Search This Blog

Saturday, August 04, 2012

எடுபடுமா ராகுல் மேஜிக்?!


கட்சியிலோ அல்லது ஆட்சியிலோ முக்கியமான பொறுப்பை ஏற்றுச் செயல்படுவேன்" என்று சமீபத்தில் ராகுல்காந்தி சொன்னது நாடு முழுவதும் காங்கிரஸ்காரர்களை ‘உய்...லலலா’ பாட வைத்துள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இப்போதே வெற்றி பெற்றுவிட்டதுபோல் கும்மியடித்துக் கோலாட்டம் போடுகிறார்கள். ராகுல் காந்தி வழிகாட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலே நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை வந்துவிடுமா? கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்த என்ன திட்டங்களை ராகுல் வைத்திருக்கிறார்?

பாமரர்கள் கழுத்தை நெரிக்கும் விலைவாசி ஏற்றத்துக்கு மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகள் என்ன இருக்கு ராகுலிடம்?... எதுவும் தெரியாத நிலையில் காங்கிரஸ்காரர்களின் ரீ ஆக்ஷன் கொஞ்சம் ஓவராக இருப்பது குறித்து, தில்லி, சென்னையில் உள்ள பல காங்கிரஸ் பிரமுகர்களிடம் பேசினோம்.

சவால்களைத் துணிச்சலாக எதிர்கொள்ளும் இளம் தலைவர் ராகுல், காங்கிரஸின் வழிகாட்டியாவதில் எங்களுக்கு மகிழ்ச்சி" என்கிறார் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி.

அவர் என்ன திட்டங்கள் கைவசம் வைத்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கடந்த காலத்தில் காங்கிரஸை வெற்றிப் பாதையில் எடுத்துச் செல்ல பல சவாலான முயற்சிகளை மேற்கொண்டார்.

மகாராஷ்ட்ராவில் சிவசேனா கட்சியினர் ‘மும்பை மராட்டியர்களுக்கே’ என்று குரல் கொடுத்து ஏழை பீகாரிகளை விரட்டியபோது மும்பைக்குச் சென்று ‘மும்பை இந்தியருக்கே’ என்று முழங்கியவர் ராகுல். அவர் வெளி மாநிலக்காரர்களுக்கு தைரியம் கொடுக்கும் வகையில் ஷாப்பிங் செய்து டாக்ஸியில் விமான நிலையம் சென்றார். சிவசேனா என்ற வன்முறை இயக்கத்தை அதன் குகையிலேயே சந்தித்தவர். அவரது இந்தச் செயல்பாட்டுக்குப் பின்னர்தான் மற்ற தலைவர்களுக்கே சிவசேனையைக் கண்டிக்கும் துணிச்சலே வந்தது. பீகார், உ.பி.யில் காங்கிரஸை வேர் கொள்ளச் செய்ய அவர் செய்த பிரசாரம் வோட்டு வங்கியில் அதிக இடங்களைப் பெற்றுத் தராமல் இருந்திருக்கலாம்.

ஆனால், எதிர்காலத்தில் காங்கிரஸ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறும் என்று நம்பிக்கை கொடுக்கும் வோட்டு சதவிகிதம் அதிகரித்துள்ளது. தவிர இப்போது மத்திய அரசால் கடைப்பிடிக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகத்தான் நாம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவைப் போல் சரிவைச் சந்திக்காமல், ஏழு சத வளர்ச்சி நிலையை அடைந்திருக்கிறோம். நமது கிராமங்கள் அடைந்திருக்கும் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கும்.

இந்தச் சூழலில் 2014ல் ராகுல், காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் என்பது எங்களுக்கெல்லாம் உற்சாகம் கொடுக்கும் தகவல் மட்டுமல்ல, எதிர்கால இந்தியாவுக்கும் பொருத்தமானது," என்கிறார் அழகிரி.

கட்சியில் செயல் தலைவர் அல்லது துணைத் தலைவர் பொறுப்பு ராகுல் காந்திக்குக் கிடைக்கக்கூடும் என்கிறார்கள். அதேபோல் கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பொறுப்பும் கொடுக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், பொறுப்பின் பெயர் என்னவாக இருந்தாலும், கட்சியிலும் ஆட்சியிலும் அவர் காட்டும் திசையை நோக்கித்தான் இனி காரியங்கள் நடக்கும். பிரதமருக்கும் சோனியாவுக்கும் கட்டுப்படாமல் முரண்டு பிடிக்கும் பல ‘தலை’ களை இனி ராகுலால் அடக்க முடியும். இது கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்லது.

