Search This Blog

Saturday, August 25, 2012

வெளிவராத தகவல்-பளபளக்கும் கோடிகள்!


தமிழ்நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகள் கிரானைட் தொழிலின் மீது கரும்புள்ளியை ஏற்படுத்தியிருக்கின்றன. தமிழ் நாட்டில் மட்டும் கோடானுகோடிகள் கிரானைட்டில் புரள்வதாக, செய்திகள் படபடக்கின்றன. ஆனால் உண்மை நிலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்"- என்கிறார் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி. கடந்த 30 வருடங்களுக்கு மேல் கிரானைட் தொழிலில் இருக்கும் வீரமணி, மத்திய அரசின் எக்ஸ்போர்ட் பிரமோஷன் கவுன்ஸிலின் கனிமவள ஏற்றுமதி பிரிவின் தலைவர். இது தொடர்பான உலக அமைப்புகளிலும் பங்கு வகிக்கிறார்.

மத்திய அரசின் சட்டத்தின் கீழ் இந்தத் தொழில் நடக்கிறது. மத்திய அரசின் சட்டத்தையொட்டி மாநில அரசுகள் தங்கள் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப பல விதிகளை வகுத்துக் கொள்ளலாம். இதில் சிறு கனிமங்கள் என்ற பிரிவின் கீழ் ‘கிரானைட்’ வருகிறது. கனிம வகைகள் பல. அணுசக்திக்குத் தேவையான கனிமங்கள், இரும்புத் தாது, பாஸ்பேட், நிலக்கரி, அரிதான கற்கள்... என்று பற்பல தேவைகளுக்கு கனிமங்கள் இருக்கின்றன.

கட்டடத்துக்கு வெளிப்புறச் சுவர்களில் கிரானைட் பதிப்பது, தரையில் பதிப்பது, சமையலறை, வாஷ்பேஸின் போன்ற இடங்களில் பதிப்பது என்று கிரானைட் கற்கள் பயன்பாடு (கறுப்புக் கற்கள்) பல வகைகள். அடுத்து நினைவு மண்டபங்கள், சமாதிகள் கட்ட பயன்படுத்தும் உயர்வகையான கறுப்புக் கற்கள். மற்றொரு வகை பொறியியல், மற்றும் ஆய்வுக் கூடங்களில் மேஜைகளாகப் பயன்படுத்தக் கூடியவை. நம் ஊரில் இருப்பது போல் அல்லாமல் வெளிநாடுகளில் வேகத் தடைகளை, கருங்கற்களைக் கொண்டு அரை மி.மீ. நீளத்தில் அமைப்பார்கள். நடை மேடைகளிலும் பயன்படுத்துவார்கள். சிலைகள், படங்கள், நினைவுச் சின்னங்கள் கட்டவென்று கிரானைட்டின் பயன்பாடுகள் அதிகம். வெட்டியெடுத்த கற்களை அப்படியே பயன்படுத்த முடியாது. பயன்பாட்டுக்கு ஏற்ப அதை மேம்படுத்திப் பளிச்சிட வைக்க வேண்டும். இதற்கான மிகச் சிறந்த தொழில்நுட்பம் இந்தியாவில் உண்டு. 12 வகையாக ஃபினிஷிங் செய்கிறோம். பத்தாயிரம் டன் எடையுடைய கல்லைக் கூட வைரக் கம்பியால் தேவைக்கேற்ப ஸ்லைஸ் போடுகிறோம்.

கறுப்புக் கற்களைத் தவிர சாம்பல் நிறக் கற்களும் உண்டு. ஆந்திராவில் குப்பம் என்ற இடத்தில் மிகச் சிறந்த கறுப்புக் கற்கள் கிடைக்கின்றன. பொதுவாகவே எரிமலைகள் வெடித்துக் கிளம்பிய பின்னர் இறுகிப் போய் பூமியின் மத்தியிலிருந்து வெளிவந்தவைதான் இந்தக் கற்கள். இந்த மாற்றம் கோடிக் கணக்கான ஆண்டுகளில் நிகழ்வது. கலர் கிரானைட் என்று நூறுவிதமான உயர்ரகக் கற்கள் இருக்கின்றன. இளமையான கல் என்றால் 60 கோடி ஆண்டுகள். முதிர்ந்த கல் என்றால் நூறு கோடி ஆண்டுகள்.

1978க்குப் பிறகு கிரானைட் தொடர்பான கொள்கை தமிழ்நாட்டில் திருத்தப்பட்டு ‘தமிழ்நாடு கனிமவள நிறுவனம்’ ஏற்படுத்தப்பட்டது. பல மாநிலங்களில் அரசு கனிம நிறுவனங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல காலமாய் கிரானைட் தொழிலில் ஈடுபட்டிருந்த உற்பத்தியாளர்கள் 1978க்கு வேறு பல மாநிலங்களுக்கு தொழில் செய்யக் கிளம்பி விட்டனர். ஆந்திரா உட்பட 12 மாநிலங்களில், கிரானைட் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடக்கிறது. கிரானைட் தொழில் தொடர்பான மிகச் சிறந்த கொள்கை ஆந்திராவில் அமல்படுத்தப்படுகிறது. ஆந்திராவில் கரீம் நகர் மற்றும் ஓங்கோல் பகுதிகளில் மிகச்சிறந்த, தரமான கிரானைட் வெட்டியெடுக்கப்படுகின்றன. வெண்புள்ளிகள், வெடிப்புகள் இருக்கும் கற்கள் ஏற்றுமதிக்கு ஏற்றவையல்ல. எண்பது சதவிகிதம் சேதாரம் இருக்கும். இந்திய அளவில் ஐயாயிரம் கிரானைட் நிறுவனங்கள் இருக்கின்றன. நான்காயிரம் குவாரிகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த கிரானைட் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 22 முதல் 25 சதவிகிதம்தான்.

உலகில் எண்பது நாடுகள் கிரானைட் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. உலகச் சந்தையில் நமக்கு பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள்தான் கடும் போட்டி. நமது உற்பத்தியில் பத்து சதவிகிதம்தான் நமது தேவைக்கு. தொண்ணூறு சதவிகிதம் ஏற்றுமதிதான். 2000-2001ம் ஆண்டில் நாம் 1954 கோடிக்கு ஏற்றுமதி செய்தோம். 2011 - 12ம் ஆண்டில் அது 6000 கோடி. இந்திய அளவில் இந்தப் பத்தாண்டுகளில் 43000 கோடிக்கு ஏற்றுமதி செய்கிறோம். தமிழ்நாட்டில் இந்தக் காலகட்டத்தில் 11500 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்திருக்கிறது. இங்கு 120 நிறுவனங்கள் (டாமின் உட்பட) ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டிருக்கின்றன. இது மத்திய அரசின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள். சராசரியாக பார்த்தால் ஒரு வருடத்தில் சுமார் 100 கோடி அளவுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி நடந்திருக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் (அரசு நிறுவனம் உட்பட) ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஏதேனும் ஒரு நிறுவனம் மட்டும் லட்சம் கோடி, ஆயிரக்கணக்கான கோடிகள் என்று எப்படி ஏற்றுமதி செய்திருக்க முடியும்? மற்றொரு ரகசியம்! மிக உயர்ந்த ரகக் கற்கள் கிடைப்பதாகச் சொல்லும் தென் தமிழகக் கற்களை அமெரிக்க இறக்குமதியாளர்கள் விரும்புவதில்லை. நான் ஏற்றுமதி செய்த கற்கள் அமெரிக்காவில் இரண்டு லட்சம் கட்டடங்களிலும் ஜப்பானில் 65 கட்டடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு சதவிகிதம் கூட தமிழ்நாட்டுக் கற்கள் கிடையாது.

நமது நாட்டு மலைகளை கிரானைட்டுக்காக வெட்டியெடுப்பதை விட, வீடுகட்ட மற்றும் சாலை போட பயன்படுத் தப்படும் கருங்கல் ஜல்லிக் கற்களுக்காக வெட்டியெடுப்பது அதிகம். ஒரு பக்கம் இந்தியாவின் கிரானைட் ஏற்றுமதி வணிகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று குளறுபடிகளும்; தனி மனிதர் செயல்பாடுகளும் தொழிலின் முன்னேற்றத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் போடுவது வருத்தமான விஷயம்தான்.


ப்ரியன்

 

No comments:

Post a Comment