Search This Blog

Saturday, August 18, 2012

எனது இந்தியா (அபினிப் போர்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


ப்படிக் கப்பலில் கொண்டுசெல்லும் அபினிக்குப் பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய கூலிப் படைகள் உடன் சென்று இருக்கின்றனர். இந்தக் கள்ள வணிகத்தில் சீனாவின் உயர் அலுவலர்களாக இருந்த மாண்ட்ரின்களுக்கும் தொடர்பு உண்டு. 1780-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 15 டன் அபினி, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதுவே, 1813-ம் ஆண்டில் 75 டன்னாக உயர்ந்தது. இந்தக் காலகட்டத்துக்குள் 93 கப்பல்கள் அபினி ஏற்றிச் சென்றுள்ளன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் காமன் சபையின் 1782 ஜுலை 7-ம் தேதியிட்ட பதிவில், சீன அரசு அலுவலர்களுக்குக் கையூட்டு கொடுத்துத்தான் அபினி விற்பனை நடைபெற்றது என்பதற்காக சான்று இருக்கிறது. அபினி விற்பனையில் 1830-ம் ஆண்டு மட்டும் 34 மில்லியன் டாலர்கள் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கிடைத்து இருக்கிறது. ஆண்டுக்கு 900 டன் அபினி சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது.

அபினி கடத்தலுக்கு உதவி செய்ய துப்பாக்கி ஏந்திய கூலிப் படைகள் பல்வேறு குழுக்களாக உருவாக்கப்பட்டன. இதுதான், ஆசிய நாடுகளில் இன்று புகழ்பெற்றுள்ள மாஃபியா என்ற தொழில்முறைக் கடத்தல்காரர்கள் உருவானதின் முதல் புள்ளி. அப்போது, சீனாவில் குவிங் வம்சப் பேரரசு ஆட்சி செய்துவந்தது. பிரிட்டிஷ்காரர்களின் அபினி வணிகத்தால் சீனாவுக்குள் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்நாட்டுக் குழப்பம் ஏற்படுகி றது என்று உணர்ந்த குவிங் பேரரசு, அபினி இறக்குமதிக்குத் தடை விதித்தது. ஆனாலும், பிரிட்டிஷ் கம்பெனியின் அபினி வணிகத்தை அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1810-ம் ஆண்டில் சீனப் பேரரசு கடுமையான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், 'அபினி ஓர் மோசமான போதைப் பொருள். அதை ஐரோப்பியப் பேய்கள் நம் நாட்டில் விற்பனை செய்கின்றனர். அபினி பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். அபினி நுழைகிற குவான்டுங் மற்றும் பூக்கீன் பகுதிகளைப் பொறுத்தவரை, அங்குள்ள, சுங்க அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முறையான தேடுதல் வேட்டை நடத்தி அபினியை முற்றிலும் தடுக்குமாறு உத்தரவு இடப்படுகிறது’ என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவால், பிரிட்டிஷ் கம்பெனியின் அபினி வணிகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம், சீன அரசாங்கத்தின் தலைமை பெய்ஜிங்கில் இருந்தது. கடத்தல் நடக்கும் துறைமுகங்களை அவர்களால் நேரடியாகக் கண்காணிக்க முடியவில்லை. மேலும், பணத்தாசை காரணமாக சீன அதிகாரிகள் பலரும் கடத்தலுக்கு துணை நின்றனர். அப்போது, குவண்டோன் பகுதியின் சிறப்பு ஆளுனராக  லின் சே சூ என்பவர் பொறுப்பு ஏற்றார். இவர், சீனாவுக்குள் சட்ட விரோதமாக நடந்த போதைப் பொருள் இறக்குமதியை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுத்தார். அத்துடன், சீனாவுக்குள் பிரிட்டிஷ் கம்பெனி அபினி இறக்குமதி செய்வதை உடனே நிறுத்தும்படி விக்டோரியா மகாராணிக்கும் கடிதம் எழுதினார். ஆனால், அந்தக் கடிதம் மகாராணி கைக்கு சென்று சேரவே இல்லை.

கடத்தல் விவகாரத்தில் சீன அரசின் உத்தரவுகள், விதிமுறைகள் எதையும் பிரிட்டன் கண்டுகொள்ளவே இல்லை. இதனால், லின் சே சூ ஆத்திரம் அடைந்தார். இவர் முன்னதாக, ஹுனான் பகுதியின் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றியவர். தேர்ந்த அறிவாளி மற்றும் தைரியசாலி. ஆகவே, சீனாவின் தெற்குக் கடல் பகுதி முழுவதும் அபினி கடத்தல்காரர்கள் வசமாவதை ஒடுக்குவதற்கு கமிஷனர் லின் கடும்  நடவடிக்கையைத் தொடங்கினார். துறைமுகப் பகுதியில் எங்கெல்லாம் அபினி பதுக்கிவைக்கப்பட்டு இருக்கிறதோ, அங்கெல்லாம் தேடிச் சென்று அவற்றை அழிக்கத் தொடங்கினார்.இந்த அதிரடி நடவடிக்கையில் 1,700 கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டனர். 70,000 ஓபியக் குடுவைகள் அழிக்கப்பட்டன. 23 நாட்களில் 500 அரசாங்க வீரர்கள் ஒன்று சேர்ந்து 1.2 மில்லியன் கிலோ அபினியை அழித்தனர். கடத்தல்காரர்கள் பொது இடத்தில் தூக்கில் போடப்பட்டனர். காவல் படகுகள் துறைமுகத்தில் இரவு பகலாக ரோந்து சென்று கண்காணித்தன. இந்தக் கெடுபிடி, பிரிட்டிஷின் அபினி வணிகத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால், கிழக்கிந்தியக் கம்பெனி 6 போர்க் கப்பல்களையும் 7,000 பேர்கொண்ட படைகளையும்கொண்டு, 1839-ல் சீனாவைத் தாக்கத் தொடங்கியது. அந்தப் போர், 'அபினி யுத்தம்’ என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. உலக அளவில் போதைப் பொருள் வணிகத்துக்காக நடந்த முதல் போர் இதுவே!

இரண்டு ஆண்டுகள் நடந்த இந்தப் போரின் முடிவு, பிரிட்டிஷ§க்குச் சாதகமாக அமைந்தது. பிரிட்டிஷ் படைகள், ஹாங்காங் தீவுகளைக் கைப் பற்றின. இதன் விளைவாக, ஒரு தலைப்பட்சமாக தயாரிக்கப்பட்ட நான்கிங் என்ற ஒப்பந்தத்தில் சீனா கையெ ழுத்துப் போட்டு ஹாங்காங்கை பிரிட்டனின் காலனி நாடாக விட்டுக் கொடுத்தது. கூடவே, ஆண்டுக்கு 15 மில்லியன் வெள்ளிப் பணமும் கப்பமாக செலுத்த ஒப்புக்கொண்டது. அதன் மூலம், விரிவான அபினி சந்தை ஒன்றை பிரிட்டிஷ் கம்பெனி ஆசிய நாடுகளில் உருவாக்கியது.

அதே நேரம், இந்திய சமஸ்தானங்கள் பலர் தாமே நேரடியாக அபினி வணிகத்தில் ஈடுபட முயற்சிப்பதை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு அதை ஒடுக்க லைசென்ஸ் முறையை அறிமுகம் செய்தது. அதன்படி, உரிமை பெற்றவர்கள் மட்டுமே அபினி விளைவிக்க முடியும், அத்துடன், அபினி விவசாயிகள் அதை வேறு யாரிடமும் விற்க முடியாதபடி தந்திரமும் மேற்கொண்டது.
 ஒரு பக்கம் சீனாவுக்குள் போதைப் பொருளைக் கடத்தி தனது வருவாயைப் பெருக்கிக்கொண்டது என்றால், மறு பக்கம் தனது காலனிய ஆட்சியில் இருந்த இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தேயிலையை அறிமுகம் செய்து தங்களுக்கான தேயிலைத் தேவையை தாங்களே உற்பத்திசெய்துகொண்டது கிழக்கிந்திய கம்பெனி. இந்த தேயிலைத் தோட்டப் பணிக்காக கொத்தடிமைகளாக பல ஆயிரம் பேர் வேலைக்கு சென்று குளிர் தாங்காமலும், நோய் ஏற்பட்டும் செத்து மடிந்தது தனிக் கதை.

இந்திய ஆங்கில எழுத்தாளரான அமிதாவ் கோஷ் 'ஸீ ஆஃப் பாப்பிஸ்’ என்ற தனது நாவலில், அபினி வணிகத்தின் வரலாற்றை விரிவாக எழுதி இருக்கிறார். இதற்காக விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட அமிதாவ் கோஷ், வங்காளத்தின் காஸிப்பூரில் இன்றும் இயங்கிவரும் ஓபியம் தொழிற்சாலையைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். 'பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தே அபினி வணிகத்தின் மையமாக இருக்கிறது காஸிப்பூர். இங்கேதான், அபினி உற்பத்தி ஒருமுகப்படுத்தப்பட்டது. 32 மாவட்டங்களில் விளைந்த அபினி இங்கே கொண்டு வரப்பட்டுப் பதப்படுத்தப்பட்டது. ஓபியம் ஏஜென்ட் என்று அழைக்கப்படும் ஓர் உயர் அதிகாரி இந்த அபினி விற்பனையை நடத்திவந்தார். காஸிப்பூரில் உள்ள குரங்குகள்கூட அபினி சாற்றைக் குடித்து போதையில் அலைகின்றன. அந்த அளவுக்கு அந்த ஊர் அபினி தொழிலில் கொழிக்கிறது. இன்றும் காஸிப்பூரில் ஓபியம் தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. அங்கே எடுக்கப்படும் ஓபியம் உலகெங்கும் விற்பனை ஆகிறது. 1800-களில் மத்திய இந்தியாவில் இருந்த பல சமஸ்தானங்கள் தங்களின் வருமானத்துக்கு அபினி உற்பத்தியைத்தான் பெரிதும் சார்ந்து இருந்தன. மால்வாவின் முக்கிய வருமானம் அபினியே. இந்தியாவில் 6,42,831 ஏக்கர் நிலத்தில் அபினி பயிரிடப்பட்டு இருக்கிறது. இந்த உற்பத்தி 1920-களில் 1,63,125 ஏக்கராகக் குறைந்தது. அதுவரை, இந்தியாவின் முக்கிய வணிகப் பயிராகவே அபினி கருதப்பட்டது’ என்கிறார் அமிதாவ் கோஷ்.

சீனாவுக்குப் போதை மருந்து கடத்துவது மன்னிக்க முடியாத குற்றம் என்ற எதிர்ப்புக் குரல்கள், 1890-களில் இங்கிலாந்தில் எழுந்தன. இதையடுத்து, அபினி உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாக ஆய்வு நடத்த 9 பேர்கொண்ட ராயல் கமிஷனை நியமித்தார் விக்டோரியா ராணி. இந்தக் கமிஷன், தனது அறிக்கையை 1895-ம் ஆண்டு வெளியிட்டது. அதில், 'இந்தியர்கள் அபினியை காலம் காலமாகவே மருத்துவ ரீதியாகப் பயன்படுத்திவருகின்றனர். ஆகவே, அதை விற்பது தவறு அல்ல. சீனாவுக்கு, அபினி விற்பனை செய்ததைப் பற்றிய குற்றச்சாட்டுகள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை. கம்பெனி நேரடியாக சீனாவில் அபினி விற்கவில்லை’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

1916 மற்றும் 17-ம் ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு துறைகள் சார்ந்த ஆண்டு வருமானம் 11,87,99968 ஸ்டெர்லிங் பவுண்ட். இதில், அபினி விற்பனையில் மட்டும் கிடைத்த தொகை 31,60,005 ஸ்டெர்லிங் பவுண்ட். அந்த அளவுக்குப் பணம் காய்க்கும் செடியாக அபினி இருந்தது. அது போலவே, அபினி புகைக்கும் பழக்கம் உருவான காரணத்தால், நாடெங்கும் ஓபியம் பார்கள் ஏற்பட்டன. அபினி போதைக்கு அடிமை ஆன வர்கள், அபின் வாங்குவதற்காக மனைவி, குழந்தை களைக்கூட விற்கத் தயாராகினர். தெற்கு சீனாவில் ஒருவன், தனது பிறந்த குழந்தையை ஐந்து கிராம் அபினிக்கு விற்ற கொடூரம் நடந்தது. அபினி பழக்கத்தால் சீனாவின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. சீனாவில் மட்டும் அல்லாமல் ஜப்பான், ஜாவா, சியாம் போன்ற இடங்களிலும் கிழக்கிந்தியக் கம்பெனி அபினி வணிகம் செய்தது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் அபினி வணிகத்துக்குத் துணைபோனவர்களில் முக்கியமானவர் டேவிட் சசூன். யூதரான இவர் மும்பையில் வசித்தார். பாக்தாத்தில் பெரிய வணிகக் குடும்பத்தில் பிறந்தவர் சசூன். இவரது அப்பா 1829-ம் ஆண்டு வணிகத்தில் பணமோசடி செய்த காரணத்தால், சசூனின் குடும்பம் பாக்தாத்தில் இருந்து வெளியேறி மும்பை வந்தது. மும்பையில், பருத்தி வாங்கி விற்கும் வணிகத்தைத் விற்பனையை செய்யத் தொடங்கியபோது, டேவிட் சசூன் அபினி விற்பனை செய்ய ஆரம்பித்து, அபினி சக்கரவர்த்தி என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்தார்.

ஹாங்காங் நகரின் மொத்த அபினி விற்பனையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இதற்காக, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு தாராளமாகப் பணத்தை வாரி வழங்கினார் டேவிட் சசூன். போதைப் பொருள் விற்பனையில் சம்பாதித்த பணத்தைக்கொண்டு எண்ணெய் தொழிற்சாலைகளும், துணி ஆலைகளும் தொடங்கினார். கொழுத்த லாபத்துடன் லண்டன் சென்று வசிக்கத் தொடங்கி, பிரிட்டிஷ் அரசின் விசுவாசத்துக்கு உரிய பணியாள் என்ற விருதையும் பெற்றார் டேவிட் சசூன். இவருக்குப் பிறகு இவரது பிள்ளைகள் ஹாங்காங்கின் அபினி வணிகத்தைக் கவனித்தனர். இன்று, இங்கிலாந்தின் முக்கியத் தொழில் அதிபர்களாக  டேவிட் சசூனின் குடும்பம் இருக்கிறது.
பிரிட்டிஷின் போதை வணிகம், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மட்டும் அல்லாது இதுபோல அதன் துதிபாடிகளுக்கும் கொள்ளை லாபம் சம்பாதிக்க கதவைத் திறந்துவிட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ இந்தியாதான். உலகின் பார்வையில், இந்தியாவை ஒரு அபினிக் கிடங்குபோல மாற்றியது பிரிட்டிஷ் காலனியத்தின் வெட்கமற்ற செயல். சுயலாபத்துக்காக கிழக்கிந்தியக் கம்பெனி மேற்கொண்ட போதைப் பொருள் கடத்தல் இன்று சர்வதேசக் குற்றமாக வளர்ந்து நிற்கிறது. இன்றைய இந்தியாவின் மிக முக்கியப் பிரச்னை போதைப் பொருள் கடத்தல். குறிப்பாக மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம், மிசோரம் போன்ற மாநிலங்களில் போதைப் பொருள் கடத்துவது ஒரு குடிசைத் தொழில்போல நடக்கிறது. பள்ளி மாணவர்கள்கூட போதை மருந்து பழக்கத்துக்கு அடிமை ஆகியிருக்கின்றனர்.

போதை என்பது கண்ணுக்குத் தெரியாத ஆயுதம். அதைவைத்து எந்த நாட்டையும் எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற பிரிட்டனின் தந்திரம் இன்று அதற்கே சவால் விடுவதாகவும் மாறியிருக்கிறது.

சீனர்களைக்கொண்டு தங்களது தேசத்தின் ரயில் பாதை, சாலை மற்றும் பாலங்களை அமைத்துக் கொண்ட அமெரிக்கா இன்று, சீனர்கள் வழியாகத்தான் போதைப் பழக்கமும் அதிகரித்து வருகிறது என்று கூக்குரலிடுகிறது. தனது வரலாற்றைத் தானே மறந்து அதற்கு இங்கிலாந்தும் ஒத்து ஊதுகிறது. அதுதான் காலத்தின் கொடுமை.



2 comments:

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  2. முக்கியமான பதிவு நன்றி

    ReplyDelete