2014க்கு முன்பு பல மாநிலங்களில், காங்கிரஸுக்கு ஏற்ற கூட்டணிக் கட்சிகளைத் தேர்ந்தெடுத்து வெற்றிக் கூட்டணியாக மாற்றும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. நாட்டில் அசாம், தில்லி போன்ற இடங்களைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களைப் பெறும் அளவுக்கு, செல்வாக்கான நிலையில் இல்லை.

அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிய ஆந்திரத்திலேயே காங்கிரஸுக்கு சிக்கல். ஜெகன் மோகன் ரெட்டியின் சவாலைச் சந்திக்கும் அளவுக்கு காங்கிரஸ் அங்கு பலமாக இல்லை. சரியான யுக்தி வகுத்தால்தான் 2014ல் மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் குறைந்தபட்சம் அதிக இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக வர முடியும்.

ராகுல் காந்தி காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் எனும்போதே எங்களுக்கு தன்னம்பிக்கை கூடுகிறது. நேரு குடும்பத்தின் வழித் தோன்றலாக சோனியாஜியை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டாலும், ஹிந்துத்வா சக்திகளின் திரிபுவாத பிரசாரத்தின் காரணமாக மக்களிடம் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால், மண்ணின் மைந்தனான ராகுல் விஷயத்தில் அந்தத் தயக்கம் இல்லை.

அடுத்து கட்சி அமைப்பில் பொறுப்பை அவர் எடுத்துக்கொண்டால் கட்டுப்பாடு உருவாகும். இனி புதிய சிந்தனை; புதிய திட்டங்கள் என்று காங்கிரஸ் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நடைபோடும். ராகுலுக்கு இணையாக ஓர் இளைஞர் தலைவர் பா.ஜ.க.வில் கிடையாது," என்கிறார் தமிழக காங்கிரஸ் பேச்சாளர் பேரவைத் தலைவரான திருச்சி முரளிதரன்.

அமைப்பில்லாமல் சிதறிக் கிடந்த இளைஞர் காங்கிரஸை அமைப்பு ரீதியாக எல்லா மாநிலங்களிலும் ஒழுங்குபடுத்தி உட்கட்சித் தேர்தல் நடத்தி முடித்தது ராகுல் காந்தியின் பெரும் சாதனை.

கிராமப்புறங்களுக்கு விஸிட் செய்து, அவர்களுடன் தங்கி, அவர்களது வாழ்க்கை முறை, தேவைகள் ஆகியவற்றை அறிந்து வைத்திருக்கிறார் ராகுல். எதிர்காலச் செயல் திட்டங்களை வகுக்க அனுபவங்கள் அவருக்கு உதவும். கனிக்ஷா சிங், அசோக் தன்வரி, ஜிதீந்தர் சிங், மீனாட்சி நடராஜன், சச்சின் பைலட், மில்லின் தியோரா, ஜிதின் பிரஸாத், ஜோதி ஆதித்யா சிந்தியா, விக்ரம் சிங் என்று... நல்ல இளைஞர் டீம் ஒன்று அவருக்கு உதவியாக இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாமல் செயல்படும் இந்தக் குழுவின் நடவடிக்கைகள் இதுவரை விமர்சன எல்லைக்குள் வரவில்லை. நாளை ராகுல் உயர் பொறுப்புகளை ஏற்றுச் செயல்படும் சமயம் இந்தக் குழுவின் செயல்பாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

ஆட்சியிலும், கட்சியிலும் இருக்கும் அனுபவமிக்க சீனியர்கள் வழிகாட்ட, ராகுல், காங்கிரஸை உச்சிக்குக் கொண்டு போவார். ‘பொறுப்பில்லாமல் அதிகாரம்’ என்று ராகுலை இனி யாரும் குற்றம் சாட்ட முடியாது" என்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்.

இந்த நம்பிக்கை நூறு சதவிகிதம் நிறைவேறுமா என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் நம்பிக்கையற்ற பயணத்தில் இருந்த அவர்களுக்கு இப்போது ஒரு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இனி அவர்கள் கண்களைத் திறந்து வைத்துப் பயணித்தால் போதும்.

No comments:

Post a Comment