Search This Blog

Saturday, August 25, 2012

தூத்துக்குடி உப்பு விஷமாகுது!

இந்தியாவின் உப்பு உற்பத்தியில் முதலிடம் குஜராத். இரண்டாம் இடம் தமிழகம். காரணம், தூத்துக்குடி உப்பு உற்பத்தி; கிட்டத்தட்ட 25000 ஏக்கர்கள். அவை இன்று பெருகிவரும் அனல் மின்நிலையங்கள், தனியார் கெமிக்கல் தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபட்டு விஷமாகி வருகின்றன.

பளீரென்று வெள்ளை நிறத்தில் இருக்கும் உப்பு ரத்தச் சிவப்பாக மாறுவது உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது.

முன்பு உப்பு உற்பத்திக்குத் தேவையான நீரை, கடலிலிருந்து நேரடியாக உப்பு வயல்களுக்குக் கொண்டு வரப்பட்டு, உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. கால மாற்றத்தாலும் கடல் மாற்றத்தாலும், கடலில் கலக்கும் கழிவுகள், மீன் உணவு, கெமிக்கல் தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகளால் கடல்நீர் மாசடைந்து போனது. இதனால் உப்பு உற்பத்திக்குத் தேவையான தண்ணீர் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. 50 அடி ஆழத்திலேயே உப்பு உற்பத்திக்குக் கிடைத்த நீர், இப்போது 200 அடி ஆழத்தில்தான் கிடைக்கிறது.

இச்சூழலில் தூத்துக்குடி வடக்குக் கடற்கரைப் பகுதிகளில் இருக்கும் ரசாயனத் தொழிற்சாலைகள் அபரிமிதமான கழிவுகளை வெளியேற்றுகின்றன. தவிர அனல்மின் நிலையத்திலிருந்து உயரமான சிம்னிகள் (குழாய்கள்) வழியாக புகையோடு வெளியேறும் நச்சுத்துகள்களும் வெளியேறி, காற்றில் கலந்து உப்பளங்கள் மீது படிகின்றன. இதனால் உப்பின் தரம் குறைவதுடன், உணவுக்குப் பயன்படுத்த முடியாத நிலையை அடைகிறது.

மாவட்டத்தின் தென்கடற்கரைப் பகுதியிலிருக்கும் ஆறுமுக நேரியில் சுமார் 4000 ஏக்கர் உப்பளங்கள், தனியார் கெமிக்கல் தொழிற்சாலைக் கழிவுகளால் மட்டுமே மாசுபட்டு வருகின்றன. அத்துடன் மணவாளக்குறிச்சி மணல், ரசாயன மாற்றம் செய்யப்பட்டு யுரேனியம் பிரித்தெடுக்கப்படுவதும் தூத்துக்குடியில்தான்.

மேலும்,தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள் உப்பளங்களுக்கு மத்தியிலுள்ள நிலத்தில் பாத்திகட்டிச் சேகரிக்கப்படுகின்றன.

இவையெல்லாம் சேர்ந்துதான் உப்பு வயல்கள் சிவப்பு நிறமாக, உற்பத்தியாகும் உப்பும் சிகப்பு நிறமாகி விடுகிறது. நஞ்சான இந்த உப்பு தவறுதலாக உணவுக்கான உப்புடன் கலந்தால், உண்டவர்கள் கதி அதோகதிதான்.

சேகரித்து வைக்கப்பட்டுள்ள ரசாய னக் கழிவுகள் எல்லாம் மழைக் காலங்களில் கடம்பா குளத்தின் வடிகால் ஆறுகள் மூலமாக அருகில் இருக்கும் கடலில் கலக்க, கடல்நீர் நிறம் மாறுவதுடன், கடல்வாழ் உயிரினங்கள், அரியவகை கடல் தாவரங்களும் அழிந்து விடுகின்றன.

இதேநிலை தொடர்ந்தால் ‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’ என்ற சொல் வழக்கு, ‘மாசுபட்டு விஷமான தூத்துக்குடி உப்பு குப்பையிலே’ என்று மாறினாலும் ஆச்சர்யமில்லை.


1 comment:

  1. கவனிக்கப்பட வேண்டிய விஷயம்...

    பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete