Search This Blog

Saturday, August 11, 2012

திணறும் தி.மு.க. - டெஸோ டென்ஷன்!


கருணாநிதி டெஸோ அமைப்பைத் தூசுதட்டி மாநாடு நடத்த இரண்டு காரணங்கள்தான். ஒன்று, அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் கனிமொழியைக் கைதுசெய்து, மனைவியை விசாரணைக்கு உட்படுத்தி, அறிவாலயத்துக்குள் புகுந்து அதகளம் செய்த மத்திய அரசைச் சங்கடப்படுத்தி, காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளிவர முடிவு செய்து இருக்கலாம். அல்லது, முள்ளிவாய்க்கால் சம்பவத் தின் போது கையறுநிலையில் இருந்ததற்காக வருந்தி ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் தமது பங்களிப்பு ஏதேனும் இருக்க வேண்டும் என்று ஆத்மார்த்தமாக முடிவு செய்திருக்கலாம் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம்.

டெஸோ மாநாடு, தனி ஈழம் என்றவுடன் தி.மு.க.விலேயே ‘இந்த வம்பு வேலை நமக்கேன்’ என்று முணுமுணுத்ததாம் ஒரு குழு. ஸ்டாலின், துரை முருகன் போன்றோர் ‘2014-லும் காங்கிரஸுடனே கூட்டணியைத் தொடரும் நிலையில், ஈழ விவகாரத்தைக் கையிலெடுக்க வேண்டாம்’ என்று தலைவரிடம் மென்மையாகச் சொன்னார்களாம். அதையே அழகிரி கடுமையாகச் சொன்னார். அன்பழகன், திருச்சி சிவா, செல்வேந்திரன், சுப்புலட்சுமி ஜெகதீசன், தி.க. வீரமணி ஆகியோர் ‘தலைவர் சரியா காயை நகர்த்தறார்’ என்று கைதட்டி ஆதரித்தனர்.கனிமொழியோ ‘கெட்ட பெயர்தான் வரும்’ என்று எச்சரித்தாராம். ‘டெஸோ’ அமைப்பில் புதிய உறுப்பினர்கள், வரவேற்புக் குழு என்று அறிவாலயம் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்த சமயம், காங்கிரஸ் முணுமுணுப்பை தொடங்கியிருக்கிறது.

தனி ஈழம், மாநாடு என்று மத்திய ஆட்சியில் பங்குவகிக்கும் தி.மு.க. களத்தில் இறங்கினால் ராஜபட்சே அரசு சும்மா இருக்குமா? வெளியுறவுத் துறை மூலம் ‘மாநாடு நடத்தக் கூடாது’ என்று அழுத்தம் கொடுத்தது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’ ‘இந்த மாநாடு நடந்தால் உலகம் முழுதும் பரவிக் கிடக்கும் மிச்சம் புலிகள் மீண்டும் தமிழகத்தில் சங்கமம் ஆவார்கள்’ என்று எச்சரித்தது. கொஞ்சம் வீரியத்தைக் குறையுங்கள் என்று தில்லி தாக்கீது வந்தவுடன் மாநாட்டின் இடம் சென்னை என்று மாற்றப்பட்டு, விவகாரம் சுருங்கிப் போனது.

இந்தப் பின்னணியில்தான் கருணாநிதியைச் சந்தித்தார் ப. சிதம்பரம். அதன் பின்னர் ‘மாநாட்டில்(?) தனி ஈழம் தீர்மானம் கிடையாது. மிச்சம் மீதி தமிழர்களைக் காக்கவே இந்த முயற்சி’ என்றார் கருணாநிதி. இதற்கான சிதம்பர ரகசியம் அனைவரும் அறிந்ததே. கருணாநிதி தனி ஈழத்தை அம்போவென கைவிட்டுவிட சுப்புலட்சுமி ஜெகதீசன், ‘டெஸோ’ அமைப்பிலிருந்து விலகினார். சமாதானப்படுத்தி சேர்த்தார்கள். வீரமணியும், சுப.வீரபாண்டியனும் ‘வேறுவழியில்லை’ என்று தொடர்ந்தார்கள்.

ஒருவழியாக ‘ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு’ என்ற பெயரில் பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கின. இலங்கையில் உள்ள தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் கூப்பிட முடிவானது. தி.மு.க.வில் இருக்கும் முக்கியப் புள்ளிகள் யாருக்கும் இந்த அமைப்புகளுடன் தொடர்பு இல்லை. அப்போதுதான் வழக்கறிஞர் கே.எஸ்.ராதா கிருஷ்ணன் கட்சியில் இருப்பது தலைமைக்கு நினைவுக்கு வந்தது. இவர் 1980களில் இருந்து ஈழ விடுதலை, மற்றும் மிதவாத குழுக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர். புலிகள் அமைப்பைத் தொடங்கும் முன்னர் மயிலை சாலைத் தெருவில் இவர் வீட்டில் பிரபாகரன் தங்கியிருந்ததை அரசியல் வட்டாரம் அறியும். எனவே, கருணாநிதி அவரைக் கூப்பிட்டு ஈழத் தமிழர்களின் அமைப்புகளைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். கடந்த 20 நாட்களில் மட்டும் நூற்றுக்கணக்கான ஐ.எஸ்.டி. கால்களைப் போட்டு ராதா கிருஷ்ணன் இது தொடர்பாகப் பேசி அழைத்து முக்கியமானவர்களை கலைஞரோடும் பேச வைத்துள்ளார். பிறகு, பத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர் தலைவர்கள் வருவதாக ஒப்புதல் அளித்துள்ளனர். இந்தச் சூழலில் வைகோ, நெடுமாறன் ஆகியோர் தி.மு.க. தரப்பு பேசிய ஈழத் தமிழர்களிடம், கலைஞர் கூப்பிட்டார் என்பதற்காகப் போனால் உங்களை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டு கைகழுவி விடுவார். வர வேண்டாம்" என்று அழுத்தம் கொடுத்தார்களாம்.

ஈழத் தமிழர்களுக்காக முதன் முதலில் டெஸோ அமைப்பை நிறுவி குரல் கொடுத்தவர் கலைஞர். ‘எனக்கும் புலிகளுக்கும் தொடர்பு கிடையாது. ஆனால் தனி ஈழத்தை ஆதரிக்கிறேன்’ என்று 1993-ல் வைகோ சொன்னார். தவிர மார்க்ஸிஸ்ட்டுடன் கூட்டணியில் இருந்தபோது ஈழத்தைப் பற்றி அடக்கி வாசிப்பது என்ற அரசியல் நிலைப்பாட்டை எடுத்தவர். புலிகளை எதிர்த்து, தமிழீழ ஆதரவாளர்களை ‘தடா’வில் கைது செய்தவர் ஜெ. ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற ஜெ.வை ஆட்சியில் அமரவைக்க உழைத்தவர்கள் நெடுமாறனும் சீமானும். எனவே, இவர்கள் கலைஞரை கேள்வி கேட்க உரிமை கிடையாது" என்று சீறுகிறது தி.மு.க. வட்டாரம்.

ஈழத் தமிழர் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவைத் தொடர்பு கொண்டோம். முள்ளிவாய்க்கால்... என்று தொடங்கியவுடனேயே... ஸார்... கொஞ்சம் நிறுத்துங்க. எந்தவிதமான சர்ச்சையிலும் நான் இறங்கத் தயாராயில்லை. எங்களுக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம். பல பிரச்னைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன் எங்கள் அமைப்பில் கலந்து பேச வேண்டும். சில சிக்கல்கள் இருக்கின்றன" என்று முடித்துக் கொண்டார்.

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவம், கௌரவம், அமைதியான சகவாழ்வு ஆகியவற்றை உறுதி செய்திட தேவையான நிவாரண நடவடிக்கைகளை வலியுறுத்தி 12 தீர்மானங்கள் பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படுமாம்.

புலிவாலைப் பிடித்த கதையாக, இந்தப் பொதுக் கூட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது," என்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர். சரியான நோக்கமில்லாத அரசியல் நிலைப்பாடுகளால் கட்சிக்குத் தான் டேமேஜ் என்பதை கடந்த கால பாடங்களிலிருந்து தி.மு.க. உணர வேண்டாமா?

ப்ரியன்

2 comments:

  1. //இந்தப் பின்னணியில்தான் கருணாநிதியைச் சந்தித்தார் ப. சிதம்பரம். அதன் பின்னர் ‘மாநாட்டில்(?) தனி ஈழம் தீர்மானம் கிடையாது. மிச்சம் மீதி தமிழர்களைக் காக்கவே இந்த முயற்சி’ என்றார் கருணாநிதி. இதற்கான சிதம்பர ரகசியம் அனைவரும் அறிந்ததே//

    ஆனால் நேற்று புதிய தலைமுறையில் கே எஸ் அழகிரி சிதம்பரம் அப்படி சொல்லவில்லை , நீங்க அவர் சொன்னதை நேரில் பார்த்திர்களா என சவுண்ட் விட்டார்

    ReplyDelete
  2. tருடர்கள் எல்லாம்
    eல்லாம்
    sர்ந்து
    oட்டுக்காக
    போடும் நாடகம்

    ReplyDelete