்கள்...'' என்று சொல்லி முடிக்கும் முன்பே அவசரமாகக் குறுக்கிட்டார் அமைச்சர் சேலம் வீரபாண்டி ஆறுமுகம். ''அப்படி யாரும் போராட்டம் எல்லாம் நடத்தவில்லை. சேலத்தில் கிடைக்கும் வசதி பெரம்பலூரில் கிடைத்துவிடுமா?'' என்றார். ''கெங்கவல்லியில் இருந்து சேலம் வருவதற்கு இரண்டு மணி நேரம் ஆகிறது. பெரம்பலூருக்கு ஒரு மணிநேரம்தான். அதனால்தான் மக்கள் கேட்கிறார்கள்!'' என்று பதில் சொன்னார் விஜயகுமார். ''மாவட்டங்களைப் பிரிக்கும் எண்ணம் எல்லாம் அரசுக்கு இல்லை1'' என்று சொல்லி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ரீபதி.


ஒயின் ஆராய்ச்சி!

''தேனி மாவட்டத்தில் பன்னீர் திராட்சை அமோகமாக விளைகிறது. ஆனால், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தரம் இல்லை. இதனால், ஓயின் தயாரிக்கத் தேவையான அளவுக்கு திராட்சை பயிரிட்டால் ஏற்றுமதி கூடும். வருவாயும் பெருகும்!'' என்று சொல்லிக்கொண்டே போனார் தேனி கலெக்டர் முத்துவீரன். ஒரு கட்டத்தில் ஸ்ரீபதி குறுக்கிட்டு, ''நீங்க சொல்வது ஆராய்ச்சிக் கட்டுரை ரேஞ்சுக்கு இருக்கிறது!'' என்று கமென்ட் அடித்து செக் வைத்தார்.

முதல்வர் கிளப்பிய சந்தேகக் கேள்வி!

'கோரிக்கைகளுடன் சுவையான விவாதங்களுடன் நடந்து முடிந்த மாநாட்டில் சாதித்த விஷயம் என்ன?' என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

போலீஸ் அதிகாரிகளும் கலெக்டர்களும் சேர்ந்திருந்த அமர்வில்தான் உணர்ச்சிகரமாகப் பேசினார் முதல்வர் கருணாநிதி. ''இது முக்கியமான மாநாடு. காரணம் விரைவில் நாம் தேர்தலை சந்திக்கப் போகிறோம்...'' என்று அவர் பேச ஆரம்பித்தபோதே பலருக்கு விஷயம் புரிந்துவிட்டது. ''தேர்தலில் பிரச்னை கிளப்புவதற்கு சிலர் தயாராக இருப்பார்கள். அவர்களுக்கு நாம் இடம் தந்துவிடக்கூடாது...'' என்று சொன்ன முதல்வர், அடுத்துப் பேசிய பேச்சில் ரொம்பவே பொடி வைத்தார். ''உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றி வைக்கிறேன். நீங்கள் எண்ணிப் பார்த்த இந்த ஆட்சி தொடர வேண்டுமா... வேண்டாமா என்ற முடிவுக்கு வரவேண்டிய பொறுப்பும், கடமையும் உங்களுக்கு இருக்கிறது. ஒரு நல்ல ஆட்சியை, தி.மு.க. ஆட்சி என்று நான் சொல்லமாட்டேன். ஒரு நல்ல ஆட்சி தமிழகத்திலே நடைபெற நீங்களும், நாங்களும் சேர்ந்து பணியாற்றுவோம். அந்தப் பொருளில் உணர்ந்து நீங்கள் செயலாற்ற வேண்டும்!'' என்று முடித்தார் கருணாநிதி.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தேர்தல் சமயத்தில் தங்கள் மாவட்டங்களில் இருப்பார்கள். தி.மு.க. ஆட்சியை மீண்டும் உருவாக கலெக்டர்கள் துணை புரிய வேண்டும் என்கிற தொனியில் கருணாநிதி பேசியிருக்கிறார். 'அடுத்த ஆட்சி மீண்டும் அமைய உதவுங்கள்' என்று கலெக்டர்கள் மாநாட்டில் கருணாநிதி சொல்லி இருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு கிளம்பி இருக்கிறது!

ஜூவி

No comments:

Post a Comment