Search This Blog

Wednesday, July 25, 2012

அருள் மழை ----------- 63

ஒழுக்க நெறிகள்!



நம்மளவு சௌகரியமோ, அறிவோ அழகோ இல்லாதவர்களைப் பார்த்து நாம் தாழ்த்தியாக  நினைத்துக் கர்வப்படக் கூடாது. கர்வம் என்பது சொறி, சிரங்கு
எல்லாவற்றையும்விடக் கொடிய பெரிய வியாதி போன்றது. போன பிறவியில் நம்மைவிடத்  தப்பு செய்ததால் அவர்கள் இப்போது பணத்தில், புத்தியில், அழகில் நம்மைவிடக்  கீழாக இருக்கலாம். ஆனால் நமக்குக் கர்வம் வந்தால், இதுவே அவர்கள் செய்த  தப்புக்களையெல்லாம் விடப் பெரிய தப்பு. இதனால் நாம் அடுத்த பிறவியில் இப்போது அவர்கள் இருப்பதைவிடக் கீழான நிலையில் பிறப்போம்.

இன்னும் பலவிதமான அழுக்குகள் இருக்கின்றன. பிறர் இல்லாத போது அவர்களைப் பற்றி  கேலியாகவோ, நிந்தையாகவோ பேசுவதில் உங்களுக்கு எண்ணம் போகவே கூடாது. இப்படிப்  பேசுவதில் ஒரு சுவாரசியம் இருக்கிறதே என்பதற்காக இதில் ஈடுபடக்கூடாது.  ஒருவனிடம் தப்புத் தெரிந்தால், அதை நேரில் நல்லபடியாக, நயமாக, அன்பாக அவனிடமே
சொல்ல வேண்டுமே ஒழிய, அந்தத் தப்பை மற்றவர்களிடம் சொல்லி சந்தோஷப்படுவது வெறும்  கோழைத்தனம்தான். இப்படிப் புறங்கூறுகிறபோது அங்கே அந்தப் பையன்  இல்லாதிருக்கலாம் – ஆனால் எங்கேயும் உள்ள ஸ்வாமி அங்கேயும் இருக்கிறார்.  என்றைக்கோ ஒரு நாள் அவர் தண்டித்து விடுவார். அதற்கு யாரும் தப்ப முடியாது.

பொய், பயம், பொறாமை, நிந்தனை ஆகிய அழுக்குகளைப் போக்குகிற சோப்பு, சீயக்காய்,  அரப்பு, வாசனைப் பொடி மாதிரி சத்தியம், தைரியம், விட்டுக் கொடுக்கிற சுபாவம்,  இன்சொல் ஆகியன இருக்கின்றன.

இப்படியே நம் மன அழுக்கைப் போக்குகிற நல்ல குணங்கள் பல இருந்தாலும்கூட, வேறொரு  ஜலம் இல்லாவிட்டால் இந்த நல்ல குணங்கள் மாத்திரம் நமக்கு மனத்தூய்மையைக்  கொடுக்க மாட்டா. அந்த ஜலம்தான் தெய்வ பக்தி. எல்லா அழுக்குகளும் நீங்குவதற்கு,  கங்கா ஸ்நானமாக இருப்பது ஸ்வாமியிடம் செய்கிற பிரார்த்தனைதான்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய
ஸ்வாமிகள்

1 comment: